சாப்ட்வேர் கனவுகளும் நிஜங்களும்

வாழ்க்கை எப்படி எல்லாம் மாறி போகுதுன்னு சில சமயம் நினைத்து பார்த்தால் சிரிப்புதாங்க வருது. நான் எப்பவுமே ஏதாவது கனவுகளிலே கற்பனைகளிலே மூழ்கியேதான் இருப்பேன்.அதுவும் நான் காலேஜ் படிக்கர சமயத்துல எல்லாம் வேலைக்கு சேர்ந்த அப்பறமா எப்படி எல்லாம் இருக்கனும் எப்படி எல்லாம் இருக்கும் அப்படின்னு நிறைய யோசிப்பேன் ,கனவுகள் கானுவேன்.
அப்போ எல்லாம் சாப்ட்வேர் வேலைனா எனக்கு என்ன கனவுன்னா,மணி கணக்கா சும்மா ஏதாவது கீபோர்ட்ல தட்டிட்டே இருக்கனும்,ஆயிர்க்கனகான வரிகளிலே கோடு எழுதி தள்ளனும்,கன்னா பின்னானு யோசிச்சி உருப்படியான சாப்ட்வேர் எல்லாம் உருவாக்கனும்னு அப்படின்னு கனவு கண்டுக்கிட்டு இருந்தேன்.

உருவாக்கம்!!! அதுதான் நான் பண்ண விரும்பியது. எல்லோருக்கும் உபயோகமான விஷயங்களை பண்ணனும், கணிணிகளை மக்கள் சுலபமா பயன்படுத்தரா மாதிரி விஷயங்கள உருவாக்கனும். இது மாதிரி ஒரு விஷயம் இருந்தா நல்லா இருக்கும்னு எனக்கு எதெல்லாம் தோனுதோ அதெல்லாம் நானே உருவாக்கலாம் அப்படின்னு எல்லாம் யோசிச்சிட்டு இருப்பேன்.

நாம வழக்கமா உபயோகபடுத்தர ஒரு சின்ன ஒரு வலை கருவியில இருந்து இயக்குத்தளம் (operating system) வரைக்கும் என் கனவுகள் நீண்டுக்கிட்டே போகும். உருவாக்கனும்!!! அதுதான் நான் பண்ணனும்னு நெனைச்சது. மக்கள் கண்கள் விரிந்து தன்னை அறியாமல் புன்னகைக்கரா மாதிரி கலை நுனுக்கமான விஷயங்களை உருவாக்கனும் (flash movies மாதிரி) , மக்கள் கவலைகளை மறக்கரா மாதிரி விஷயங்களை பண்ணனும், கணிணியின் பயன்பாடுகளை உரக்க பறைசாற்றும் படைப்புகளை பண்ணனும், மக்களை பூரிக்க வெச்சு தகவல் தொழில்நுட்பத்தின் மந்திரத்துல மயக்க வெக்கரா மாதிரி விஷயங்கள பண்ணனும்னு நினைத்தேன். என் உருவாக்கங்களால் மக்களை சந்தோஷப்படுத்தனும்னு நினைப்பேன்.எனக்கு
இப்போ இந்த துறையில் மூன்று வருடங்களுக்கு மேல் பணியாற்றிய பிறகு கொஞ்சம் திரும்பி பார்க்கும் போது இதுல எத்தனை கனவுகள் நனவாகி இருக்குன்னு யோசிச்சு பார்த்தால் சிரிப்புதான் வருது.

