ஜூன் மாத நாட்காட்டிகள்

மாதத்தின் பிற்பகுதியில் ஆணிகளின் ஆதிக்கத்தால் அநியாயத்துக்கு வேலையில் முடங்கிப்போய் விட்டாலும்,இந்த மாதத்தின் முற்பகுதியில் 2-3 சுற்றுலா பயணங்கள் எல்லாம் மேற்கொண்டதால் படங்கள் எக்கச்சக்கமாக சேர்ந்துவிட்டது...
இதில் ஐந்து படங்களை மட்டும் எடுப்பது என்பது பெரும் கஷ்டமாகிவிட்டது...இருந்தும் மனதை கல்லாக்கிக்கொண்டு ஒரு ஐந்தாறு படங்களை தேர்ந்தெடுத்து நாட்காட்டிகளாக உங்கள் பார்வைக்கு...
நிகழும் ஜூன் மாதம் உங்களுக்கு பயனுள்ளதாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைய என் வாழ்த்துக்கள்! :-)







நாமக்கல் பயணக்குறிப்புகள் - 2

மு.கு:
எல்லோரும் எதுக்கும் ஒரு சுத்து போன பகுதியை பார்த்துட்டு வந்துருங்க..நிறைய படங்கள் அப்பப்போ சேர்த்துகிட்டே வந்தேன்..

வெளியில் "நீரின்றி அமையாது உலகு" என்று குடிமக்கள் கொண்டாடிக்கொண்டிருக்க,நான் போர்வையை இழுத்துப்போர்த்துக்கொண்டு தூங்குவது போல் பாவனை செய்ய ஆரம்பித்தேன்.சில நிமிடங்களில் உண்மையான தூக்கம் என்னை தொற்றிக்கோன்டது.

அடுத்த நாள் காலை எல்லோரும் சீக்கிரம் எழுந்து ராக்பெல்லெர் வ்யூ எனும் இடத்திற்கு முதலில் சென்றோம்.அங்கு எங்களுக்கு கிடைத்த அழகிய காட்சியை விவரிக்க வார்த்தையில்லை.ஒரு புறமோ அடுக்கடுக்கான மலைத்தொடரின் ஓரத்தில் இளங்காலை சூரியன் சிரித்துக்கொண்டிருக்க,மறு புறம் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல ஒரு உயரமான மலைச்சாரல் வடிவேலு ரேஞ்சுக்கு நக்கலாக புன்னகைத்துக்கொண்டிருந்தது.முன்னாலே பார்த்தால்,உயர்ந்த மலையில் இருந்து கீழிருக்கும் ஊர்கள் தியானிக்கும் புத்த பிக்குகளைப்போல் அமைதியாக கண்ணை மூடிக்கொண்டிருந்தன.
என் கையில் எனது கேமரா இல்லையே என்று நான் தலையில் அடித்துக்கொண்ட பலநூறு சந்தர்ப்பங்களில் இந்த அழகிய கொல்லி மலைக்காலையும் சேர்ந்துக்கொண்டது.


படம்:ஜீவ்ஸ் கேமரா(நான் எடுத்ததா,அவரு எடுத்ததான்னு தெரியல..;))
என் ஏமாற்றத்தை புரிந்துக்கொண்ட ஜீவ்ஸ் அண்ணாச்சி தன்னுடைய கேமராவை எனக்கு கொடுத்து என்னை படம் எடுக்கச்சொன்னார்.இதே போல இந்த பயணம் முழுவதும் பல இடங்களில் தன் கேமராவை முழுமையாக எனக்களித்து என் மனம் கோணாமல் பார்த்துக்கொண்ட ஜீவ்ஸ் அண்ணாச்சிக்கு எப்படி நன்றி சொல்ல.இது புது கேமரா என்பதால் எனக்கு சரியாக படம் எடுக்கத்தெரியவில்லை(இல்லனா மட்டும்........) அதனால் படங்கள் அவ்வளவாக திருப்திகரமாக அமையவில்லை(அப்பாடா...ஒழுங்கா படம் எடுக்காததுக்கு சாக்கு கெடச்சாச்சு :P).இயற்கை அழகை ரசித்தபடி அங்கிருந்து கிளம்பி 2000 வருடங்கள் பழமையான தாழி உள்ள இடம் என்று சொல்லப்படுகிற இடத்திற்கு பயணப்பட்டோம்.கடைசியில் தேடிப்பிடித்து பார்த்தால் அங்கு பெரிதாக ஒன்றும் இல்லை,ஆனால் போகும் வழியில் நாங்கள் எடுத்துக்கொண்ட தேனீர் இடைவேளையும்,இடத்தை தேடிப்பிடிக்க நாங்கள் அலைந்து திரிந்ததும்,அப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இனிமையான பொழுதுகள்.எந்த ஒரு பயணத்திலும்,நாம் போய் சேரும் இடத்தை விட ,நாம் போகும் வழியும்,அது தரும் நினைவுகளும் தான் பயணத்தின் இனிமையை நிர்ணயிக்கிண்றன என்கிற எனது நம்பிக்கை வலுப்பேற்றது.எல்லாவற்றோடு முக்கியமாக நம் கூட வரும் ஆட்கள்...
படம்:இம்சை

