அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 3

ஒரு 12:30 - 12:45 மணி வாக்கில், விமானத்தில் ஏறுவதற்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டது. முதலில் முதல் வகுப்பு பயணிகளும் பின் மற்றவர்களும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டார்கள். நான் இரண்டாவதாகதான் ஏறினேன் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா??
சென்னையில் நடமாடும் ஏணியின் வழியாக விமானத்தில் ஏறினேன் அல்லவா ஆனால் இங்கு சிறிது வித்தியாசாமான முறையில் விமானம் ஏற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.ஒரு குகை போன்ற அமைப்பின் உள்ளே சென்ற நான் குகையின் மற்றொரு வாயிலில் அமைந்திருந்த விமானத்தினுள் நுழைந்தேன். உள்ளே ஏறிய உடனேயே இது சென்னையில் இருந்து வந்த விமானத்தை விட பெரியது என்று தெரிந்து விட்டது.
விமானத்தின் ஒவ்வொரு வரிசையிலும் 9 இருக்கைகள் இருந்தன. அவை 2-5-2 என்று பிரிக்கப்பட்டு இருந்தன! எனது இருக்கை முதல் வரிசயில் 5-ஆவது இருக்கை.மறுபடியும் ஜன்னல் இருக்கை கிடைக்கவில்லை என்பதில் எனக்கு ஒரு 8 வயது சிறுவனுக்கு இருக்கும் வருத்தத்திற்கு சமமாக ஏமாற்றம் தான்!!
அதை விட மிகப்பெரிய ஏமாற்றம் என்ன என்றால் விமானத்தில் இருந்த பணிப்”பெண்கள்” எல்லோரும் 50 வயதுக்கு குறைவாக இல்லாததுதான்!!  சரி!! அவர்கள் எல்லோருக்கும் 50 வயது ஒன்றும் இருக்காது! ஒப்புக்கொள்கிறேன் , இருந்தாலும் நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் 40 வயதை ஒட்டியாவது இருக்கும்!!!
என்னையும் அறியாமல் என் உதடுகள் “ஏப்ரல் மேயில பசுமையே இல்ல,காய்ஞ்சிப்போச்சுடா...” என்ற பாடலை முனுமுனுத்தது!! பாட்டிகள் (மன்னிக்கவும்!! விமான பணிப்”பெண்கள்”) எல்லோருக்கும் காது கொஞ்சம் மந்தம் என்பதால் யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை!! இவர்களை பார்த்தவுடன் கோயம்புத்தூரில் உள்ள என் வயதான பாட்டியின் நியாபகம் தான் எனக்கு!! அன்பு மேலிட்டு வாய் தவறி இவர்கள் யாரையும் பாட்டி என்று கூப்பிட்டுவிட கூடாதே என்று கவனமாய் இருந்தேன்.
என் இருக்கையின் நேர் எதிரே ஒரு பெரிய தொலைக்காட்சி திரை இருந்தது.அதில் விமான தகவல் , விமானம் போகும் வழியின் வரைபடம் போன்ற வெவ்வேறு விஷயங்களை காட்டிக்கொண்டு இருந்தார்கள். பின் எனக்கு ஒரு காது ஒலிசேற்பி (earphone) தரப்பட்டது. பின்பு தூங்கும் போது வெறும் வயிற்றுடன் தூங்க கூடாது என்று சாப்பிடுவதற்கு உணவு அளிக்கப்பட்டது. எனக்கு சுத்த சைவ உணவு தான் வேண்டும் என்று சென்னை விமான நிலையத்திலேயே சேவை முகப்பில் கறாராய் சொல்லியிருந்ததால் எனக்கு மட்டும் தனியாக உணவுப்பொட்டலம் அளிக்கப்பட்டது!!
கொடுத்தது என்ன என்று கூட எனக்கு தெரியவில்லை! ஏதோ வேக வைத்த பழக்கூழ் போல ருசித்தது,ஆனால் எதோ தூக்க கலக்கத்தில் கலந்து அடித்துவிட்டு மெல்ல கண் அயர்ந்தேன்.

