அழகுகள் ஆறு

என் இனிய தமிழ்மக்களே,
என்னைக்கும் போல இணையத்துல மேய்ஞ்சுகிட்டு இருந்த போது சில நாட்களுக்கு முன்னால நம்மளோட ஸ்டார் ப்ளாகர், முதலாண்டு நிறைவு விழாவை கொண்டாடி கலக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இளைய தளபதி,பாஸ்டன் புயல், தமிழ் வலைப்பூ உலகின் கெட்டிப்பயல், அன்பு தோழர் வெட்டிப்பயல் ஆன்லைன்ல வந்தாரு (யாராவது ஒரு சோடா ஒடைங்கப்பா).
நாம தான் வேற வேலை இல்லாம அலைஞ்சிக்கிட்டு இருக்கோமே,சும்மா இல்லாம
“எப்படி இருக்கீங்க தலைவா??” அப்படின்னு கேட்டு வெச்சேன்.

அவரும் "போய்ட்ருக்கு!!! ஆணி ஓவரா இருக்கு" அப்படின்னு அவரு வழக்கமா போடற பிட்டு போட ஆரம்பிச்சாரு!!

“ஐயகோ !!! ஒரு தமிழனுக்கு நிகழும் இந்த அவலத்தை கண்டிக்க யாருமே இல்லையா,இதுக்கு தான் 'ஆணிகள் தொல்லயடி பாப்பா' என்று அன்றே சொல்லி வெச்சான் எங்கள் முண்டாசு கவிஞன்" அப்படின்னு கொஞ்சம் ஓவராவே சவுண்டு விட்டேன்.

“யோவ் அதெல்லாம் அவரு எப்போயா சொன்னாரு??”

“ஓ!! அது அவரு சொல்லலையா?? சரி அவரோட பக்கத்து வீட்டுகாரரு சொல்லி இருப்பாரு.இப்போ அதுவா முக்கியம்???

“மகனே உனக்கு நக்கல் ரொம்ப ஜாஸ்தியா போயிருச்சு!!! இந்தா வாங்கிக்கோ சாபம்!!! உன்னை டாக் பண்றேன்" அப்படின்னு ஒரு குண்டை தூக்கி போட்டுட்டாரு.

“ஐயோ தெய்வமே!! நண்பர்கள் இடையே கோபங்கள் இருக்கலாம்,ஆனா கொலைவெறி இருக்க கூடாது"அப்படின்னு நானும் சொல்லி பார்த்தேன்.ஆனா அவரு கேக்கறதா இல்லை.
சரின்னு "அப்போ பாவ்னா,காதரினா ஜீடா ஜோன்ஸ் அப்படி இப்படினு ஆறு ஃபிகர்களோட படங்கள் போட்டா போதுமா"ன்னு நானும் அப்பாவியா(?!) கேட்டேன்.

“அதெல்லாம் ஒத்துக்க முடியாது,ஏதாவது எழுதனும் “அப்படின்னு கண்டிப்பா சொல்லிட்டாரு சரி!! எல்லாம் இறைவன் செயல் அப்படின்னு நானும் எழுத ஆரம்பிச்சிட்டேன்.

1.)தமிழ்: அழகுன்னு நான் யோசிக்க ஆரம்பிச்ச உடனே என் நினைவுக்கு வந்தது தமிழ்தாங்க!! தமிழா?? யார் அந்த பொண்ணு அப்படின்னு கலாட்டா பண்ண கூடாது.நான் சொல்லுறது நம்ம தாய் மொழியைதான். எனக்கு சின்ன வயசுல இருந்து தமிழ் ரொம்ப பிடிக்கும். ஆனா நான் பள்ளிக்கூடத்துல மூனாவதுல இருந்து இந்தி தான் படிச்சேன். அப்பப்போ கல்கி,குமுதம் அப்படின்னு படிக்கறதோட சரி. அதுவும் அந்த புஸ்தகம் எல்லாம் படிப்பு கெட்டுடும்னு வீட்டுல வாங்க மாட்டாங்க(அப்படியாவது போர் அடிச்சி ஒழுங்கா படிப்பேன்னு நினைச்சாங்க,ஆனா நாம் எங்கிருந்து?? ஹி ஹி) எங்கேயாவது உறவுகாரங்க வீட்டுக்கு போனா படிக்கறது அவ்வளவுதான். எழுத்து தமிழ் கூட எனக்கு அவ்வளவா தொடர்பு இல்லாட்டாலும் தமிழ் மேல ஆர்வம் மட்டும் இருந்துக்கிட்டே இருந்துச்சு.
வேலைக்கு சேர்ந்த அப்புறம் மின் அஞ்சல் மூலமா வர நிறைய கவிதை எல்லாம் படிச்சுட்டு என்னுடைய ஆர்வம் திரும்பியும் சூடு பிடிச்சிருச்சு!! ஒரு நாள் ஆர்வம் ஓவரா போய் நானே தமிழ்ல கிறுக்க முயற்சி பண்ணர அளவுக்கு போயிருச்சு.அப்பப்போ இப்படி கிறுக்கற தமிழ்ல நிறைய எழுத்து பிழை இருக்குன்னு நண்பர்கள் எல்லாம் சொல்லுவாங்க. அதை முன்னேற்றுவதற்கான ஒரு முயற்சியாகத்தான் இந்த வலைப்பதிவை ஆரம்பித்தேன். அதுக்கு அப்புறம் தற்செயலா தமிழ்மணம்,தேன்கூடு எல்லாம் பார்த்து,அதுல பதிவு செஞ்சுக்கிட்டு,அதுக்கு அப்புறம் எல்லாம் தெரிஞ்ச கதை!!
ஆனா நம்ம தமிழோட அழகுதான் என்னை இவ்வளவும் செய்ய வெச்சுது!! எனக்கு பொதுவாவே கவிதை பிடிக்கும்,இருந்தாலும் தமிழ் கவிதகள்ல இருக்கற சுவை ஆங்கிலத்துலையோ,இந்தியிலையோ இருக்கறா மாதிரி தெரியலை. எனக்கு தமிழ் தாய் மொழிங்கறதுனால அப்படி தெரியுதா ? இல்லை உண்மையாவே தமிழ் மத்த மொழியை விட அழகான மொழி அப்படிங்கறதுனால இப்படி இருக்கான்னு தெரியலை. எது என்னவோ சம்ஸ்க்ருதம் அரபிக் உட்பட 15 மொழிகள் வரை கற்றறிந்த பாரதியாரே
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”
அப்படின்னு சொல்லியிருக்காரு,கூடவே “உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை” அப்படின்னு ஒரு டிஸ்கி வேற குடுத்துட்டு போயிருக்காரு.
வலை உலகத்துல முதல் முறையா தமிழை பார்த்த உடனே எவ்வளவு அழகா இருந்துச்சு எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சனு வார்த்தையில சொல்ல முடியாது.இப்போ கூட கணிணியில் தமிழை பார்க்கும்போதெல்லாம் ஆனந்தம். நம்ம ஊரு பொண்ணுங்க புடவை சுடிதார் எது போட்டாலும் அழகா இருக்கா மாதிரி லதா ,அவரங்கள் இப்படி எந்த் ஃபான்ட்ல (font) பார்த்தாலும் நம்ம தமிழ் அழகுதான். (ஹி ஹி நம்மலையும் அறியாம நம்ம ஜொள்ஸ் உணர்வு எப்படியாவது தலை காட்டிடுது!! )


