இது போதும் எனக்கு

இது போதும் எனக்கு
------------------
மாலை நேரம்,
கடற்கரை ஓரம்,
மடி தனில் அவள்,
ஒளிந்து கொள்ளும் நிலவு

இது போதும் எனக்கு


இருட்டிருந்தும் கண்களில் ஒளி,
மறைத்திருந்தும் மறக்காத மேனி,
அணைத்திருந்தும் அகலாத பிரிவு,
அனைத்திருந்தும் தீராத மோகம்.

இது போதும் எனக்கு


தனியாக ஒரு தீவு,
தண்ணீரில் விளையாடும் கால்கள்,
கரம் பிடிக்கும் மென்மை,
கண் எதிரே குளுமை

இது போதும் எனக்கு


வான் முழுதும் மேகம்,
வெளி முழுதும் மழை,
கையருகில் அவள் துணை,
ஜன்னல் வழி சிறு தூறல்

இது போதும் எனக்கு


வெளிநாட்டில் பிள்ளைகள்,
லேசாக மூட்டு வலி,
எனக்குத் துணை அவள்,
அவளுக்குத் துணை நான்

இது போதும் எனக்கு

பாட்டு பாடவா

என் இனிய தமிழ் மக்களே

நம்ம ஊருல எப்பவுமே ஒரு பெரிய பிரச்சினை இருக்குங்க!! எங்கயாவது நாலு பேரு ஒன்னா சேர்ந்தா போதும்,அதுல இருக்கறதுலயே கேனையனா எவன் இருக்கான்னு கண்டு பிடிச்சு அவன பாடு பாடுனு (கெட்ட வார்த்தை இல்லீங்கன்னா) ஓட்டி எடுக்க ஆரம்பிச்சிருவாங்க!! நான் வேலைக்கு சேர்ந்த அப்புறம் அப்பபோ ப்ராஜெக்ட் பார்டின்னு ஒரு காமெடி நடக்கும் பாருங்க, அப்போ எல்லாம் இந்த நாடகத்தை நிறைய பாத்திருக்கேன்.

இத்தனைக்கு அவனுக்கும் பாட்டு பாடறதுக்கும் சம்பந்தமே இருக்காது. "என்னது?? என்னையா பாட சொல்லுறீங்க??"அப்படின்னு அவனும் பே பே னு முழிப்பான். "வேண்டாம்னா என்னை விட்டுடுங்கன்னா "அப்படின்னு அவனும் எவ்வளவோ கெஞ்சி பார்ப்பான்(?!) ஆனா இவனுங்க இறக்கமே இல்லாம உசுப்பேத்தி விட்டுக்கிட்டே இருப்பானுங்க!! கொஞ்ச நேரம் கழிச்சு வேற வழி இல்லாம அவனும் பாட ஆரம்பிச்ச அப்புறம் இவனுங்க டோட்டலா கண்டுக்கவே மாட்டானுங்க. அப்போதான் "எலே காத்தமுத்து,உன் பால் வியாபாரம் எப்படிலே போய்ட்ருக்கு??”,”இன்னைக்கு குமுதத்துல நமீதா போட்டோ ஓன்னு போட்டுருக்காக,அதை பார்த்தியாலே??” அப்படின்னு அதிமுக்கியமான விஷயங்களை அவன் பாடிட்டு இருக்கும்போதே பேச ஆரம்பிச்சிருவாங்க!!பாவம் அவனும் ஆரம்பிச்ச பாவத்துக்காக முக்கி முனகி பாடி (?!) முடிப்பான்.

நான் இது மாதிரியான விஷயங்கள்ல எல்லாம் வழக்கமா மாட்டுறது கிடையாது. நாம பேசுறதை வெச்சே நம்ம சாரீரத்தை பற்றி எல்லோரும் தெரிஞ்சிக்கறதுனால யாரும் துணிஞ்சு என்னை பாட சொல்ல மாட்டாங்க!! ஆனா நம்மளோட இசை ஆர்வம் இருக்கு பாருங்க,அது நம்மளையும் அறியாம அப்பப்போ பீறிட்டு வெளியே வந்துடும். அது மாதிரி ஒரு நாள் வந்துதான் ஒரே காமெடியா போயிருச்சு.

இங்க முன்னாடி இருந்த டேமேஜரு ஒரு தமிழ் காரரு. அவருடைய இரட்டை பெண் குழந்தைங்களோட (சுமார் ஐந்து வயசு இருக்கும்) பிறந்ததினத்துக்கு எங்களை எல்லாம் கூப்டிருந்தாரு. ஓசியில ஏதாவது சாப்பிட கிடைக்கும்ங்கற நம்பிக்கைல நாமலும் மொத ஆளா போய் அங்க நின்னுட்டோம். கொஞ்ச நேரத்துல கேக் வெட்டற வைபோகம் எல்லாம் இனிதே நிறைவடைந்த பிறகு அவனவன் எவனாவது பேக்கு கிடைப்பானா ஓட்டறதுக்கு அப்படின்னு கொலைவெறியோட அலைஞ்சுக்கிட்டு இருந்தானுங்க!! இங்கதான் நம்மலோட இசை ஆர்வம் நம்ம கண்ணை மறைச்சிடுச்சு.

எனக்கு எப்பவுமே ஏதாவது ஒரு பாட்டை ஹம் பண்ணிட்டு இருக்கறது அப்படிங்கறது ஒரு பழக்கம். ஏன்னு தெரியாமையே திடீர்னு ஒரு பாட்டு கேக்கனும்னு ஆசை வந்துடும்,அதையே நானும் மனசுக்குள்ள பாட ஆரம்பிச்சிருவேன். அன்னைக்கும் அப்படிதான் கமல் ரஜினி நடித்து,பாலச்சந்தர் இயக்கத்தில் எம்.எஸ்,விஸ்வனாதன் இசை அமைப்பில் உருவான"நினைத்தாலே இனிக்கும்" படத்தில் இருந்து "எங்கேயும் எப்போதும்" அப்படிங்கற பாட்டை ஹம் பண்ணிட்டு இருந்தேன்.

engeyum_eppothum.m...


அருமையான இசை அமைப்பில்,எஸ்.பி.பி யின் மனதை மயக்கும் குரலில் அமைந்த துள்ளளான பாட்டு அது. இளைஞர்களின் துடிப்பும்,எதற்கும் கவலை படாத மனோபாவமும் மிக அழகாக வெளிக்கொண்டு இருப்பார்கள் இசை அமைப்பாளரும்,பாடகரும்.

“தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு
திக்குகள் எங்கிலும் ஓடிக்கொண்டு
வரவை மறந்து செலவு செய்து
உயரப்பறந்து கொண்டாடுவோம்"

இப்படி வரிகளும் பாடலின் கருத்துக்கு ஏற்றார்போல் நச்சென்று இருக்கும்.
பாடல் ஆரம்பிக்கும் விதமே அட்டகாசமாக இருக்கும்,சரி சரி நான் என் மனதை பிடித்த பாடல்களை எல்லாம் பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டேன்,அதனால் நாம் கதைக்கு திரும்ப வருவோம்.

இப்படியாக நான் இந்த பாட்டை ஹம் பண்ணிக்கொண்டிருந்ததால் பார்ட்டிக்கு வந்த கொலைவெறிப்படைக்கு குஷி தாங்க வில்லை. "சீ.வீ.ஆர்!! இவ்வளவு இனிமையாக ஹம் பண்ணுகிறீர்களே,எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்களேன்" என்று அன்பொழுக கேட்டார்கள்.

“எலே பசங்களா!! நீங்க கேட்டா நானும் பாடிடுவேன் அப்புறமா உங்களூக்கு தான் கஷ்டம்" அப்படின்னு நல்ல மாதிரியா சொல்லி தப்பிச்சேன். சரின்னு அவிங்களும் வேறு எவனாவது கெடைப்பானானு பார்க்க ஆரம்பிச்சிட்டாய்ங்க!! ஆனா நம்மளால ஹம் பண்ணுறத நிறுத்த முடியலை.

என்ன பண்ணுறது நம்ம இசை ஆர்வம் அப்படி!! ஹி ஹி!! இவனுங்க வேற எவனையாவது பிடிக்கறதுக்கு பதிலா என் தலையிலேயே மிளகாய் அரைக்கலாம்னு திரும்பி என் கிட்ட வந்துட்டாங்க!!
என்னை இது மாதிரி எவனும் முன்ன பின்ன பாட சொல்லி கேட்டது இல்லை.சரி உண்மையாவே நம்ம குரல் நல்லா இருக்குன்னு தான் கேக்குரானுங்க போல அப்படின்னு நானும் பாட ஆரம்பிச்சுட்டேன்.

“எங்கேயும் எப்போதும்
சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால்
சாத்திரங்கள் ஓடி விடும்
கட்டழகு பொண்ணிருக்கு
வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை
ராராரரீரீரீ ஓஓஓஹோ"
அப்படின்னு பாடி முடிச்சேன்.

ஒரு அஞ்சு வயசு பெண் குழந்தை பிறந்தநாளுக்கு பாட வேண்டிய பாட்டாயா இது?? பாட ஆரம்பிச்ச அப்புறம்தான் பாட்டோட அர்த்தம் பற்றி எல்லாம் நான் யோசிக்க ஆரம்பிச்சேன்.

டேமேஜரும் அவிங்க மனைவியும் ஒரு மாதிரி மொறைக்க ஆரம்பிச்சுட்டாங்க!! பாட சொல்லி மொக்க போட்ட கொலை வெறி படைக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியலை. அங்க வந்த தமிழ் தெரியாத மக்கள் எல்லாம்,எல்லோரும் ஏன் எப்படி பேயறைஞ்ச மாதிரி நிக்கிறாங்கன்னு புரியாம முழிக்கறாய்ங்க!! ஒரே தமாசு தான் போங்க,நானும் பாடி முடிச்சிட்டு நிலைமையை சமாளிக்க ஹி ஹி அப்படின்னு இளிச்சு வெச்சேன்.
இந்த நிகழ்வுனால அடுத்த ஆப்புரேசல் எனக்கு எப்படி நடந்திருக்கும் அப்படின்னு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன். எது எப்படியோ இந்த மேட்டர் நடந்த அப்புறமா எவனும் என்னை பாட சொல்லி கேக்குறது இல்லை. நான் ஏதாவது பாட்டை பத்தி பேச ஆரம்பிச்சா கூட ஒரு பின் கோடு தள்ளி ஓடி போயிடறாங்க!! என்னவோ போங்க
எல்லாம் இறைவன் செயல்!! :-)

கலங்காதே தமிழா, தமிழுக்கு அழிவில்லை!!

