வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4

எனது இனிய தமிழ் மக்களே,
போன பதிவுக்கு அப்புறமா கொஞ்ச நாளா பதிவு எதுவும் போடாததுக்கு மன்னிக்கனும். கொஞ்சம் நெடுந்தூர பிரயாணம் செய்ய வேண்டி இருந்ததால ஜெட்லாக் எனப்படும் நேரக்குழப்பத்தில் என் உடம்பு மாட்டிக்கொண்டு விட்டது. இந்திய நேரம்,அமெரிக்க நேரம்னு மாத்தி மாத்தி விட்டதுனால திடீர்னு ஐரோப்பா நேரத்துல தூக்கம் வருது,ஆஸ்திரேலியா நேரத்துல பசி வருது , எதை எப்ப பண்ணனும்னே தெரியல. ஆணியை மட்டும் எந்த நேரத்துல பிடுங்கறன்னு கேக்கறீங்களா?? அதை தான் நான் எந்த நேரத்துலையும் செஞ்சது கிடையாதே!! அதனால பிரச்சினை இல்லை!! ஹி ஹி!
சரி , விஷயத்துக்கு வருவோம்.

போன பகுதியில் ஒளியோட வேகத்தை பத்தி வானளாவ புகழ்ந்திருந்தேன். இந்த பேரண்டத்திலேயே ஒளியை விட வேகமாக செல்லக்கூடிய பொருள் எதுவும் கிடையாதுன்னு சொல்லியிருந்தேன்ல?? ஆனா அந்த ஒளியின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டக்கூடிய விஷயம் இந்த பேரண்டத்தில் உண்டு. ஆங்கிலத்தில் "There is always a bigger fish" என்று சொல்வது போல் ஒருத்தன் என்னதான் கில்லாடியா இருந்தாலும் அவனவனுக்கு ஆப்பு ரெடியா வெச்சிருக்காரு கடவுள். இப்படி ஒளியையே தூக்கி சாப்பிடறதுக்கு தயாரா இருக்கற பொருள் தான் கருந்துளைகள் (Black holes)

என்னப்பா!! பேரே கேக்கறதுக்கு பயங்கரமா இருக்கே,என்ன இதுன்னு கேக்கறீங்களா.
இப்போ,உலகத்துல இருக்கற எல்லா பொருளுக்கும் ஈர்ப்பு விசை (Gravity) இருக்கு. இல்லையா???
அப்படி இருக்கறதனால தான் மத்த பொருட்களை தன் கிட்ட இழுத்துக்கறதோட தானும் பிரிந்து போகாமல் பிணைந்து ஒரே பொருளா இருந்துட்டு இருக்கு. ஒரு பொருளோட நிறை (mass)-ஐ பொருத்து அந்த பொருளின் அளவும் ஈர்ப்பு விசையும் மாறும். அப்படி இருக்கும் பொழுது பேரண்டத்தில் தன் அதிகமான ஈர்ப்பு விசையால் சுருங்கி போய் நிறை கூடி (நரை கூடி அல்ல!! :-)) மேலும் மேலும் சுருங்கிக்கொண்டே போய் தனக்குள்ளாகவே புள்ளியாகிவிடும் பொருட்களே கருந்துளைகள் எனப்படுபவை. இந்த கருந்துளைகளின் ஈர்ப்பு விசை எவ்வளவு சக்தியானது என்றால்,இதன் ஈர்ப்பு விசையை விட்டு ஒளியால் கூட தப்பிக்க முடியாது!!

