அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 5

அமெரிக்காவில் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு போக வேண்டும் என்றால் அதற்கு “Freeway” எனப்படும் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன் படுத்தலாம். இந்த சாலைகளில் போக்குவரத்து விளக்குகள் ஏதும் இருக்காது. இங்கு வண்டியை மெதுவாக ஓட்டி செல்லவோ அல்லது நிற்கவோ கூடாது. குறைந்த பட்சம் 45 மைல்கள் மற்றும் அதிகபட்சமாக 70 மைல்களுக்குள் செல்ல வேண்டும் (இது மிசிகன் மாநிலத்தில் உள்ள விதி, வேக அளவு ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடும்). ஊருக்குள் செல்வதற்கு வெளிவழிகள் (exits) எனப்படும் தனி சாலைகள் பிரிந்து செல்லும்,மற்றும் நெடுஞ்சாலைக்குள் சேருவதற்கு “ramps” எனப்படும் பாதைகளை பயன்படுத்த வேண்டும் . கூடவும் தடப்போக்குவரத்து (lane traffic) இந்த சாலைகளில் மிக கண்டிப்பாக பின்பற்றப்படும். டிட்ராய்டிலிருந்து ஆன் ஆர்பருக்கு சென்று கொண்டிருந்த எங்கள் வாகனம் I-94 எனும் இதுபோன்ற நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அங்கிருந்து 177 எனப்படும் வெளிவழியை எடுத்து ஆன் ஆர்பருக்குள் நுழைந்தோம்.

டிட்ராய்ட் நகரத்தில் இருந்து சுமார் 45 மைல்கள் தொலைவில் இருக்கும் ஆன் ஆர்பர் (Ann Arbor) , 1824 ஆம் வருடம் ஜான் அல்லென்,எலிசா ரம்சி ஆகிய இரு நில பேர வல்லுனர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. (Ann) எனப்படும் அவர்களின் மனைவிகளின் பெயரையும் (அவர்கள் மனைவிமார்கள் இருவரின் பெயரும் Ann-தான்), இங்கு பரவலாக வளரும் burr oak மரங்களின் பெயரையும் சேர்த்து இந்த ஊருக்கு Ann Arbor என்று பெயர் வைத்து விட்டார்கள். 1837-ஆம் வருடம் டிட்ராய்டில் இயங்கிக்கொண்டு இருந்த மிசிகன் பல்கலைகழகம் இங்கு மாற்றப்பட்டது. அப்பொழுதிலிருந்து இந்த ஊருக்கு எல்லாமே இந்த பல்கலைகழகம்தான். ஊரில் பெரிதாக வேறு ஒன்றும் கிடையாது!!! சென்னையில் உள்ள மாம்பலத்தையும், சைதாப்பேட்டையும் சேர்த்தால் அதுதான் இந்த ஊரின் மொத்த நிலப்பரப்பாக இருக்கும் என நினைக்கிறேன். 2000 ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி இந்த ஊரின் மொத்த மக்கட்தொகை 1,14,024.

