Singing in the rain - திரைப்பட விமர்சனம்

"Siiiiiiiiiiiiiiiiiiing in the rainnnnnnnnn,iam swaaaaiiiiiiiiiiiiiing in the rain"
இந்த வரியை பார்த்தவுடனே வடிவேலுவின் பிரபலமான காமெடி காட்சிகள் தான் ஞாபகம் வருகிறது அல்லவா?? கொஞ்ச நாட்களுக்கு முனபு வரை் எனக்கும் இதுதான் ஞாபகம் வரும்,ஆனால் இன்றிலிருந்து அப்படி இல்லை.
சமீபத்தில் ஜிராவை ஜி-டாக்கில் அறுத்துக்கொண்டிருந்த போது எதேச்சையாக ஒரு படத்தை சிபாரிசு செய்தார். படத்தின் பெயர் என்ன என்று கேட்டால் "Singing in the rain" என்று சொன்னார். சரி என்னை வைத்து காமெடி செய்கிறார் போல என்று நினைத்து பலமாக சிரித்தேன். அவர் உடனே "அட!! உண்மையாலுமே இது மாதிரி ஒரு படம் இருக்குப்பா,நல்லா இருக்கும் பாரு" என்று சொன்னார். உடனே என் நூலகத்தின் இணைய பக்கத்தை திறந்து அந்த படத்தை முன்பதிவு செய்து கொண்டேன். சிறிது நேரத்தில் அதை பற்றி மறந்து போனேன். கொஞ்ச நாள் கழித்து நூலகத்தில் இருந்து வீட்டிற்கு எடுத்து வந்தேன்.அட்டையை பார்த்தால் ஏதோ பழைய்ய்ய்ய்ய்ய்ய படம் போல இருந்தது. அதுவும் படம் ஒரு ம்யூசிகல் என்று தெரிந்தது.

ம்யூசிகல் - னா???
நம்ம ஊரு படங்கள் எல்லாவற்றிலும் பாட்டுடன் சேர்ந்து தானே படம் இருக்கும்?? ஆனா ஆங்கில படங்களில் பொதுவாக பாட்டுக்கள் இருக்காது. அதனால் படத்திலேயே பாட்டும் சேர்ந்து வந்தால் அதை ம்யூசிகல் என்று சிறப்பான பெயர் கொடுத்து அழைப்பார்கள். சமீபத்திய படங்களில் ரிசர்ட் கியர் நடித்த "சிகாகோ" என்ற ம்யூசிகலின் பெயர் ஆஸ்கர் அரங்குகளில் ஒலித்திடும் அளவுக்கு புகழ் பெற்றது. மற்றபடி சமீப காலங்களில் ஆலிவுட்டில் ம்யூசிகல்கள் அவ்வளவாக பிரசித்தம் கிடையாது.
கடந்த சில நாட்களாக வேற்று கிரக உயிர் பற்றி எல்லாம் தொடர் எழுதி மண்டை காய்ந்திருந்ததால் இன்று (11-ஜூலை-2007) இந்த படத்தை பார்க்க முடிவு செய்தேன்!!!படத்தை பார்த்து முடித்தவுடன் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி மனதில் கமழ உடனே இந்த பதிவை எழுத ஆரம்பித்து விட்டேன்.