இதன் பிறகு அறைக்கு திரும்பிவிட்டு,நாமக்கலுக்கு பயணப்பட்டோம்.நானும் சிபியும் பஸ்ஸில் வந்துவிட மற்றவர்கள் காரில்திரும்பினர்.ஜீவ்ஸையும் இம்சையையும் நாமக்கலில் விட்டு விட்டு நந்து ஈரோட்டிற்கு பயணப்பட்டார்.சிறிது நேரத்தில் இம்சையும் பெங்களூருக்கு பயணமானார்.
சற்றே இளைப்பாரிவிட்டு நாங்கள் அனைவரும் மணப்பெண்ணை குசலம் விசாரிக்க இம்சை அரசியின் வீட்டிற்கு சென்றோம்.அங்கு இருந்த குழந்தைகள் சிலருடன் விலையாடுவதிலேயே எனக்கு நேரம் சென்று விட்டது.அதிலும் ஒரு சுட்டிப்பையனுக்கு புகைப்பட ஆர்வம் ஊட்டி,அவன் நிக்கான் கேமராவில் இருந்து மொபைல் கேமரா வரை உருண்டு புரண்டு படம் எடுக்கும் அளவுக்கு பைத்தியமாக்கி விட்டேன்...
படம்:ஜீவ்ஸ் கேமரா(நான் ஆர்வமேற்றி விட்ட அந்தச்சுட்டிப்பையன் எடுத்தது...)
அங்கு மணிக்கணக்கில் அரட்டை அடித்துவிட்டு அப்படியே நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலுக்கும் ,பக்கத்தில் உள்ள நரசிம்மர் கோயிலுக்கும் சென்றோம்.கோயிலுக்கு செல்வதற்கு முன் ஜி3 அக்காவும் எங்களுடன் சேர்ந்துக்கொண்டார்.
படம்:ஜீவ்ஸ் கேமரா(நான் எடுத்ததா,அவரு எடுத்ததான்னு தெரியல..;))
மோகன் தாஸ் அடுத்த நாள் அலுவலகம் செல்ல வேண்டுமெந்தால் அந்த இரவே பெங்களூர் கிளம்பி விட்டார். திரும்ப வந்தவுடன் நான் களைப்பாக இருக்கிறது என்று அறைக்கு உறங்கச்சென்று விட்டேன்.

நடு ராத்திரி நாமக்கல் சிபியின் பிறந்த நாளை சர்க்கரை பகிர்ந்து கொண்டாடிய கதையை அடுத்த நாள் காலை தெரிந்துக்கொண்டேன்.அந்த சமயத்தில் பதிவர் ராமும் நாமக்கல் வந்து சேர்ந்தார்.
மூன்றாவது நாளான திங்கட்கிழமை காலை நான்,ஜீவ்ஸ்,ஜி3 மற்றும் வழிகாட்டியான சிபி அண்ணாச்சியின் பக்கத்து வீட்டு சிறுமியும் குன்றின் மீதிருந்த கோட்டையை பிடிக்க கிளம்பினோம்.வேர்க்க விறுவிறுக்க மேலே ஏறி பார்த்தால் ஏதோ மராமத்து பணிகள் செய்வதற்காக பூட்டியிருந்தார்கள்.ஆனால் மேலிருந்து நாமக்கல் நகரத்தில் காட்சியை கேமராவில் சேமித்துக்கொண்டு இறங்கினோம்.பழமை வாய்ந்த நரசிம்மர் கோயிலுக்கு திருமப சென்று அங்குள்ள வேலைப்பாடுகள் மற்றும் சிற்பங்களை படம் பிடித்தோம், அத்தோடு சிபியின் வீட்டிற்கு திரும்ப வந்து ,அவர்கள் வீட்டில் செய்துவைத்திருந்த அறுசுவை பொங்கல் சாம்பார் மீது கொலைவெறியோடு தாக்குதல் நடத்தினோம்.இரண்டு நாட்கள் வெயிலில் காய வைத்ததால் கேமரா திரும்பவும் செயல்பட துவங்கியது. கிட் லென்ஸில் இன்னும் தண்ணீர் இருந்ததால் (இன்னும் காய்ந்துக்கொண்டு இருக்கிறது)அதை உபயோகிக்கமுடியாத நிலை,தவிர அதற்கு லென்ஸ் மூடி வேறு ஒன்றை தேடிப்பிடிக்க வேண்டும்.கேமராவில் எல் சி டி திரை சற்றே சொறி பிடித்தார்போல் காணப்பட்டது.மற்றபடி கேமரா உபயோகிக்ககூடியதே.

