அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 1

வாழ்க்கை பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை தந்து கொண்டே போய்க்கொண்டிருக்கிறது.

சிரிக்க வைக்கும், அழ வைக்கும், இரண்டில் எது என்று முழிக்க வைக்கும் நிகழ்வுகள்,
குறிப்பிடத்தக்கவை சில ,சாதாரணமானவை சில , இவை இரண்டின் நடுவில் மாட்டிக்கிடக்கும் பல,
மறக்கமுடியாத நிகழ்வுகள், மறக்க விழையும் நினைவுகள்,

புள்ளிக்கோலத்தில் வரும் புள்ளிகளை போல சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நிகழும் சில நிகழ்வுகள்!! அப்பப்பா எத்தனை விதம்!!

என் பெற்றோர்களுடன் விமான நிலையம் சென்று கொண்டிருந்தபோது இதை போன்ற ஒரு முக்கியமான நிகழ்வுதான் நடந்து கொண்டிருப்பதாக ஒரு உணர்வு.கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டாலும் ஒரு முதல் வெளிநாட்டு பயணத்துக்கு உண்டான பரபரப்பும் உற்சாகமும் என்னை தொற்றிக்கொள்ளாமல் இல்லை. என் பெற்றோர்கள் சந்தோஷத்தில் பூரித்துக்கொண்டிருப்பதை பார்த்து கொண்டே என் மனதில் சில கவலைகள அரித்துக்கொண்டிருந்தது. என் வாழ்க்கையில் நான் பெங்களூர், திருப்பதி தவிர தமிழ்நாட்டை விட்டு வெளியே போனது இல்லை. முதன் முதலில் வெளிநாடு செல்லபோகிறேன் அதுவும் முதன்முதலில் விமானத்தில் செல்லபோகிறேன் என்பதால் மனதில் ஒரு லேசான கிலி இல்லாமல் இல்லை.
விமான நிலையத்தில் என்னென்ன செய்ய வேண்டும்,விமானங்கள் மாற்றும் போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பல சந்தேகங்கள்.என் நிறுவனத்தில் இதற்கெனவே ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தாலும், எப்போதும் போல அந்த கூட்டத்தில் தூங்கியே கழித்துவிட்டேன்! அப்படியே கவனித்திருந்தால் கூட மனதில் பயம் முழுவதுமாக போயிருக்காது என்பது என்னவோ உண்மைதான்!

பயணத்துக்கு கோட்டு சூட் எல்லாம் போட்டுக்கொண்டு தடபுடலாய் தயார் ஆகி இருந்தேன்! கடவுள் புண்ணியத்தில் விமான நிலையத்தில் வேலை செய்யும் என் சித்தி இருந்ததால் கொஞ்சம் தைரியமாக இருந்தது.தன் குடும்பத்தில் வெளிநாடு செல்லும் தன் அக்கா மகனாகிய எனக்காக அவர்கள் எங்கள் கூடவே இருந்து வழி காட்டினார்கள்.

என் பயணம் மூன்று கட்டங்களாய் பிரிக்கப்பட்டிருந்தது. முதலில் சென்னையில் இருந்து மும்பை வரை ஜெட் விமான நிறுவன விமானத்தில் பயணம், பிறகு மும்பை முதல் ஆம்ஸ்டர்டாம்(Amsterdam) வரையில் நார்த்வெஸ்ட் விமான நிறுவன விமானத்தில்,அதன் பிறகு ஆம்ஸ்டர்டாமில் இருந்து டிட்ராய்ட்(Detroit) வரையில் திரும்பவும் நார்த்வெஸ்ட் விமான நிறுவன விமானத்தில் பயணம்.
சிறிது நேரம் திரு திரு என்று முழித்திவிட்டு ஜெட் விமான நிறுவன சேவை முகப்பிற்க்கு சென்றேன். அங்கே இருந்த பணிப்பெண்ணின் ஆலோசனையின் பேரில் உள்ளிருப்பு பயணப்பெட்டிகளை Xray சோதனை செய்யும் இடத்திற்க்கு எடுத்து சென்றேன். பயணப்பெட்டிகளின்X ray சோதனைக்கு பிறகு சேவை முகப்பிற்க்கு திரும்ப சென்றேன். அங்கு என் எல்லா பயணப்பெட்டிகளையும் எடை பார்த்து அதன் மேல் ஒட்டான்கள்(sticker tags) கோர்த்து விட்டார்கள். பின்பு பயணநேரத்தில் டிக்கெட் போன்று வைத்திருக்கக்கூடிய போர்டிங் பாஸ் (boarding pass) வழங்கப்பட்டது.