முந்தைய இந்த பதிவை போல இதுவும் ஒரு மீள்பதிவு.முன்பு எப்பொழுதோ எழுதியதுஉங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.
பிடித்திருக்கிறதா இல்லையா என்று பின்னுட்டத்தில் தெரிவிக்கலாமே!! :-)

கலங்காதே தமிழா, தமிழுக்கு அழிவில்லை!!
--------------------------------------------
கலங்காதே தமிழா, தமிழுக்கு அழிவில்லை!!
நீர் பொங்கி கரை கடந்து நாடுகளை அழித்தாலும்
கட்டுமரங்களும் கப்பல்களும் இமயத்திலே சேர்ந்தாலும்
தமிழுக்கு அழிவில்லை , அதன் உணர்வுக்கு முடிவில்லை

காடு மலை யாவும்,காணாமல் போனாலும்
கண்களுக்கு எட்டாத தூரத்தில் விழுந்தாலும்
இங்கிலாந்தும் ஈக்வடாரும் இடித்து கொண்டு உடைந்தாலும்
தமிழ் இருக்கும் வளமாக, அதன் புகழ் இருக்கும் நலமாக

ஈரைந்து ஆயிரங்கள் வாழ்ந்துள்ளோம் இப்புவியில்
போர்களையும் கடலலையும் கண்டுள்ளோம் நம் விழியில்
சோதனைகள் பலவற்றை கடந்துள்ளோம் நம் காலால்
பகைவர்கள் எவர் இருந்தும் அழித்திடுவொம் நம் வாளால்

கவலை விடு, வற்றாத இளைஞர் படை நமக்குண்டு
குறை இன்றி தமிழ் மகளை வளர்த்திடுவோம் அதை கொண்டு
திக்கெட்டும் தமிழர் மொழி கதிரவன் போல் பரவட்டும்
ஒற்றுமையால் உயர்ந்திடுவோம் பிரிவினைகள் நொறுங்கட்டும்

சுற்றி உள்ள சூழ்நிலைகள் சங்கடங்கள் ஏற்படுத்தும்
எதிர் வரும் நாட்கள் பற்றி பீதி கொள்ள செய்து விடும்
சங்கடங்களை எதிர் கொள்வொம்,வெற்றி வரும் காத்திருப்போம்
எது வந்தாலும் குறை இல்லை,தமிழுக்கு என்றும் அழிவில்லை!!!

நான் மாமாவிடம் மாட்டிக்கொண்ட கதை

என் இனிய தமிழ் மக்களே!!
அதாகப்பட்டது! வாழ்க்கையிலே காமெடிங்கறது அப்பப்போ இருந்தாதான் வாழ்க்கை தொய்வில்லாம போய்க்கிட்டு இருக்கும்.ஆனா வாழ்க்கையே காமெடியா போனா??

அப்படிப்பட்ட ஒரு வாலிபனின் வாழ்க்கை புத்தகத்தின் ஒரு பக்கத்தை தான் நாம இன்னிக்கு புரட்டி பார்க்கப்போறோம். எனக்கு சின்ன வயசுல இருந்து காரு-னா ரொம்ப ஆசைங்க. கையில எது கிடைச்சாலும் அதை உருட்டி விட்டு ஓட்டிட்டு இருப்பேன். ஒரு நாள் ஓட்டறதுக்கு எதுவும் கிடைக்கலைன்னு தூங்கிட்டு இருந்த என் பாட்டியை உருட்டி விட்டு ஓட்ட ஆரம்பிச்சுட்டேன்னா பாத்துக்கோங்களேன். இப்போ கூட எவனாவது மாட்டுனான்னா இரக்கமே இல்லாம ஓட்டி தள்ளிடுவேன். Gtalk-ல என் கிட்ட மாட்டி இருக்கற தமிழ்மண நண்பர்களே இதற்கு சாட்சி.

சரி!! இப்போ எதுக்கு இவ்வளவு பில்ட் அப்பு? அப்படின்னு கேக்கறீங்களா?? எனக்கு வண்டி ஓட்டுறதுல இவ்வளவு ஆசை இருந்தும் நான் இந்தியாவுல இருந்த வரைக்கும் டிரைவர் சீட்டுல உட்கார்ந்தது கூட இல்லை!! நாம எல்லாம் காருல போறதே பெரிய விஷயம் இதுல எங்கிட்டு காரு ஓட்டுறது???

ஆனா இங்க வந்த அப்புறம் நிலைமையே வேற!!! இந்த ஊருல எங்க போகனும்னாலும் காரு வேணும்.ரோட்டுல நடந்து போனாலே எல்லோரும் ஒரு மாதிரி தான் பார்த்துட்டு போவாங்க!! நாம எங்க போனாலும் எவனுமே நம்மல மதிக்கறது கிடையாதுங்கறதுனால நாம இதெல்லாம் கண்டுக்கிட்டதே கிடையாது. ஆனா போக போக ஒரு லைசென்ஸ் வாங்கி வெச்சிக்கிட்டா நல்லது, அங்கங்க அடையாளம் காட்டுறதுக்காவது உபயோகமா இருக்கட்டும் அப்படின்னு முயற்சி பண்ணேன். ஒரு வழியா காரு ஓட்ட கத்துக்கிட்டு பரீட்சையிலும் தேறி லைசென்ஸ் வாங்கின அப்புறம் எனக்கு தல கால் தெரியலை. வரவன் போரவன் கிட்ட எல்லாம் லைசென்ஸ் காண்பிச்சுக்கிட்டு ஆட்டம் போட்டுகிட்டு இருந்தேன்.என் தொல்லை தாங்க முடியாம நண்பர்கள் எல்லாம் ஒரு திட்டம் போட்டாங்க!! வரியா ந்யூயார்க் வரைக்கும் காருலையே போய்ட்டு வரலாம்?? நீயும் புதுசா லைசென்ஸ் வாங்கி இருக்க,லாங்க் டிரைவ் போனா மாதிரியும் இருக்கும் அப்படின்னு உசுப்பேத்தி விட்டுட்டானுங்க!!

“துணிந்து செய்யனும் எதுவும், இல்லைனா கருமம் ஒட்டிகிச்சு பாரு அழுக்கு" அப்படின்னு நாம தமிழ் பேசும் நல்லுலகில் சொல்லி இருக்காங்க இல்லையா(மகனே நீ அடங்கவே மாட்டியா??) ,அதனால துணிஞ்சு "கழுதை ந்யூயார்க் தானே போயிட்டா போச்சு" அப்படின்னு ஒத்துக்கிட்டேன். போகும் போது சொல்லுறா மாதிரி ஒன்னும் இல்லை. ஓவரா பனி இருந்ததுனால ஒரு மண்ணும் கண்ணுக்கு தெரியலை. இந்த ஊருல ரொம்ப தூரம் போகனும்னா ஃப்ரீவே அப்படிங்கற ஒரு விதமான சாலைகளை உபயோகப்படுத்துவாங்க. அதுல மெதுவா எல்லாம் போக கூடாது,ஒரே வேகத்துல சீரா போய்க்கிட்டு இருக்கனும். ஆனா அன்னிக்கு ரொம்ப அதிகமான பனி இருந்ததுனால நாங்க இல்லாத லூட்டி எல்லாம் அடிச்சோம். கண்ணுல ஒரு போர்ட் எதுவும் சரியா தெரியலைன்னு போனதே ரொம்ப மெதுவா.அதுல அங்கங்க நின்னு,நல்லா அறிவிப்பு பலகை எல்லாம் உத்து பார்த்து,சில சமயம் ரிவர்ஸ் எல்லாம் வந்து அடாவடி தாங்கலை.

ஆனா பெரிய காமெடி திரும்ப வரும்போது தான். நம்ம கையில இவ்வளவு புதுசா பெருசா காரு கிடச்சதுனால என் கால் எதுவும் தரையிலையே இல்லை,ஆக்சிலேட்டருல தான் இருந்துச்சு (ஹி ஹி). அதுவும் இவ்வளவு சூப்பரான ரோடு எல்லாம் நாம எல்லாம் எங்க பாத்திருக்கோம் அதனால கண்ணு மண்ணு தெரியாம ஓட்டிகிட்டு வந்தேன். பக்கத்துல இருந்த நண்பர் வேற அவன சைட் வாங்கு,இவன சைட் வாங்கு அப்படி இப்படி ஏத்தி விட்டுக்கிட்டு இருந்தாரு. அப்போன்னு பார்த்து லைட்டா தூறல் வேற போட ஆரம்பிச்சசிடுச்சு,ஆனா நாம மெதுவாவே ஆக்கலை. நாம வர வேகத்தை பார்த்து எல்லா காரும் நமக்கு வழி விட ஆரம்பிச்சிடுச்சு. நமக்கு ஏதோ மரியாதைதான் தராங்க போல இருக்குன்னு நானும் விரட்டிக்கிட்டு போய்க்கிட்டு இருந்தேன்.
அப்போ திடீர்னு ரியர் வ்யூ மிரர்ல ஏதோ காரு முந்திக்கிட்டு வரா மாதிரி இருந்துச்சு. மகனே!! நம்மல விட எவன்டா வேகமா வர்ரது அப்படின்னு பார்த்தா அந்த காரு மேல திடிர்னு நீல கலரு சிங்கு சா,சிவப்பு கலரு சிங்கு சா அப்படின்னு விளக்கு எரிய ஆரம்பிச்சிடுச்சு!!

அதை பார்த்து பக்கத்துல இருந்த நம்ம நணபர் "காப் காப்!! ஓரம் கட்டு! சீக்கிரம் ஓரம் கட்டு" அப்படின்னு கத்த ஆரம்பிச்சிட்டாரு!!!
என்னது?? காப்பா??? ஆகா வெச்சிட்டாங்கையா ஆப்பு!!!அப்படின்னு வண்டியை ஓரம் கட்டுனேன்.
ஆகா!! நாம லைசென்ஸ் வாங்கின மொத ட்ரிப்புலையே மாட்டிகிட்டோமே அப்படின்னு நானும் குல தெய்வத்தை வேண்டலாம்னு பார்த்தா,அப்போன்னு பாத்து பயத்துல என்னுடைய குல தெய்வம் யாருங்கறதே எனக்கு மறந்து போச்சு. ரெண்டு நிமிஷத்துல வண்டியை எனக்கு பின்னாடி நிறுத்திட்டு நம்ம மாமா காரு கிட்ட வந்தாரு.

“வாங்க ஆபீஸர்!! எப்படி இருக்கீங்க ஆபீஸர்?? வீட்டுல அண்ணி கொழந்தைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா???”

“எலே!!! காருல நாந்தான் தொறத்திட்டு வந்தேன்னு தெரியுதுல்ல?? அப்புறம் ஏன்ல வண்டியை நிறுத்தல??”

“அது நீங்களா ஆபீஸர்?? நான் யாரோ என் கூட ஒடி பிடிச்சு விளையாடுறாங்கன்னு நினைச்சுட்டேன் ஆபீஸர்"

“எதுக்குலே இவ்வளவு வேகமா வண்டியை விரட்டிட்டு வந்த??? வண்டியில துப்பாக்கி குண்டு ஏதாவது வெச்சிருக்கியாலே??”

“இந்த ஊருக்கு வந்து நல்லா சாப்டு சாப்டு தூங்கிட்டு கொஞ்சம் குண்டாயிருக்கேன் ஆபீஸர்!! மத்தபடி வேற குண்டு எதுவும் இல்லை ஆபீஸர்"

“பின்னாடி யாருலே காருல?? அவிங்க கிட்ட ஏதாவது துப்பாக்கி இருக்கா??”

நானும் என் நண்பரும் பின்னாடி திரும்பி தூங்கிகிட்டு இருந்த என் நண்பர்களை எழுப்பினோம்.

“எவன் டா அவன் நான் நமீதா கூட டூயட் பாடிக்கிட்டு இருக்கும் போது எழுப்பறது"

“டேய் வெண்ணை!! மாமா வந்திருகாரு!! பெரியவங்கன்னு மரியாதை கூட இல்லாம அப்படி என்னடா தூக்கம்!! எந்திரிடா"

எழுந்துட்டு தூக்க கலக்கத்தோட எல்லோரும் சுட்டும் முட்டும் பாக்குறானுங்க!! அப்புறம் திடீர்னு மாமாவ பார்த்துட்டு!!
“வணக்கமுங்கன்னா!!! எங்கன்ன இந்த பக்கம்??”