மதியத்திற்கு மேல் மூன்று ஆட்டோக்களில் ரிசெப்ஷன் நடைபெறும் அரங்கிற்கு சென்று இறங்கினோம்.
அங்கே நந்து மற்றும் அவரது குடும்பம்,மங்களூர் சிவா,கவிதாயினி காயத்ரி,சஞ்சய் ஆகியோர் வந்திருந்தனர்.JK தனது சித்தியுடன் திருமணத்துடன் வந்திருந்தார்.நாலு பதிவர்கள் சேர்ந்தாலே அந்த இடம் எந்த அளவிற்கு ரணகளமாகும் என்று சொல்ல வேண்டியதில்லை.அதிலும் இத்தனை பேர் சேர்ந்துக்கொண்டால்???
நடு நடுவில் மாப்பிள்ளை பெண்ணை படம் பிடித்து ,படம் பிடிக்க வந்த தொழில்முறை புகைப்படக்கலைஞர்களை நாங்கள் வெறுப்பேற்றிக்கொண்டிருந்தோம்.கடைசியில் பரிசுப்பொருட்களை கொடுத்து ,மணமக்களை வாழ்த்தி சாப்பாடு கூடத்திற்கு படையெடுத்தோம்.
சாப்பாடு செம சூப்பர்!!! அதுவும் ரசம் ரொம்ப ரொம்ப சூப்பர்.
சாப்பாடு முடித்து வாழைப்பழம்,ஐஸ் க்ரீம் என்று நன்றாக கட்டு கட்டிவிட்டு வெளியில் நாற்காலிகளால் ஒரு பதிவர் வட்டம் அமைத்தோம்.அரட்டை கும்மாளம் சிரிப்பொலி என அமர்க்களப்பட்ட கூட்டம் நேரம் ஆன உடன் கலைந்தது.சிபியின் வீட்டில் இருந்து நான்,இராம்,ஜீவ்ஸ் குடுமபத்தினர் மற்றும் ஜி3 சேலத்திற்கு வந்து சேர்ந்தோம்.அங்கிருந்து இராம்,ஜீவ்ஸ் குடுமபத்தினர் பெங்களூர் சென்றனர்.நானும் ஜி3-யும் 10:15-க்கு ஒரு பேருந்து பிடித்து சென்னை வந்து சேர்ந்தோம்.
நாங்கள் தங்கியிருந்த மூன்று நாட்களும் எங்கள் மேல பாசத்தை கொட்டி,விருந்தோம்பலுக்கு இலக்கணமாக திகழ்ந்த நாமக்கல் சிபி மற்றும் அவரின் குடும்பத்தினரையும் இங்கு நினைவு கூர்ந்தே ஆக வேண்டும்.நாமக்கலில் எங்கள் கூட வந்து எங்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த பக்கத்து வீட்டு சிறுமி கிருத்திகாவிற்கும் மனமார்ந்த நன்றிகள்


இப்படியாக இனிமையான நினைவுகளை மூட்டை மூட்டையாக கட்டிக்கொடுத்த இந்தப்பயணம் இனிதே நிறைவடைந்தது.

பி.கு:என்னிடம் படங்கள் இல்லாததால் மற்றவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட படங்களை இந்தப்பதிவில் போட்டிருக்கிறேன்.மேலும் பொருத்தமான படங்கள் கிடைத்தால் இந்தப்பதிவு அதற்கேற்றார்போல் இற்றைப்படுத்தப்படும்.. :)

நாமக்கல் பயணக்குறிப்புகள் - 1

இந்தக்கதையை பலரிடம் சொல்ல வேண்டி வரும் என்று தெரிவதால் தனிப்பதிவாகவே போட்டுரலாம்னு......
வரேன் வர மாட்டேன் அப்படின்னு வெளையாட்டு காட்டிக்கிட்டே இருந்த இளவஞ்சி அண்ணாச்சி,கடைசி நேரத்துல வேறு வேலை இருப்பதால் நாமக்கல் வர முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால் டிக்கெட் முன்னமே எடுத்து விட்ட படியால் இருவரும் ஒன்றாக பஸ் ஏறி விடலாம் என்று முடிவு செய்தோம்.தாம்பரத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த நேரத்தில் நகரங்களின் வளர்ச்சியில் இருந்து புகைப்படக்கலை வரை நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தோம்.இளவஞ்சி அண்ணாச்சியுடன் பேசுவது என்றால் எப்பொழுதுமே இனிமையான அனுபவம் தான்.