ஆரம்பம் எல்லாம் ஒழுங்காதான் இருந்தா மாதிரி இருந்துச்சு. பெங்களுருல இந்தியாவிலேயே மிக புகழ் பெற்ற ஒரு தகவல் தொழில்நுட்ப கம்பெனியிலதான் வேலைக்கு சேர்ந்தேன். அகா புடிச்சாலும் புடிச்சோம் நல்ல புளியங்கொம்பாதான் புடிச்சிருக்கோம்,இனிமே நம்ம இஷ்டப்படி சாப்ட்வேர் உருவாக்கங்களா உருவாக்கித்தள்ளிக்கிட்டே இருக்கலாம்னு நினைத்தேன். மக்களை நேரடியா போய் சேரும் ஜனரஞ்சகமான பொருட்கள் பண்ணனும்னு எனக்கு ரொம்ப ஆவல் (அதாவது Google,Youtube,Meebo,Flickr/Picassa மாதிரியான உருவாக்கங்கள்)
ஆனா B2B(Business to business) என்று சொல்லப்படும் அலுவல் சார்ந்த தொழில் அமைப்பு பற்றி எல்லாம் நான் அவ்வளவாய் அறிந்திருக்கவில்லை.. அதாவது ஒரு சின்ன கம்பெனியில் ஒரு சில நூறு அல்லது அதற்கும் கம்மியான மக்கள் பயன்படுத்தும் மென்பொருட்கள் எல்லாம் நான் யோசிச்சே பார்க்காத விஷயங்கள்.
இதெல்லாத்தையும் விட சப்போர்ட் (support) எனப்படும் மென்பொருள் மெகானிக் வேலை பற்றி நான் கேள்வி பட்டிருக்கவில்லை.

இப்படிப்பட்ட சப்போர்ட் மற்றும் பராமரிப்பு வேளைகள்தான் இந்திய தகவல் தொழில்நுட்ப கம்பெனிகளின் முக்கியமான தொழில் என்று எனக்கு என்றைக்குமே தோன்றியது இல்லை. ஒட்டு போடுவது, பயன்பாடுகளை (applications) “எப்படியாவது” ஓடவைப்பது மட்டுமே இந்த கம்பெனிகளின் முக்கியமான வேலைகள் என்று நான் அறிந்திருக்கவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளாக நான் செய்து வந்திருக்கும் வேளைகளை இவ்வாறாக பிரிக்கலாம். பல பிரிவினருடன் பேசி வேலையை முடிப்பது, உடன் வேலைசெய்பவரிடம் தாஜா செய்து வேலை வாங்குவது, உபயோகமே இல்லாத ஆயிரக்கணகான எக்செல் கோப்புகளை நிரப்புவது, ப்ராசஸ் (process) எனும் பெயரால் கோடிக்கணக்கான மணிகள் உப்பு சப்பில்லாத சொத்தை வேலைகள் செய்வது, வெளிநாட்டில் இருந்தால் இந்தியாவில் இருக்கும் சக பணியாளரிடம்,இந்தியாவில் இருந்தால் வெளிநாட்டில் இருக்கும் சக பணியாளரிடமும் வேலை நிமித்தமாக சண்டை போடுவது, திடீரென்று கொடுக்கப்படும் உன்றுமே தெரியாத வேலைகளை வைத்துக்கொண்டு திரு திரு என முழிப்பது, ஆயிரம் வேலைகள் வந்து குவிந்த வண்ணம் கிடக்க, எதை எடுப்பது,எதை விடுப்பது என தெரியாமல் திக்கு முக்காடுவது, அவைகளை முக்கியத்துவத்திற்கு ஏற்றார்போல் வரிசை படுத்துவது, முக்கியத்துவம் திடீரென்று மாற்றப்பட அவற்றை மறுபடியும் வரிசை படுத்துவது, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இதில் கோட் எழுதுவதற்கான சந்தர்ப்பங்கள் எவ்வளவு என்று கேட்டால் மிகவும் சொற்பமே. சிறிதும் கலைத்திறனை வெளிக்கொனற முடியாத வேலை வகைகள். இதெல்லாம் கூட பரவாயில்லை என்று இருந்திருப்பேன்,ஆனால் எனக்கு சுத்தமாக பிடிக்காத இன்னொன்றும் நான் எதிர்கொள்ள நேரிட்டது.
இரவு வேளைகளில் வேலை பார்ப்பது.