“ஆங்!! இந்த மாசம் மாமூல் பாக்கியை வசூல் பண்ணலாம்னு வந்தேன்!! போடா வென்று!! எங்கலே இம்புட்டு வேகமா போய்கிட்டு இருக்கீங்க??"
அப்படின்னு ஆரம்பிச்சு "நீ எங்க இருந்து வந்த??”,”எவ்வளவு நாளா இங்க இருக்க??”,”எப்போ திரும்பி போவ??”,”சிவாஜி படம் எப்போ ரிலீஸ் ஆகும்??”,”மும்தாஜ் வீட்டு அட்ரெஸ் என்ன??" அப்படி இப்படின்னு சர மாறியா கேள்விக்கனைகளால தாக்குறாரு!!

“வேணாம் !! வேணாம்!!! வலிக்குது!! அழுதுடுவேன்!!”அப்படின்னு டயலாக் எல்லாம் விட்டு அவரு கேள்வியை நிறுத்த வேண்டியதா போச்சு.

“சரி நீங்க எல்லாம் இங்கயே இருங்க,நீ மட்டும் என் பின்னால என் காருக்கு வாலே" அப்படின்னு சொல்லிட்டு மாமா பாட்டுக்கு வீரு நடை போட்டுக்கிட்டு போக ஆரம்பிச்சாரு. நானும் நல்ல பிள்ளை மாதிரி "சொறிங்க ஆப்பீஸர்" அப்படின்னு அவரு பின்னாடி போய் அவரு காரு பின் சீட்டுல போய் உட்கார்ந்தேன்.

அங்க போய்ட்டு என் லைசென்ஸ் வாங்கிட்டு அவிங்க அக்காக்கு ஒரு போன் போட்டு என்னத்தையோ பேசுனாரு. அவிங்க போன்லையே நம்மல ஓவரா கலாய்ச்சாங்க!!
“என்ன பேரு இது!! இந்த புள்ள பேர எப்படி சொல்லுவ?? ரே.... மா...ன்யூ...”
அவிங்க சொல்லி முடிக்கறதுக்குல்ல இதான் சாக்குன்னு அவங்களுக்கு தெரிஞ்ச கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லி பிராக்டீஸ் பண்ணிக்கிட்டாங்க. நான் காதை பொத்திக்கிட்டேன்.
“அண்ணா!! அது சாமி பேருனா!! அப்படி எல்லாம் சொல்லக்கூடாதுன்னு சொல்லுங்கன்னா!!” அப்படின்னு சொன்னேன்.

“சரி சரி நீ அழுவாதலே!! நான் அவிங்க கிட்ட சொல்லுதேன்" அப்படின்னு மாமா அக்காவை கட் பண்ணிட்டாரு.

அதுக்கு அப்புறமா ஒரு நோட்டு புஸ்தகத்தை எடுத்துக்கிட்டு
“இந்தாலே டிக்கெட்டு, இதுல போட்டிருக்கற தேதிக்குள்ள இதுல சொல்லியிருக்கற காசை கட்டிடனும்!! சரியா"அப்படின்னு சொல்லிக்கிட்டு ஏதோ எழுத ஆரம்பிச்சாரு.

“அண்ணா!! அதுக்குள்ள எனக்கு கொடுக்காதீங்கன்னா!! நான் என் வீட்டுக்கு ஒரே பையன்.நான் டிக்கெட்டு வாங்கிட்டு போயிட்டா என் குடும்பத்தை யாரு பார்த்துப்பா?? உங்கள பார்த்தா எனக்கு என் செத்து போன அண்ணா மாதிரியே இருக்கு" அப்படின்னு கண்ண கசக்க ஆரம்பிச்சேன்.

“எலே...இந்த நெலமையிலும் உனக்கு கிலுகிலுப்பு கேக்குதாலே!!இந்தா சீக்கிரமா காசை கட்டிட்டு லைசென்ஸ் வாங்கிக்கோ,இப்போ எடத்த காலி பண்ணு"அப்படின்னு சீட்டு கிழிச்சு கொடுத்தாரு.

பொதுவா வேகமா போன டிக்கெட்டு தருவாங்கலே தவிர லைசென்ஸ் எல்லாம் வாங்கி வெச்சுக்க மாட்டாங்க!! ஆனா நான் கேள்வி எதுவும் கேக்காம வாங்கிட்டு வந்துட்டேன்.
கொஞ்ச தூரம் போன அப்புறமா எனக்கு பதிலா என் நண்பர் வண்டியை ஓட்ட ஆரம்பிச்சிட்டாரு. அடுத்த நாள் கோர்ட்டுக்கு போன் பண்ணி எவ்வளவு காசு கட்டணும்,எந்த அட்ரெஸுக்கு அனுப்பனும்ங்கறது எல்லாம் கேட்டுக்கிட்டேன். என்னுடைய அபராதத்தொகயை கேட்டுக்கிட்டு எப்படிடா உனக்கு மட்டும் இவ்வளவு கம்மியா வந்திருக்குன்னு எல்லோரும் கேட்டாங்க. எல்லாம் என் பால் வடியும் (?!) முகத்தின் மகிமை அப்படின்னு நானும் சீன் போட்டுக்கிட்டேன். அப்புறமா கொஞ்ச நாள் கழிச்சு ஒழுங்கா மணி ஆர்டர் அனுப்பினேன்,அவங்களும் ஒழுங்கா aலைசென்ஸ் அனுப்பி வெச்சாங்க.

நான் இங்க நகைச்சுவையா எழுதனுமேங்கறதுக்காக ஏதாவது எழுதினேனே தவிர என்ன புடிச்ச போலீசும் சரி,கோர்ட்டுல பேசின ஆன்டியும் சரி ரொம்ப சாதாரணமா,மரியாதையா பேசினாங்க. எனக்கு என் தாய் நாடு ரொம்ப பிடிக்கும்னு இருந்தாலும் சில சமயங்களில் நம்ம ஊரு இந்த ஊரு மாதிரி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு நெனைச்சிருக்கேன். அது மாதிரி என்ன நினைக்க வைத்த நிகழ்வுகளில் இந்த நிகழ்வும் ஒன்னு.

அழகுகள் ஆறு

என் இனிய தமிழ்மக்களே,
என்னைக்கும் போல இணையத்துல மேய்ஞ்சுகிட்டு இருந்த போது சில நாட்களுக்கு முன்னால நம்மளோட ஸ்டார் ப்ளாகர், முதலாண்டு நிறைவு விழாவை கொண்டாடி கலக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இளைய தளபதி,பாஸ்டன் புயல், தமிழ் வலைப்பூ உலகின் கெட்டிப்பயல், அன்பு தோழர் வெட்டிப்பயல் ஆன்லைன்ல வந்தாரு (யாராவது ஒரு சோடா ஒடைங்கப்பா).
நாம தான் வேற வேலை இல்லாம அலைஞ்சிக்கிட்டு இருக்கோமே,சும்மா இல்லாம
“எப்படி இருக்கீங்க தலைவா??” அப்படின்னு கேட்டு வெச்சேன்.

அவரும் "போய்ட்ருக்கு!!! ஆணி ஓவரா இருக்கு" அப்படின்னு அவரு வழக்கமா போடற பிட்டு போட ஆரம்பிச்சாரு!!

“ஐயகோ !!! ஒரு தமிழனுக்கு நிகழும் இந்த அவலத்தை கண்டிக்க யாருமே இல்லையா,இதுக்கு தான் 'ஆணிகள் தொல்லயடி பாப்பா' என்று அன்றே சொல்லி வெச்சான் எங்கள் முண்டாசு கவிஞன்" அப்படின்னு கொஞ்சம் ஓவராவே சவுண்டு விட்டேன்.

“யோவ் அதெல்லாம் அவரு எப்போயா சொன்னாரு??”

“ஓ!! அது அவரு சொல்லலையா?? சரி அவரோட பக்கத்து வீட்டுகாரரு சொல்லி இருப்பாரு.இப்போ அதுவா முக்கியம்???

“மகனே உனக்கு நக்கல் ரொம்ப ஜாஸ்தியா போயிருச்சு!!! இந்தா வாங்கிக்கோ சாபம்!!! உன்னை டாக் பண்றேன்" அப்படின்னு ஒரு குண்டை தூக்கி போட்டுட்டாரு.

“ஐயோ தெய்வமே!! நண்பர்கள் இடையே கோபங்கள் இருக்கலாம்,ஆனா கொலைவெறி இருக்க கூடாது"அப்படின்னு நானும் சொல்லி பார்த்தேன்.ஆனா அவரு கேக்கறதா இல்லை.
சரின்னு "அப்போ பாவ்னா,காதரினா ஜீடா ஜோன்ஸ் அப்படி இப்படினு ஆறு ஃபிகர்களோட படங்கள் போட்டா போதுமா"ன்னு நானும் அப்பாவியா(?!) கேட்டேன்.

“அதெல்லாம் ஒத்துக்க முடியாது,ஏதாவது எழுதனும் “அப்படின்னு கண்டிப்பா சொல்லிட்டாரு சரி!! எல்லாம் இறைவன் செயல் அப்படின்னு நானும் எழுத ஆரம்பிச்சிட்டேன்.