இப்படியாக 10:30க்கு எதிர்பார்க்கப்பட்ட பேருந்து 11:15க்கு வரும்வரை அண்ணாச்சியுடன் மொக்கை போட்டுக்கொண்டிருந்தேன்.பேருந்தில் ஏறியதும் சிறிது நேரத்திலேயே சொர்க்லோகம் சென்று விட்டேன்.காலையில் அவர் ராசிபுரத்தில் இறங்கும் போது கூட சற்றே தூக்கக்கலக்கத்தோடு தான் கையசைத்தேன். பின்பு இளங்காலை வெளிச்சத்தில் கிராமப்புர அழகை ரசித்தபடியே நாமக்கல் வந்து சேர்ந்தேன்.அங்கிருந்து ஆட்டோ பிடித்து வாங்கிலி ஓட்டலுக்கு வந்தேன்.அங்கே வெங்கி(இம்சை),நந்து,மோகன் தாஸ் ஆகியவர்கள் தங்கியிருந்தார்கள்.


அவர்கள் எழுந்துகிளம்பியபின் நேராக நாமக்கல் சிபி வீட்டிற்கு சென்று விட்டோம்.அங்கு ஜீவ்ஸ் அண்ணாச்சியும் சேர்ந்துக்கொள்ள எங்கள் குழு கலை கட்ட அரம்பித்தது.
அண்ணியின் கையினால் மெத்தென்ற இட்டிலியும் சுவையான கெட்டிச்சட்டினியும் பரிமாறப்பட,அவை போன இடம் தெரியவில்லை.

பிறகு நான்,வெங்கி,நந்து மற்றும் ஜீவ்ஸ் காரில் ஏறிக்கொள்ள கொல்லிமலைக்கு பயணப்பட்டோம்.சிபியும் மோகன் தாசும் பஸ்ஸில் வந்து சேர்ந்துக்கொள்வதாக திட்டம்.
போகும் வழியில் ஒன்றிரண்டு இடங்களில் இறங்கி படம் பிடித்தபடி பயணம் கலகலப்பாக சென்றது.




மேலே சென்ற பின் ஒரு அறையை பார்த்துக்கொண்டு சிறிது உண்ட கலக்கத்திற்கு அடிமையானோம்.
பிறகு நாங்கள் ஆறு பேரும் (நான்,ஜீவ்ஸ்,நந்து,மோகன் தாஸ்,வெங்கி மற்றும் நாமக்கல் சிபி) ஊர் சுற்ற காரில் கிளம்பினோம்.இத்தனை பேரையும் ஒரு தம்மாத்தூண்டு சாண்ட்ரோ காரில் ஏற்றிக்கொண்டு காடு மலை எல்லாம் திறமையாக ஓட்டிய வெங்கிக்கு எனது சிறப்பு பாராட்டுக்கள்.
முதலில் நாங்கள் சென்றது அரப்பளீஸ்வரர் கோவில்.சிறிய கோவில் என்றாலும் அமைதியாக தெய்வீகத்தன்மையுடன் இருந்தது.




அதன் பின் பக்கத்தில் இருந்த ஆகாச கங்கை நீர்விழுச்சிக்கு செல்ல எத்தனித்தோம்.பெரிய நீர்விழுச்சிக்கு 4:30க்கு பின் யாரையும் அனுமதிக்க மாட்டார்களாம் அதனால் பக்கத்தில் சிறிய நீர்விழுச்சிக்கு செல்லும் பாதையில் நுழைந்தோம்.கீழே சிறிது இறங்கிச்சென்ற பின் அங்கே ஒரு சிறு அருவியில் சில பேர் குளித்துக்கொண்டிருந்தார்கள்.அங்கேயே எங்கள் முக்காலிகளை விரித்துக்கொண்டு எங்கள் அட்டகாசத்தை ஆரம்பித்து விட்டோம். நாங்கள் செய்யும் அலப்பரையை பார்த்து ஒரு உள்ளூர்காரர் சற்றே தள்ளிச்சென்றால் இன்னும் அழகான நீர்விழுச்சி தெரியும் என்று அழைத்துச்சென்றார்.
அவர் பின் சற்று நேரம் சென்ற பின் சொன்னார்போல் மிக அழகான இயற்கை காட்சி எங்கள் கண் முன் விரிந்தது.ஆனால் போகும் வழி சற்றே கவனமாக செல்ல வேண்டிய வழி என்பதை இங்கே சொல்லியே ஆக வேண்டும்.
இத்தனை அழகான இயற்கை காட்சியை பார்த்துவிட்டு எனக்கு தலை கால் புரிய வில்லை.உடனடியாக முக்காலியை விரித்துவைத்து,எனது புகைப்படப்பெட்டியில் இந்த அழகை சேமிக்க முயற்சிக்க ஆரம்பித்தேன்.