இந்த கம்பெனியில் சேருவதற்கு முன்னாலே அமெரிக்காவில் இருப்பவருக்கு கம்ப்யூட்டர் பழுதாகிவிட்டால் தொலைபேசி வழியே உதவும் தொழில்நுட்ப உதவி குழு ஒன்றில் ஓரிறு மாதங்கள் பணியாற்றி இருந்தேன். அது இரவு வேளைகளில் பணியாற்றும் வேலைதான். அப்பொழுதே இரவில் பணியாற்றுவது நமக்கு சரி பட்டு வராது என்று தெரிந்துவிட்டது.

ஆனால் இந்த சப்போர்ட் தொழில் வந்தால் இரவில் வேலை செய்யும் கட்டாயங்கள் உண்டு. முடிந்த வரை வெளிநட்டில் வேலை செய்வோரின் எண்ணிக்கையை குறைத்து, அங்கு பகல் நேரமாய் இருக்கும்போது நமது இரவு நேரங்களில் அந்த வேலையை செய்தால்தான் இந்த நிறுவனங்கள் காசு சேர்க்க முடியும்.
அவர்களுக்கும் வேறு வழி கிடையாது. தகவல் தொழில்நுட்பத்தொழில் மிகவும் போட்டி நிறைந்த ஒரு சந்தை. வேலை முடிக்கும் நேரத்தை குறைத்துக்கொண்டே போக வேண்டும், தேவையான ஆட்கள் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டே போக வேண்டும் அப்பொழுது தான் லாபத்தை கூட்டி இந்த சந்தையில் நிலைக்க முடியும். இதனால் இரவில் வர வேண்டிய கட்டாயம் ஏற்படுமா?? வேலை பளு காரணமாக வேலை செய்பவருக்கு மன உளைச்சல் அதிகமாகுமா?? கஷ்டம்தான்!!! ஆனால் ஒன்றும் செய்ய முடியாது.
நீங்கள் செய்ய வில்லை என்றால் வேறு ஒரு கம்பெனி ஆர்டரை தட்டிக்கொண்டு போய்விடும்.இந்த பைத்தியக்காரத்தனமான ஓட்டப்பந்தயத்தில் எதையும் விட்டு கொடுக்க முடியாது. போட்டி கம்பெனி தொழிலாளருக்கு என்னென்ன சலுகைகள் அளிக்கிறதோ அதற்கு மேலாக பெரிதாக ஒன்றும் கொடுக்க முடியாது . கொடுத்தால் போட்டி விளிம்பை விட்டுக்கொடுக்க வேண்டிய அபாயத்திற்கு இந்த கம்பெனிகள் தள்ளப்பட்டு விடும்.

இந்த கம்பெனிகளுக்கு ஆர்டரை தரும் வெளிநாட்டு கம்பெனிகளுக்கும் இதே போன்ற நிலைதான்.ஒரு வேலையை ஒரு அமெரிக்க கம்பெனி செய்வதற்கு 100 டாலர்கள் ஆகும்,அதே வேலையை ஒரு இந்திய கம்பெனி 40 டாலரில் முடிக்கும் என்றால் கண்டிப்பாக இந்திய கம்பெனிக்கு தான் கொடுக்க தோன்றும். அதில் மிச்சமாகும் 60 டாலரை அவன் கம்பெனியின் இதர வளர்ச்சி பணிகளில் செலவிடுவான். அதே இந்திய கம்பெனிகளில் ஒரு கம்பெனி 40 டாலருக்கு செய்கிறது என்றும்,மற்றொன்று 35 டாலருக்கு செய்கிறது என்றால் அவன் 35 டாலர் கம்பெனியிடம்தான் கொடுத்தாக வேண்டிய சூழ்நிலை . இல்லையென்றால் அவன் அவனுடைய போட்டி கம்பெனியிடம் தோற்று விடுவான்!!! இங்கே யாரையும் குறை சொல்ல முடியாது. எல்லோருக்கும் அவர்கள் அவர்களின் நிர்பந்தங்கள்,பிரச்சினைகள்,
அப்பொழுது எங்கள் கனவுகளுக்கு யார் பதில் சொல்வது?? என்னை போன்று எதிர்பார்ப்புகளுடம் வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நிலைமை தான் என்ன?? எதையாவது உருவாக்க வேண்டும் என்று எங்களின் தாகம் என்ன ஆவது?
இது மாதிரி பல கேள்விகளுக்கு எனக்கு இன்னைக்கு வரை சரியான பதில் இல்லை