1.)தமிழ்: அழகுன்னு நான் யோசிக்க ஆரம்பிச்ச உடனே என் நினைவுக்கு வந்தது தமிழ்தாங்க!! தமிழா?? யார் அந்த பொண்ணு அப்படின்னு கலாட்டா பண்ண கூடாது.நான் சொல்லுறது நம்ம தாய் மொழியைதான். எனக்கு சின்ன வயசுல இருந்து தமிழ் ரொம்ப பிடிக்கும். ஆனா நான் பள்ளிக்கூடத்துல மூனாவதுல இருந்து இந்தி தான் படிச்சேன். அப்பப்போ கல்கி,குமுதம் அப்படின்னு படிக்கறதோட சரி. அதுவும் அந்த புஸ்தகம் எல்லாம் படிப்பு கெட்டுடும்னு வீட்டுல வாங்க மாட்டாங்க(அப்படியாவது போர் அடிச்சி ஒழுங்கா படிப்பேன்னு நினைச்சாங்க,ஆனா நாம் எங்கிருந்து?? ஹி ஹி) எங்கேயாவது உறவுகாரங்க வீட்டுக்கு போனா படிக்கறது அவ்வளவுதான். எழுத்து தமிழ் கூட எனக்கு அவ்வளவா தொடர்பு இல்லாட்டாலும் தமிழ் மேல ஆர்வம் மட்டும் இருந்துக்கிட்டே இருந்துச்சு.
வேலைக்கு சேர்ந்த அப்புறம் மின் அஞ்சல் மூலமா வர நிறைய கவிதை எல்லாம் படிச்சுட்டு என்னுடைய ஆர்வம் திரும்பியும் சூடு பிடிச்சிருச்சு!! ஒரு நாள் ஆர்வம் ஓவரா போய் நானே தமிழ்ல கிறுக்க முயற்சி பண்ணர அளவுக்கு போயிருச்சு.அப்பப்போ இப்படி கிறுக்கற தமிழ்ல நிறைய எழுத்து பிழை இருக்குன்னு நண்பர்கள் எல்லாம் சொல்லுவாங்க. அதை முன்னேற்றுவதற்கான ஒரு முயற்சியாகத்தான் இந்த வலைப்பதிவை ஆரம்பித்தேன். அதுக்கு அப்புறம் தற்செயலா தமிழ்மணம்,தேன்கூடு எல்லாம் பார்த்து,அதுல பதிவு செஞ்சுக்கிட்டு,அதுக்கு அப்புறம் எல்லாம் தெரிஞ்ச கதை!!
ஆனா நம்ம தமிழோட அழகுதான் என்னை இவ்வளவும் செய்ய வெச்சுது!! எனக்கு பொதுவாவே கவிதை பிடிக்கும்,இருந்தாலும் தமிழ் கவிதகள்ல இருக்கற சுவை ஆங்கிலத்துலையோ,இந்தியிலையோ இருக்கறா மாதிரி தெரியலை. எனக்கு தமிழ் தாய் மொழிங்கறதுனால அப்படி தெரியுதா ? இல்லை உண்மையாவே தமிழ் மத்த மொழியை விட அழகான மொழி அப்படிங்கறதுனால இப்படி இருக்கான்னு தெரியலை. எது என்னவோ சம்ஸ்க்ருதம் அரபிக் உட்பட 15 மொழிகள் வரை கற்றறிந்த பாரதியாரே
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”
அப்படின்னு சொல்லியிருக்காரு,கூடவே “உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை” அப்படின்னு ஒரு டிஸ்கி வேற குடுத்துட்டு போயிருக்காரு.
வலை உலகத்துல முதல் முறையா தமிழை பார்த்த உடனே எவ்வளவு அழகா இருந்துச்சு எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சனு வார்த்தையில சொல்ல முடியாது.இப்போ கூட கணிணியில் தமிழை பார்க்கும்போதெல்லாம் ஆனந்தம். நம்ம ஊரு பொண்ணுங்க புடவை சுடிதார் எது போட்டாலும் அழகா இருக்கா மாதிரி லதா ,அவரங்கள் இப்படி எந்த் ஃபான்ட்ல (font) பார்த்தாலும் நம்ம தமிழ் அழகுதான். (ஹி ஹி நம்மலையும் அறியாம நம்ம ஜொள்ஸ் உணர்வு எப்படியாவது தலை காட்டிடுது!! )


2.)நட்பு: உலகத்துல காதல்,தாய்மை (சரி தந்தைமையும் கூட) போன்ற பல உறவுகள் இருந்தாலும் நட்பு என்பது மிக அழகான , சிறப்பான உறவு. தாய்மை,காதல் என்பதெல்லாம் கூட அமைவதற்கு உடல் ரீதியான காரணங்களை கூறி விடலாம் ,ஆனால் நட்பு என்பது மனதை பொருத்த ஒரு விஷயம். அதுவும் இல்லாம ஒருத்தர் தாயை பார்க்காமலோ,காதல் வயப்படாமலோ வாழ்க்கை முழுதும் கழிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம்,ஆனால் நட்பையே பார்த்திராதவற்கள் இந்த உலகத்தில் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. இது நட்பின் பல சிறப்புகளில் ஒன்று.வாழ்க்கையில் சந்தோஷத்தின் ரகசியம் என்ன என்று நான் பல சமயங்களில் யோசித்தது உண்டு. நான் பார்த்த வரை சந்தோஷத்தின் ரகசியம் நல்ல உடனிருப்பு (company). பக்கத்தில் நமது மனதிற்கு பிடித்த ஒருவர் இருந்துவிட்டால் ஒரு மனிதன் எந்த பிரச்சினையையும் எதிற்கொள்வான்,எந்த ஒரு இடத்திலும் புகார் கூறாமல் இருந்து விடுவான். அதுவும் சில நண்பர்களூடன் லூட்டி அடிக்க ஆரம்பித்து விட்டால் உண்டாகும் சுகம் சொல்லி மாளாது.
நட்பு என்றாலே எல்லாம் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம் அல்ல. நம் நம்பும் சில விஷயங்களை ஒருவர் ஒத்துக்கொள்ளாவிட்டடாலும் ,நம் குணங்களில் வித்தியாசம் இருந்தாலும் கூட நல்ல நண்பர்களாக இருக்க முடியும் . கர்ணன் துரியோதனனில் இருந்து ராஜாஜி பெரியார் வரை நிறைய உதாரணங்கள் இருக்கிறது நம்மை சுற்றி. உலகில் எல்லோருமே ஒரே மாதிரி யோசிப்பதில்லை,நம் வளர்ப்பு,அனுபவங்களுக்கு தகுந்தார்போல் நம் எண்ண ஓட்டங்களும் வித்தியாசமாக த்தான் இருக்கும். அதற்காக எல்லோருமே அடித்துக்கொண்டு சாக வேண்டும் என் அர்த்தம் அல்ல. நண்பனாக இருந்து கொண்டே நம் எண்ணங்களில் உறுதியாக இருக்கலாம் வாதிக்கலாம். சில சமயம் வாதங்களில் மிகவும் கோபம் வரக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படலாம்.அப்பொழுது சில காலம் பொறுத்திருந்து பதிளலித்தால் நட்பின் பலனை பெறலாம்.
என்னை பொருத்த வரை நட்பு என்பது மனிதனுக்கு வாய்த்திருக்கும் மிக அழகான விஷயங்களில் முதன்மையானது. அதை உணராமல் பகைமையை வளர்த்துக்கொள்வது “கனியிருப்ப காய் கவர்ந்தற்று” என்பதையே நினைவூட்டுகிறது.

3.)இயற்கை: நான் அந்த பெயரில் உள்ள படத்தை சொல்லவில்லை நம்மை சுற்றி உள்ள இயற்கையை தான் சொல்லுகிறேன். தனிமையான கடற்கரை ஆகட்டும், தூய்மையான காற்றில் செறிந்த அடர்ந்த வனப்பகுதியாகட்டும், குளிர்ந்த தட்பவெட்பமுடன் மனதை மயக்கும் மலைப்பகுதியாகட்டும்., எழில் கொஞ்சும் அழகோடு துள்ளித்திரியும் மான் போன்ற மிருக வகைகள் ஆகட்டும், இயற்கையின் அழகுக்கு எல்லையே இல்லை. நான் தனிமை விரும்பி என்பதால் கடவுள் இந்த உலகை எவ்வளவு ரசனையோடு படைத்திருக்கிறார் என்று அப்பப்பொழுது சிலாகித்திருப்பேன். உதாரணத்திற்கு கடற்கரையே எடுத்துக்கொள்ளுங்களேன். காலை கட்டிக்கொள்ளும் நாய்க்குட்டி போல நம்மோடு விளையாடும் மணல்பரப்பு , ஒரு ஆறு வயது குழந்தையை போல நம்மோடு ஓடி பிடித்து விளையாடும் கடல் அலைகள் , ஒரு இனிய நண்பனைபோல் நம்மை சுற்றி கிரணங்களால் உற்சாகம் நிறப்பும் மாலை சூரியன், காதலியை போல் மென்மையாக தோளில் சாயும் பௌர்ணமி நிலவொளி.ஆகா இதை பற்றி எல்லாம் பேச ஆரம்பித்தேன் என்றால் நிறுத்தாமல் போய்க்கொண்டே இருப்பேன்.இப்படி இயற்கையோடு ஒன்றி தனிமையில் மூழ்கிகிடப்பதே ஓரு அழகான சுகமான உணர்வு தான்.
இவ்வளவு அழகான இயற்கையை நினைக்கும் போது நம்மை அறியாமலேயே அதை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறோமே என்று நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. முடிந்த வரை இயற்கையை பாதுகாப்போம் என உங்கள் ஒத்துழைப்பை கேட்கபதை தவிர வேறு ஒன்றையும் சொல்ல தோன்றவில்லை.

4.) அழகான தருணம்: இதை பற்றி நினைக்கும் போது பல நினைவுகள் என் மனதில் எழுகின்றன. கவுன்சிலிங் முடித்து பொறியியல் சீட் கிடைத்த பிறகு பெருமிதததுடன் என் தந்தை நடந்து செல்ல. அவர் பின் போய்கொண்டிருந்த என் அம்மா “கையை வீசிக்கிட்டு போற வேகத்தை பார்த்தியா,சும்மாவா?? எஞ்சினியர் அப்பா ஆயிட்டாருல அதான்” என்று சொன்னபோது ஏற்பட்ட உணர்வு. இது எனக்கு கிடைத்த ஒரு விஷயம் என்பதை விட ,இது கிடைப்பதற்கு அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்ற எண்ணமும் ,இதனால் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை பார்க்க குதூகலமும். அப்பப்பா இப்படி ஆயிரம் எண்ண ஓட்டங்கள்!!மிக அழகான தருணம்.
அமெரிக்க எம்பசியில் வீசா வாங்கிவிட்டு கூட இன்டெர்வ்யூவிற்கு வந்திருந்த நண்பருடன் தெரு ஓர கடையில் தேனீர் அருந்திக்கொண்டே “என்ன தான் வீசா வாங்கினாலும் நாளைக்கு அமெரிக்காவே போனாலும்,நாம எல்லாம் லோக்கல் கய்ஸ் தான்யா, இப்படி ஃப்ரண்ட்ஸோட சிங்கிள் டீ குடிக்கற சொகம் எங்கையாவது வருமா” என்ற கதைத்ததும். “என்ன கார்த்தி(நம் தமிழ் பதிவுலக கார்த்தி கிடையாது),வீட்டுக்கு போனதும் பொண்ணு பார்க்க சொல்லிறலாமா?? அமெரிக்கா மாப்பிள்ளை ஆயிட்டோம்ல” என்று கிண்டல் பேசிக்கொண்டிருந்ததும்.காத்திருந்து சரியாக மாடி பஸ்ஸில் ஏறி,மாடியில் இடம் பிடித்து உட்கார்ந்துகொண்டு,சுகமாக வேடிக்கை பார்த்தபடி “அப்பாடா அந்த சிடு மூஞ்சி ப்ராஜெக்ட் மானேஜர் கிட்ட இருந்து எஸ்கேப்பு,புது ப்ராஜெக்ட் புது ஆரம்பம்” அப்படின்னு மனசுக்குள்ள மலர்ந்ததும்!! அப்பப்பா சுகமான அனுபவம்.