2.)நட்பு: உலகத்துல காதல்,தாய்மை (சரி தந்தைமையும் கூட) போன்ற பல உறவுகள் இருந்தாலும் நட்பு என்பது மிக அழகான , சிறப்பான உறவு. தாய்மை,காதல் என்பதெல்லாம் கூட அமைவதற்கு உடல் ரீதியான காரணங்களை கூறி விடலாம் ,ஆனால் நட்பு என்பது மனதை பொருத்த ஒரு விஷயம். அதுவும் இல்லாம ஒருத்தர் தாயை பார்க்காமலோ,காதல் வயப்படாமலோ வாழ்க்கை முழுதும் கழிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம்,ஆனால் நட்பையே பார்த்திராதவற்கள் இந்த உலகத்தில் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. இது நட்பின் பல சிறப்புகளில் ஒன்று.வாழ்க்கையில் சந்தோஷத்தின் ரகசியம் என்ன என்று நான் பல சமயங்களில் யோசித்தது உண்டு. நான் பார்த்த வரை சந்தோஷத்தின் ரகசியம் நல்ல உடனிருப்பு (company). பக்கத்தில் நமது மனதிற்கு பிடித்த ஒருவர் இருந்துவிட்டால் ஒரு மனிதன் எந்த பிரச்சினையையும் எதிற்கொள்வான்,எந்த ஒரு இடத்திலும் புகார் கூறாமல் இருந்து விடுவான். அதுவும் சில நண்பர்களூடன் லூட்டி அடிக்க ஆரம்பித்து விட்டால் உண்டாகும் சுகம் சொல்லி மாளாது.
நட்பு என்றாலே எல்லாம் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம் அல்ல. நம் நம்பும் சில விஷயங்களை ஒருவர் ஒத்துக்கொள்ளாவிட்டடாலும் ,நம் குணங்களில் வித்தியாசம் இருந்தாலும் கூட நல்ல நண்பர்களாக இருக்க முடியும் . கர்ணன் துரியோதனனில் இருந்து ராஜாஜி பெரியார் வரை நிறைய உதாரணங்கள் இருக்கிறது நம்மை சுற்றி. உலகில் எல்லோருமே ஒரே மாதிரி யோசிப்பதில்லை,நம் வளர்ப்பு,அனுபவங்களுக்கு தகுந்தார்போல் நம் எண்ண ஓட்டங்களும் வித்தியாசமாக த்தான் இருக்கும். அதற்காக எல்லோருமே அடித்துக்கொண்டு சாக வேண்டும் என் அர்த்தம் அல்ல. நண்பனாக இருந்து கொண்டே நம் எண்ணங்களில் உறுதியாக இருக்கலாம் வாதிக்கலாம். சில சமயம் வாதங்களில் மிகவும் கோபம் வரக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படலாம்.அப்பொழுது சில காலம் பொறுத்திருந்து பதிளலித்தால் நட்பின் பலனை பெறலாம்.
என்னை பொருத்த வரை நட்பு என்பது மனிதனுக்கு வாய்த்திருக்கும் மிக அழகான விஷயங்களில் முதன்மையானது. அதை உணராமல் பகைமையை வளர்த்துக்கொள்வது “கனியிருப்ப காய் கவர்ந்தற்று” என்பதையே நினைவூட்டுகிறது.