"Singing in the rain" 1952-இல் வெளியான ஒரு காமெடி ம்யூசிகல் படம். படத்தின் கதை இதுதான். டான் லாக்வுட் (Don Lockwood) மற்றும் லீனா லெமோண்ட(Lina Lemont)் ஆலிவுட்டில் புகழ்பெற்ற நடிகன்/நடிகை. இவர்கள் ஜோடியாக நடிக்கும் படங்கள் எல்லாமே மிகப்பிரபலம்.இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் லீனா லெமோண்ட் ஒரு அழகி என மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவரின் குரல் ஒரே கீச்சு கீச்சென்று இருக்கும். அது ஊமை படங்கள் வெளி வந்த காலங்கள் என்பதால் பிரச்சினை எதுவும் இல்லாமல் இருந்தது இந்த நிலையில் நம் கதாநாயகன் தற்செயலாக கதாநாயகி கேத்தி செல்டனை (Kathy Seldon) சந்திக்கிறார். கேத்தி ஒரு வளர்ந்துவரும் நடிகை,நடிப்புத்தொழிலில் தனக்கான இடத்தை பிடிக்க முயன்று வருபவர். இருவருக்கும் இடையே சிறிது வாய்துடுக்கு பேச்சு என கலகலப்பாக அறிமுகம் ஏற்பட்டாலும் கதாநாயகியை கதாநாயகனுக்கு முதலில் இருந்தே பிடித்து விடுகிறது. சந்தர்ப்ப வசத்தால் இருவரும் ஒரே பட நிறுவனத்தில் வேலை செய்கிற வாய்ப்பு அமைகிறது,இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.

இந்த சமயத்தில் பேசும் படங்கள் ஆலிவுட்டில் அறிமுகம் ஆகின்றன , நம் கதாநாயகனின் கம்பெனிக்கு பிரச்சினை. இதுவரை லாக்வுட்-லமோண்ட் நட்சத்திர ஜோடியை வைத்து படம் எடுத்துக்கொண்டு வந்தவர்களுக்கு என்ன செயவதென்று புரியவில்லை. லமோண்ட்டின் குரல் தான் கீச்சு கீச்சென்று இருக்கிறதே!! இந்த குரலை வைத்து படம் எடுத்தால் மக்கள் எள்ளி நகையாட மாட்டார்களா??
ஏற்கெனவே அவர்கள் இருவரையும் வைத்து குரலுடன் எடுத்த படத்தை பரிட்சார்த்த முறையில் திரையிட்டால் மக்கள் காறித்துப்பி மானத்தை வாங்கி விடுகிறார்கள். என்னடா இப்படியாகிவிட்டதே என்று எல்லோரும் இடிந்து போகும் வேலையில் தான் காதாநாயகனின் நண்பர் காஸ்மோ பிரவுன் (Cosmo Brown) ஒரு அற்புதமான ஐடியாவை சொல்கிறார். கதாநாயகி கேத்தியின் சாரீரம் தான் நன்றாக இருக்கிறதே!! அவரின் குரலை லெமோண்ட்டிற்கு பயன்படுத்தி படத்தை ஒரு ம்யூசிகள் ஆக்கி விடலாம் என திட்டம் தீட்டுகிறார். இது அந்த பட கம்பெனி அதிபருக்கும் பிடித்து விடுகிறது. ஆனால் லேமோண்டிற்கும் கேத்திக்கும் எப்பொழுதுமே ஆகாது என்பதால் லெமோண்டிற்கு தெரியாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறார்கள்.ஒரு சமயத்தில்் இது லெமோண்டிற்கு இது எப்படியோ தெரிந்து போய் விடுகிறது. லேமோண்ட் பெருத்த கோபம் கொள்கிறார். ஒரு கட்டத்தில் படத்தில் பாடல்கள் எல்லாம் தானே தான் பாடியதாக பத்திரிக்கைகளுக்கு பொய் செய்தி அனுப்பி எல்லோரையும் தர்ம சங்கடத்திற்குள்ளாக்குகிறார். இப்படி சூழ்ந்துகொள்ளும் குழப்பத்தில் கடைசியில் என்ன ஆகிறது?? கேத்தியின் திறமை வெளி உலகத்திற்கு தெரியாமலே போய் விடுமா?? லாக்வுட் மற்றும் கேத்தியின் காதல் என்ன ஆகிறது??? இந்த கேள்விகளுக்கான விடையை வெள்ளித்திறையில் காண்க!! :-)