தனக்கு பக்கத்தில் வரும் பொருட்கள் எல்லாவற்றையும் கபளிகரம் செய்துவிட்டு நல்ல பிள்ளை போல் இது போன்ற கருந்துளைகள் பேரண்டத்தில் உலவிக்கொண்டிருக்கின்றன.
என்னப்பா கதை அளக்கிறாய். அண்டத்தில் உள்ள பொருட்கள் எல்லாமே நாம் ஒளியை கொண்டுதான் பார்க்கிறோம்,அதனால் ஒளியே இல்லாவிட்டால் ஒரு பொருள் இருக்கிறதா இல்லையா என்பதையே நாம் அறிய முடியாது என்று போன பாகத்தில் தானே குறிப்பிட்டாய் என்கிறீர்களா??
உண்மைதான்!!! கருந்துளைகளை விட்டு ஒளி கூட தப்பிக்க முடியாது என்பதால் அதனை நம்மால் நேரடியாக பார்க்கமுடியாது.ஆனால் அதன் ஈர்ப்பு விசையில் சிக்கி அதனுள் விழப்போகும் பொருட்களின் ஒளியை கொண்டே நாம் கருதுளைகளை பற்றி அறிகிறோம். அதுவும் தவிர இந்த பொருட்கள் சுற்றும் வேகத்தினால் ஏற்படும் X கதிர்களை வைத்தும் கருந்துளைகளின் இருப்பை பற்றி கண்டு பிடிக்கலாம்.

அதுவுமில்லாமல் இந்த பெரும் ஈர்ப்பு விசையினால் உந்தப்பட்டு இதை வேகமாக சுற்றி விழப்போகும் பொருட்களினால் ஏற்படும் சக்தி பெருத்த ஒளியோடு கருந்துளைகளின் மேலேயும் கீழேயும் பல ஒளிவருடங்களுக்கு நீண்டு இருக்கும்.
இவ்வளவு வேகமாக ஈர்க்கப்படும்பொருட்கள் கருந்துளைக்குள் உள்ளே சென்ற வுடன் என்ன ஆகும்???
இதை பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரியாது,ஏனென்றால் ஒளியே தப்பிக்க முடியாத கருந்துளையில் இருந்து மீண்டு யாரும் வந்ததில்லை என்பதால் நம்மால் யூகிக்க மட்டுமே முடியும்.
விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள் என்றால்,கருந்துளையின் ஈர்ப்பு விசையினால் மேலும் மேலும் ஈர்க்கப்பட்டு பொருட்கள் மேலும் மேலும் சுருங்கிப்போகும். இப்படியே முழுவதுமாக நசுக்கப்பட்டு பின் கருந்துளையின் மையப்பகுதியான ஒருமைப்புள்ளி (Singularity) எனும் இடத்தில் ஐக்கியமாகி விடும் என்கிறார்கள்.

ஆகா!! கொஞ்சம் வெவகாரமான விஷயமகத்தான் இருக்கும் போல இருக்கே இந்த கருந்துளை. அப்போ அண்டத்தில் உள்ள பொருட்களை எல்லாம் இந்த கருந்துளை தாவிப்பிடித்து சுவாஹா செய்து விடுமா??
கருந்துளை தானாக சென்று எந்த பொருளையும் விழுங்கி விடாது. ஒரு குறிபிட்ட புள்ளி வரை தான் அதன் ஈர்ப்பு விசை தப்பிக்க முடியாத படி இருக்கும். தொடுவான எல்லை (Event Horizon) எனப்படும் இந்த வரையறைப்புள்ளிக்கு அப்பால் உள்ள பொருட்கள் எல்லாம் நம் சூரியனை கிரகங்கள் சுற்றி வருவது போன்று அமைதியாக சுற்றி வந்து கொண்டிருக்கும் தொடுவான எல்லையை தொட்டுவிட்டால் எமனிடம் போன உயிரை போல அதோ கதிதான்!! அதுக்கு அப்பறம் திரும்பி வரவே முடியாது.
கொசுறு செய்தி ஒன்று. நம் பூமியை சுற்றியோ அல்லது சூரிய குடும்பத்தை சுற்றியோ நமக்கு தெரிந்தவரை கருந்துளைகள் எதுவும் கிடையாது. அதனால் நீங்கள் எல்லோரும் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடலாம்.