3.)இயற்கை: நான் அந்த பெயரில் உள்ள படத்தை சொல்லவில்லை நம்மை சுற்றி உள்ள இயற்கையை தான் சொல்லுகிறேன். தனிமையான கடற்கரை ஆகட்டும், தூய்மையான காற்றில் செறிந்த அடர்ந்த வனப்பகுதியாகட்டும், குளிர்ந்த தட்பவெட்பமுடன் மனதை மயக்கும் மலைப்பகுதியாகட்டும்., எழில் கொஞ்சும் அழகோடு துள்ளித்திரியும் மான் போன்ற மிருக வகைகள் ஆகட்டும், இயற்கையின் அழகுக்கு எல்லையே இல்லை. நான் தனிமை விரும்பி என்பதால் கடவுள் இந்த உலகை எவ்வளவு ரசனையோடு படைத்திருக்கிறார் என்று அப்பப்பொழுது சிலாகித்திருப்பேன். உதாரணத்திற்கு கடற்கரையே எடுத்துக்கொள்ளுங்களேன். காலை கட்டிக்கொள்ளும் நாய்க்குட்டி போல நம்மோடு விளையாடும் மணல்பரப்பு , ஒரு ஆறு வயது குழந்தையை போல நம்மோடு ஓடி பிடித்து விளையாடும் கடல் அலைகள் , ஒரு இனிய நண்பனைபோல் நம்மை சுற்றி கிரணங்களால் உற்சாகம் நிறப்பும் மாலை சூரியன், காதலியை போல் மென்மையாக தோளில் சாயும் பௌர்ணமி நிலவொளி.ஆகா இதை பற்றி எல்லாம் பேச ஆரம்பித்தேன் என்றால் நிறுத்தாமல் போய்க்கொண்டே இருப்பேன்.இப்படி இயற்கையோடு ஒன்றி தனிமையில் மூழ்கிகிடப்பதே ஓரு அழகான சுகமான உணர்வு தான்.
இவ்வளவு அழகான இயற்கையை நினைக்கும் போது நம்மை அறியாமலேயே அதை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறோமே என்று நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. முடிந்த வரை இயற்கையை பாதுகாப்போம் என உங்கள் ஒத்துழைப்பை கேட்கபதை தவிர வேறு ஒன்றையும் சொல்ல தோன்றவில்லை.

4.) அழகான தருணம்: இதை பற்றி நினைக்கும் போது பல நினைவுகள் என் மனதில் எழுகின்றன. கவுன்சிலிங் முடித்து பொறியியல் சீட் கிடைத்த பிறகு பெருமிதததுடன் என் தந்தை நடந்து செல்ல. அவர் பின் போய்கொண்டிருந்த என் அம்மா “கையை வீசிக்கிட்டு போற வேகத்தை பார்த்தியா,சும்மாவா?? எஞ்சினியர் அப்பா ஆயிட்டாருல அதான்” என்று சொன்னபோது ஏற்பட்ட உணர்வு. இது எனக்கு கிடைத்த ஒரு விஷயம் என்பதை விட ,இது கிடைப்பதற்கு அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்ற எண்ணமும் ,இதனால் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை பார்க்க குதூகலமும். அப்பப்பா இப்படி ஆயிரம் எண்ண ஓட்டங்கள்!!மிக அழகான தருணம்.
அமெரிக்க எம்பசியில் வீசா வாங்கிவிட்டு கூட இன்டெர்வ்யூவிற்கு வந்திருந்த நண்பருடன் தெரு ஓர கடையில் தேனீர் அருந்திக்கொண்டே “என்ன தான் வீசா வாங்கினாலும் நாளைக்கு அமெரிக்காவே போனாலும்,நாம எல்லாம் லோக்கல் கய்ஸ் தான்யா, இப்படி ஃப்ரண்ட்ஸோட சிங்கிள் டீ குடிக்கற சொகம் எங்கையாவது வருமா” என்ற கதைத்ததும். “என்ன கார்த்தி(நம் தமிழ் பதிவுலக கார்த்தி கிடையாது),வீட்டுக்கு போனதும் பொண்ணு பார்க்க சொல்லிறலாமா?? அமெரிக்கா மாப்பிள்ளை ஆயிட்டோம்ல” என்று கிண்டல் பேசிக்கொண்டிருந்ததும்.காத்திருந்து சரியாக மாடி பஸ்ஸில் ஏறி,மாடியில் இடம் பிடித்து உட்கார்ந்துகொண்டு,சுகமாக வேடிக்கை பார்த்தபடி “அப்பாடா அந்த சிடு மூஞ்சி ப்ராஜெக்ட் மானேஜர் கிட்ட இருந்து எஸ்கேப்பு,புது ப்ராஜெக்ட் புது ஆரம்பம்” அப்படின்னு மனசுக்குள்ள மலர்ந்ததும்!! அப்பப்பா சுகமான அனுபவம்.