இத்தனையும் சொன்ன பிறகு இந்த துறையால் நான் பெற்ற நன்மைகளை பற்றி குறிப்பிடவில்லை என்றால் நான் நன்றிகெட்டவனாகி விடுவேன். தீவிரமான வேலை சூழ்நிலைகளால் நான் முன்னைவிட பொறுமையாய் யோசிக்கும் மனநிலை பெற்றேன். நிறைய பேசி பேசி என் பேச்சாற்றல் கொஞ்சம் வளர்ந்து விட்டது. பெங்களுர் எனும் ஒரு வேற்று நகரில் தங்கி வேலை செய்யும் அனுபவம் கிடைத்து. உலகத்தின் முக்கியமான நாடுகளில் ஒன்றிற்கு சென்று தங்கி வாழும் அனுபவம் கிடைத்தது. எங்கள் குடும்ப பொருளாதார நிலைமை மேம்பட்டது. எல்லவற்றிற்கும் மேலாக என்னால் என் பெற்றோருக்கு முன்னை விட சிறப்பான வாழ்க்கை நிலையை என்னால் அளிக்க முடிந்தது. மற்ற எல்லாவற்றையும் விட கடைசி விஷயம் தான் எனக்கு மிகவும் திருப்தி அளிக்கும் விஷயம்.

ஆனால் ஏதாவது கலைத்திறன் வாய்ந்த விஷயங்களை உருவாக்கவேண்டும் என்ற என் கனவுகளை என்னால் மறக்க முடியவில்லை. பல சமயங்களில் , என் திறைமைகள் மற்றும் எண்ண ஓட்டத்துக்கும் இந்த துறைக்கும் சம்பந்தமே இல்லையே, நான் இந்த துறையில் என்ன செய்துகொண்டு இருக்கிறேன்?? என்று இயலாமை கலந்த ஒரு ஏக்கம் எனை குழப்பமடைய செய்து விடும். பேசாமல் புகைப்பட துறையில் புகுந்து விடலாமா?? விளம்பரத்துறையில் விழுந்து விடலாமா?? எழுத்து துறையில் எழுந்து விடலாமா?? என்று நிறைவேராத கோட்டைகளை கட்ட ஆரம்பித்து ,சிறிது நேரத்தில் எதார்த்தத்திற்கு திரும்பி விடுவேன்.
சேருமிடம் ஏதும் இல்லாவிட்டாலும் வாழ்க்கை படகு ஓடிக்கொண்டுதான் இருக்கிறது! :-)

பி கு : இது Dreams and realities எனப்படும் என்னுடைய ஆங்கிலப்பதிவின் தமிழாக்கம்.

21 comments:

Anonymous said...

well written, unfortunately this is the case with most software engineers :(
One way to look is make enough money and then do what you like to do after a few years. But 'enough money' day may never come as our needs will get more with time :)

CVR said...

நன்றி அனானி அவர்களே
"Payback" எனும் படத்தில் மெல் கிப்சன் (Mel gibson) அவ்ருக்கே உரித்தான மிடுக்கான ஸ்டைலோடு "Its never enough" என்றொரு வசனம் சொல்வார்.
அந்த வசனம் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது!! :-)

Prakash said...

// எல்லவற்றிற்கும் மேலாக என்னால் என் பெற்றோருக்கு முன்னை விட சிறப்பான வாழ்க்கை நிலையை என்னால் அளிக்க முடிந்தது. //
- I like this line very much... after fulfilling your family commitments, definitely you will get the time to implement your dreams...

Thenraj said...

Yo! buddy,

Good Post and Blog of course..Keep it going..