அடடா!! இவ்வளவு அதிசயமான விஷயம் எப்படி உருவாகிறது??
நம் அண்டத்தில் பல நூறு கோடி நட்சத்திரங்கள் உள்ளன. அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்,ஒவ்வொரு அளவு. பொதுவாக நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி அழிகின்றன தெரியுமா?? நட்சத்திரங்களில் ஹட்ரோஜென் வாயு ஹீலியம் வாயுவாக மாறிக்கொண்டே இருக்கும் என்று சொன்னேன் அல்லவா. அப்படி மாறிக்கொண்டே இருக்கையில் ஒரு சமயம் ஒரு நட்சத்திரத்தில் உள்ள ஹைட்ரோஜென் வாயு தீர்ந்து போகும் அப்படியான நிலையில் நட்சத்திரங்கள் விரிந்து சிகப்பு பூதம் (Red giant) எனும் நிலையை அடைகின்றன. நம்ம சூரியனை பார்த்தீங்கன்னா , ஒரு நான்கு ஐந்து பில்லியன் வருடங்களுக்கு அப்புறம் இந்த மாதிரி சிகப்பு பூதமாக மாறுமாம். அந்த சமயத்தில் அது பூமியையே விழுங்கக்கூடிய அளவுக்கு உப்பி விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
அதற்கு பின் ஒவ்வொரு நட்சத்திரமும் அதன் அளவுக்கு ஏற்றார்போல் அழிந்து போகும்.்திரமும் சூரியன் போன்ற அளவுள்ள நட்சத்திரங்கள் இதற்கு பின மிகவும்் சுருங்கிப்போய் வெள்ளைக்குள்ளன் (White dwarf) எனும் நிலைக்கு தள்ளப்படும். நம்ம சூரியன் இந்த நிலையில் பூமியை விட சின்னதாக சுருங்கி விடும் என்று சொல்கிறார்கள். நல்லா ஜெகஜ்ஜோதியா கம்பீரமா இருக்கற சூரியனுக்கு என்ன ஒரு பரிதாபகரமான நிலைமை!! ;-(
எப்படி இருந்த சூரியன் இப்படி ஆயிருச்சு பாத்தீங்களா??

சரி சூரியனை விட பெரிய நட்சத்திரங்களுக்கு என்ன ஆகும் தெரியுமா?? அவை அமைதியாக போகறதுக்கு பதிலா பெருசா சத்தம் போட்டுட்டு தான் போகும். இவைகள் இப்படி பெரிதாக வெடித்து சிதறுவதற்கு ஆங்கிலத்தில் Super Nova explosion என்று கூறுவார்கள். இந்த வெடிப்பினால் வெளியிடப்படும் சக்தி எவ்வளவு பெரியது என்றால்,இந்த வெடிப்பின் போது வெளியிடப்படும் ஓளியானது அந்த அண்டத்தில்(Galaxy) உள்ள மற்ற நட்சத்திரங்களின் ஒளி அனைத்தையும் விட அதிகமாக இருக்குமாம்.தலை சுற்றுகிறது!!
இப்படி வெடித்து சிதறும் நட்சத்திரமானது நம் சூரியனை விட பத்து மடங்குக்கு மேல் பெரியதாக இருந்தால் ஆவை வெடித்து சிதறிய பின் சுருங்கி ந்யூட்ரான் நட்சத்திரங்கள் (Neutron stars)ஆகி விடும். ஆனால் நம் சூரியனை விட நூறு மடங்குக்கு மேற்பட்ட அளவுள்ள நட்சத்திரமாக இருந்தால் சுருங்கிப்போய் அதன் அதிகபட்ச நிறையினால் ஈர்ப்புவிசை எக்கச்சக்கமாகி விட கருந்துளைகளாக மாறி விடுகின்றனவாம். இதுதான் கருத்துளைகளின் கதை.