ஒரு ஒப்பீடுக்காக பார்த்தோம் என்றால் சென்னையின் மக்கட்தொகை குத்து மதிப்பாக நாற்பது லட்சம் இருக்கும்.
ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தபின் பசி பிடுங்கித்தின்றது. நம் ஊராக இருந்தால் பத்தடிக்கு ஒரு டீ கடை அல்லது உணவகம் இருக்குமல்லவா?? ஆனால் இங்கு நிலைமையே தலை கீழ். எல்லோரிடமும் கண்டிப்பாக கார் இருக்கும் என்று முழுமையாக அனுமானம் பண்ணிக்கொண்டே இங்கு உள்ள ஊர்களை எல்லாம் கட்டி இருக்கிறார்கள் போல இருக்கிறது.அதற்கு ஏற்றார்போல் இங்கு எல்லோரிடமும் கார் இருப்பது தான் வியப்பு. வெளியே பார்த்தால் ஒருவர் கூட நடந்து செல்வதில்லை.எங்குமே கார் இல்லாமல் செல்ல முடியாது. அரசு போக்குவரத்து பேருந்துகள் பேருக்கு அங்கொன்று இங்கொன்றுமாய் ஓடிக்கொண்டு இருக்கும்,ஆனால் அதனால் பெரிதாக ஒன்றும் பயன் இல்லை. டவுண்டவுன் (Downtown) எனப்படும் முக்கியமான பகுதியை விட்டால் எல்லா வளாகங்களும் எங்கெங்கோ தள்ளி தள்ளி இருக்கும். எல்லா கடை மற்றும் அலுவலகங்களும் நல்ல பெரிதாக மற்றும் பூதாகாரமான வாகன நிறுத்துமிடங்களோடு (car parking) இருக்கும் . எல்லோரும் போக்குவரத்து விதிகளை தவறாமல் கடை பிடிக்கிறார்கள்.
எனக்கு என்னமோ மக்கள் செய்யும் பெரும்பாலான விஷயங்கள் எல்லாமே மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொருத்தே உள்ளது என்று ஒரு நம்பிக்கை. ஆங்கிலத்தில் இதற்கு உடன் இருப்போர் நிர்பந்தம் (Peer pressure) என்று ஒரு பெயர் உள்ளது. நம் ஊரில் யாரும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில்லை அதனால் பின் பற்ற வேண்டும் என்று நினைப்பவருக்கும் செய்ய தோன்றுவதில்லை. அப்படி செய்தாலும் மற்றவர் எல்லோரும் ஒரு மாதிரியாகவும் இவர் வேறு மாதிரியும் செய்து கொண்டு இருப்பார்,நிச்சயம் எங்கேயாவது ஏதாவது இடிக்கும். ஆன் ஆர்பரில் மக்கள் எல்லோரும் போக்குவரத்து விதிகளை கடை பிடிப்பதற்கும் உடன் இருப்போர் நிர்பந்தம் தான் காரணம்!!

நம் ஊரில் விதிகள் கடைப்பிடிப்பது என்பது சாதாரணமாக அனைவரும் செய்ய கூடிய விஷயமாக ஆகும் வரை நம்மை போன்ற சில இளைஞர்கள்தான் இந்த பழக்கம் பெரும்பான்மையாக்க விழைய வேண்டும்.இது போக்குவரத்துக்கு மட்டுமில்லாமல் லஞ்சம்,இன - மொழி வேறுபாடு,சுத்தம் சுகாதாரம் எல்லாவற்றிற்கும் பொருந்தும்.
சரி சரி என் சமூக அக்கறை பிரசங்கத்தை நிறுத்து கொள்கிறேன். ஹோட்டலிலிருந்து பசியோடு கிளம்பினேனே ,அப்புறம் என்ன ஆயிற்று தெரியுமா??நானும் என் நண்பன் ஒருவனும் சாப்பிடுவதற்கு இடம் தேடி இங்கும் அங்கும் அலைந்து திரிந்தோம்.ஒரு 30-40 நிமிடங்கள் குளிரில் அலைந்த பிறகு வெண்டீஸ் (Wendy’s) எனப்படும் ஒரு உணவகத்துக்குள் ஒதுங்கினோம்.அங்கு இருந்த ஒரு பலகையில் சைவ உணவு ஏதாவது இருக்கிறதா என்று கண்ணில் விளக்கெண்ணையை விட்டு தேடி கொண்டிருந்தேன். ஆழ்ந்த ஆராய்சிக்கு பின் “simple classic ஏதோ” வாங்களாம் என்று முடிவு செய்தேன். அங்கு நின்றிருந்த பெண்மணியிடம் சென்று எனக்கு அந்த “சிம்பிள் க்லாசிக் சமாசாரம்” ஒன்று தரவும் என்று சொல்லி விட்டு,”இது சைவ உணவு தானே??” என்றேன்!! நான் ஏதோ வேற்றுகிரக மொழியில் பேசும் ஜந்து போல,என்னை பார்த்து அந்த பெண்மணி திரு திரு என முழித்தாள்!! “அட கடவுளே!!!” என நினைத்துக்கொண்டு எனக்கு தெரிந்த எல்லா அமெரிக்க உச்சரிப்பையும் வரவழைத்து கொண்டு ஒரு 5-10 நிமிடங்கள் வெவ்வேறு ஸ்வரங்களில் சைவ உணவு வேண்டும் என்று பேசி/பாடி பார்த்தேன். அவள் புரிந்து கொண்டுதாகவே தெரியவில்லை. கடைசியில் “அம்மா தாயே,மாமிசம் இல்லாமல் (no meat)ஏதாவது கொடம்மா!!” என்று ஒரு வழியாக மன்றாடிவிட்டு நகர்ந்தேன்!!