கார் ஓட்டுன களைப்புல தூங்க போறேன்னு நண்பர்கள் எல்லாம் போய்விட. களைப்பா இருந்தா கூட பரவாயில்லைனு கனடா நாட்டு பகுதியில் உள்ள நயாகராவின் பட்டாம்பூச்சி பூங்காவுக்கு தனியா வந்து. நம் கை மேலும் தோள் மேலும் உட்காரும் பட்டாம்பூச்சிகளுடம் விளையாடிவிட்டு. வெளியே வந்து ஒரு பென்ச்சில் போகும் வருவோரை வேடிக்கை பார்த்தபடி,சுற்றி பச்சை பசேலென்றிருந்த இயற்கைய ரசித்துகொண்டே. அமைதியாக நேரம் தெரியாமல் புன்னகைத்து கிடந்தது. ஆகா எவ்வளவு அழகான தருணம்.
டிஸ்கி : கூட பென்ச்சில் அழகான யாராவது துணையா உட்கார்ந்திருந்தா இன்னும் அழகா தான் இருந்திருக்கும்.இருந்தாலும் இது அழகுதான்!! :-)

5.)அழகான இடம்::அழகான இடம் அப்படின்னு யோசிச்சா எல்லோருக்கம் அவங்களோட சொந்த ஊரு தான் நியாபகத்துக்கு வரும் ஆனா நான் யோசிச்ச போது எனக்கு நியாபகத்துக்கு வந்த ஒரே விஷயம் “மொட்டை மாடி” . நான் என் வாழ்க்கையில் என் வீட்டில் கழித்த சந்தோஷமான தருணங்கள்னு யோசிச்சு பார்த்தாலே எனக்கு எங்க மொட்டை மாடி தான் நினைவுக்கு வருது. சின்ன வயசுல படிக்கறேன் பேர்வழினு மாடிக்கு போய்ட்டு வானத்தை பார்த்தேன்,பறவைகளை பார்த்தேன்(இதுல இரட்டை அர்த்தம் எதுவும் கிடையாதுங்க),தென்றலை ரசித்தேன்,அணிலை பார்த்தேன் அப்படின்டு வெட்டியா நேரத்தை ஓட்டிட்டு இருப்பேன். மாலை மற்றும் இரவு பொழுதுகளில் என் அன்னை தந்தையருடன் மொட்டை மாடியில் பேசிக்கோண்டு இருப்பது எங்களுக்கு மிகவும் பிடித்தமான பொழுது போக்கு. நாங்கள் புது வீட்டிற்கு வந்த பிறகு கூட இந்த பழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. நான் புதிதாக வீடு பார்க்க வேண்டும் என்று நினைத்தபோது கூட இதனால்தான் ப்ளாட்களை விரும்பாமல் தனி வீடுகளையே வாங்க விரும்பி இருந்தேன். எங்கள் புது வீட்டுக்கு வந்த பிறகு அதில் மொட்டை மாடியில் இருக்கும் பெரிய தண்ணீர் தொட்டி என்னுடைய மிகவும் பிடித்தமான இடம். நேரம் காலம் இல்லாமல் போர் அடிக்கும் பொழுது எல்லாம் அதில் ஏறி எங்கள் வீடு சுற்றி உள்ள மற்ற வீடுகள் மற்றும் மலை இவற்றை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விடுவேன். இரவு நேரங்களில் அந்த தொட்டியின் மேல் மல்லாக படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டு இவ்வளவு பெரிய அண்டத்தை படைத்து என்ன புண்ணியம்?? எல்லோரும் அடித்து பிடித்துக்கொண்டு செத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த படைப்பின் காரணம் என்ன?? எதற்கு இவ்வளவு பெரிய அண்டம் படைக்க வேண்டும்??,நம் சூரிய குடும்பம் மற்றும் வான் வெளியில் சில நட்சத்திரங்களை மட்டும் படைத்திருந்தால் போதுமே என்று லூசுத்தனமாய் யோசித்துக்கொண்டிருப்பேன். வானில் கண்ணடிக்கும் நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டே உலகையே மறந்திருக்கும் தருணங்கள் அழகு. அதை தரவல்ல மொட்டை மாடி அழகோ அழகு!! :-)

6.)அழகு முகம்: மிகச்சிறிய வயதில் எல்லோரையும் போல அம்மாவின் முகம் தான் மிக அழகான முகம். நிபந்தனை அற்ற அன்போடு அவர்கள் பேசும் போதும் எல்லா வயதினிலும் தாய் தந்தையரின் முகத்தை போல அழகு வேறு எதுவாகவும் இருக்க முடியாது என்று தோன்றும். ஆனாலும் வயது கோளாரினால் எல்லோரையும் போல எனக்கும் பெண்களின் அழகு ஈர்க்காமல் இல்லை. அம்பிகா முதல் அன்னா கோர்னிகோவா வரை வரைமுறை இன்றி சைட் அடித்திருக்கிறேன். ஆனால் மக்கள் பெரிதும் தலையில் தூக்கிக்கொண்டு ஆடும் கரீனா கபூர்,கட்ரீனா கைஃப் போன்றவர்களை எனக்கு சுத்தமாக பிடிக்காது. ஐஸ்வர்யா ராயின் அழகுகூட மிகைபடுத்தப்பட்ட பாராட்டு என்றுதான் எனக்கு பலமுறை தோன்றும். நம்ம டேஸ்ட் அப்படி. திடீரென்று விளம்பரங்களில் தோன்றும் ஏதோ ஒரு நடிகையின் முகம் ,பல பேருக்கு பிடிக்காமல் போகலாம் ஆனால் எனக்கு பிடித்து விடும்.ஏன் என்று தெரியாது.பொதுவாகவே ஓவராக சீன் போடாமல் எளிமையாக மற்றும் புத்திசாலித்தனமாக காணப்படும் நடிகைகளின் முகங்கள் எனக்கு மிகவும் பிடித்துவிடும். அதனால் தான் “Item bomb” கலையும் , “Glamour doll”கலையும் என்க்கு பொதுவாக பிடிக்காது. அதனால் எனக்கு பிடித்த முகங்கள் பலருக்கு சாதாரணமாக தோன்றக்கூடிய முகங்கள் தான். “Beauty lies in the eyes of the beholder” என்பது போல் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான எண்ணங்கள்.


அப்பாடா எப்படியோ பதிவை முடித்தாகிவிட்டது. யாம் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெருக என்ற சொல்லிற்க்கேற்ப நானும் மூனு பேர இதுல இழுத்து விடறேன்.

1.)கனவுக்கண்ணன் Dreamzz
2.)கனவுலக கார்த்தி
3.)பின்னூட்டதுல எப்பவுமே ஃபர்ஸ்ட் வர மை ஃபிரண்ட்

நடத்துங்க!!
ஐயம் தி எஸ்கேப்!!! :-D

பார்க்காத அதிசயங்கள் - பாகம் 2 (கடைசி பாகம்)

இந்த கதையின் முதல் பகுதியை படிக்க இங்கே சுட்டவும்!!

கொஞ்ச நேரம் தயங்கி தயங்கி கடைசியா மீட் பண்ணலாம்னு ஒத்துக்கிட்டான். என் வீட்டு பக்கத்துல இருக்கற ஒரு பார்க்குல மீட் பண்ணலாம்னு முடிவு பண்ணோம். அவன் எங்க இருக்கான்னு என் கிட்ட சொல்லவே இல்லை.
“உன் மொபைல் நம்பர் குடு" நான் கேட்டேன்.
“நீ உன் நம்பர் குடு நான் மிஸ்டு கால் தரேன்" அப்படின்னு சொன்னான்.

சாட்லையே என் கைப்பேசி நம்பர டைப் அடிச்சேன். கொஞ்ச நேரம் கழிச்சு அவன் கிட்ட இருந்து ஒரு மிஸ்டு கால் கிடைச்சுது,என் கைப்பேசியில அதை பதிச்சு வெச்சுக்கிட்டேன்.

அந்த சனிக்கிழமை ஒரு 9 மணிக்கா எழுந்தேன். முந்தைய நாள் எங்க மீட்டிங் பத்தி அவன் கிட்ட நியாபகப்படுத்தி இருந்தேன்.ஏதோ மறந்து போனா மாதிரி "நாளைக்கு மீட் பண்லாம்னு ப்ளான் பண்ணி இருக்கோம்ல,ஆமாம்,ஆமாம்" அப்படின்னு மழுப்பி இருந்தான்.
எனக்கு ரொம்ப பிடிச்ச மெரூன் சூட்டிதார் போட்டுக்கிட்டேன். லைட்டா மேக் அப் போட்டுகிட்டு லிப்ஸ்டிக் போட்டுகிட்டேன். அவன கால் பண்ணலாம்னு நிறைய தடவை தோனிச்சு ஆனா ஒரு மாதிரி இருந்ததுன்னு பண்ணலை. அவனே கிளம்பறதுக்கு முன்னாடி கால் பண்ணுவான்னு நினைச்சேன்.அவன் கால் பண்ண அப்புறம்தான் கிளம்பனும் கூட நினச்சேன். ஆனா அவன் கால் பண்ணவே இல்லை. நான் அவன்கூட இது வரைக்கும் பேசினதே இல்லைங்கறதுனால கால் பண்றதுக்கு தயக்கமா இருந்தது. பண்ணி தான் பார்க்கலாமேன்னு அவன் நம்பர் டயல் பண்ணேன்,ஆனா லைன் கனெக்ட் ஆகறதுக்கு முன்னாடி கட் பண்ணிட்டேன். போலாமா வேண்டாமான்னு ஒரே குழப்பமா போயிருச்சு!! இருந்தாலும் ஏதோ ட்ரெஸ் எல்லாம் பண்ணிக்கிட்டோமே,போய்தான் பார்ப்போமேன்னு செருப்பை போட்டுக்கிட்டு கிளம்பிட்டேன்.

எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கற பூங்காவை ஒரு பூங்கான்னு சொல்றத விட ஒரு விளையாட்டு திடல்னு சொல்லலாம். சும்மா பேருக்கு அங்கங்க நாலஞ்சு மரங்கள் இருக்குமே தவிர அது ஒரு பெரிய மைதானம் மாதிரி தான். சுத்தி முள் கம்பி போட்டிருக்கும்,பசங்க எப்போ பாத்தாலும் கிரிக்கெட் விளையாடிட்டு இருப்பாங்க. மைதானத்தை சுத்தி காம்பவுண்ட் ஒட்டினா போல அங்கங்க பென்ச் எல்லாம் போட்டிருப்பாங்க.நான் அன்னிக்கு போன சமயத்துல கூட பசங்க இரண்டு மூனு கோஷ்டிகளா கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தாங்க.என் கிட்ட அவன் முன்னாடியே நான் நீல கலர் கோடு போட்ட சட்டையும்,வெளிர் நீல ஜீன்ஸும் போடுட்டு வருவேன்னு சொல்லி இருந்தான். நானும் அந்த டிரெஸ் போட்டுக்கிட்டு யாராவது இருக்கங்களான்னு பார்த்தேன்,அப்படி யாருமே இல்லை. பேசாம ஒரு பென்ச்ல போய்ட்டு உக்காந்துகிட்டு அவனுக்காக காத்திருக்க ஆரம்பிச்சேன். எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க!! என்னடா ஒரு பொண்ணு தனியா பென்ச்ல உக்காந்துக்கிட்டு இருக்காலேன்னு. எனக்கு ரொம்ப அசிங்கமா போச்சு. ,உடனே கைப்பேசியை எடுத்து அவன் நம்பருக்கு ஒரு கால் போட்டேன். மணி மட்டும் அடிச்சுட்டே இருந்துச்சு ஆனா அவன் எடுக்கவே இல்லை. எனக்கு ஒரே அவமானமா போய்டுச்சு , அழுதுகிட்டே வீட்டுக்கு திரும்பி வந்தேன். ஆனா யாருக்கும் காட்டிக்கல. ரூமுக்கு வந்த அப்புறம் நேர படுக்கையில போய்ட்டு விழுந்துட்டேன். நடுவுல அறை நண்பி ஒருத்தி என்ன ஆச்சுனு கேட்டா. அவ கிட்ட உடம்பு சரியில்லைனு பொய் சொல்லிட்டு கதவ மூடிக்கிட்டேன்.மத்தியாணம் சாப்பாட்டுக்கு கூட போகல.