என்னங்க!! இப்பவே கண்ணை கட்டுதா?? என்னை விட்டா் இதை பற்றி பேசிக்கொண்டே இருப்பேன் ஆனால் உங்களை பார்த்தாலும் பாவமாகத்தான் இருக்கிறது அதனால இப்போதைக்கு பதிவ நிறுத்திக்கறேன். போறதுக்கு முன்னாடி கருந்துளைகள பத்தின ஒரு குறும்படம் கீழே இருக்கு பாத்துட்டு போங்க!! நம்ம ஊருல நடக்கற சண்டைகள பாத்து மனசு கஷ்டப்படும் போது இது மாதிரியான விஷயங்கள பாத்தா அதை பார்த்துட்டு சிரிக்கற பக்குவத்தை வளர்த்துக்களாம்!! :-)
சரி உங்களை இன்னொரு சுவாரஸ்யமான விஷயத்தோட அடுத்த பதிவுல சந்திக்கரேன்!!
வரட்டா???

வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 1 (பிரபஞ்சம் உருவானது எப்படி)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 2(Big bang theory)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 3(Light years)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4(Black holes)
வானத்தில் விரியும் அதிசயங்கள் - பாகம் 5(Extra terrestrial life)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 6(Alien communication)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 7(UFOs)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 8(Roswell - part 1)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 9(Roswell - part 2)

36 comments:

SathyaPriyan said...

Me the first? Excellent write up.

ALIF AHAMED said...

good post

ALIF AHAMED said...

ஒருத்தன் என்னதான் கில்லாடியா இருந்தாலும் அவனவனுக்கு ஆப்பு ரெடியா வெச்சிருக்காரு கடவுள்.
///


uNmaithaan..:)

G.Ragavan said...

இந்தக் கருப்போட்டைகள் என்ன வம்பு பண்ணுது. பக்கத்துல எது போனாலும் விடாதா! சினமெனும் சேர்ந்தாரைக் கொல்லின்னு சொல்வாரு வள்ளுவரு. அது மாதிரி கருப்போட்டை என்னும் சேர்ந்தாரை விழுங்கியா! சரி...இதெல்லாம் பாக்க நம்ம இருக்க மாட்டோம். முருகன் காப்பாத்தீட்டான். :)

CVR said...

@சத்தியப்பிரியன்
வாங்க சத்தியப்பிரியன்,எப்பவுமே நீங்கதான் ஃபர்ஸ்ட்,இதுல என்ன சந்தேகம்?? :-)

@மின்னுது மின்னல்
வாங்க மின்னல். கருந்துளைகள் பத்தி கேள்வி எல்லாம் தயாரா வெச்சிருக்கேன்னு சொன்னீங்க?? எதுவும் கேக்களையா?? :-)

@ஜீரா
உலகத்துல மனுஷனுக்கு இருக்கற பிரச்சினைகள் போறாதா ஜீரா?? இதுக்கு மேல கருந்துளைகள் வேற வேணுமா?? அதுக்கு பதிலா தான் பெருந்தொல்லைகள் பலவற்றை நாம் விடை கண்டு பழகிக்கொள்ள முருகன் அனுப்பி வைத்திருக்கிறானே!! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஐரோப்பா நேரத்துல தூக்கம் வருது,ஆஸ்திரேலியா நேரத்துல பசி வருது , எதை எப்ப பண்ணனும்னே தெரியல//

ஆகா...
ஐரோப்பா தெரியும், வரும் வழி!

ஆஸ்திரேலியா எப்ப போனீங்க, எதுக்குப் போனீங்க...எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை...
ராயல், வெட்டி, துர்கா...கொஞ்சம் என்னன்னு கவனீங்க:-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

CVR

அப்போ, கலர்புல் வான் பொருட்கள் எல்லாம் தன் முடிவில் (B&W) ஆகும் போல இருக்கே!
ஒன்று கருந்துளைகள் ஆகும்
இல்லை வெள்ளைக் குள்ளன் ஆகுமா?

இது வரை இப்படி ஆகிப் போனவைக்குப் பெயர்கள் ஏதாவது உள்ளதா?

ACE !! said...

நல்ல பதிவு cvr!!!.. ஒரு புது விஷயத்த தெரிஞ்சுகிட்ட திருப்தி கிடைச்சுது..

வாழ்த்துக்கள்!!

ACE !! said...

//அது பூமியையே விழுங்கக்கூடிய அளவுக்கு உப்பி விடும்//

red giant, பூமியை விழுங்கும் அளவுக்கு உப்பும் என்றால், பூமியை தாண்டி அதன் எல்லைகள் விரியுமா??