ம்யூசிகல் என்பதால் இந்த படத்தில் பாடல்கள் தான் மிக முக்கியமான ஒரு அங்கம். நம்ம தமிழ் படங்களில் சராசரியாக இருப்பதை விட பாடல்களும் அவற்றின் கால அளவும் அதிகமாக தோன்றினாலும்,பல பாடல்கள் கதையை ஒற்றியே அமைந்ததாக எனக்கு தோன்றியதால,் என்னால் அவற்றை பெரிதும் ரசிக்க முடிந்தது. அதுவும் கதாநாயகன் லாக்வுட்டாக நடிக்கும் ஜீன் கெல்லியும் (Gene Kelly), அவரின் நண்பராக நடிக்கும் டானல்ட் ஓ கான்னரும்் (Donald O Connor) அவர்களின் நடனத்திறமையால் அசத்தியிருக்கிறார்கள். தட்டு ஆட்டம் (Tap dancing) வகையை சேர்ந்த அவர்களின் ஆட்ட ஜாலம் என்னை திறந்த வாய் மூடாமல் பார்க்க வைத்தது. கதாநாயகியும் தன் பங்குக்கு தன் ஆட்டத்திறமையால் அசத்தியிருக்கிறார். மூவரும் சேர்ந்து ஆடுவது போல் அமைந்திருக்கும "Good morning"் பாட்டு மிக அருமை. பாடல்கள் பழைய பாணியில் இருப்பதால் சில பேருக்கு நடுவில் சற்றே தொய்வளிக்கலாம் , ஆனால் எனக்கு ரசிக்கும் படியாகத்தான் இருந்தது. அதுவும் "Broadway Melody Ballet" பாட்டின் காட்சியமைப்பு அதி அற்புதம். கதாநாயகனும் அவர் நண்பரும் பேச்சு பயிற்ச்சியாளரை கலாய்த்து கொண்டு பாடும் "Moses" பாட்டில் சரியான கலாட்டா!!

படத்தின் பெயர் கொண்டு ஆரம்பிக்கும் "Singing in the rain" மிக புத்துணர்ச்சியான பாடல். இதை பார்க்கும் போது என் மனம் என்னையும் அறியாமல் மௌன ராகம் படத்தில் வரும் "ஓஹோ..மேகம் வந்ததோ" பாட்டைநினைவு படுத்திக்கொண்டது!!! அனேகமாக இரு பாடல்களும் ஒரே ராகத்தில் அமைந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை,இசை பற்றி தெரிந்தவர்கள், உண்மையாகவே இந்த இரண்டு பாடல்களிலும் ஒற்றுமை உள்ளதா ,இல்லை எல்லாம் "மனப்பிராந்தியா" என்று எடுத்து சொன்னால் உண்டு. பாடல் எடுக்கப்பட்ட விதமும் நம் மௌன ராகம் பாடலை நினைவு படுத்தியது. மணிரதனம் "மௌன ராகம்" படம் எடுப்பதற்கு முன் இந்த படத்தை நிச்சயமாக பார்த்திருப்பார் என்று தோன்றியது.
கதாநாயகனின் நண்பன் காஸ்மோ பிரவுன் பாடுவதாக அமைந்திருக்கும் "Make them laugh" எனும் பாட்டு அவரின் சிறந்த திறைமைக்கு சரியான தீனி.

கதாநாயகனும் அவர் நண்பரும் சேர்ந்து கலக்கும் ஒரு பாட்டை இப்பொழுது கொஞ்சம் பாருங்கள