சாயங்காலம் எழுந்து முகம் கழிவிட்டு ஒரு மாற்றமா இருக்கும்னு வெளியில கிளம்பினேன். என்னையும் அறியாமல் என் கால்கள் பிரவுசிங் சென்டர்தான் போச்சு. மொதல்ல மெசஞ்சர்ல அவன் இருக்கானான்னு தான் பார்த்தேன் ஆனா அவன் இல்லை.
மின் அஞ்சல் பெட்டியில் நிறைய மின் அஞ்சல்கள் வந்திருந்தது. அதுல ஒன்னு அவன் கிட்ட இருந்து வந்திருந்தது. அடிச்சு புடிச்சு அதை திறந்தேன்.

“ஹை!
நீ என் மேல ரொம்ப கோபமா இருப்பேன்னு தெரியும். எனக்கு என்ன தண்டனை தரலாம்னு நீ யோசிக்கறதுக்கு முன்னாடி நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு.
நான் இதுக்கு முன்னாடி நிறைய பேர்கூட நட்பா இருந்திருக்கேன். மொதல்ல சந்திக்கும் போது ரொம்ப அன்பா இருப்பாங்க. அப்புறம் நாளாக நாளாக நெருக்கம் கொறைஞ்சுக்கிட்டே வரும் கடைசியிலே என்னை பார்த்தாலே ஒதுங்கி போகற அளவுக்கு போய்டும். அது ஏன்னு எனக்கு தெரியாது ஆனா என்னை பொருத்த வரைக்கும் எப்பவுமே இப்படித்தான் நடக்குது. ஆரம்பத்துல ரொம்ப நட்பா இருக்கறவங்க எல்லாம் போக போக என்னை சந்திச்ச அப்புறம் என்னை விட்டு விலகி போக ஆரம்பிச்சுடுவாங்க. ஏதோ என்னை பார்த்த உடனே அவங்க மனசுல நினைச்சு வெச்சிருந்த உயர்ந்த இடத்துல இருந்து நான் விழுந்தா மாதிரி.இன்னி வரைக்கும் இப்படிதான் நடந்துட்டு வருது.
உனக்கே தெரியும் நானும் நீயும் தற்செயலா தான் சந்திச்சோம். ஆனா வேற யார்கிட்டேயும் இல்லாத அளவுக்கு எனக்கு உன்னை பிடிச்சிருந்தது. உன் கூட கதை அடிக்க பிடிச்சிருந்தது. நமகுள்ள இருக்கற கணிணி நட்பு எனக்கு சௌகரியமா இருந்தது.
நாம உலகத்துல பல பேர பார்க்கிரோம ஆனா எல்லாருமே நம்ம கூட நெருங்கிய நண்பர்கள் ஆகிடறது இல்லை. அதே போல எல்லோருமே எதிரிகளாவும் ஆகறது இல்லை. நம்ம விருப்பு வெறப்புக்களுக்கு ஏத்தா மாதிரி ஏதாவது தூரத்துல நம்ம நட்பு செட்டில் ஆகிடும். அந்த தூரத்துக்கு மேல நாம நெருங்க ஆசை பட்டோம்னா தொந்தரவுதான்.
நாம இருக்கற பூமி கூட சூரியனை விட்டு சரியான தூரத்துல இருக்கறதுனால தான் மரம்,செடி கொடியெல்லாம் உயிரோட இருக்கு. இப்போ இருக்கறதுக்கு கொஞ்சம் முன்ன பின்ன இருந்துச்சுனா உலகத்துல உயிர்களே இருக்க முடியாது.
எனக்கு என்னமோ நாம் இப்போ இருக்கற தூரம்தான் சரியான தூரமா படுது. இதை விட்டுட்டு நாம பேருக்காக மீட் பண்ணி நெருங்க ஆரம்பிச்சோம்னா நம்ம நட்புக்கு ஒத்துக்காது.

நம்ம மீட் பண்ணோம்னா முன்ன இருக்கறா மாதிரி எப்பவுமே இருக்க முடியாது. உனக்கு நான் குள்ளமா இருக்கறது பிடிக்காம போகலாம்,இல்ல என் குரல் பொம்பள குரல் மாதிரி இருக்கலாம்,எனக்கு வாய் துர்நாற்றம் பிரச்சனையா இருக்கலாம்,இப்படி ஆயிரம் விஷயங்கள் இருக்கலாம். இதனால முன்ன இருந்தா மாதிரி பிரமிப்போ மரியாதையோ இல்லாம போயிடும். எனக்கு உன் கூட இப்போ இருக்கற நட்பு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு,அதை நான் எந்த விதத்துலயும் இழக்க விரும்பல.
நான் சொல்றது எல்லாம் உனக்கு சுத்த பைத்தியக்காரத்தனமா இருக்கலாம். ஆனா நீயே நான் சொல்றத கொஞ்சம் நல்லா யோசிச்சு பாரு.உனக்கே நான் என்ன சொல்ல வரேன்னு புரிய ஆரம்பிக்கும்.நாம இதே மாதிரி நம்ம நட்பை தொடரலாமா இல்லையாங்கறது இப்போ உன் கையில தான் இருக்கு.
அன்புடன்,
விவேக்.
பி கு : பார்க்காத அதிசயங்கள் தான்,உண்மையாகவே அதிசயங்கள்.


நான் சித்த பிரமை பிடிச்சவ மாதிரி மானிடரையே கண் எடுக்காம பார்த்துட்டு இருந்தேன்.

------------------------------------------------------------------------------------------------

“சும்மா சொல்லக்கூடாது,நம்ம ப்ரொக்ராம் அப்படி ஒரு மெயில் அனுப்பும்னு நான் நினைச்சு கூட பார்க்கல"
உலகத்தின் தலைசிறந்த பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி பிரிவின் கேன்டீனில் ப்ரொஃபெஸர் ரிச்சர்டின் குரல் சற்று அதிகமாகவே எதிரொலித்தது.

“நம்பவே முடியலல?? எனக்கும் ரொம்ப ஆச்சரியமா இருந்தது. நம்ம செயற்கை நுண்ணறிவு நிரல் (Artificial intelligence program) மனிதனையே ஏமாற்றக்கூடியது தான்னு எனக்கு தெரியும். அதனால தான் அதை தைரியமா இணைய உலகத்துல பல பெயரோட உலவ விட ஒத்துக்கிட்டேன். இருந்தாலும் அது இவ்வளவு சாமர்த்தியமா செயல்படும்னு நான் யோசிச்சு கூட பார்க்கலை" டாக்டர் எட்வர்ட்ஸின் குரலில் இருந்த பெருமிதம் அவர் குடித்து கொண்டிருந்த காபியின் சர்க்கரையுடன் கலந்துகொண்டு மகிழ்ச்சியில் திளைத்தது.

“மொதல்ல கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சுல, உண்மையாலுமே ஒரு மனிதன் மாதிரி ஆன்லைன் தோற்றங்கள உருவாக்கி,அங்கங்க யாராவது மாட்றாங்களான்னு தேடிக்கிட்டே இருந்துக்கிட்டு, அப்பப்போ தப்பான போன் நம்பர்கான ஏற்பாடு மாதிரியான டுபாக்கூர் வேலையெல்லாம் பண்ணி நம்ம கஷ்டப்பட்டு செஞ்ச பரிசோதனை முயற்சி ஒரு முழு வெற்றி. அந்த பொண்ணு உண்மைனு நம்பி நல்லா ஏமாந்துட்டா!! அந்த அளவுக்கு மனிதற்களே இது ஒரு ப்ரொக்ராம்தான்னு சந்தேகப்படாத அளவுக்கு அதோட அர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் வெகு சிறப்பா செயல் பட்டிருக்கு!!என்னாலயே நம்ப முடியலை" என்று சொல்லிட்டு ரிச்சர்ட் தன் கோப்பையில் இருந்து கொஞ்சம் காவியை உறிஞ்சிக்கொண்டார்.
பிறகு ஏதோ நியாபகம் வந்தவரை போல்"அந்த பொண்ணு இப்போ என்ன நினைச்சுக்கிட்டு இருப்பான்னு நினைக்கறிங்க??” என்று கேட்டார்.

“அவளா?? என்னடா இவன் லூசு மாதிரி ஒளர்ரானேன்னு நினைச்சுட்டு இருப்பா. இனிமே அவன் கூட அவ்வளவா பேச மாட்டா. கொஞ்ச நாளக்கு அப்புறம் மறந்துடுவா!! எதுவா இருந்தாலும் நமக்கு நல்லதுதான்!! நமக்கு என்னவோ நாம சோதனை வெற்றிகரமா முடிஞ்சிருச்சு. இனிமே என்ன ஆனா என்ன?? இவ்வளவு நாள் அவள ஏமாத்தின நம்ம ப்ரொக்ராம் இன்னும் கொஞ்சம் நாள் அவள ஏமாத்தாதா??” என்று சொல்லிக்கொண்டே எட்வர்ட்ஸ் சிரிக்க ஆரம்பித்தார்.

“அதுவும் சரிதான்" என்று சொல்லிக்கொண்டே ரிச்சர்டும் அவருடன் சிரிப்பில் சேர்ந்து கொண்டார்.
------------------------------------------------------------------------------------------------

அதே நேரம் ஹாங் காங் நகரின் ஒரு மூலையில் இருபத்தி ஓரு வயதான எர்வின் தன் கீபோர்ட்டில் ரொம்ப யோசித்து யோசித்து ஏதோ தட்டிக்கொண்டிருந்தான்
“எலிஸா..........நான் உன்னை.....எனக்கு இதை எப்படி சொல்லுறதுன்னு தெரியல...............................நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்னு நினைக்கிறேன் ”

-முற்றும்

பி கு : இது Unseen Wonders எனப்படும் என் ஆங்கில கதையின் தமிழாக்கம்.
முன்னொரு தடவை நான் என் ஆங்கில கதை ஒன்றை தமிழாக்கம் செய்திருந்தேன். ஆனால் அது அவ்வளவாக சோபிக்க வில்லை. இந்த கதையின் தமிழாக்கம் எப்படி அமைந்திருக்கிறது என்ற உங்கள் மேலான கருத்தை தெரிவிக்க முடிந்தால் என் தமிழாக்கம் செய்யும் திறனை வளர்த்துக்கொள்ள வசதியாக இருக்கும்.
நன்றி!! :-)

பார்க்காத அதிசயங்கள் - பாகம் 1

போதும்!! பார்த்த வரைக்கும் போதும். இதுக்கு மேல வெளிநாட்டுல இருக்க வேண்டாம், நீ திரும்பி போகனும்னு சொன்ன போது எனக்கு அப்பாடான்னு இருந்தது. தினமும் களைச்சு போய் வீட்டுக்கு வந்துட்டு நாமலே சமைச்சு சாப்பிடறது மாதிரி கடுப்பு இந்த உலகத்துல வேற எதுவும் இல்லை. ஒரே பிரெட்டும் பன்னும் சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கே செத்து போச்சு. முதல்ல வந்த போது நல்லா தான் இருந்துச்சு ஆனா போக போக வீட்டு நியாபகம் ரொம்ப வர ஆரம்பிச்சிடுச்சு. அதனால இந்தியா திரும்பி போகனும்னு சொன்ன போது ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

திரும்பி வறதுக்கு கொஞ்ச நாள் இருக்கும் போதுதான் விவேக்கோட அறிமுகம் கிடைச்சுது. ஜாவா பத்தி ஏதோ ஒரு சந்தேகம்னு ஒரு இணையதளத்துல கேள்வி கேட்டிருந்தான். என்னோட பிராஜெக்டுல சந்தேகம் வந்த போது எல்லாம் நானே அந்த இணையதளத்துல தான் கேள்வி கேட்டு தெளிஞ்சுக்குவேன். அவன் கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் தெரிஞ்சதால அதுக்கு பதில் சொல்லி இருந்தேன். நான் வழக்கமா இணையத்துல எல்லாம் என் நிஜ பேர உபயோகிக்கறது இல்லை. எல்லா இடத்துலையும் உபயோகிக்கற "சுட்டிப்பெண்" அப்படிங்கற பேருலதான் பதில் போட்டிருந்தேன்.

