இதயப்போராட்டம் - பாகம் 1

நான் முடிவு செய்துவிட்டேன். இன்று சொல்லியேதீர போகிறேன். தினம் தினம் நான் படும் சித்திரவதையை தாங்க முடியவில்லை.நேற்றிரவு திரும்பவும் ஓர் நிம்மதியில்லா இரவாக கழிந்தது. காதலை முதலில் சொல்லுவது கொஞ்சம் அல்பத்தனமாகவும் என் பக்கம் சிறிது மன உறுதி குறை போன்றும் காணப்பட்டாலும் எனக்கு கவலை இல்லை. காதல் என்பது நீ கீழே, நான் மேலே என்று போட்டி போடும் விளையாட்டு அல்ல. அது தன்னிகரில்லாத தெய்வீக உணர்வு.
நானா இவ்வளவு மாறி விட்டேன் என்று நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது. நான் ஒரு காலத்தில் காதலை மிக கடுமையாக எதிர்த்து வந்தேன். கல்லூரி காலத்தில் என் தோழி ஒருத்தியிடம் ஒருத்தன் காதல் கடிதம் கொடுத்திருந்தான்,அவளும் என்னிடம் ஆலோசனை கேட்க வந்தாள். நான் அவளுக்கு அளித்த பல மணி நேர அறிவுரைக்கு பின் அவள் அவன் அருகே கூட பிறகு செல்லவிவில்லை. அன்று ஏதோ அவளை பாழும் கிணற்றில் இருந்து காத்தது போல் பெருமிதம் கொண்டேன்.
பொதுவாகவே எனக்கு ஆண்களை கண்டால் அவ்வளவாக பிடிக்காது,என் அப்பாவை தவிர. ஆண்கள் என்றாலே காட்டுமிராண்டிகள் என்று தோன்றக்கூடிய அளவுக்கு அருவரக்கத்தக்க பல கதைகளை கேட்டிருக்கிறேன். இறைவன் படைப்பிலேயே இந்த ஆண் / பெண் பாகுபாடு நியாயமில்லாத பங்கீடு என தீவிரமாய் நம்பியிருந்தேன் , இப்பொழுதும் அவ்வப்போது எண்ணி கொள்வேன். நான் பெரியவளான பின்பு கூட எனக்கு ஆண்களிடத்தில் பெரிதாக ஈர்ப்பு ஒன்றும் கிடையாது , சினிமா நடிகர் மாதவனை தவிர. இது எல்லாம் நான் பரத்தை காண்பதற்கு முன்னால்.
என் வாழ்வில் பரத்தின் நுழைவு மிக ஆரவாரமற்றதாக இருந்தது. ஒரு நாள் நான் அமைதியாக வேலை பார்த்துக்கொண்டு இருக்கும்போது ஒரு மிடுக்கான சட்டை போட்ட இளைஞன் என்னை நோக்கி வந்தான். என் மேலாளரின் இருக்கை எங்கே என்று கேட்டு விட்டு நான் வழி காட்டியவுடன் கண்ணியமான ஒரு நன்றியை உதிர்த்து விட்டு நான் காட்டிய வழி நோக்கி நடந்தான். அவன் பேசியவிதத்தில் ஒரு அமைதியான புத்துணர்வு இருந்தது. அவன் எங்கள் நிறுவனத்தின் வேறு ஒரு பிரிவிலிருந்து இங்கே இடமாற்றம் வாங்கி வந்திருக்கிறான் என்று எனக்கு சிறிது நேரத்தில் தெரிந்தது. இவன் என்னை விட பணியில் எவ்வளவு மூத்தவன் என்றும்,இவனால் என் வெளிநாடு சந்தர்ப்பம் எவ்வளவு பாதிக்கப்படும் என்பதை பற்றி மட்டும் தான் எனக்கு அப்பொழுது கவலை!!