Well said about the Indian IT scenario..People Like u with lots of dreams and ambitions this is not right stage to perform buddy, come out and create ur own stage. Many Poeple did that and suceeded also..(Bhartmatrimony.com)..ALL the Best.

And i need more information on how to type in tamil font..I usually use English for Typing. When i went to Taiwan for my official work and seeing their communication is mainly with their local language including the computer usage. I felt shame on me..

சுந்தர் / Sundar said...

Good Flow nanba !
எண்ண ஒட்டங்களை அப்படியே பதிந்தத்ற்கு பாராட்டுக்கள்

MyFriend said...

ஆஹா!

உங்க பதிவுகளையெல்லாம் மொழி பெயர்க்க ஆரம்பிச்சுட்ட மாதிரி இருக்கே!

நல்ல விஷயம்தான் :-)

இப்பொழுது இருக்கும் எந்த கம்வேனிக்கு வேலைக்கு போனாலும் இப்படிப்பட்ட வேலைகளைதான் நம் தலையில் கட்டுகிறார்கள்.

Anonymous said...

//ஆனால் ஏதாவது கலைத்திறன் வாய்ந்த விஷயங்களை உருவாக்கவேண்டும் என்ற என் கனவுகளை என்னால் மறக்க முடியவில்லை. பல சமயங்களில் , என் திறைமைகள் மற்றும் எண்ண ஓட்டத்துக்கும் இந்த துறைக்கும் சம்பந்தமே இல்லையே, நான் இந்த துறையில் என்ன செய்துகொண்டு இருக்கிறேன்?? என்று இயலாமை கலந்த ஒரு ஏக்கம் எனை குழப்பமடைய செய்து விடும்.//

நண்பரே, உங்களைப்போல் பலரை நான் தினம்-தினம் காண்பவன், மற்றும் அவர்களின் மேலாளராக இருப்பவன் என்பதால் சொல்கிறேன். இன்னும் நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை.

உங்கள் தவிப்பிற்கு நன்றி, கடந்த 3-5 வருடங்களில் கல்லூரிகளிலிருந்து வெளிவந்த சிலருக்கு (சிலருக்கு மட்டுமே) இந்த தவிப்பு இருக்கிறது. அதில் நீங்களும் ஒருவர் என்பதற்கு பாராட்டுகிறேன்...ஆனால் 90% மக்கள் இந்த தவிப்பில்லாது இருப்பது இந்த துறையை பாழடிக்குமோ என்ற அச்சம் எனக்கு.

எனிவே, நீங்கள் ஏன் ஓப்பன் சொர்ஸ் முறையில் தனியாக உங்கள் தகுதியினை வெளிக்கொணரக் கூடாது. என்ன வேலை என்பது சம்பளத்திற்காகவும், தனியாக ஏதேனும் ஒப்பன் சோர்ஸ் முறையில் டெவலப் செய்து பயனாளர்களுக்கு தருவது ஆத்ம திருப்திக்காகவும் என்று இருக்குமே. மேலும் அதுபோல் செய்தால், இந்தமாதிரி புலம்பல்களும் இருக்காது. முயற்சி செய்யுங்கள்...வாழ்த்துக்கள்.

Anonymous said...

as the other anony said, 'enough money' is a relative term, and we will never reach that.

As I suggested before in Tamil, Its good to have this feeling, but our financial position will not allow us to goto any other industry as we are already got used to this salary and spending pattern. So, without much hesitations, we may work little more and develop our dreams in the open source, where there will be much more same level of people, mind set to contribute (good example can be JBoss development, recently taken over by Oracle).

Also this will make us diverted from the Tamil Blog stories, and fights on caste, creed etc.

Anonymous said...

அழகாக சொல்லியிருக்கிறீர்கள். இந்தப் பதிவை தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி.
http://www.desipundit.com/2007/03/28/software/

CVR said...