பிறகு சுருங்குமா?? (to end up as white dwarfs)

மு.கார்த்திகேயன் said...

யெப்பா.. முழுசா படிச்சு முடிச்ச்சப்ப அந்த அண்டத்தை நினச்சா மலைப்பாவும் இருக்கும் கொஞ்சம் பயமாவும் இருக்கு CVR

மு.கார்த்திகேயன் said...

//அதன் ஈர்ப்பு விசையில் சிக்கி அதனுள் விழப்போகும் பொருட்களின் ஒளியை கொண்டே நாம் கருதுளைகளை பற்றி அறிகிறோம்///


ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. படிக்கிறப்பவே கண்ணை கட்டுதே CVR

மு.கார்த்திகேயன் said...

ஒரு அழகான ஆய்வுக்கட்டுரை மாதிரி இருக்கு CVR

ulagam sutrum valibi said...

//என்னதான் கில்லாடியா இருந்தாலும் அவனவனுக்கு ஆப்பு ரெடியா வெச்சிருக்காரு கடவுள்//
கண்ணு superb!!!

Anonymous said...

////ஐரோப்பா நேரத்துல தூக்கம் வருது,ஆஸ்திரேலியா நேரத்துல பசி வருது , எதை எப்ப பண்ணனும்னே தெரியல////

this doesnt sound like jetlag.ஏதோ காதல் நோய் மாதிரி இருக்கே?இந்தியாவில் நடந்த மர்மம் என்ன?

Anonymous said...

//ஆஸ்திரேலியா எப்ப போனீங்க, எதுக்குப் போனீங்க...எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை...
ராயல், வெட்டி, துர்கா...கொஞ்சம் என்னன்னு கவனீங்க:-) //

அடா ஆஸ்திரேலியாவை நான் கவனிக்கவில்லையே.தம்பி அந்த மர்மம் என்ன?கருந்துளைகளைவிட பெரிய மர்மாக இருக்கின்றது.krs அண்ணா உமது உதவிக்கு நன்றி.இப்படியே பிட் பிட்டா போடுங்க.நான் அப்படியே develop பண்ணிக்கிறேன்.தம்பி பதில் சொல்லுங்க இல்லையென்றால் பாச மலர் வெட்டி அண்ணாவோடு களம் இறங்குவேன்.

Anonymous said...

//மின்னுது மின்னல் said...
ஒருத்தன் என்னதான் கில்லாடியா இருந்தாலும் அவனவனுக்கு ஆப்பு ரெடியா வெச்சிருக்காரு கடவுள்.
///
அது ஒரு சில சமயம் இங்கே நடக்கும் ஒன்று.மின்னல் என்ன மேன் கும்மி அடிக்கமால் எஸ்கேப்?நம்ப குடும்ப மானத்தைக் காப்பாற்றனும் சீக்கிரம் வாங்க

CVR said...

@கண்ணபிரான்
//ஒன்று கருந்துளைகள் ஆகும்
இல்லை வெள்ளைக் குள்ளன் ஆகுமா?

இது வரை இப்படி ஆகிப் போனவைக்குப் பெயர்கள் ஏதாவது உள்ளதா?//
இதற்கு என்று தனியாக பெயரிடும் இருக்கிறதா என்று தெரியாது அண்ணா.
உதாரணதிற்கு ஒரு நட்சத்திரம் X கருந்துளை ஆகிறது என்றால் அதை கருந்துளை X என்று அழைப்பார்கள் என்றே தோன்றுகிறது.

@சிங்கம்லே Ace
//red giant, பூமியை விழுங்கும் அளவுக்கு உப்பும் என்றால், பூமியை தாண்டி அதன் எல்லைகள் விரியுமா??