சே இப்பொழுது நினைத்தால் எவ்வளவு சிறுபிள்ளைதனமாக இருக்கிறது .யாரும் பார்ப்பதற்கு முன் என் சிரிப்பை அடக்கி கொண்டேன். இப்பொழுதெல்லாம் என் உணர்ச்சிகள் என் அனுமதிக்கு காத்திருக்காமல் வெளிப்பட்டு விடுகிறது. அவன் வந்த புதிதில் என் ப்ராஜெக்ட் பற்றி பல விஷயங்களை என்னிடமிருந்து அவன் கற்று கொள்ள வேண்டி இருந்தது, அதனால் பல சமயங்கள் அவன் என்னிடம் பேசி பழக வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. அவனை எங்கோ பார்த்த உணர்வு அவ்வப்போது எழுந்து விழுந்து கொண்டு தான் இருந்தது.பிறகு தான் , என் அடிமனதில் நான் கற்பனை செய்திருந்த ஒரு முழுமையான ஆண்மகனின் உருவம்தான் அது என்று தெரிந்தது. அசடு வழியும் ஆயிரம் பேர் நடுவில் கண் பார்த்து கண்ணியமாய் பேசி எனை அசத்தினான். அவன் பேசும் பொழுதுகள் மிக குறைவு,சிரிக்கும் சமயங்கள் அதை விட குறைவு. ஆனால் பேசினால் அச்சு தெரித்தால் போல் பேசுவான்,சிரித்தால் உதட்டளவே இல்லாமல் உள்ளத்திலிருந்து சிரிப்பான். வெளிநாட்டிலிருக்கும் எங்கள் குழு உறுப்பினர்களுடன் அவன் பேசும் லாவகத்திற்கு நான் தீவிர ரசிகை ஆகிவிட்டேன். ப்ராஜெக்டில் பல பிரச்சினைகள் இருக்கும் சமயங்களிலும் நிதானம் தவறாமல் அவன் வேலை செய்யும் பாங்கு என்னை கவர்ந்தது.குழுவில் பெண்கள் யாரும் வெகு நேரம் தங்காமல் வீடு செல்ல அவன் எடுத்துகொண்ட அக்கறை எனக்கு பிடித்து இருந்தது.
நான் இவனை இப்படி பார்த்து பார்த்து ரசித்து கொண்டு இருக்க,அவனோ என்னை கண்டும் காணாதது போல் இருந்தான். வேலை நிமித்தம் தவிர நாங்கள் பேசி கொள்ள சந்தர்ப்பங்கள் மிக குறைவு. குழுவில் நாங்கள் வெளியே எங்காவது சென்றாலும்,அவன் அவ்வளவாக ஒட்டிக்கொள்ள மாட்டான். ஆனால் நானோ ,அவன் இல்லாமல் ஒரு வாழ்க்கையை கற்பனை செய்து கூட பார்க்க முடியாமல் இருந்தேன். திரையில் புதிதாக வெளிவந்த காதல் பாடல்கள் எல்லம் எங்களை ஒட்டியே எழுதப்பட்டது போன்று இருந்தது. நான் பார்க்கும் பொருள் ஒவ்வொன்றும் எப்படியாவது அவனை நினைவுபடுத்துபவையாகவே இருந்தது. என் வாழ்வில் கஷ்டங்கள் வேண்டும் என்று விரும்பினேன்,அப்பொழுது தான் அவன் தோளில் சாய்ந்து அவன் அரவணைப்பை ரசிக்கலாம் என்பதற்காக. அவன் அம்மாவோடு நான் கடைத்தெரு செல்லும் போது அவன் கேலி செய்வதைபோல் கற்பனை கண்டு திளைத்தேன். வேதனை தரும் மூன்று நாட்களில் ஆறுதல் அளிக்கும் அவன் கதகதப்பிற்காக ஏங்கினேன். போர்வையாய் அவன் கரம் போர்த்த முடிவில்லா கடலில் தொலைந்திருக்க ஆசை பட்டேன். குழந்தையை யார் பள்ளிகூடத்தில் விடுவது போன்ற சண்டை சச்சரவுகளை கனவில் சிரித்தபடி போட்டேன்.