எங்கள் வழிகாட்டி அனைவரையும் அழைத்துக்கொண்டு சற்று தள்ளி சென்று விட்டார்.இவர்கள் எல்லாம் சென்ற பிறகு நான் என் கேமரா பொருத்தப்பட்ட முக்காலியை தூக்கிக்கொண்டு அவர்கள் சென்ற வழியே சென்ற போது தான் அந்த அசம்பாவிதம் நடந்தது.ஈரமில்லாத பகுதிகளாக பார்த்துக்கொண்டு நான் தாண்டி தாண்டி சென்றுக்கொண்டிருந்த போது ஒரு இடத்தில் பாசி வழுக்கி தொபுக்கடீர் என்று விழுந்தேன்.முட்டியில் நேரடியாக அடி பட்டு வின் வினென்று வலிக்க ஆரம்பித்து விட்டது. அதோடு முக்கியமாக முக்காலியுடன் கூடிய என் கேமாராவும் கீழே தண்ணீரில் விழுந்து விட்டது.இதே சற்றி தள்ளி விழுந்தால் இறக்கத்தில் புரண்டு போய் அதோ கதியாகி இருப்பேன்.கேமராவும் சற்றி தள்ளி விழுந்திருந்தால் எங்கேயோ பிடிக்க முடியாமல் உருண்டு போய் ,மிக அதிக அளவில் நஷ்டமேற்பட்டிருக்கும்.
எனக்கு வலியோடு எழுந்திருக்க கூட முடியவில்லை. யாராவது தூக்கிவிடுவார்களா என்று பார்த்தால் எல்லோரும் கீழே இறங்கி குளித்துக்கொண்டிருக்கிறார்கள். பிறகு நானே எழுந்து நொண்டி நொண்டி அருகில் இருந்த ஒரு பாறையின் மேல் அமர்ந்துக்கொண்டேன்.என்னுடைய முக்காலி கேமரா எல்லாவற்றையும் மடித்து பையினுள் வைக்க ஆரம்பித்துவிட்டேன்.அப்பொழுது என்னுடைய லென்ஸ் மூடி ஒன்று கீழே உருண்டோடி எங்கோ மறைந்துக்கொண்டது.பட்ட காலிலே படும் என்று இதைத்தான் சொல்லுவார்கள் போல.


படம்:வெங்கி(இம்சை)
அதற்குள் நான் ஏதோ தனியே செய்துக்கொண்டிருப்பதை பார்த்து எங்கள் வழிகாட்டி மேலேரி வந்து என்னை ஜாக்கிரதையாக மற்றவர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச்சென்றார்.கீழே வந்த பின் ஜீவ்ஸ் அண்ணாச்சி கேமராவில் இருந்து பேட்டரியை எடுத்து,அதை நன்றாக உதறி என் கைக்குட்டையில் மடித்து வைத்தார்.மற்றும் இரண்டு லென்ஸ்களில் தண்ணீர் புகுந்திருப்பதை கவனித்து அதையும் கொஞ்சம் உதறி நீரை வெளியேற்ற முயற்சிகளை செய்தார்.கொஞ்சம் தூசு சேர்ந்துக்கொண்டாலே விளையாட்டு காட்டும் எஸ்.எல்.ஆர் கேமராவில் தண்ணீர் எல்லாம் புகுந்துக்கொண்டு விட்டதே என்று எனக்கு பக்கென்று ஆகிவிட்டது. ஒரு வாரத்திற்கு கேமராவை வெயிலில் உலர்த்துமாறும் அதன் பின் தேவைப்பட்டால் கேனன் டீலரிடம் சென்று சரி செய்ய முயற்சிக்கலாம் என்றும் ஆறுதல் கூறினார்.வெயிலில் உலர்த்த இதென்ன வத்தலா அல்லது வடகமா?? தவிர எஸ்.எல்.ஆர் கேமரா எல்லாம் பழுது பார்க்க வேண்டும் என்றால் சொத்தில் பாதியை அடகு வைக்க வேண்டுமே என்றெல்லாம் நான் கணக்கு போட ஆரம்பித்து விட்டேன்.