கார் ஓட்டுன களைப்புல தூங்க போறேன்னு நண்பர்கள் எல்லாம் போய்விட. களைப்பா இருந்தா கூட பரவாயில்லைனு கனடா நாட்டு பகுதியில் உள்ள நயாகராவின் பட்டாம்பூச்சி பூங்காவுக்கு தனியா வந்து. நம் கை மேலும் தோள் மேலும் உட்காரும் பட்டாம்பூச்சிகளுடம் விளையாடிவிட்டு. வெளியே வந்து ஒரு பென்ச்சில் போகும் வருவோரை வேடிக்கை பார்த்தபடி,சுற்றி பச்சை பசேலென்றிருந்த இயற்கைய ரசித்துகொண்டே. அமைதியாக நேரம் தெரியாமல் புன்னகைத்து கிடந்தது. ஆகா எவ்வளவு அழகான தருணம்.
டிஸ்கி : கூட பென்ச்சில் அழகான யாராவது துணையா உட்கார்ந்திருந்தா இன்னும் அழகா தான் இருந்திருக்கும்.இருந்தாலும் இது அழகுதான்!! :-)

5.)அழகான இடம்::அழகான இடம் அப்படின்னு யோசிச்சா எல்லோருக்கம் அவங்களோட சொந்த ஊரு தான் நியாபகத்துக்கு வரும் ஆனா நான் யோசிச்ச போது எனக்கு நியாபகத்துக்கு வந்த ஒரே விஷயம் “மொட்டை மாடி” . நான் என் வாழ்க்கையில் என் வீட்டில் கழித்த சந்தோஷமான தருணங்கள்னு யோசிச்சு பார்த்தாலே எனக்கு எங்க மொட்டை மாடி தான் நினைவுக்கு வருது. சின்ன வயசுல படிக்கறேன் பேர்வழினு மாடிக்கு போய்ட்டு வானத்தை பார்த்தேன்,பறவைகளை பார்த்தேன்(இதுல இரட்டை அர்த்தம் எதுவும் கிடையாதுங்க),தென்றலை ரசித்தேன்,அணிலை பார்த்தேன் அப்படின்டு வெட்டியா நேரத்தை ஓட்டிட்டு இருப்பேன். மாலை மற்றும் இரவு பொழுதுகளில் என் அன்னை தந்தையருடன் மொட்டை மாடியில் பேசிக்கோண்டு இருப்பது எங்களுக்கு மிகவும் பிடித்தமான பொழுது போக்கு. நாங்கள் புது வீட்டிற்கு வந்த பிறகு கூட இந்த பழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. நான் புதிதாக வீடு பார்க்க வேண்டும் என்று நினைத்தபோது கூட இதனால்தான் ப்ளாட்களை விரும்பாமல் தனி வீடுகளையே வாங்க விரும்பி இருந்தேன். எங்கள் புது வீட்டுக்கு வந்த பிறகு அதில் மொட்டை மாடியில் இருக்கும் பெரிய தண்ணீர் தொட்டி என்னுடைய மிகவும் பிடித்தமான இடம். நேரம் காலம் இல்லாமல் போர் அடிக்கும் பொழுது எல்லாம் அதில் ஏறி எங்கள் வீடு சுற்றி உள்ள மற்ற வீடுகள் மற்றும் மலை இவற்றை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விடுவேன். இரவு நேரங்களில் அந்த தொட்டியின் மேல் மல்லாக படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டு இவ்வளவு பெரிய அண்டத்தை படைத்து என்ன புண்ணியம்?? எல்லோரும் அடித்து பிடித்துக்கொண்டு செத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த படைப்பின் காரணம் என்ன?? எதற்கு இவ்வளவு பெரிய அண்டம் படைக்க வேண்டும்??,நம் சூரிய குடும்பம் மற்றும் வான் வெளியில் சில நட்சத்திரங்களை மட்டும் படைத்திருந்தால் போதுமே என்று லூசுத்தனமாய் யோசித்துக்கொண்டிருப்பேன். வானில் கண்ணடிக்கும் நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டே உலகையே மறந்திருக்கும் தருணங்கள் அழகு. அதை தரவல்ல மொட்டை மாடி அழகோ அழகு!! :-)

6.)அழகு முகம்: மிகச்சிறிய வயதில் எல்லோரையும் போல அம்மாவின் முகம் தான் மிக அழகான முகம். நிபந்தனை அற்ற அன்போடு அவர்கள் பேசும் போதும் எல்லா வயதினிலும் தாய் தந்தையரின் முகத்தை போல அழகு வேறு எதுவாகவும் இருக்க முடியாது என்று தோன்றும். ஆனாலும் வயது கோளாரினால் எல்லோரையும் போல எனக்கும் பெண்களின் அழகு ஈர்க்காமல் இல்லை. அம்பிகா முதல் அன்னா கோர்னிகோவா வரை வரைமுறை இன்றி சைட் அடித்திருக்கிறேன். ஆனால் மக்கள் பெரிதும் தலையில் தூக்கிக்கொண்டு ஆடும் கரீனா கபூர்,கட்ரீனா கைஃப் போன்றவர்களை எனக்கு சுத்தமாக பிடிக்காது. ஐஸ்வர்யா ராயின் அழகுகூட மிகைபடுத்தப்பட்ட பாராட்டு என்றுதான் எனக்கு பலமுறை தோன்றும். நம்ம டேஸ்ட் அப்படி. திடீரென்று விளம்பரங்களில் தோன்றும் ஏதோ ஒரு நடிகையின் முகம் ,பல பேருக்கு பிடிக்காமல் போகலாம் ஆனால் எனக்கு பிடித்து விடும்.ஏன் என்று தெரியாது.பொதுவாகவே ஓவராக சீன் போடாமல் எளிமையாக மற்றும் புத்திசாலித்தனமாக காணப்படும் நடிகைகளின் முகங்கள் எனக்கு மிகவும் பிடித்துவிடும். அதனால் தான் “Item bomb” கலையும் , “Glamour doll”கலையும் என்க்கு பொதுவாக பிடிக்காது. அதனால் எனக்கு பிடித்த முகங்கள் பலருக்கு சாதாரணமாக தோன்றக்கூடிய முகங்கள் தான். “Beauty lies in the eyes of the beholder” என்பது போல் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான எண்ணங்கள்.