அலுவலகம் செல்லும்போது கூட அவனிடத்தில் என்ன பேச வேண்டும் மனதிற்குள் பயிற்சி செய்தி கொண்டே போனேன். அவனுக்கே இவ்வளவு சமயத்தில் சந்தேகம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்,அவனிடம் இருக்கும் போது துடிக்கும் மனதை கட்டு படுத்த முடியவில்லை. இதோ வந்து விட்டான். எளிதாக கண்டுபிடிக்க முடியாத ஒரு மெல்லிய புன்னகையை பூத்து கொண்டு!!
தேனீர் அருந்த போவது போல் பாவனை செய்து கொண்டு அவன் முன் நடந்தேன்.
“ஹை பரத்”
“ஹலோ தேஜஸ்வினி, வீகெண்ட் எப்படி இருந்தது??”
“எப்பவும் போல தான், ஹே நான் உன் கூட கொஞ்சம் பேசனும்”
“ஹ்ம்ம்ம் ஆமாம் நானே உன்கிட்ட அது பத்தி பேசனும்னு நெனெச்சேன்”
“என்னது??” , எனக்கு மயக்கமே வந்து விடும் போல இருந்தது.
“அந்த ஏழாவது ஸ்க்ரீன் – ல இருக்கற பக்கு(bug) தானே?? வெள்ளிகிழமை சாயந்திரம் 11 மணி வரைக்கும் அதுலதான் வொர்க் பண்ணிட்டு இருந்தேன்”என்று சொல்லிவிட்டு ஈஈ என்று இளித்து கொண்டு இருந்தான். எனக்கு அவன் முகத்தில் ஒரு வாளி பச்சை தண்ணீர் ஊற்ற வேண்டும் போல இருந்தது.
“இல்ல பரத், இது வேற விஷயம்”
“அப்படியா!! என்னது”,திடீரென்று ஆச்சரியத்தை வரவழைத்துகொண்டு கேட்டான்.
நான் என்ன சொல்ல போறேன்னு உனக்கு உண்மையாவே தெரியாதா கள்ளூளி மங்கா என்று நினைத்துக்கொண்டே தொடர்ந்தேன்.
“அப்புறமா சொல்றேன்,இன்னைக்கு சாயங்காலம் காபி ஒன்னா சாப்பிடலாமா??”
அவன் முகத்தில் கொஞ்சம் லேசாய் மாற்றம் தெரிந்தது.
“ஒகே, நோ ப்ராப்ளம்” . அவன் முகத்தில் புன்னகை திரும்பினாலும் அது முழுமையாக இல்லை.
“ஓகே, பாக்கலாம்!!” என்று புன்னகைத்து விட்டு, காபி இயந்திரம் இருக்கும் இடம் நோக்கி விடு விடுவென்று நடந்தேன். இனிமேல் மறைக்க முடியாது,பாதி கிணறு தாண்டியாகிவிட்டது. அவனை திரும்பி பார்க்க கூடாது என்று என்னை மிகவும் கட்டுபடுத்திக்கொண்டேன். வாழ்க்கையிலேயே என்னை கட்டுப்படுத்திகொள்ள அன்றுதான் மிகவும் கஷ்டப்பட்டேன்.

- இதயப்போராட்டம் தொடரும்………..

பி.கு:Game of hearts எனப்படும் என் ஆங்கில கதையின் தமிழாக்கம்.

இதயப்போராட்டம் - பாகம் 1
இதயப்போராட்டம் – பாகம் 2
இதயப்போராட்டம் – பாகம் 3
இதயப்போராட்டம் – பாகம் 4

2 comments:

நிலவொளி said...

hey cvr, nee un english pathvai translate pani irukara. good. but nadai english pola avlo nala varala.. thonichu sonnen

CVR said...

கிருத்திகாவா அது??
என்னால முடிஞ்ச அளவுக்கு மொழி பெயர்ப்பு பண்ணி இருக்கேன். இதை எப்படி நல்லா வர வைப்பது என்று உங்களிடம் ஏதாவது யோசனை இருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன் :-)

Related Posts Widget for Blogs by LinkWithin