அதை விட திங்கட்கிழமை விடுப்பு எல்லாம் எடுத்து விட்டு வந்து இப்படி படம் பிடிக்க முடியாமல் வத்தல் உலர்த்த வைத்துவிட்டார்களே என்று செம கடுப்பு வேறு.எதுவாக இருந்தாலும் சென்னை சென்றவுடன் பார்த்துக்கொள்ளலாம் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டாலும்,கேம்ரா சரியாகுமா,எவ்வளவு செலவாகலாம் என்று சிறிது குழப்பம் மனதில் இருந்துக்கொண்டே இருந்தது.

அங்கேயே எல்லோரும் படம் பிடித்துக்கொண்டிருக்க,நான் சும்மாவேனும் பராக்கு பார்த்துக்கொண்டிருந்தேன்.நடு நடுவில் யாராவது படம் எடுத்தால் இது சரியில்லை,அதை மாத்துங்க அப்படி இப்படியென்று இலவசமாய் உபதேசங்களை அள்ளி வீசிக்கொண்டிருந்தேன்.

கடைசியில் இருட்டாக எல்லோரும் கடையை கட்டிக்கொண்டு கிளம்பினோம்.ஓட்டல் வந்து சேர்ந்த போது களைப்போடு தூக்கமும் சேர்ந்துக்கொண்டது.சீக்கிரமாக சாப்பிட்டுவிட்டு கட்டிலில் ப்ளாட் ஆகிவிட்டேன். வெளியில் "நீரின்றி அமையாது உலகு" என்று குடிமக்கள் கொண்டாடிக்கொண்டிருக்க,நான் போர்வையை இழுத்துப்போர்த்துக்கொண்டு தூங்குவது போல் பாவனை செய்ய ஆரம்பித்தேன்.சில நிமிடங்களில் உண்மையான தூக்கம் என்னை தொற்றிக்கோன்டது.
அடுத்த நாள் காலை ..........
-தொடரும்

பி.கு:சிவன் கோவில் படத்துல ஒருத்தர் ஏதோ காலை வெட்டிகிட்டு இருக்காறே...அது என்னன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்.. ;)

காஞ்சி மற்றும் வேலூர் பயணக்குறிப்புகள்

இந்தியா வருவதற்கு முன்னாலேயே நண்பர்களுடன் பல இடங்களுக்கு சென்று நிறைய படம் பிடிக்க வேண்டும் என்று யோசித்திருக்கிறேன்.
ஒன்றிரண்டு சிறு சிறு படம் பிடிக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்து வந்தாலும் முழுமையான புகைப்படக்கலை பயணம் ஒன்று சமீபத்தில் தான் கிடைத்தது. விழியனின் திருமணம் வேலூரில் நடைபெறப்போகிறது என்று தெரிந்தவுடனேயே இதை சாக்காக வைத்துக்கொண்டு ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்யும் மும்முரம் நண்பர் வட்டத்தில் தொற்றிக்கொண்டு விட்டது.இந்த முயற்சியின் பயனாக மே மாதம் 9 - 10 வார இறுதியில் காஞ்சிபுரம் மற்றும் வேலூர் செல்வதாக ஏற்பாடு ஆகியிருந்தது.
நிறைய மாற்றங்களுக்கு பின் கடைசியில் சென்னையிலிருந்து நான்,லக்ஸ் மற்றும் ஆதி காஞ்சிபுரத்திற்கு சனிக்கிழமை காலையில் பேருந்தில் போய் சேர்ந்தோம்.
பெங்களூரில் இருந்து பீவி மற்றும் அவரின் நண்பர் ஒருவர் வந்திருந்தனர். சென்னையில் இருந்து ரேவேஜஸ்(Ravages) எனும் புனைப்பெயர் கொண்ட சந்திரசூடன் தனது புல்லட் மூலமாக வந்து எங்களை சந்தித்தார்.