சிறிது நேரத்திற்கு பிறகு என்னிடம் ஒரு பொட்டலம் வழங்கப்பட்டது. அதில் இரண்டு பன்னிற்கு நடுவில் கொஞ்சம் சீஸ், சிறிது முட்டைகோஸ் ,ஏதோ இலை தழைகள் வைத்து கொடுத்திருந்தார்கள். அதை தவிர ஏதோ வறுத்த பதார்த்தம் தென்பட்டது!!! அந்த பதார்த்தம் என்னவென்றே தெரியவில்லை, ஆனால் எனக்கு அதை பார்த்தாலே ஏதோ குமட்டிக்கொண்டு வந்தது. திரும்பி அந்த பெண்மணியிடம் சென்றால் பயனில்லை என்று தெரிந்ததால் அதை என்னுடைய அசைவ நண்பரிடம் கொடுத்து விட்டு ,மிச்ச பர்கரை (burger) எப்படியோ முழுங்கி தொலைத்தேன்!! என்னடா அமெரிக்கா இது!! கனவுகள் எல்லாம் நனவாகும் என்று சொல்கிறார்கள்,ஒரு வேலை சோற்றுக்கு ததிகனத்தோம் போட வேண்டி இருக்கிறதே என்று என் நண்பரிடம் புலம்பி தீர்த்தேன்.

சுவாரஸ்யமான விஷயம் என்ன என்றால் என் மொத்த அமெரிக்க வாசத்திலேயே நான் சாப்பிட்ட மோசமான உணவு அதுதான்!! அதன் பிறகு எல்லாம் வீட்டிலேயே சமைக்கும் உணவுதான் (இங்கு வந்த அப்புறம்தான் சமைக்கவே பழகிக்கொண்டேன்). வெளியேவும் சைவ உணவு தேடி பிடிக்கும் லாவகம் வந்துவிட்டது!! இங்குள்ள உணவகங்களிலேயே சைவ பர்கர் (veg burger) கிடக்கும் ஒரே இடம் பர்கர் கிங் (Burger King) எனப்படும் உணவகம்தான். எங்கு சென்றாலும் சைவ பீட்சா (veg pizza) பரவலாக கிடைக்ககூடிய சைவ உணவு. இது போன்ற சில பல ஞானோதயங்களை இறைவன் அவ்வப்போது அருள்வதால் சாப்பாட்டிற்கு இன்று வரை குறை இல்லை.

இது போன்ற பல புதுசு புதுசான , தினுசு தினுசான விஷயங்கள் இங்கு வந்த புதுசில் நடந்தது, இப்போ கூட அங்கொன்றும் இங்கொன்றுமாய் சுவையான நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அதிவேகமாக காரில் சென்று மாமாவிடம் மாட்டிக்கொண்டது, சுதந்திர தேவி சிலை உட்பட ந்யூயார்க் நகரத்தில் சுற்றி திரிந்தது,மேக மூட்டமான ஒரு மாலை நேரத்தில் நயாகரா நீர்விழுச்சியின் அருகில் ஒரு பூங்காவில் கால நேரம் தெரியாமல் கண் மூடி புன்னகை பூத்து கிடந்தது,பாண்டி பஜாரை போன்று சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த சிகாகோவின் திவான் தெருவில் உள்ள ஒரு உடுப்பி ஹோட்டலில் சுட சுட மசால் தோசையை கபளீகரம் செய்தது, ந்யூ ஜெர்சியில் இருந்த ஆந்திர உணவகம் ஒன்றில் நம் மெட்ராஸ் காபியை ருசித்து குடித்தது,ஒன்றரை ரெண்டு மாதங்கள் அறை நண்பர்கள் கூட இல்லாமல் தனிமையின் இனிமையை புரிந்துகொண்டது ...............
அப்பப்பா!!! எங்கு ஆரம்பித்து எங்கு முடிக்க!!! எழுத வேண்டும் என்றால் எழுதிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்!! இருந்தாலும் இந்த பதிவின் ஆரம்பத்திற்கு ஒரு பொருத்தமான முடிவாக இருக்கவேண்டுமே என்பதற்காக இந்த இடுகையோடு இந்த தொடரை முடிக்கிறேன்.
தொடரை தொடர்ந்து படித்த அன்பர்களுக்கும் ,படித்து விட்டு பின்னூட்டங்கள் இட்ட நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த பதிவிற்கு பின் என் கதைகள் சிலவற்றை மொழி பெயர்க்கலாம் என்று திட்டமிட்டுள்ளேன். இன்று போல் என்றும் உங்கள் அன்பும் ஆதரவும் இருக்கும் என்ற நம்பிக்கையுடனும் , அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து விடை பெரும் உங்கள் இனிய நண்பன்.