@பிரகாஷ்
நன்றி,
எனக்கும் அந்த நம்பிக்கை தான்!! :-)

@தென்ராஜ்
தமிழில் தட்டச்சு செய்ய e-kalappai எனப்படும் மென்பொருளை உபாயோகப்படுத்தலாம். கூகிளில் சிறிது தேடி பார்த்தால் அதை தரவிரக்கம் செய்து கொள்ளலாம்.
விரைவில் உங்கள் தமிழ் எழுத்துக்களை வலையில் காண வாழ்த்துக்கள்

@சுந்தர்
வாங்க நண்பரே. வருகைக்கும் ,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி :-)


@மை ஃபிரண்ட்
கேட்பதற்கு வருத்த்மாக இருக்கிறது. உங்களை போல இளைஞர்கள் தங்கள் "career"-ஐ ஒழுங்காக திட்டமிடத்தான் இந்த பதிவையே எழுதினேன்.
உபயோகமா இருக்கும் என்று நம்புகிறேன்

@அனானி அண்ணா/அக்கா
நீங்க சொல்றது சரிதான். ஆனா முன்ன இருந்தா மாதிரி வேகமும் , "fire"-உம் இப்போ அவ்வளவா இல்லை.ஆர்வம் போதுமான அளவு இருந்தால் ஓபன் சோர்ஸ் ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதில் ஐயமில்லை.
வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

@டுபுக்கு
உங்கள் பதிவுகளை விரும்பி படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். தாங்கள் என் பதிவுக்கு வருகை தந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி.
தேசி பண்டிட்டில் பதிவை சேர்த்தமைக்கு மிக்க நன்றி!! :-)

Anonymous said...

// எங்கள் குடும்ப பொருளாதார நிலைமை மேம்பட்டது. எல்லவற்றிற்கும் மேலாக என்னால் என் பெற்றோருக்கு முன்னை விட சிறப்பான வாழ்க்கை நிலையை என்னால் அளிக்க முடிந்தத

இதுதாங்க நம்மள்ல பலபேரை ஒரு வித ஏமாற்றத்தையும் விரக்தியையும் போக்கி வேலை செய்ய வைக்குது. இந்திய project based coyகளில் வேலை செய்வோரின் நிலையை நல்லாவே சொல்லியிருக்கீங்க.

தொடர்ந்து (தமிழ்ல) எழுதுங்க :)

CVR said...

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி விக்கி
தொடர்ந்து தமிழில் கண்டிப்பாக எழுதுகிறேன்.

தாங்களும் பதிவுக்கு தொடர்ந்து வருகை புரியவும்!! :-)

Anonymous said...

நீங்க சொல்ற பல விஷயங்களுடன் எனக்கு உடன்பாடில்லை.

இன்றைக்கு flickr ஐ யாஹூ வாங்கிய பின்பும், யூ ட்யூபை கூகிள் வாங்கிய பின்பும் தானே இது போல உங்களுக்குத் தோன்றுகிறது. இதே அது, நாலைந்து பேர் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமாக இருந்த போது, அங்கே போய் தைரியமாக வேலைக்குச் சேர்ந்திருப்பீர்களா?

ஐடி துறை என்பது, அறுபது எழுபதுகளில் இருந்த ரயில்வே, போஸ்டல் துறை மாதிரி தான் இப்போது இருக்கிறது. அந்த காலத்தில், அரசு வேலை என்றால், முழு வாழ்க்கைக்கும் உத்தரவாதம் என்பது போல இப்போது ஐடி முதலைகள் தரும், வேலை பாதுகாப்பும், பணமும், அனுபவமும் இருக்கிறது. இவை இருந்தால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்ற எண்ணத்துடன் உள்ளே நுழைபவர்கள், இப்போது, 'வேலை புடிக்கலை' என்று புலம்பக்கூடாது.

இந்திய ஐடி துறையின் வருமானத்தில் பெரும்பகுதி, சப்போர்ட் சர்வீஸ்களிலும், மெய்ன்டெனன்ஸிலும் தான் வருகிறது. அது பிடிக்கவில்லை என்றால், அதில் இருந்து வெளியே வங்து, விருப்பப்பட்ட வேலையில் சேர்ந்து உங்களை நீங்களே உலகத்துக்கு நிரூபிப்பதுதான் சரியாக இருக்கும்.