அப்பாடா எப்படியோ பதிவை முடித்தாகிவிட்டது. யாம் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெருக என்ற சொல்லிற்க்கேற்ப நானும் மூனு பேர இதுல இழுத்து விடறேன்.

1.)கனவுக்கண்ணன் Dreamzz
2.)கனவுலக கார்த்தி
3.)பின்னூட்டதுல எப்பவுமே ஃபர்ஸ்ட் வர மை ஃபிரண்ட்

நடத்துங்க!!
ஐயம் தி எஸ்கேப்!!! :-D

32 comments:

MyFriend said...

CVR,

உங்களுக்கு என் மேல் ஏன் இந்த கொலை வெறி?????

MyFriend said...

தமிழை பற்றி சொல்லுறேன்னு ஜொல்லு வழியிரீங்களே???

MyFriend said...

//பொறியியல் சீட் கிடைத்த பிறகு பெருமிதததுடன் என் தந்தை நடந்து செல்ல. அவர் பின் போய்கொண்டிருந்த என் அம்மா “கையை வீசிக்கிட்டு போற வேகத்தை பார்த்தியா,சும்மாவா?? எஞ்சினியர் அப்பா ஆயிட்டாருல அதான்” என்று சொன்னபோது ஏற்பட்ட உணர்வு.//

உண்மையிலேயே இது அழகான தருணம். இதை பார்க்கத்தானே நாம் இப்படி கஷ்டப்பட்டு படிக்கிறோம். :-)

CVR said...

//உங்களுக்கு என் மேல் ஏன் இந்த கொலை வெறி????? //
ஹ ஹா,யாம் பெற்ற இன்பம்........

//தமிழை பற்றி சொல்லுறேன்னு ஜொல்லு வழியிரீங்களே??? //
என்ன பண்றது!! எல்லம் என் நேரம்!! :-P

//
உண்மையிலேயே இது அழகான தருணம். இதை பார்க்கத்தானே நாம் இப்படி கஷ்டப்பட்டு படிக்கிறோம். :-) //
படிக்கறேன் அப்படின்னு சொல்லுங்க!! என்னையும் ஏன் அந்த லிஸ்ட்ல சேக்கறீங்க!! :-D

மு.கார்த்திகேயன் said...

/தமிழ்: அழகுன்னு நான் யோசிக்க ஆரம்பிச்ச உடனே என் நினைவுக்கு வந்தது தமிழ்தாங்க!! தமிழா?? யார் அந்த பொண்ணு அப்படின்னு கலாட்டா பண்ண கூடாது.நான் சொல்லுறது நம்ம தாய் மொழியைதான். //

ஆரம்பமே நக்கலோட, பட்டாசா ஆரம்பிக்குதுப்பா..

தமிழ் அழகுன்னு சொல்லாத ஆள் கிடையாது.. நீங்க சொல்லலைனாத் தான் தப்பு..

மு.கார்த்திகேயன் said...

/3.)பின்னூட்டதுல எப்பவுமே ஃபர்ஸ்ட் வர மை ஃபிரண்ட்///


சொன்ன மாதிரியே இதுக்கும் முதல் ஆளா வந்துட்டாங்க மை பிரண்ட்..

மு.கார்த்திகேயன் said...

/திடீரென்று விளம்பரங்களில் தோன்றும் ஏதோ ஒரு நடிகையின் முகம் ,பல பேருக்கு பிடிக்காமல் போகலாம் ஆனால் எனக்கு பிடித்து விடும்//


யார் சொன்னா CVR.. எனக்கும் பிடிக்கும்.. உங்க மனசுல இப்படித் தான் இருக்கணும்னு ஒரு படிவம் இருக்கும்.. அது யாருக்கெல்லாம் ஒத்துபோகுதோ அவங்களை உங்களுக்கு பிடிக்கும்.. நமக்கு பிடிக்கிறவங்க அடுத்தவங்களுக்கு பிடிக்கலைனா, கவலைப்படாதீங்க CVR

இலவசக்கொத்தனார் said...

நல்லாத்தானே சொல்லி இருக்கீக, இதுக்கு எதுக்கு இம்புட்டு தன்னடக்க பில்ட் அப்பு?

உமக்கு மொட்டை மாடின்னா எனக்கு ஒரு துணி தோய்க்கிற கல்லு!

நீர் பதிவு போடறதுக்கு 15 நிமிஷம் முன்னாடி பதிவு போட்டு கோபிநாத் ஜி மற்றும் மை ஃப்ரெண்டைக் கூப்பிட்டுட்டாரே. ஆளை மாத்துங்க.

அப்புறம் உங்க பக்கத்துக்கு வந்தா பாப் அப் வருதே. அதுக்கு மருந்து இருக்கு. தமிழ்மணத்தில் கூட யாரோ சொல்லி இருக்காங்க. கொஞ்சம் தேடிப் பார்த்து போட்டுடுங்க.

கதிர் said...

நல்லா இருக்குங்க CVR!

நட்பை அழகா சொன்னதும் ரொம்பவும் பிடிச்சிருந்தது. எங்க போய் செட்டில் ஆனாலும் நண்பர்களோட இருப்பது போல வராது.