பிறகு சுருங்குமா?? (to end up as white dwarfs)//
எக்ஜாக்ட்லி!! :-D

@கார்த்தி
//அந்த அண்டத்தை நினச்சா மலைப்பாவும் இருக்கும் கொஞ்சம் பயமாவும் இருக்கு CVR//
உங்க கூட என்னையும் சேர்த்துக்கோங்க கார்த்தி!! ;-)

//ஒரு அழகான ஆய்வுக்கட்டுரை மாதிரி இருக்கு CVR//
ரொம்ப நன்றி கார்த்தி

@உலகம் சுற்றும் வாலிபி
வாங்க பாட்டி!! வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி!!! ;-)

@துர்கா அக்கா
//அடா ஆஸ்திரேலியாவை நான் கவனிக்கவில்லையே.தம்பி அந்த மர்மம் என்ன?கருந்துளைகளைவிட பெரிய மர்மாக இருக்கின்றது.krs அண்ணா உமது உதவிக்கு நன்றி.இப்படியே பிட் பிட்டா போடுங்க.நான் அப்படியே develop பண்ணிக்கிறேன்.//

வாங்க அக்கா,வருகைக்கு "நன்றி"
கோர்வையா வருதேன்னு தெரியாம,ஆஸ்திரேலியான்னு போட்டுட்டேன் அக்கா!! மன்னிச்சிடுங்க!! :-(

//தம்பி பதில் சொல்லுங்க இல்லையென்றால் பாச மலர் வெட்டி அண்ணாவோடு களம் இறங்குவேன்.//
ஸ்டார் ப்ளாக்கரை ஏன் தொந்தரவு செய்யறீங்க!! அவரை கொஞ்சம் தனியா விடுங்க!! ;-)

//மின்னல் என்ன மேன் கும்மி அடிக்கமால் எஸ்கேப்?//
ஒருத்தரு ஒழுங்க இருந்தா விட மாட்டீங்களா?? ;-)

வெட்டிப்பயல் said...

தலைவா,
இந்தியா போன போது ஜெட் லேக் இல்லாம வந்ததுக்கப்பறம் இருக்குனு கதைவிட்டா எப்படி???

இதற்கும் பஜ்ஜி சொஜ்ஜிக்கும் என்ன சம்பந்தம்???

வெட்டிப்பயல் said...

//ஆஸ்திரேலியா எப்ப போனீங்க, எதுக்குப் போனீங்க...எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை...//

என்கிட்டயும் சொல்லல...
தல.. அண்ணி ஆஸ்திரேலியாவா?

Anonymous said...

அருமையான பதிவுகள்.

//நம் பூமியை சுற்றியோ அல்லது சூரிய குடும்பத்தை சுற்றியோ நமக்கு தெரிந்தவரை கருந்துளைகள் எதுவும் கிடையாது//

நம் milky way நடுவில் saggitarius A* என்ற ஒன்று இருப்பதாக கண்டுபிடித்துள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால் எல்லா முக்கிய galaxy நடுவிலும் ஒரு கருந்துளை இருப்பதாக கண்டுள்ளார்கள் இன்னும் பல ஆச்சரியங்கள் வெளிவரலாம். இந்த கருந்துளைகளிலே நம் பிறப்பின் ரகசியம் கூட இருக்கலாம் :)

CVR said...

@அனானி அண்ணா/அக்கா
உண்மைதான் அனானி நண்பரே!! நீங்கள் சொன்ன கருத்து இந்த பதிவில் உள்ள குறும்படத்திலும் உள்ளது. ஆனால் நம் பூமிக்கோ,சூரியக்குடும்பத்திற்கு "பக்கத்தில்" கருத்துளைகள் எதுவும் இல்லை என்றும்,பூமியை பாதிக்கும் தூரத்தில் எந்த கருந்துளையும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று மட்டுமே சொல்லி இருந்தேன்.

கருந்துளைகளை பற்றி பல சுவையான கூற்றுகளும் விவாதங்களும் உண்டு,ஆனால் பதிவின் அளவையும்,பதிவை எளிமையாக்க வேண்டியும் இத்தோடு நிறுத்திக்கொண்டேன்.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

CVR said...