கண் விழித்து பார்த்த போது என் முன்னே இருந்த பெரிய சின்னத்திரையில் எதோ இந்திப்படம் போய்க்கொண்டு இருந்தது. சல்மான் கான்,கரீனா கபூர்,ஜக்கி சரோஃப்,ஓம் புரி, ஷில்பா ஷெட்டியின் தங்கை(என்ன பெயர் அவளுக்கு??? மறந்துபோய் விட்டது!!) இவர்கள் அனைவரும் நடித்த இந்த படத்தின் கதை இதுதான்!!
படத்தின் துவக்கத்தில் சல்மான் கான், ஓம் புரி நடத்தும் ஒரு பைத்தியக்கார மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஜாக்கி சரோஃபும் , ஓம் புரியின் பெண் கரீனாவும் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள். தன் மனைவியை(ஷில்பாவின் தங்கை) “தவறுதலாய்” கொலை செய்துவிட்டதால் சல்மான் பைத்தியமாகி (படத்தில்) இங்கு சேருகிறார்!! அதற்கு முன் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஐரோப்பாவின் அழகிய பிரதேசங்களில் ஷில்பாவின் தங்கையோடு சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் டூயட் பாட மறக்கவில்லை!!

இவரின் நிலையை கண்டு பரிதாபப்பட்டு கரீனா இவரின் மேல் காதல் வயப்படுகிறார்.இதில் ஒன்றும் எனக்கு ஆச்சரியம் இல்லை. காலா காலமாக பல இந்திய படங்களில் பார்க்கும் விஷயம் தானே இது!!படத்தில் வரும் அழகான இளம் கதாநாயகிகள் எல்லோருமே புத்தி சுவாதீனமுள்ள ஆண்களை விட்டுவிட்டு சுத்த பைத்தியகாரர்கள்,புத்தி சுவாதீனம் குன்றியவர்கள், கோபக்கார முரடர்கள்,பெண்களின் பின்னால் சுற்றும் புன்னாக்குகளையே ஏன் விழுந்து விழுந்து காதலிக்கிறார்கள் என்பது வெகு நாட்களாகவே எனக்கு புரியாத புதிராகவே உள்ளது!!!
சரி சரி!!! கிடைத்த இடைவெளியில் என் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது போதும்!! கதைக்கு திரும்பவும் வருவோம்!!!
தன் பெண் இப்படி ஒரு பைத்தியக்காரன் பின்னால் சுற்றுவதை பார்க்க சகிக்காத ஓம் புரி,ஏதோ ஒரு அறுவை சிகிச்சை செய்து சல்மானை பேச முடியாத ஒரு நடைப்பிணமாக மாற்றி விடுகிறார்!
இதை பார்க்க பொறுக்காத ஜாக்கி சரோப் சல்மான் கானை கொலை செய்து விட்டு சிறைக்கு சென்று விடுகிறார்!!! காதலனுக்கு ஆன நிலைமையால் பாதிக்கப்பட்டு கரீனா பைத்தியம் ஆகி விடுகிறார்.
இப்படிப்பட்ட ஒரு பைத்தியக்கார படத்தை பார்த்து முடித்த வுடன் பயணம் முடிய ஒரு சில மணி நேரங்களே இருந்தது. ஆம்ஸ்டர்டாமில் பெரிதாக ஒன்றும் வேலை இல்லாவிட்டாலும் சரியான நேரத்தில் அடுத்த விமானத்தை பிடித்தாக வேண்டுமே என்று மெல்லியதாக ஒரு சிறிய கவலை இருந்து கொண்டுதான் இருந்தது. என் விமானத்தில் இருந்த பல விமானிகள் டிட்ராய்ட் செல்லும் விமானத்திலும் செல்ல இருந்ததால் அந்த விமானம் நின்றிருக்கும் வாயில் என்ன என்று இறங்குவதற்கு முன்பாகவே சொல்லி விட்டார்கள்.

விமானத்தில் இருந்து இறங்கியதும் வாயில் எண் 9-இர்க்கு ,விமான நிலையத்தின் திறந்த வடிவமைப்பை பார்த்து ரசித்து கொண்டே விரைந்து கொண்டு இருந்தேன்.
இடம் , மக்கள் , தட்பவெட்பம் எல்லாமே சிறிது அந்நியமாகத்தான் இருந்தது. வாழ்க்கையில் முதல் முறையாக அத்தனை வெள்ளைக்காரர்களை அன்றுதான் பார்த்தேன். வாயிலில் இருந்த ஒரு பெண்மணி என் பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு கணிப்பொறியில் வெகு நேரமாய் ஏதோ தட்டிக்கொண்டு இருந்தாள். பின் மறுபடியும் ஒரு பாதுகாப்பு பரிசோதனைக்கு பின் முன்பு போல ஒரு குகைக்குள் நுழைந்து விமானத்தில் நுழைய காத்துக்கொண்டு இருந்தேன்.
வெறும் ஐந்து அடி ஏழு அங்குலம் உயரம் கொண்ட என் முன்னால் என்னுடன் குகைக்குள் நின்றிருந்த வெள்ளைக்கார தடியர்கள் எல்லோரும் கடோத்கஜர்கள் போல் தென்பட்டார்கள். ஒரு வழியாக விமானத்தில் ஏறி உட்கார்ந்த பின் விமானம் மெல்ல மெல்ல என் பயணத்தின் கடைசி இடமான டிட்ராய்டை நோக்கி புறப்பட்டது. மோட்டார் வாகன தயாரிப்புக்கு பெயர் போன டிட்ராய்ட் மாநகரம், அமெரிக்காவிலேயே சட்டம் ஒழுங்கில் மிக மோசமாக உள்ள ஊர்களிலும் ஒன்று .