இன்றைக்கு, இந்திய அளவில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகமாக வராமலும், அப்படியே வந்தாலும், வேலை செய்ய திறமைசாலிகள் கிடைக்காமல், நிறுவனங்கள் முடங்கிப் போவதும், அதிகப் பணத்துக்காக, கிரியேடிவிட்டியை பெரு நிறுவனங்களிடம் அடகு வைத்து விட்டு, அங்கே ஒரு glorified குமாஸ்தா வேலை பார்ப்பவர்களால் தான்.

கேபினை விட்டு வெளியே வந்து பார்த்து விட்டுப் பேசுங்கள் ஐயா.

CVR said...

நான் பொறியியல் படிப்பை படிக்க வேண்டும் என்று என் பெற்றோர்கள் வலியுறுத்தியதற்கு முக்கிய காரணம் ரயில்வே, போஸ்டல் துறை போன்று ஒரு நிலையான உத்தியோகம் கிடைத்து குடும்ப பொருளாதார நிலைமை மேம்பட வேண்டும் என்ற எண்ண்மேதான் காரணம் என்பதில் ஐயமில்லை. ஆனால் பொறியியல் படிப்பில் நான் கம்ப்யூட்டர் துறையை தேர்ந்தெடுத்தற்கு நான் குறிப்பிட்டிருந்த ஆசைகளே காரணம்.
நான் பணியில் சேர்ந்து இப்பொழுது பேசிக்கொண்டிருப்பதை போன்ற தெளிவும் அனுபவமும் பெறுவதற்குள் வீட்டு கடன் போன்ற பல விஷயங்களில் நான் மாட்டிக்கொண்டதால் என் வேலை வாய்ப்புகளை சுலபமாக மாற்ற முடியவில்லை. இதே அறிவு வேலை தேடுவதற்கு முன்னமே இருந்திருந்தால் என் அனுகுமுறையும் எதிர்பார்ப்புகளும் வித்தியாசமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நான் இன்று எழுதியதை நான் காலேஜில் இருக்கும்போது யாராவது எனக்கு சொல்லி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என யோசித்து பார்ததின் விளைவுதான் இந்தப்பதிவு.
என் வாழ்க்கையில் இருக்கும் நிலைமைக்கும் நான் இருக்கும் வேலையை விட்டு விட்டு ஸ்டார்ட் அப்புகளில் சேர முடியாமைக்கு என் நிர்பந்தங்களும், இயலாமையும்,திட்டமிடாதலும் தான் காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்கு நான் யாரையும் குறை கூரவும் முடியாது ,குறை கூரவும் மாட்டேன். ஆனால் எனக்கு உபயோகமாக இருந்திருக்ககூடிய தகவல்களை பதித்து வைத்தால் இப்பொழுது கல்லூரியில் இருப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும் எனக்கருதியே இந்தபதிவை வெளியிட்டேன்

நிர்மல் said...

//
பல பிரிவினருடன் பேசி வேலையை முடிப்பது, உடன் வேலைசெய்பவரிடம் தாஜா செய்து வேலை வாங்குவது, உபயோகமே இல்லாத ஆயிரக்கணகான எக்செல் கோப்புகளை நிரப்புவது, ப்ராசஸ் (process) எனும் பெயரால் கோடிக்கணக்கான மணிகள் உப்பு சப்பில்லாத சொத்தை வேலைகள் செய்வது, வெளிநாட்டில் இருந்தால் இந்தியாவில் இருக்கும் சக பணியாளரிடம்,இந்தியாவில் இருந்தால் வெளிநாட்டில் இருக்கும் சக பணியாளரிடமும் வேலை நிமித்தமாக சண்டை போடுவது, திடீரென்று கொடுக்கப்படும் உன்றுமே தெரியாத வேலைகளை வைத்துக்கொண்டு திரு திரு என முழிப்பது, ஆயிரம் வேலைகள் வந்து குவிந்த வண்ணம் கிடக்க, எதை [Photo]எடுப்பது,எதை விடுப்பது என தெரியாமல் திக்கு முக்காடுவது, அவைகளை முக்கியத்துவத்திற்கு ஏற்றார்போல் வரிசை படுத்துவது, முக்கியத்துவம் திடீரென்று மாற்றப்பட அவற்றை மறுபடியும் வரிசை படுத்துவது, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
//