CVR

-- முற்றும்


அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - முன்னுரை
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 1
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 2
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 3
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 4

17 comments:

இலவசக்கொத்தனார் said...

அமெரிக்கா வரும் ஒரு புதியவர் பார்வையில் நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

அந்த Peer Pressure பற்றிய உங்கள் கருத்தைப் படிக்கும் பொழுது எனக்கு இந்த சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது. இரவு பன்னிரெண்டு மணியளவில் சிக்னல்கள் வேலை செய்தாலும் நம்ம ஊரில் யாரும் கண்டுகொள்வது இல்லை. ஆனால் நான் அவற்றை மதித்து நிற்கும் பொழுது, இவன் ஏண்டா நிற்கிறான், ஒரு வேளை போலீஸ் பிடிக்கிறார்களோ என என் பின் வரும் அனைவரும் நின்று விடுவார்கள். பல முறை நடந்த விஷயம் இது. அதனால் நீங்கள் சொல்வது சரிதான்.

அப்புறம் பர்கர் கிங் மட்டுமல்ல பல மெக்டொனாட்ல்ட் கடைகளிலும் வெஜ் பர்கர்கள் கிடைக்கும்.

அடுத்த முறை நியூ ஜெர்ஸி வரும் பொழுது சொல்லுங்கள். நம்ம வீட்டில் உங்களுக்கு விருந்து வைத்து விடலாம்! :))

நாமக்கல் சிபி said...

அருமை எழுதியிருக்கிறீங்க!!!

நீங்க போன இடங்களை பற்றியும் எழுதலாமே!!! எங்களையும் கூப்பிட்டு போன மாதிரி இருக்கும் :-)

உங்களோட கதைகளையும் சீக்கிரம் எதிர்பார்க்கிறோம்!!!

CVR said...

எடிசன் என்பது இந்தியர்கள் நிறம்பி வழியும் இடம் அல்லவா!!

இனிமே எப்பவாவது ந்யூ ஜெர்சி வந்தா கண்டிப்பா விருந்துக்கு வந்திடறேன்!! :)

CVR said...

நன்றி பாலாஜி!!
கதைகள் தமிழாக்கம் நன்றாக வருகிறதா என்று பார்ப்போம்!! :)

aravindaan said...

In downtown Madras cafe resturant is good one. In USA thats only resturant have test like madras food.. rasam, vathakuzhambu is good.. my favourite place.

இலவசக்கொத்தனார் said...

அடப்பாவி, என்னென்னமோ எல்லாம் எழுதி இருந்தேன், விருந்துன்னு சொன்ன உடனே அதெல்லாம் கண்ணுலையே படலையா? இருக்கட்டும்.

ஆமாம் எடிஸன் என்பது இந்தியாவின் 29ஆவது மாநிலம்தான். இங்கு வரும் அமெரிக்கர்கள் விரைவில் விசா வாங்கி வரும் நிலமைதான்!

அப்புறம் அது 'நிரம்பி' நிறம்பி இல்லை! :)

CVR said...

நீங்கள் "மெட்ராஸ் மசாலா"வைத்தானே சொல்கிறீர்கள்??
அதுதான் எனக்கும் மிகப்பிடித்த இந்திய உணவகம்!! அங்கு கிடைக்கும் ரசத்தை போல வேறு எங்கும் ருசித்ததில்லை!!
சரி நீங்களும் ஆன் ஆர்பரில்தான் இருக்கிறீர்களா???
மிக்க சந்தோஷம்!!!! :)

இலவசக்கொத்தனார் said...