-ஆன் ஆர்பரிலிருந்து தொடரும்……

அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - முன்னுரை
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 1
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 2
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 4

12 comments:

நாமக்கல் சிபி said...

அருமையா போகுது CVR..

நீங்க சொல்ற படம் மனசுக்குள் மத்தாப்பு படத்தோட ரீ-மேக்னு நினைக்கிறேன்.

அடுத்த பகுதிக்காக வெயிட்டீங் :--)

CVR said...

நன்றி பாலாஜி!! :)

வடுவூர் குமார் said...

இப்போதெல்லாம் படம் பார்பதே இல்லை.ஆரம்பித்த சில வினாடிகளிலேயே மொத்தமும் புரிந்துவிடுகிறது,அதுவும் ஹிந்தி சினிவா??

CVR said...

என்ன செய்வது!! விமானத்தில் நேரம் செல்ல வேண்டுமே,அதுவும் கண்ணுக்கு முன்னாலே பெரிய திரையில் ஓடிக்கொண்டு இருந்தது,அதனால் பார்த்தே ஆக வேண்டிய கட்டாயம்!!! :)
கருத்துக்கு மிக்க நன்றி வடுவூர் குமார் அவர்களே!! :)

Shruthi said...

இந்த ஹிந்தி படத்தோட பேரை சொன்னா பாக்கிர சந்தர்ப்பம் நேர்ந்தா கூட escape ஆகிடலாம் பாருங்க. நல்லா கதை சொல்றீங்க :)

CVR said...

நன்றி ஷ்ருதி!!
படத்தின் பெயர் "க்யோன் கீ"!!

நீங்கள் எல்லோரும் படத்தை பற்றி தெரிந்து கொண்டு தப்பிக்க வேண்டும் என்ன்பதற்க்காகத்தான் படத்தின் பதாகையை இந்த பதிவில் சேர்த்திருக்கிறேன்!! :)

Rajagopalan said...

hey that muvee is copy of a tam movie starring prabhu and saranya.. u get the name? i forgt it

CVR said...

படத்தின் பெயர் கூட "மனசுக்குள் மத்தாப்பு" என்று ஒரு நண்பர் கூறிருக்கிறார்.
இது ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளி வந்த படம்,அதனால் இது தமிழ் படத்தின் மறுஆக்கமாக இருப்பதற்கான சாத்தியக்கூரு மிக அதிகமாக உள்ளது!! :)

கோபிநாத் said...

கலக்குறிங்க...
அதுவும் பாட்டிகளைப் பற்றியது சூப்பர்..

\\அமெரிக்காவிலேயே சட்டம் ஒழுங்கில் மிக மோசமாக உள்ள ஊர்களிலும் ஒன்று .\\

என்னது இதுவும் ஒன்ற அப்படின்னா இன்னும் நிறைய இருக்கா..

CVR said...

இந்த பதிவு என் ஆங்கில பயணக்குறிப்பின் தமிழாக்கம் தானே. "one of the most crime ridden cities" என்பதை தமிழாக்கம் செய்யும்போது இப்படி வாக்கியம் அமைந்து விட்டது!! :)
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கோபிநாத்!! :)

sravan said...

dai, un kadhaiya solda na salman khan kadhaiya solriya? mega serial romba paapiyo? :P

5'7" nenachu varutha padadha nanba. namma oor avg height 5'2". nee romba uyaram :D

CVR said...

சொல்ற கதை சுவாரஸ்யமா இருக்கனும்ல!! அதுக்கு தேவையான எல்லா கதையும் சொல்வேன்!! :)

சராசரி உயரம் எல்லாம் எனக்கு தெரியாது நண்பா ஆனா எந்த குழுவா இருந்தாலும் நான்தான் அந்த குழுவிலேயே குள்ளமானவங்கள்ள ஒருத்தனா இரூப்பேன்!! :)

Related Posts Widget for Blogs by LinkWithin