ஒன்னு இரண்டு நாட்களிலேயே இனையத்துல பல இடங்களில அவன் பேர பார்க்கற சந்தர்ப்பம் ஏற்பட்டுது. நான் எல்லா இடத்துலயும் சுட்டிப்பெண் அப்படிங்கற பேருலயே உலா வந்ததுனால எல்லா இடத்துலயும் அவன் என்னை சுலபமா அடையாளம் கண்டுபிடிச்சிட்டான்.என்னுடைய பதிவ வந்து படிச்சுட்டு கண்டமேனிக்கு பின்னுட்டம் போட்டான். என்னை போலவே அவனுக்கும் செஸ் விளையாட்டு ரொம்ப பிடிக்கும்னு தெரிய வந்தது. நான் அந்த சமயத்துல இந்தியா திரும்பி வந்து இருந்தேன். கொஞ்ச கொஞ்சமா எங்க நட்பு வளர்ந்து நிறைய மின் அஞ்சல் போக்குவரத்து நடக்க ஆரம்பிச்சுது. அப்புறம் திடீர்னு ஒரு நாள்ல இருந்து சாட்டிங் பண்ண ஆரம்பிச்சோம். பொதுவா செஸ் பத்தி,அதில் விளையாடின பெரிய பெரிய ஆட்டக்காரங்க பத்தி,கம்ப்யூட்ட்ர் விளையாடற செஸ் பத்தி அப்ப்டி இப்படினு தோனுறத பத்தி எல்லாம் பேசுவோம். போக போக எங்க சாட்டிங் மணி கணக்கா நடக்க ஆரம்பிச்சது. நான் ஆபீஸ்ல வேலைக்கும் நடுவுல சைட் பிசினஸ் மாதிரி இதையும் ஒரு பொழப்பாவே பண்ணிட்டு இருந்தேன். நம்மளுக்கு பகல் நேரம்னா அவனுக்கு இரவு நேரம் ஆச்சே,ராத்திரி எல்லாம் கண் முழிச்சிட்டு தூங்காம அவனும் என் கூட சாட் பண்ணிட்டு இருப்பான். அவன் கூட என்னத்த பேசறதுன்னு இல்லாம எதையாவது சும்மா பேசிட்டு இருப்பேன். என் நண்பர்கள் யார் கூடையும் இது மாதிரி பேச முடியாது,எல்லோரும் கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் போர் அடிக்குதுன்னு போய்டுவாங்க,ஆனா இவன் என்ன மாதிரியே ஓயாமல் சாட் பண்ணிட்டு இருப்பான். எனக்கு அவன் கூட சாட் பண்ணறது ரொம்ப பிடிச்சிருந்தது. அப்படித்தான் ஒரு நாள் சும்மா கதை அடிச்சிட்டு இருந்த போது அவன் நண்பர்கள் எல்லாம் அவன கேலி பண்றதா சொன்னான்.

சுட்டிப்பெண் : எதுக்கு கேலி பண்றாங்க??

விவேக் : நான் இப்போ எல்லாம் ரொம்ப நேரமா சாட் பண்ணிக்கிட்டூ இருக்கேனாம்.

சுட்டிப்பெண் :ம்ம்ம்

விவேக் : உன் கூட....
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. அவனே தொடர்ந்து டைப் அடிச்சான்.

விவேக் : யார் அந்த பொண்ணு ,எப்ப பார்த்தாலும் சாட் பண்ணிட்டு இருக்க அப்படின்னு என் பிரண்டு கேக்கறான்.
எனக்கு திடீர்னு சரியான கோபம் வந்துச்சு

சுட்டிப்பெண் : நீ யார் கூட பேசினா அவனுக்கு என்னவாம்?? உன் பாட்டி கூட சாட் பண்றேன்னு சொல்லு.

விவேக் :ஹே!! நீ எதுக்கு இவ்வளவு கோப படற. இந்த பசங்க இப்படிதான் ,எல்லாத்துக்கும் கேலி பண்ணிட்டு இருப்பாங்க!! நீ டென்ஷன் ஆகாத


அதுக்கு அப்புறம் நான் அன்னிக்கு அவன் கூட ரொம்ப நேரம் பேசல.அவன் சும்மா எதேச்சையாதான் அவன் நண்பன் சொன்னத சொல்லியிருந்தா மாதிரி தான் இருந்துச்சு,ஆனா எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு.நான் எப்பயாச்சும் பிரவுஸிங் சென்டர் போரேன்னு சொன்னா என் அறைநண்பர்கள் ஏன் நமுட்டு சிரிப்பு சிரிப்பாங்கன்னு எனக்கு இப்போதான் உறைச்சுது.இந்த வயசுல நண்பர்கள் எல்லாம் சும்மாவாச்சும் பசங்களோட ஓட்டுரது சாதாரணமான விஷயம் தான்,இருந்தாலும் இவளுக என்ன இவன் கூட வெச்சு ஓட்டும் போது ரொம்ப எல்லாம் ஓட்ட மாட்டாங்க.ஏதோ நாங்க உண்மையாலுமே லவர்ஸ் மாதிரி கொஞ்சமா ஓட்டிட்டு விட்டிருவாங்க.

நான் விவேக்க ஒரு நண்பனை தவிர வேற எந்த கண்ணோட்டதுலையும் பார்த்தது கிடையாது. அவனுக்கும் எனக்கும் நிறைய விஷயங்கள் ஒத்துப்போச்சு. எனக்கு வாழ்க்கை துணையா வரதுக்கான அத்தனை குணமும் அவன் கிட்ட இருந்துச்சு,இவன விட என்னை நல்லா புரிஞ்சிக்கிட்ட வேற எவனாவது கிடைப்பானான்னு யோசிச்சு பார்த்தா ஒரு பதிலும் கிடைக்கலை.ஒரே குழப்பமா இருந்துச்சு.

அடுத்த தடவை சாட் பண்ணும்போது போன தடவை சாட் பண்ணும்போது பேசின பேச்சு எல்லாம் மறந்துட்டு எப்பவும் போல பேச ஆரம்பிச்சோம்.
இப்படியெ போய்ட்டு இருக்கும்போது ஒரு நாள் திடுதிப்புனு அவனும் இந்தியா வரப்போவதா சொன்னான். எனக்கு ப்ராஜெக்ட் முடிஞ்சு போச்சு,அடுத்த வாரமே இந்தியா வரப்போரேன்னு சொல்லிட்டு இருந்தான்.
“வாவ்!! சூப்பர். நீ இங்க வந்தனா ஒரு நாள் மீட் பண்ணலாம்" என்றேன்.
“ம்ம்ம் யா!! மீட் பண்னலாமே" அப்படின்னு பட்டும் படாத மாதிரி பதில் சொன்னான்.

வந்த உடனே அவனோட கைப்பேசி நம்பர எனக்கு கொடுப்பான்னு நினைச்சேன்,ஆனா அவன் அப்படி எல்லாம் ஒன்னும் செய்யலை. அவனே சொல்லுவான்னு நானும் கேக்காமயே இருந்தான். நம்மலே கேட்டா அலைஞ்சான் மாதிரி இருக்கும்னு எனக்கும் கேக்க தோனலை. வந்ததுக்கு அப்புறம் முன்ன இருந்ததை விட கம்மியான நேரமே தான் சாட் பண்ண முடிஞ்சுது.கேட்டா வேலை அதிகம்,வெளிநாட்டுலனா இருபத்துநாலு மணி நேரமும் கம்ப்யூட்டரே கதியா இருப்போம்,ஆனா இங்க அப்படி இல்லைனு சொன்னான்.
ஒரு நாள் சாட் பண்ணிட்டு இருக்கும்போது எதேச்சையா சொன்னான்.
“உன் கூட ஒரு நாள் செஸ் விளையாடி பார்க்கனும்"
“அதுக்கு மொதல்ல நாம மீட் பண்ணனும்" அப்படின்னு சொன்னேன்.
“பண்ணலாமே............என்னிக்காவது ஒரு நாள் கண்டிப்பா பண்ணலாம்"அப்படின்னு சொன்னான்.
"இந்த வீக்கென்ட் ஓகேவா??” அப்படின்னு கேட்டேன்.

-------தொடரும்

நடந்த இந்த கூத்துக்காகவாவது இந்த பதிவை எப்பவும் மறக்க மாட்டேன்! :-)

வெறுப்பு தவிர்ப்போம், நட்பு வளர்ப்போம்

எதற்கு இந்த வெறுப்பு அச்சம்
எதற்கு இந்த பகைமை கோபம்
இருக்கும் மனிதர் எவரும் சொந்தம்
எதற்கு இங்கே புன்னகை பஞ்சம்

உனக்கு ஒன்று எனக்கு ஒன்று
வேறு வேறான கருத்து உண்டு
பிரிந்து சிந்திக்கும் மனது ஒன்றல்ல
மொழிகள் ஒன்றானாலும் கருத்து இரண்டு

இருந்து போகட்டும்,எண்ணம் பேச்சுக்கள்
பிரிந்து போகட்டும் ஒன்றும் புதிதல்ல
எண்ணம் இரண்டானால் இதயம் சேராதா?
மனிதம் தழைத்தோங்கி நட்பு பூக்காதா??

எல்லாம் ஒன்றாக இருந்தால்தான் நட்புண்டு
ஒன்று குறைந்தாலும் மலராது பூச்செண்டு
என்று இருந்துவிட்டால் அமைதி என்று வரும்?
அழகான இவ்வுலகில் பூப்பொழுது என்று புலரும்??

எண்ணங்கள் எழும்பட்டும் வெறுப்புகள் உமிழாமல்
வண்ணங்கள் விளங்கட்டும் வேற்றுமை விரியாமல்
கண்களிலே சினம் வேண்டாம் ,கருணையில் அது திளைக்கட்டும்
கடும் சொற்கள் கலைந்து விடு,உதட்டில் இனிமை பெருகட்டும்

இரத்தம் சூடேற்றும் இடுகைகள் பார்த்து விட்டால்,
கலங்காது கண் மூடி கண நேரம் பொறுமை கொள்வொம்
சிறிது நேரம் பொறுத்து விட்டு,சீராக சிந்தித்தால்
என் நாடு,எம் மக்கள்,என உணர்ந்து அமைதி கொள்வொம்

தன் நிலையை இழக்காமல், தெளிவுடனே பதில் தரலாம்
மற்றவரின் நிலை புரிந்து,சினங்காத்து நலம் பெறலாம்
பல பேரின் குரல் கேட்போம்,நம் வாதம் முன் வைப்போம்
நம் நோக்கங்கள் ஒன்றேதான், கை கோர்த்து தமிழ் வளர்ப்போம்

இந்த நிலை இங்கு வர
அருள் புரிவாய் எனது இறைவா
உன் இனிய உலகம் வளமை பெற
உதவிடுவாய் என் இறைவா

காதல் ஒரு சிறப்பு பார்வை - பாகம் IV

கடந்த சில பகுதிகளில் நாம காதல்னா என்ன,அது எப்படி உருவாகும், காதல் உருவாகிவிட்டதா என்று எப்படி கண்டுகோள்வது போன்ற விஷயங்களை பற்றி அலசி இருந்தோம். இன்றைக்கு காதலை பற்றி மக்களின் கண்ணோட்டம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

நான் சிறிய வயதில் இருக்கும்பொழுது காதல் என்ற சொல் ஒரு கெட்ட வார்த்தை. அதற்கு அர்த்தம் என்ன என்று தெரியாது ஆனால் காதல் என்றாலே ஆணும் பெண்ணும் மிக நெருங்கி பழகி கொள்வார்கள் ,ஆடி பாடி மகிழ்வார்கள் என்று தொலைக்காட்சியில் பார்போம். அதில் என்ன தப்பு ஏன் அதை தவறான செயல் என்று சொல்கிறார்கள் என்று எல்லாம் யோசித்ததில்லை. ஆனால் இது போன்ற நெருக்கமான காட்சிகள் வந்தால் அலைவரிசை மாற்றும்படி தாய்தந்தை அறிவுருத்துவார்கள். யாராவது நண்பன் ஒருவன் தெரியாத்தனமாக காதல் என்று சொல்லிவிட்டால் டீச்சரிடம் சொல்லிவிடுவேன் என்று பயமுறுத்திக்கொண்டு திரியும் கூட்டங்களை பார்த்திருக்கிறேன்.