முதல் வேலையாக ஒரு அறை ஏற்பாடு செய்துக்கொண்டு ,பின் எங்கள் கேமராக்களை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டோம்.
சரவணபவனில் பொங்கல்,இட்லி உள்ளிட்ட காலை உணவுகளை கபளீகரம் செய்துவிட்டு ஒரு ஆட்டோ பிடித்துக்கொண்டு வரதராஜஸ்வாமி கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.கோயில் வாசலிலேயே நண்பர்கள் தங்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்து விட்டார்கள். கதவினோரம் வேடிக்கை பார்த்த ஒரு சுட்டிப்பெண்,பழைய காலத்து வீடு ஒன்று என்று கண்ணில் கிடைத்ததை எல்லாம் படம் பிடிக்க ஆரம்பித்து என்னையும் மூட் ஏற்றி விட்டனர் என் நண்பர்கள்.அப்படியே வழியில் சென்றுக்கொண்டிருந்த ஒரு ஒரு பெரியவரிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்துவிட்டார் பீவி.தனது கைவண்டியில் தேங்காய் எண்ணெய் முதல் பல் துலக்கும் பேஸ்ட் வரை விற்கும் தொழில் செய்யும் அந்தப்பெரியவர் உற்சாகமாக தனது வண்டியை பற்றியும் அவரின் தொழிலைப்பற்றியும் விவரிக்க ஆரம்பித்து விட்டார்.




தெருப்புகைப்படக்கலையில் (Street photography)முன்பின் தெரியாத ஒருவரிடம் எப்படி பேச்சுக்கொடுத்து படம் பிடிக்க வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் தெளிவாக கற்றுக்கொண்டேன்.
சிறிது நேரத்திற்குப்பின் அந்தப்பெரியவரிடமிருந்து உருக்கமான ஒரு வழியனுப்பலுக்குப்பின் பிரம்மாண்டமான வரதராஜஸ்வாமி கோயிலின் கோபுரதினுள் நுழைந்தோம்.
நுழைந்த உடன் அழகான சிற்பங்கள் உடைய நூத்துக்கால் மண்டபம் எங்களை வரவேற்றது.




எத்தனை சிற்பங்கள்,எவ்வளவு வேலைப்பாடு.பார்க்கப்பார்க்க பிரமிப்பு அடங்கவில்லை.இத்தனை சிரத்தையும் கடமையுணர்ச்சியும் தமிழனிடமிருந்து என்று சென்றது என்று என்னால் யோசிக்காமல் இருக்க முடிஅயவில்லை. அங்கு படங்களை பிடித்துக்கொண்டே கோயிலுக்குள் நுழைந்தோம்.நூற்றுக்கணக்கான வருடங்கள பழமையான கோயிலின் வடிவமைப்பு,தூண்கள்,அதில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் என்று அனைத்தையும் ரசித்துக்கொண்டு படங்கள் பிடித்த படி வெளியே வந்தோம்.






வெளியே வந்து பிரசாதம் வாங்கி சாப்பிட்டு விட்டு சற்றே இளைப்பாறினோம்.அந்தச்சமையத்தில் சுற்றி இருந்த மக்களை எல்லாம் என் நண்பர்கள் படம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இப்படியாக கோயில் படப்பிடிப்பு முடித்துக்கொண்டு மத்தியானத்திற்கு மேல் பட்டு சேலைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுவோரை படம் பிடிக்க கிளம்பலாம் என்று முடிவு செய்தோம்.ஓட்டலுக்கு வந்து சற்றே பேட்டரி எல்லாம் சார்ஜ் செய்துவிட்டு ,சந்திரச்சூடன் எங்களை தனக்குத்தெரிந்த நெசவுத்தொழில் செய்யும் ஒரு நண்பர் வீட்டிற்கு அழைத்துச்சென்றார்.அங்கு எங்களை விட்டு விட்டு வேறொரு வேலை இருப்பதால் அவர் தனது வண்டியில் சென்னைக்குப்பயணப்பட்டார்.







அங்கு சில மணி நேரங்கள் படம் பிடித்த பின் அங்கிருந்து துணிகளுக்கு சாயம் போடும் ஒரு வீட்டிற்கு சென்று படம் பிடிக்க ஆரம்பித்தோம்.இந்த இடங்களில் எங்களுக்கு அன்பு காட்டிய மக்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.