அழகா எழுதிட்டிங்க!

CVR said...

@கார்த்தி
//ஆரம்பமே நக்கலோட, பட்டாசா ஆரம்பிக்குதுப்பா.. //
நன்றி தலைவரே

//தமிழ் அழகுன்னு சொல்லாத ஆள் கிடையாது.. நீங்க சொல்லலைனாத் தான் தப்பு.. //
அதென்னவொ சரிதான். ஆனா சில தனக்கு சரியா வராட்டாலும் தேவையே இல்லாம ஆங்கிலத்துல பேச முயற்சி பண்றாங்களே என்ன செய்வது!! :-)
//
நமக்கு பிடிக்கிறவங்க அடுத்தவங்களுக்கு பிடிக்கலைனா, கவலைப்படாதீங்க CVR //
இதுல கவலையே கிடையாது கார்த்தி, சந்தோசம் தான். நம்மலுக்கு பிடீச்சது மத்தவங்களுக்கு பிடிக்காம இருந்தாதானே போட்டி கம்மியா இருக்கும்!! :-D

CVR said...

@ இலவசக்கொத்தனார்
ரொம்ப நாளைக்கு அப்புறம் பதிவுக்கு திரும்ப வந்திருக்கீங்க. நல்வரவு!! அப்பப்போ பதிவுக்கு வந்துட்டு போங்க!! :-)


//நல்லாத்தானே சொல்லி இருக்கீக, இதுக்கு எதுக்கு இம்புட்டு தன்னடக்க பில்ட் அப்பு?//
என்ன பண்ணுறது! இப்படியே ப்ல்ட் அப்பு கொடுத்து கொடுத்தே தான் ஓட்டிக்கிட்டு இருக்கேன்!!!! :-D

//உமக்கு மொட்டை மாடின்னா எனக்கு ஒரு துணி தோய்க்கிற கல்லு!//
ஆஹா!! அப்படியா?? ஆனா நீங்களும் நான் யோசிக்கர விஷயங்கள எல்லம் யோசிப்பீங்களா?? :-)

//நீர் பதிவு போடறதுக்கு 15 நிமிஷம் முன்னாடி பதிவு போட்டு கோபிநாத் ஜி மற்றும் மை ஃப்ரெண்டைக் கூப்பிட்டுட்டாரே. ஆளை மாத்துங்க.
//
இந்த பதிவை நேத்தே போடனும்னு நினைச்சேன். ஏதோ காரணங்களால தட்டி போயிருச்ச்சு!! ஹ்ம்ம் :-)
மை ஃபிரண்ட் கூட ஏற்கெனவே சொல்லியாச்சு,ஜி-கு பதிலா வேற ஒரு பெயரை மாத்திடறேன்.

///அப்புறம் உங்க பக்கத்துக்கு வந்தா பாப் அப் வருதே. அதுக்கு மருந்து இருக்கு. தமிழ்மணத்தில் கூட யாரோ சொல்லி இருக்காங்க. கொஞ்சம் தேடிப் பார்த்து போட்டுடுங்க. //
ஹ்ம்ம் அது என் வலைகணக்கை தம்பட்டம் அடித்துக்கொள்ள சேர்க்கப்பட்ட ஒரு நிரலியினால் வருகிறது என் நினைக்கிறேன்.அது என்ன மருந்து??
கொஞ்சம் விவரங்களை அனுப்புறீங்களா??

வரவுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கொத்தனாரே!! :-)

CVR said...

//நட்பை அழகா சொன்னதும் ரொம்பவும் பிடிச்சிருந்தது. எங்க போய் செட்டில் ஆனாலும் நண்பர்களோட இருப்பது போல வராது.
//
மொத முறையா பதிவுக்கு வந்திருக்கீங்க.
நல்வரவு!! :-)

நட்பு என்பது பற்றியே பல பதிவுகள் போடக்கூடிய அளவுக்கு அது ஒரு வெகு அழகான விஷயம்.
உங்க அழகு பதிவு நான் ரொம்பவும் ரசிச்சு படிச்ச பதிவு.

வரவுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தம்பி!! :-)

இராம்/Raam said...

CVR,

தலைப்புக்கு ஏற்றார் போல் அருமையான பதிவு :)

//இப்போ கூட கணிணியில் தமிழை பார்க்கும்போதெல்லாம் ஆனந்தம். நம்ம ஊரு பொண்ணுங்க புடவை சுடிதார் எது போட்டாலும் அழகா இருக்கா மாதிரி லதா ,அவரங்கள் இப்படி எந்த் ஃபான்ட்ல (font) பார்த்தாலும் நம்ம தமிழ் அழகுதான்.இப்போ கூட கணிணியில் தமிழை பார்க்கும்போதெல்லாம் ஆனந்தம். நம்ம ஊரு பொண்ணுங்க புடவை சுடிதார் எது போட்டாலும் அழகா இருக்கா மாதிரி லதா ,அவரங்கள் இப்படி எந்த் ஃபான்ட்ல (font) பார்த்தாலும் நம்ம தமிழ் அழகுதான்.///

பாமினி, பழைய ஸ்ரீதேவி எல்லாத்தையும் விட்டுடிங்க.... நானும் ஃபாண்ட் தான் சொன்னேன்.... :)

இராம்/Raam said...