பின்பு நான் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டேன். பிறகு என் விமானம் வரும்வரை, பல இருக்கைகள் கொண்ட ஒரு கூடத்தில் உட்கார சொன்னார்கள்.
பெற்றோர்களை ஒரு முறை திரும்பிப்பார்த்து கடைசியாக கை அசைத்து அந்த கூடத்துக்கு வரும் போது தொண்டையை அடைத்த துக்கத்தை எங்குமே தோண்டிப்புதைக்க முடியவில்லை

சில நிமிடங்கள் காத்துக்கிடந்த பிறகு அங்கிருந்த பல நுழைவாயில்களில் நான் செல்லும் விமானத்திற்கு செல்ல வேண்டிய வாயிலை ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள். விமானத்திற்க்கு அழைத்துச்செல்ல நுழைவாயிளில் ஒரு சிறிய பேருந்து நின்றிருந்தது. அது என்னை ஏற்றிக்கொண்டு விமானத்தின் அருகில் இருக்கும் ஒரு நடமாடும் ஏணி போன்ற ஒரு வண்டி பக்கத்தில் போய் விட்டது. விமானத்தில் ஏறி நடைபகுதி பக்கம் இருந்த என் இடத்தில் போய் உட்கார்ந்தேன். சிறிது நேரம் ஜன்னல் வழியாக மாநகர போக்குவரத்துக்கழக பேருந்துகளையும் , புறநகர் ரயில் பாதைகளையும் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தேன்!! எனக்கு ரயில் பயணம் என்பது மிகவும் பிடித்தமான செயல் அதுவும் தாம்பரம் கடற்கரை மார்க்கத்தில் செல்லும் ரயிலில் விரும்பி பிரயாணம் செய்வேன்! அடுத்து எப்பொழுது இந்த ரயிலில் செல்வேனோ என்று எண்ணிக்கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த இரண்டு தடி பயல்கள் ஜன்னலோர இடத்தில் உட்கார்ந்து ஜன்னலை முழுவதுமாக மறைத்து விட்டார்கள்!!

சிறிது நேரத்திற்கு பின் விமானம் ஓடுதளத்திருந்து மேலே எழும்ப புறப்பட்டது!! விமானம் மேலெழும்புதல் என்பது என்னால் வர்ணிக்க முடியாத ஒரு மகிழ்ச்சியை தரக்கூடிய ஒரு நிகழ்வு!!! தரையிலேயே அடிமைபட்டுகொண்டிருந்த ஒரு பறவை பூமிக்கு டாடா காட்டிவிட்டு விண்ணில் சீறிபறக்கும் இன்பம், சங்கிலியால் கட்டிப்பிணைக்கப்பட்டிருந்த ஒரு வீரன் அதை உடைத்தெரிந்து காடு மலைகளை தாவிசெல்லும் உற்சாகம்!! பிறவியில் கண்ணிழந்து இருட்டையே பார்த்திருந்த ஒரு மனிதன் கண்பார்வை பெற்று ஆயிரம் வண்ணங்களை கண்டு வியக்கும் ஆனந்தம்.
இவை போல பல நூறு உணர்வுகளை ஒரு சேர தந்தது விமானம் மேலே ஏறிய நிகழ்வு. எனை அறியாமல் என் கண் வழியாகவும்,புன்னகை வழியாகவும் சந்தோஷம் ததும்பியது!

மாலை வெயிலில் அழகாக குளித்துக்கொண்டிருந்த சென்னையின் எழிலழகை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்த போது பக்கத்தில் இருந்தவர் ஒரு நாளிதழை பெரிதாக விரித்து என்னால் வேடிக்கை பார்க்க முடியாமல் செய்து விட்டார்.
நான் கண்களை மூடி என் இருக்கையில் சாய்ந்துக்கொண்டேன்!!
என் வாழ்க்கை பயணத்தில் ஒரு மறக்க முடியாத பயணத்தை நான் தொடங்கி விட்டேன் என்பது எனக்கு விளங்கி விட்டிருந்தது.

-ஆன் ஆர்பரிலிருந்து தொடரும்....

அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - முன்னுரை
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 2

12 comments:

Divya said...