ஒன்றுக்கும் உதவாத வேலை என உங்கள் பார்வையிலிருந்து சொல்கிறீர்கள். உங்கள் வாடிக்கையாளர் மற்றும் உங்கள் நிறுவனம் பார்வையிலிருந்து நீங்கள் செய்வது ஒன்றுக்கும் உதவாத வேலையா?

வேறு வித பணிகளுக்கு ஆசை படுவது தவறில்லை. இப்போதிருப்பதை பற்றி தவறான கருத்தை வெளிப்படுத்தலமா?

CVR said...

@நிர்மல்
நான் செய்வது முக்கியமான வேலை என்பதிலும் , வாடிக்கையாளர்களுக்கு எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதிலும் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. அதில் யாராவது குறை கூறினால் உங்களை போல் நானும் ஏற்று கொள்ளமாட்டேன். தான் செய்யும் வேலையில் முழு ஈடுபாடும் ,வாடிக்கையாளர் கண்ணோட்டத்துடன் உழைக்கும் என்னை போன்ற சக சாப்ட்வேர் வல்லுனர்களின் மேல் எனக்கு என்றுமே த்னி மதிப்பு உண்டு.
ஆனால் தேவையே இல்லாத சலிப்பூட்டும் ப்ராசஸ்களில் அவர்களின் வேலை பளு முழுகிவிடுகிறது என்றும் ,இதெல்லாம் நான் காலேஜ் சமயங்களில் நினைத்தும் பார்த்ததில்லை என்பதை விளக்கவே அந்த பத்தி எழுதப்பட்டது. எழுதிய விதத்தில் கொஞ்சம் மிகைப்படுத்தல் இருக்கிறது என்பதை ஒற்றுக்கொள்கிறேன்.
இதனால் தங்கள் மனது புண்பட்டிருக்குமேயானால் என்னை மன்னித்துவிடுங்கள். யாரையும் நோக அடிக்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல!! :-)

மு.கார்த்திகேயன் said...

ஒரு பதிவே இவ்வளவு பெருசா.. மெதுவா படிச்சிட்டு பின்னூட்டமிடுறேங்க இப்போதைக்கு இது ஒரு வருகைப் பதிவு பின்னூட்டம்

CVR said...

மொத முறையா வருகை தந்திருக்கும் கார்த்திக்கு என் நல்வரவு!!
சைஸ் என்னமோ பெருசாதான் இருக்கு ஆனா விஷயம் ஏதாவது இருக்கான்னு நீங்கதான் படிச்சு சொல்லனும்!!
நேரம் கெடைச்சா என் மத்த பதிவுகளையும் படிச்சு பாருங்க தலைவா!! :-)

அப்படியே உங்க மேலான கருத்துக்களையும் சொன்னீங்கன்னா சந்தோஷப்படுவேன்!! :-)

Anonymous said...

aapadi aavalo pariya post....but great....

CVR said...

நன்றி விஜய்
ஏதோ தங்கள் வாழ்க்கை பாதையை திட்டமிட்டு கொள்வதில் பயனுள்ளதாக இந்த கட்டுரை அமைந்தால் சந்தோஷம். :-)

Anonymous said...

I use to think exactly like you when I first joined MNC in bglre. But i will tell myself everytime just to think about Einstein, who was the only Dr(Phys) out of his 24 colleagues hadnt got job in the university as Prof. But even in such despair situtation, he started working as a simple patent clerk. In the evenings he prepared to go for his passion. Rest is history!!!

Acc. to me both anonymous user comments are right!

Good luck for u to go for your passion - Babu

Related Posts Widget for Blogs by LinkWithin