//என்னை பொருத்த வரை நட்பு என்பது மனிதனுக்கு வாய்த்திருக்கும் மிக அழகான விஷயங்களில் முதன்மையானது.//

உண்மைங்க... :)

//காலை கட்டிக்கொள்ளும் நாய்க்குட்டி போல நம்மோடு விளையாடும் மணல்பரப்பு , ஒரு ஆறு வயது குழந்தையை போல நம்மோடு ஓடி பிடித்து விளையாடும் கடல் அலைகள் , ஒரு இனிய நண்பனைபோல் நம்மை சுற்றி கிரணங்களால் உற்சாகம் நிறப்பும் மாலை சூரியன், காதலியை போல் மென்மையாக தோளில் சாயும் பௌர்ணமி நிலவொளி.ஆகா இதை பற்றி எல்லாம் பேச ஆரம்பித்தேன் என்றால் நிறுத்தாமல் போய்க்கொண்டே இருப்பேன்.இப்படி இயற்கையோடு ஒன்றி தனிமையில் மூழ்கிகிடப்பதே ஓரு அழகான சுகமான உணர்வு தான்.//

ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க CVR :)

வல்லிசிம்ஹன் said...

இஞ்சினீயர் ஆக்கிய அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அழகா வணக்கம் சொல்லிட்டீங்க.
அண்ணாசாலை டீக்கடை இன்னும் எத்தனை பேரை ஏணி போலப் பார்த்திருக்கிறதோ.

தோய்க்கிறகல்லு, மாடிப்படி,மொட்டைமாடி,வாசல் கேட்
எல்லாமே அழகுதான்.
நம்மை உணர்ச்சிகளுக்கு உரம் கொடுக்கிறது இல்லையா?
வாழ்த்துக்கள்.

CVR said...

//பாமினி, பழைய ஸ்ரீதேவி எல்லாத்தையும் விட்டுடிங்க.... நானும் ஃபாண்ட் தான் சொன்னேன்.... :) //
ஹ்ம்ம்ம் நம்பிட்டேன் நம்பிட்டேன்!!! :P


வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தலைவரே!! :-)

CVR said...

@வல்லிசிம்ஹன்
//தோய்க்கிறகல்லு, மாடிப்படி,மொட்டைமாடி,வாசல் கேட்
எல்லாமே அழகுதான்.
நம்மை உணர்ச்சிகளுக்கு உரம் கொடுக்கிறது இல்லையா?
வாழ்த்துக்கள். //

உண்மைதான் அக்கா!! இதை போன்ற பதிவுகள் எழுதும்போது தான் நம் வாழ்வில் நாமே அறியாமால் குவிந்திருக்கும் அழகுகளை கண்டுக்கொள்ள முடிகிறது.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

Anonymous said...

//வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இளைய தளபதி,பாஸ்டன் புயல், தமிழ் வலைப்பூ உலகின் கெட்டிப்பயல், அன்பு தோழர் வெட்டிப்பயல் //

ஒரு ஐஸ் மழையே வைச்சுட்டீங்க.பாவம் வெட்டி சார்.சளி பிடிக்க போகுது அவருக்கு

//'ஆணிகள் தொல்லயடி பாப்பா' என்று அன்றே சொல்லி வெச்சான் எங்கள் முண்டாசு கவிஞன்" //

யார் இது.கண்டிப்பா பாரதி இல்லைன்னு தெரியுது.நம்ப தமிழ்மணத்தில் யாரவது முண்டாசோட இருக்காங்களா?

Anonymous said...

//(ஹி ஹி நம்மலையும் அறியாம நம்ம ஜொள்ஸ் உணர்வு எப்படியாவது தலை காட்டிடுது!! )//

உங்க ரத்ததில் ஊறி போன விசயம் ஜொள்ளு.அதான் இப்படி தலையைக் காட்டுது.


//டிஸ்கி : கூட பென்ச்சில் அழகான யாராவது துணையா உட்கார்ந்திருந்தா இன்னும் அழகா தான் இருந்திருக்கும்.இருந்தாலும் இது அழகுதான்!! :-)//

அடடா யாருக்கோ கேர்ள் ஃபிரண்ட் தேவை போல் இருக்கே :-))


உங்களுக்குப் பிடித்த அழகுகள் அனைத்தும் அழகாகதான் இருக்கு :-))

சுப.செந்தில் said...

நீங்க சொன்ன ஆறும் அழகுதான்னாலும் இந்த அழகான தருணம் தலைப்பின் கீழ் எழுதியுள்ள தமிழ் அழகு அது கொடுத்த
உணர்வழகு

வடுவூர் குமார் said...

நான் சொல்ல நினைத்த சில முன்னமே சொல்லிவிட்டார்கள் என்பதால்
அழகு- அழகாக வந்திருக்கிறது.
கைமேல் உட்காரும் வண்ணத்துப்பூச்சிக்காகவே வரலாம் போல் இருக்கிறது.

கோபிநாத் said...

ஆறு அழகுகளும் நல்லா இருக்கு CVR ;-)


\\என்னை பொருத்த வரை நட்பு என்பது மனிதனுக்கு வாய்த்திருக்கும் மிக அழகான விஷயங்களில் முதன்மையானது.\\

நட்பை பற்றி நீங்கள் கூறிய விதமும், வரிகளும் அருமை ;-)

\\றகு அதில் மொட்டை மாடியில் இருக்கும் பெரிய தண்ணீர் தொட்டி என்னுடைய மிகவும் பிடித்தமான இடம்\\

எனக்கும் ரொம்ப பிடித்த இடம். அதுவும் பட்டம் விடும் நேரங்களில் நாள் முழுக்க அங்கதான் இருப்போன்.