@வெட்டி
ஆஹா!! நீங்களும் இந்த கும்மியில சேர்ந்துகிட்டீங்களா??
கஷ்ட காலம்டா சாமி!! ;-(

//
என்கிட்டயும் சொல்லல...
தல.. அண்ணி ஆஸ்திரேலியாவா?//

உங்க அண்ணி எந்த ஊருன்னு நீங்க தான் சொல்லனும்!! என்னை கேட்டா??

இந்த தருணத்தில் நான் உங்கள் எல்லோருக்கும் தம்பிதானே தவிர அண்ணன் அல்ல என்பதை குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன். ;-P

களவாணி said...

வயதான நட்சத்திரங்கள் தான் அழியும் போதுதான் இந்த கருந்துளைகள் உருவாகின்றன என்று படித்ததாக ஞாபகம். இக்கருந்துளையின் அட்டகாசம் ஒடுங்கிய பின் அங்கே புதியதொரு நட்சத்திரம் உருவாக்கப் படுகிறது. சரிதானா?

Anonymous said...

////மின்னல் என்ன மேன் கும்மி அடிக்கமால் எஸ்கேப்?//
ஒருத்தரு ஒழுங்க இருந்தா விட மாட்டீங்களா?? ;-) //

why r u jealous??

@vetti
//இதற்கும் பஜ்ஜி சொஜ்ஜிக்கும் என்ன சம்பந்தம்??? //

paalkova,pulisaatam also included!!

//இந்த தருணத்தில் நான் உங்கள் எல்லோருக்கும் தம்பிதானே தவிர அண்ணன் அல்ல என்பதை குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன். ;-P //

oh appadiya.sari thambi ennoda varungala sis in law entha ooru?talking about ur future wife la.this is direct question which u cant escape.

CVR said...

@செந்தில்
//வயதான நட்சத்திரங்கள் தான் அழியும் போதுதான் இந்த கருந்துளைகள் உருவாகின்றன என்று படித்ததாக ஞாபகம்.//
பதிவில் அதைதான் கூறி இருக்கிறேன் செந்தில்.

//இக்கருந்துளையின் அட்டகாசம் ஒடுங்கிய பின் அங்கே புதியதொரு நட்சத்திரம் உருவாக்கப் படுகிறது. சரிதானா?//
கருந்துளைகளுக்கு அழிவே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். Stephen Hawking-இன்(வாய் பேச முடியாமல் வீல் சேரில் முடங்கிப்போனாலும் கலக்கிக்கொண்டிருப்பாரே ஒருத்தர்! அவர்தான்) கூற்றுப்படி கருந்துளைகளில் இருந்து மிக மிக சிறிய அளவு சக்தி கசிந்து கொண்டிருக்கும் என்றும் அதன் காரணமாக அது ஒரு நாள் முழுவதுமாக மறைந்துவிடும் என்று சொல்கிறார். ஆனால் அவர் கூற்றை ஏற்றுக்கொண்டால் கூட ஒரு கருந்துளை அழிவதற்கு கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட நேரம் ஆகுமாம். அதனால் கருந்துளைகளுக்கு அழிவே கிடையாது என்று நாம் எண்ணிக்கொள்ளலாம்.

கருந்துளைகளீன் அழிவுக்கும் புதிய நட்சத்திரங்களின் உருவாக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.புதிய நட்சத்திரங்கள் அவை பாட்டுக்கு ஆங்காங்கே உருவாகிக்கொண்டு தான் இருக்கின்றன!! :-)

Raji said...

Black holes vaarthai mattum dhaan engayoo padicha gyabagam irukku...
Good ..Superaa poturukkeenga..

துளசி கோபால் said...

நல்ல பதிவு.

ஆமாம்.............கும்மியில், 'தண்ணி ஆஸ்த்ராலியா'வான்னு யாரோ கேட்டாங்களே.

அங்கே இப்பத் 'தண்ணிக் கஷ்டம்'ன்னு சொல்லிருங்க:-)))))))

இது அந்த அண்ணி, தண்ணி இல்லைப்பா.

களவாணி said...