பொருத்தமான படங்களுடன்,
அருமையான வர்னிப்பு.......
வாழ்த்துக்கள் CVR!!

அடுத்த பாகம் சீக்கிரம் போடுங்க......வெயிட்டீங்!!

CVR said...

உங்கள் வரவுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி திவ்யா!!

தவறாமல் மற்ற பாகங்களையும் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!! :)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்லதொரு ஆரம்பம் சிவிஆர். மூன்றாம் வகுப்புவரை மட்டுமே தமிழ் படித்ததாகச் சொல்லியிருந்தீர்கள். அதன் சுவடே தெரியவில்லை. :)

அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்

CVR said...

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி மதி கந்தசாமி அவர்களே.
வலைபதிவிற்கு தவறாமல் வருகை தரவும்!!
நான் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சிகாகோ செல்வதினால் அடுத்த பதிப்பு வருவதற்கு சிறிது நேரம் ஆகலாம்,ஆகையால் சற்று பொறுத்திருங்கள்!! :)

நாமக்கல் சிபி said...

அருமை! அருமை!!!

மீண்டும் தங்களின் எழுத்தில் என்னை மறக்க போகிறேன் என்பது எனக்கு புரிந்துவிட்டது...

தொடர்ந்து எழுதவும்...

CVR said...

நன்றி பாலாஜி!
பதிவுக்கு திரும்ப திரும்ப வருகை தரவும்!! :)

கோபிநாத் said...

அருமையான பதிவு,
மிக எளிமையாக உள்ளது.
\\தாம்பரம் கடற்கரை மார்க்கத்தில் செல்லும் ரயிலில் விரும்பி பிரயாணம் செய்வேன்! \\
2 வருஷம் நான் அந்த வழிதான். திரிசூலம் கடக்கும் போது எல்லாம் நாம எப்பட இங்க வரபேரன்னு இருக்கும்.

\\என் வாழ்க்கை பயணத்தில் ஒரு மறக்க முடியாத பயணத்தை நான் தொடங்கி விட்டேன\\
நாங்களும் தான்.....அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்

CVR said...

மிக்க நன்றி கோபிநாத்! :)
என்னதான் இருந்தாலும் நம் மின்சார ரயிலில் போகும் சுகமே தனிதான்!!
இல்லையா??

Karthikeyan Rajasekaran said...

உண்மை தான் சீவிஆர் அவர்களே

மின்சார ரயில் பயணம் சுவாரசியமானது தான்

நான்கு பெயர் மட்டுமே அமரக் கூடிய இருக்கையில்
ஆறு பெயர் அமர்ந்திருக்க எழாவதாக ஒருவர் வந்து
கொஞ்சம் தள்ளி உக்காருங்க சார் என்பது

சிறு பிள்ளைகள் போல பெரியவர்களும்
ஒரே இருக்கைக்காக சண்டையிட்டுக் கொள்வது

கடலை விற்பவர் முதல்
கருகமணி விற்பவர் வரை
நட்புடன் பழகுவது

நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும்
Born in Boston போல
tip top'ஆக I pod' உடன்
எதோ Boeing விமானத்தில்
foot board அடிப்பது போல
பயணிக்கும் கண்ணி பொறியாளர்கள்

1 rupee Deccan Herald வைத்து கொண்டு
ஆங்கில நாளிதழ் மட்டுமே வாசிப்பவர் போல film காட்டி
கடைசி பக்கத்தை பார்க்கும் கூட்டம்

இப்படி பல மனிதர்களை அறிமுகபடுத்தும்

இந்த சுவரசியமான மின்சார ரயில் பயணம்

-KK

CVR said...

KK என்பது நீங்கள்தானா கார்த்தி!!
நான் வேறு யாரோ என்று நினைத்து விட்டேன்.
தங்கள் ரயில் பயண வர்ணணை மிகவும் அருமை!!! இதையே இன்னும் கொஞ்சம் வளர்த்து உங்கள் பதிவில் ஒரு கட்டுரையாக போடலாமே!! :)

sravan said...

sema feeeeelingu. enakum ippove america ponum pola iruku. idhu varaikum nan domestic flights mattumdhan fly panniruken.

have gone 4r quite a few sendoffs, so kno how it wud feel.

sari nan mela poi adutha part padikaren. andha comment section-la meet pannalam ;)

CVR said...

:)
நன்றி ஷ்ரவன்!! :)

Related Posts Widget for Blogs by LinkWithin