பின் உடல் வளர்ச்சி அடைந்த பின் காதல் என்பது ஒரு உல்லாசமான விஷயம். பெண்களிடம் அதிகமாக பழகாமல் ஆண் நண்பர்கள் முட்டுமே எனக்கிருந்த காலம் இது. “The unseen is the most wonderful” என்ற கூற்றுக்கு ஏற்ப எனக்கு பரிச்சயமில்லாத பெண் சகவாசம் எனக்கு ஒரு இன்பத்தின் உச்சம் என்று தோற்றமளித்தது. பின் வேலையில் சேர்ந்த பிறகு பெண் நண்பர்கள் ,ஆண் நண்பர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் நட்பின் சுவை மட்டுமே பெரிதாக தெரிந்தது,இதனால் எனக்கு காதல் மேல் இருந்த பிரமிப்பு குறைந்து அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவ்லே கூடியது.
இந்த நிலையில் நண்பர்கள் பலர் காதல் வலையில் மாட்டிகொண்டதை பார்க்க முடிந்தது.காதலித்து வெற்றி கண்டவர்கள் சிலர், காதலித்து நிராகரிக்கப்பட்டவர்கள் சிலர்,காதலித்து பெற்றோர்கள் ஒத்துக்கொள்ளாததால் வலியில் தவித்த சிலர்,அவர்களை சமாதனபடுத்திய சிலர்,காதலை வெளியிலேயே சொல்லாமல் புழுவாய் தவித்த பலர்.............. இப்படி கோடிக்கணக்கான கதைகளை சினிமாவிலும் நேரிலும் பார்த்து இப்பொழுது காதல் என்பது மகிழ்ச்சியின் உச்சத்தையும்,நரகத்தின் கொடுமை இரண்டையும் தரக்கூடிய பொருளாக தெரிகிறது. முன்னே இருந்தது போல் ஆர்வமும்,ஆசையும் போய் ஒருவித பயமும் சந்தேகமுமே விஞ்சி நிற்கிறது.
மக்களிடையே எனக்கு தெரிந்த வரை காதல் பற்றி ஒரு குழப்பமான மன நிலையே இருந்து வருகிறது. இளைஞர்களை பொருத்த வரையில் பெரும்பாளானவர்கள் காதலுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள் ,அது ஏன் என்று விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். காதல் வயபட்டிருக்கும் ஒரு ஆணோ பெண்ணோ முற்றிலும் வேறு ஒரு உலகத்திற்கு போய் விடுகிறார்கள் என்ற நினைப்பு பல இளைஞர்களிடையே உள்ளது. சினிமா மற்றும் இலக்கியங்களில் விவரிக்கப்படும் இந்த நிலையை பார்த்து இளைஞர்களிடம் காதல் என்றாலே அது ஒரு தேவலோக உணர்வு என்று எண்ணம் மேலோங்கி இருக்கிறது.அதனால் நூற்றுக்கு , தொன்னூற்றொன்பது இளைஞர்களிடையே காதலென்றால் பச்சை கொடி தான்.

மற்ற மக்களிடையே காதல் என்பதை பற்றி ஒரு விசித்திரமான ஒரு கருத்து உண்டு.அதாவது கல்யாணத்திற்கு பின் ஏற்படும் காதல் தெய்வீகமானதென்றும், கல்யாணத்திற்கு முன் ஏற்படும் காதல் ஒழுக்கமற்ற செயல் என்றும் ஒரு எண்ணம்.சில பேர் கல்யாணத்திற்கு பின் கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கத்தை காதல் என்றே கூப்பிட மறுக்கிறார்கள் , காதல் என்றாலே பொறுப்பற்ற இளைஞர்கள் சல்லாபிப்பதற்கான பெயர் என்பது அவர்களின் கருத்து.ஆனால் திரையில் அஜீத்தும்,விஜயும்,சூர்யாவும் துரத்தி துரத்தி காதலித்தால் அதை ஆதரிப்பார்கள். தன் குடும்பத்தில் நடந்தால் மட்டும் அது தாங்கமுடியாத செயல் ஆகிவிடும்.

இந்த விஷயம் ஏன் என்று நாம் புரிந்துகொள்ளக்கூடிய காரணம் உண்டு. காதல் என்ற போர்வையில் பல ஆண்களும் பெண்களும் தன் வாழ்க்கையை பாழாக்கிக்கொள்வதை பார்த்து பார்த்து இவர்கள் இந்த கருத்துகளுக்கு பழக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்கள் என்றால் ஏமாற்றிவிட்டு போகும் பெண்ணுக்காக தேவதாஸாக மாறி குடித்து,பற்றில்லாமல் அலைந்து குட்டிச்சுவராக போவது. பெண்ணாக இருந்தால் ,யாராவது ஏமாற்றி விட்டால் கர்ப்பிணியாக துவளும் அவல நிலைமை. இதெல்லாம் தூசியை போல் தட்டி விட்டு வாழ்க்கையை நடத்தி செல்வது மிகவும் கடினம். பள்ளியிலோ ,கல்லூரியிலோ முதிர்ச்சியற்ற நிலையில் காதலிப்பதாக நினைத்து கொண்டு திரியும் பிள்ளைகளை பெற்றோர்கள் கோபப்படுவது இயற்கை.ஆனால் நன்கு படித்து,வேலைக்கு சென்று, சாமர்த்தியமான இளைஞர்கள் கூட,தாங்கள் காதலிக்கிறோம் என்றால் பெரியவர்கள் அதை சாதாரணமாக பார்ப்பதில்லை.ஒருவித கண்டிப்புடனும்,பயத்துடன் தான் அதை அனுகுகிறார்கள்.
ஆனால் இப்பொழுதெல்லாம் அறிவில் முதிர்ந்து , சுயமாய் சிந்தனை செய்யும் ஒரு ஆணோ,பெண்ணோ தான் காதலிப்பதாக சொன்னால் அதை கண்மூடித்தனமாக எதிர்க்கும் பெற்றொர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. உடன் இருப்போர் நிர்பந்தம் (peer pressure) காரணமாக நீடித்து வரும் ஜாதி,இனம்,அந்தஸ்து போன்ற காரணங்களால் முதலில் தயங்கினாலும்,முன்னை விட குழ்ந்தைகளுக்காக விட்டு கொடுக்கும் பெற்றோர்கள் அதிகமாகி விட்டார்கள். மேலும் மேலும் எல்லார் குடும்பங்களிலும் காதல் திருமணங்கள் ஆக ஆக அதற்கேற்றார்போல் உடன் இருப்போர் நிர்பந்தமும் மாறி கொண்டே போகும். இன்னும் பத்து வருடங்களில் இப்பொழுது இருப்பதை போல் காதல் திருமணங்களை ஆதரிக்க தயங்க வேண்டாம். ஏன் என்றால் எல்லோர் வீட்டிலும் இது போன்ற ஏதாவது நடப்பதால் எவராலும் கேள்வி கேட்க முடியாது.

இது வரை காதலை பற்றி சாதகமான கண்ணோட்டங்களையே பார்த்து வந்தோம் இல்லையா, ஆனால் இதற்கு எதிர்மறையான எண்ணஓட்டங்களும் சமூகத்தில் உண்டு.
சிலர் காதல் என்று ஒரு விஷயமே இந்த உலகத்தில் இல்லை என்று கூறுவார்கள். “ஆயுத எழுத்து" படத்தை பார்த்திருந்தீர்கள் என்றால் இந்த கருத்தை பற்றி சூர்யா,இஷா டியோல் பைக்கில் பேசும் வசங்களை கவனித்திருப்பீர்கள். “காதல் ஒன்னும் கடவுள் இல்லையடா,இந்த எழவு எல்லாம் ஆர்மோன் செய்யும் கலகம் தானடா" என்று பொட்டில் அரைந்தார்போல் சொல்லும் சமீபத்திய சினிமா பாடல் ஒன்று.
இந்த வாதத்தை பற்றி விரிவாக நாம் நமது முந்தைய பகுதிகளில் பார்த்திருக்கிறோம். ஆக, காதல் என்று ஒன்று இல்லவே இல்லை என்றால் அது நல்லதா ,கெட்டதா என்ற பேச்சே எல்லை என்பது இவர்கள் வாதம்.

நம் உடல் உணர்ச்சியை போக்கி கொள்ள வேண்டும் என்றால் அதற்கு பல வழிகள் உண்டு இதற்காக வாழ்க்கை முழுவதும் ஒருவரை கட்டிக்கொண்டு அழ வேண்டுமா என்பது இவர்கள் வாதம்.”ஒரு பாட்டில் சாராயம் வேணும்கறதுக்காக ஒரு சாராய கடையையே எவனாவது வாங்குவானா" என்ற "ஆயுத எழுத்து"(திரும்பவும்) படத்தின் வசனம் தான் நியாபகத்திற்கு வருகிறது. காதல் என்பது எங்களை அடிமைபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு விஷயம் என்று ஆண்கள்,பெண்கள் இரு பாலரிடத்திலும் சிலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக தான் "free sex” எனப்படும் சிந்தாந்தம் மேற்க்கத்திய நாடுகளில் காணப்படுகிறது. நாம் இந்தியாவில் நினைத்து கொண்டிருப்பதை போல் இது பரவலாக இல்லாவிட்டலும்,குடும்ப வாழ்க்கையை விரும்பாததால் நெதர்லாந்து போன்ற சில நாடுகளில் இளைஞர்கள் இல்லாமல் தட்டுபாடு நிலவுகிறது.
பதிவு பெருசாகறது கவனிக்காம ரொம்ப பேசிட்டே போயிட்டேன்.இப்போதைக்கு என் அறுவையை நிறுத்திக்கரேன், அப்புறமா விஷயங்கள் இருக்கும் போது உங்க கிட்ட வரேன். நிறைய பேசலாம்.
என்ன வரட்டா??

காதல் ஒரு சிறப்பு பார்வை - பாகம் 1
காதல் ஒரு சிறப்பு பார்வை - பாகம் 3
காதல் ஒரு சிறப்பு பார்வை - பாகம் 4

Related Posts Widget for Blogs by LinkWithin