படத்தின் பாத்திரங்கள் அத்தனை பேரும் மிக அழகாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகன் நடனத்திலும் காமெடி காட்சிகளிலும் கலக்குகிறார்.இந்த படத்தில் இணை இயக்குனராகவும்,நடன இயக்குனராகவும் அவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகி கேத்திக்கு் சரியான ஜோடி. கேத்தியாக நடிக்கும் டெப்பி ரேனோல்ட்ஸ் (Debbie Reynolds) படத்தில் அழகாக மிளிர்கிறார் (நமீதா கூட மார்ஃப் பண்ணி நம்மள டேமேஜ் பண்ணதுக்கு பதில இவிங்க கூட மார்ஃப் பண்ணியிருந்தாலாவது சந்தோஷமா இருந்திருக்கும் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்). இருவரின் திரை இரசாயனம் (On - screen chemistry ஹி ஹி) நன்றாக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. கதாநாயகனின் நண்பனாக நடிக்கும் டானல்ட் அவரின் நடிப்பு,நடனம்,முக அசைவுகள்,காமெடி சென்ஸ் என புகுந்து விளையாடுகிறார். படத்தில் வில்லியாக வரும் ஜீன் ஹேகன் (Jean Hagen) உட்பட படத்தில் நடிக்கும் அனைவரும் குறையின்றி அவரவர் பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்!!
உங்கள் ரசனைக்கு இந்த படம் எந்த அளவுக்கு ஒத்து வரும் என்று தெரியவில்லை ஆனால் எனக்கு இந்த படம் மிகவும் பிடித்திருந்தது. விக்கிபீடியாவில் சற்றே நோட்டம் விட்ட போது இந்த படத்தின் பாடல் காட்சிகளுக்கு எவ்வளவு உயிரை கொடுத்து ஆடிப்பாடி நடித்திருக்கிறார்கள் என்று தெரியும்.
உதாரணத்திற்கு சொல்லப்போனால்

1.) "Singing in the rain" பாட்டிற்கு சொட்டச்சொட்ட தண்ணீரில் நனைந்தபடி நடித்துக்கொண்டிருந்த போது ஜீன் கெல்லிக்கு 103 டிகிரி ஜுரம் கொதித்துக்கொண்டிருந்ததாம்.

2.) டெப்பி ரெனோல்ட்ஸுக்கு சரியாக ஆட தெரியவில்லை என்று ஜீன் அவரை படப்பிடிப்பின் போது கன்னாபின்னா என்று திட்டி இருக்கிறாராம். கடுமையாக பயிற்சி செய்து இந்த படத்தில் நடித்து கொடுத்தாராம். "Good Morning" பாட்டு நடித்து முடிக்கும் போது அவர் காலில் இருந்து ரத்தம் கசிந்ததாம்.

3.) "Make then laugh" பாட்டு எடுத்து முடித்ததும் அதில் அதிமாக சிரமம் எடுத்து நடித்தால் டானல்ட் ஓ கானரை ஒரு வாரத்திற்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாம்!!

இப்படி இன்னும் சில

எது எப்படியோ இது வரை எடுக்கப்பட்ட ம்யூசிகல்களிலேயே தலைசிறந்த படம் இதுதான் என்று பல இடங்களில் குறிப்பிடப்படும் பெருமை இந்த படத்திற்கே சாரும்!!
கடைசியாக சொல்லவேண்டும் என்றால் ,நான் ரசித்ததை போல் உங்களுக்கும் இந்த படம் விருந்தாக அமைந்தால், மகிழ்ச்சி. :-)

வரட்டா?? :-)

References:
http://en.wikipedia.org/wiki/Singin%27_in_the_Rain_%28film%29

படங்கள் :
http://www.brooklynrecord.com/archives/09singing.jpg
http://www.gonemovies.com/WWW/MyWebFilms/Drama/SingingTrap.jpg
http://www.poster.net/anonymous/anonymous-gene-kelly-singing-in-the-rain-2400101.jpg
http://images.greencine.com/images/article/musicals-rain.jpg
http://en.wikipedia.org/wiki/Image:SingingKathy.jpg

23 comments:

ILA (a) இளா said...

அடேங்கப்பா, ஒரு ஆங்கிலபடத்த இந்த அளவுக்கு ஆராய்ந்து பதிவு போட்டதா ஞாபகம் இல்லீங்க. படம் வட்டுலையாவது கிடைக்குதான்னு பார்க்கிறேன்

Unknown said...