சாயம் போடும் இடத்தில் படம் எடுத்துக்கொண்டிருக்கும் போதே மிகக்கடுமையான மழை பிடித்துக்கொண்டு விட்டது.
சற்று நேரம் பொறுத்திருந்துவிட்டு பின் மழை நின்றும் நிக்காமலும் ஒரு ஆட்டோவை தேடிப்பிடித்து ஓட்டல் வந்து சேர்ந்தோம்.அங்கிருந்து நேராக வேலூருக்கு பஸ் பிடித்து சென்றோம். பெங்களூரில் இருந்து பீவியுடன் வந்த நண்பர் அப்படியே பெங்களூர் சென்று விட நாங்கள் நால்வர் மட்டும் விழியனின் கல்யாண மண்டபத்திற்கு போய் சேர்ந்தோம்.அங்கே விழியனை சந்தித்து விட்டு பின் அவர் ஏற்பாடு செய்திருந்த ஏசி ஓட்டல் அறைக்கு வந்த்தோம்.அங்கே ஷைலஜா,சித்தார்த்,நிலா ரசிகன் போன்ற இணையத்தமிழ் எழுத்தாளர்கள்(முத்தமிழ் மன்ற கோஷ்டியாம்) சிலரை சந்தித்தேன்.
அடுத்த நாள் விடிகாலை கிளம்பி நாங்கள் வேலூர் காய்கறி மார்க்கெட்டுக்கு சென்றோம்.
எதுக்கு என்றூ கேட்கிறீர்களா? படம் பிடிக்க தான்!! பின்ன என்ன காய்கறி வாங்கவா???
அங்கு என்ன எடுக்க இருக்கிறது என்கிறீர்களா??
மக்கள் தான்!! பீவி ஆரம்பித்து வைக்க பின் நாங்கள் அனைவரும் கட கடவென்று படம் பிடிக்க ஆரம்பித்துவிட்டோம்.





முதலில் சற்றே தயக்கத்துடன் எங்களை பார்க்க ஆரம்பித்த மக்கள் சிறிது நேரம் சென்ற பிறகு விரும்பி எங்களை அழைத்து எங்களை படம் பிடிக்கக்கேட்டுக்கொண்டார்கள்.எங்களின் படம் பிடிக்கும் மும்முரத்தில் நாங்கள் மூவரும் ஆளுக்கு ஒரு திசையாக பிரிந்துச்சென்றது கூட கவனிக்கவில்லை.
ஒன்று ஒன்றரை மணி நேர படப்பிடிப்புக்குப்பின் ஆட்டோ பிடித்து கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தோம்.அங்கே விழியனின் திருமணம் அமர்க்களமாக நடந்துக்கொண்டிருந்தது.அங்கே குழுமியிருந்த நண்பர்கள் எல்லோரையும் படம் பிடிப்பதிலேயே மீதி காலை செழவழிந்தது.
திருமணம் இனிதே நிறைவடைந்த பிறகு நாங்கள் அனைவரும் கிளம்பி வேலூர் கோட்டைக்குச்சென்றோம்.அங்கே உள்ளிருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் நுழையும்போது காஞ்சிபுரம் கோயிலில் நுழையும்போது ஏற்பட்ட அதே பிரமிப்பு.இங்கேயும் உள்ளே ஒரு நூத்துக்கால் மண்டபம்.இங்கேயும் அழகழகாய் சிற்பங்கள்.ஆனால் இந்த கோயில் சில நூறு வருடங்கள் கழித்து கட்டப்பட்டதால் காஞ்சிபுரம் கோயிலை விட சிற்பங்கள் புதிதாக மூக்கும் முழியுமாக இருந்தன.தொடக்கத்தில் ரா (RAW)பார்மேட்டில் சிறிது நேரம் படம் பிடித்ததால் என் கேமராவில் மெமரி தீர்ந்துப்போய்விட்டது!! :-(
அதனால் பழைய படங்களை பார்த்துப்பார்த்து அழித்து அவ்வப்போது படம் எடுத்துக்கொண்டிருந்தேன்.
இதனாலேயே திருப்தியாக படம் எடுக்க இன்னொரு முறை கட்டாயம் வர வேண்டும் என்று அப்போதே முடிவெடுத்துவிட்டேன்.





கோயிலின் அழகை ரசித்த பிறகு வெளியில் வந்து அனைவரும் அகழியில் படகுச்சவாரி செய்தோம்.அதன் பின் ஓட்டலுக்கு திரும்பி வந்து மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு பஸ் பிடித்து திரும்ப வந்தேன்....
இப்படியாக இனிய நினைவுகளையும் ,கூடை கூடையாக போட்டோக்களையும் அள்ளித்தந்த எந்தன் பயணம் முடிவுக்கு வந்தது.
எனது வாழ்க்கையின் புகைப்படக்கலை ஓட்டத்தில் இந்தப்பயணம் ஒரு முக்கியமான திருப்பமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.. :)

பி.கு:பதிவில் சில படங்கள் மட்டுமே உள்ளன,பயணத்தில் எடுத்த மேலதிகப்படங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்

Related Posts Widget for Blogs by LinkWithin