அரவிந்தன் அண்ணா, அது எந்த ஊரில் இருக்கும் டவுண்டவுண்(தமிழில் Downtown படும் பாடை பாருங்கள்! Down Down என்பது போல் இருக்கிறது!) எனச் சொன்னால் நல்லா இருக்குமே.
நீங்கள் சொல்வது போல் நிலமை அவ்வளவு மோசம் எல்லாம் இல்லை. நியூயார்க் நியூஜெர்ஸி ஏரியாவில் அநேக தென்னிந்திய உணவு விடுதிகள் நன்றாகவே இருக்கின்றன. வேணுமானால் சொல்லுங்கள். லிஸ்ட் தருகிறேன்.

CVR said...

மன்னிக்கனும் கொத்தனாரே!!
சோறுனு பாத்த உடனே பத்தும் பறந்து போச்சு!! :P
இந்த peer pressure சம்பந்தமா பெங்களூரில் நான் பார்த்த வேறொரு சுவையான சம்பவம் உள்ளது,அதெல்லாம் விலா வாரியா பேச வேண்டிய விஷயம்,அதான் இங்க ஆரம்பிக்கல!! :)

CVR said...

கொத்தனாரே
அரவிந்தன் சொல்ற இடம் ஆன் ஆர்பர்ல இருக்கு ஜெர்சில இல்ல!!
ஜெர்சி தான் இந்தியாவின் 29-ஆவது மாநிலம் ஆச்சே!! :)

இலவசக்கொத்தனார் said...

//In USA thats only resturant have test like madras food.. // இப்படிச் சொன்னாரா அதான் டென்ஷனாயிட்டேன். என்னதான் 29ஆவது மாநிலமாகவே இருந்தாலும் இதுவும் யூ.எஸ்ஸில்தானே இருக்கு. :-X

//இந்த peer pressure சம்பந்தமா பெங்களூரில் நான் பார்த்த வேறொரு சுவையான சம்பவம் உள்ளது,அதெல்லாம் விலா வாரியா பேச வேண்டிய விஷயம்,//

ஆஹா! முற்றும் போட்டாச்சே அடுத்த பதிவுக்கு என்னடா மேட்டர் அப்படின்னு தேடிக்கிட்டு இருந்த ஆளுக்கு மேட்டர் கிடைச்சாச்சு போல! :))

CVR said...

சொல்றதுக்கு மேட்டரா இல்ல,எழுததான் நேரம் இல்ல!
தலைவா உங்க email address வேனும்னா கொடுங்க,தனியா chat பண்ணலாம்!! இந்த பதிவ அதுக்காக உபயோகிக்க வேண்டாமே!! :)

Anonymous said...

நான் இப்போ இருக்கிறது சாக்கிரமெண்டோ. ADP project க்கு ஆன் ஆர்பர் வந்தேன். நீயுஜெர்சியிலும் சாப்பிட்டுருக்கேன் ஆனால் மாதாராஸ் மாசாலா போல் இல்லை. அப்பாரம் சரவனாபவன். ஒகே.

கோபிநாத் said...

அருமையா எழுதிரிக்கிங்க..CVR

சரி..சரி படுத்துகிடந்தது போதும்

கதை எல்லாம் வேறயிருக்கில்ல...

சிக்கிரம் போங்க...

CVR said...

நன்றி கோபிநாத்,
என் கதையோட மொழிபெயர்ப்போடு விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

sravan said...

maapillai, un tamil chance-e illama poitruku da. keep writin, it was gud 2 read tiz part.

andha varutha padhartham mostly cutlet fry-a irukum nu ninaikiren. nee edho fish fry range-ku hype kuduthuta :P

keep smilin,
sravan

CVR said...

ரொம்ப நன்றி மச்சி!!
நீ சொல்றா மாதிரி அது எதாவது சப்ப மேட்டரா தான் இருக்கும்னு நினைக்கிறேன்,இருந்தாலும் அப்போ எனக்கு அந்த பொம்பளை மேல நம்பிக்கை இல்லாததுனால சந்தேகமாவே இருந்துச்சு!! :)

Related Posts Widget for Blogs by LinkWithin