கோபிநாத் said...

\\//நீர் பதிவு போடறதுக்கு 15 நிமிஷம் முன்னாடி பதிவு போட்டு கோபிநாத் ஜி மற்றும் மை ஃப்ரெண்டைக் கூப்பிட்டுட்டாரே. ஆளை மாத்துங்க.
//
இந்த பதிவை நேத்தே போடனும்னு நினைச்சேன். ஏதோ காரணங்களால தட்டி போயிருச்ச்சு!! ஹ்ம்ம் :-)
மை ஃபிரண்ட் கூட ஏற்கெனவே சொல்லியாச்சு,ஜி-கு பதிலா வேற ஒரு பெயரை மாத்திடறேன்.\\

அட நீங்களும் இவுங்களை கூப்பிட்டு இருக்கீங்களா....நம்ம ரெண்டு பேருக்கும் அடிக்கடி ஒரே மாதிரி நடக்குது.

ஜி said...

romba azagaana aaru...

amma, natpu, ellaame pakkathula irukumpothu athoda arumai theriyaathu... konjam thalli irukumpothu :))

Dreamzz said...

adra adra! kalakiteenga thalai!

Dreamzz said...

naan nite vandhu meethi comment podaren ok a.. ippo oppicela irukken :)

CVR said...

@துர்கா
//ஒரு ஐஸ் மழையே வைச்சுட்டீங்க.பாவம் வெட்டி சார்.சளி பிடிக்க போகுது அவருக்கு//

சொன்ன எனக்கே கண்ண கட்டுச்சு!! அதான் அப்பவே ஒரு சோடா ஒடைக்க சொன்னேன்!! இன்னும் ஒரு பயலும் கொடுக்கல!! :-(

//யார் இது.கண்டிப்பா பாரதி இல்லைன்னு தெரியுது.நம்ப தமிழ்மணத்தில் யாரவது முண்டாசோட இருக்காங்களா? //
இந்த மாதிரி லூசுதனமா வேற யாரு உளருவாங்க?? அந்த முண்டாசு கட்டாத கவிஞன் (?!) நாந்தான்!! :D

//உங்க ரத்ததில் ஊறி போன விசயம் ஜொள்ளு.அதான் இப்படி தலையைக் காட்டுது.//
கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் உண்மயாவே மனுஷன் தானா ? இல்ல ஒரு AI ப்ரொக்ராமா அப்படின்னு கேள்வி கேட்டீங்க, இப்போ ஏதோ ரத்த பரிசோதனை எல்லாம் பண்ணி பார்த்தா மாதிரி பேசரீங்க!! :-)

//உங்களுக்குப் பிடித்த அழகுகள் அனைத்தும் அழகாகதான் இருக்கு :-))//
வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்க மேடம்!! :-)

CVR said...

@செந்தில்
//நீங்க சொன்ன ஆறும் அழகுதான்னாலும் இந்த அழகான தருணம் தலைப்பின் கீழ் எழுதியுள்ள தமிழ் அழகு அது கொடுத்த
உணர்வழகு //

பதிவுக்கு மொத முறையா வந்திருக்கீங்க,அடிக்கடி வந்து போங்க!!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி செந்தில்!! :-)

CVR said...

//நான் சொல்ல நினைத்த சில முன்னமே சொல்லிவிட்டார்கள் என்பதால்
அழகு- அழகாக வந்திருக்கிறது.
கைமேல் உட்காரும் வண்ணத்துப்பூச்சிக்காகவே வரலாம் போல் இருக்கிறது. //

நன்றி குமார். :-)

CVR said...

//நட்பை பற்றி நீங்கள் கூறிய விதமும், வரிகளும் அருமை ;-)
//
நன்றி கோபிநாத்!! இது நான் பெரிதும் நம்பும் கருத்து!! இன்னும் சொல்ல வேண்டிய பல விஷயங்களை சொல்லவில்லை என்றும் ,சொல்லிய சில விஷயங்களையும் கோர்வையாக சொல்ல வில்லை என்று எனக்கு ஒரு எண்ணம்.பின் எப்போவாவது ஒழுங்காக எழுத முயற்சி செய்கிறேன்.

//எனக்கும் ரொம்ப பிடித்த இடம். அதுவும் பட்டம் விடும் நேரங்களில் நாள் முழுக்க அங்கதான் இருப்போன்.
//
பார்த்து கோபி,பட்டம் விடும் வேகத்தில் விழுந்து விட போகிறீர்கள்!! :-)

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. :-)

CVR said...

@ஜி
//
amma, natpu, ellaame pakkathula irukumpothu athoda arumai theriyaathu... konjam thalli irukumpothu :)) //

ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் மாதிரி நச்சுனு சொன்னீங்க தலைவா!! :-)

Dreamzz said...

அண்ணாத்த! அருமையான பதிவு! இது நம்மளுக்கும் வேலை கொடுத்திட்டீங்க! இன்னைகு பன்ன பாக்கின்றேன்!

ஆனா எல்லாரும் நமக்கு முன்னால நான் சொல்ல போற குழந்தைகள், தமிழ், முருகன், இயற்க்கை, சிரிப்பு, என்று சோல்லிடீங்க :(

சரி.. ஏதாச்சும் யோசிப்போம் ;)

Related Posts Widget for Blogs by LinkWithin