நான் பாதி பதிவப் படிச்சிட்டு இருக்கும் போதே, என்னடா தல கருந்துளைகள் எப்படி உருவாகுதுங்கறதை போடாம விட்டுப் புட்டாரேன்னு நினைச்சி உடனே கமெண்ட் பண்ணிட்டேன். மேலப் படிக்கும் போதுதான் தெரிஞ்சது, நீங்க அதையும் விட்டு வைக்கலன்னு.

//கருந்துளைகளீன் அழிவுக்கும் புதிய நட்சத்திரங்களின் உருவாக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.புதிய நட்சத்திரங்கள் அவை பாட்டுக்கு ஆங்காங்கே உருவாகிக்கொண்டு தான் இருக்கின்றன!! :-)//

விளக்கத்திற்கு நன்றி.

ரொம்ப நாளாவே எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு. E = mc^2 இது, கருந்துளைகளுக்கும் சரிதானா?

சொல்லப் போற பதிலுக்கும் நன்றி

CVR said...

@ராஜி
வாங்க ராஜி,வாழ்த்துக்களுக்கு நன்றி! :-)

@துளசி
வாங்க டீச்சர்,பதிவு பிடிச்சிருந்ததா?? நன்றி!! :-)

@செந்தில்
நான் ஆராய்ச்சிக்காக பார்த்த வலைதளத்தில் எல்லாமே "ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி சிந்தாந்தத்தின் படி" என்றே தான் நிறைய இடங்களில் குறிப்பிட்டிருந்தார்கள். அவர்கள் கருந்துளைகளின் எந்த விஷ்யத்தை கருத்தில் கொண்டு இதை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஐன்ஸ்டீனின் E=MC^2 ஐ ஒட்டியே தான் கருந்துளைகள் இருக்கின்றன என்பதே விஞ்ஞானிகளின் கருத்து.

Geetha Sambasivam said...

அருமையான பொறுமையான ஆராய்ச்சித் தகவல்கள். பகிர்தலுக்கு நன்றி. கார்த்திக் வலையில் இருந்து வந்தேன். ரொம்பவே பயனுள்ள தகவல்கள்.

CVR said...

@கீதா
வாழ்த்துக்களுக்கு நன்றி கீதா மேடம்!! ;-)

Anonymous said...

karunthulaikalai patti eluthi anaivarum therinthukolla uthaviyatharkku nanti - each man/woman has some kind of special quality - you have this kind of......
friend

CVR said...

@அனானி friend
வாங்க friend!
எங்க உங்களை காணோமேன்னு பார்த்தேன்!! :-)
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சற்றுமுன் 1000 போட்டியில்
வெற்றி பெற்று
பரிசும் பெற்று
புகழ் வானுக்குள் விரியும் அதிசயம், CVR அவர்களே!
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

http://satrumun.blogspot.com/2007/08/1000.html

Anonymous said...

//ஒருத்தன் என்னதான் கில்லாடியா இருந்தாலும் அவனவனுக்கு ஆப்பு ரெடியா வெச்சிருக்காரு கடவுள்//

"கருந்துளைகள்"க்கு ஆப்பு என்ன??

CVR said...

@கே.ஆர்.எஸ்
நன்றி அண்ணா!!
உங்களை போன்ற நண்பர்களின் அன்பும் ஆதரிவினாலும் தான் இது சாத்தியம் என்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்!! :-)
உங்கள் முன் இந்த பரிசை சமர்ப்பிக்கிறேன்!! :-)

@அனானி!!
கேள்வி கேக்கறது ரொம்ப சுலபம்........
:-)

நல்ல கேள்வி!
நான் முன்பே பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தது போல Stephen Hawkings-இன் ஆராய்ச்சியின் படி பார்த்தால் கருந்துளைகளுக்கும் ஆப்பு உண்டு என்று ஒரு கருத்து உண்டு!!
ஆனால் இவை பற்றி மேலும் மேலும் ஆய்வுகள் செய்ய செய்ய, தெளிவான மற்றும் நம்பகமான தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்ப்போம்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!! :-)

Related Posts Widget for Blogs by LinkWithin