CVR, A detailed review with a lot of info, I have seen the movie in the Youtube, the dance performance is fantastic.
This is another one from the Movie
http://www.youtube.com/watch?v=FW02c5UNGl0

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

CVR,

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! Singing in the rain' எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று! goodmorning பாட்டு இப்போ மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. :)

கதை, அச்சு அசல் நம்மூருக்கு ஏற்ற காதல் கதை இல்ல?

Singing in the rain பாடற்காட்சியை அடியொற்றித்தான் மௌனராகம் பாடற்காட்சியும் அமைக்கப்பட்டது. ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டிப் படித்த முதல் விமர்சனம் என்ற படியால் மௌனராகம் விமர்சனம் அப்படியே நினைவிருக்கிறது. ;) Singing in the rain பற்றிக் கேள்விப்பட்டதும் அங்கேதான். ஹிந்து பத்திரிகை விமர்சனத்தில் இந்தத் தொடர்பைக் குறிப்பிட்டிருந்தார்கள்.

ஜீன் கெல்லி, Singing in the rain பாடற்காட்சியில் எந்தெந்த puddleஇலில் எப்படிக் குதிக்க வேண்டும் என்பதையும் முன்பே தீர்மானித்துப் படம் பிடித்ஹார்களாம். ஆச்சரியமாகவில்லை?

அருமையான விமர்சனத்திற்கு நன்றி cvr.

-மதி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எது எப்படியோ இது வரை எடுக்கப்பட்ட ம்யூசிகல்களிலேயே தலைசிறந்த படம் இதுதான்//

சற்றே மிகைப்படுத்தப்பட்ட வாசகம்!

பல மியூசிக்கல்கள் பின்னாளில் வந்தாலும்...நிறைய ஜாலியும் காமெடியும் கலந்த மியூசிக்கல் என்று வேண்டுமானால் சொல்லலாம்!
சீரியசான ஹாலிவுட் படங்கள் வந்து கொண்டிருந்த போது, இப்படி ஜாலியும் இசையும் கலந்து கொடுத்த முன்னோடி Singing in The Rain!

இதோ அடியேன் Musical பட்டியல்! உங்கள் நூலகத்தை வாட்டி எடுக்க :-)
An American in Paris
Saturday Night Fever
Pink Floyd the Wall
Chicago (இது broadway show ஆகவும் இப்போதும் நடக்குது! நீங்கள் நியுயார்க் வரும் போது அழைத்துச் செல்கிறேன் CVR)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஓஹோ...மேகம் வந்ததோ....நிச்சயம் இதன் இன்ஸ்பிரேஷன் தான்! நன்றி CVR இந்தப் பட விமர்சனத்துக்கு!

இந்தப் படத்தின் பாடல்களையும் சில பிட்டுகளையும் முன்பே கேட்டுள்ளேன்...நீங்கள் தொலைபேசியில் சொன்ன உடனேயே, ஆர்வம் உந்த, blockbuster-இல் எடுத்து உங்களுக்குத் தெரியாமல் கள்ளத்தனமாகப் பார்த்து விட்டேன் :-)

//கேத்தியாக நடிக்கும் டெப்பி ரேனோல்ட்ஸ் (Debbie Reynolds) படத்தில் அழகாக மிளிர்கிறார் (நமீதா கூட மார்ஃப் பண்ணி நம்மள டேமேஜ் பண்ணதுக்கு பதில இவிங்க கூட மார்ஃப் பண்ணியிருந்தாலாவது //

இது உண்மை உண்மை...முற்றிலும் உண்மை!
கண்களில் நீர் கோத்து அழும் போது கூட என்னவொரு அழகு!

கவலையை விடுங்க CVR!
அடுத்த முறை என்னை morph செய்யும் போது இவர்களுடன் சேர்த்துச் செய்யச் சொல்கிறேன்! Thurgah, Your Honor...Please note this pointe! :-)

உங்கள் நண்பன்(சரா) said...

CVR உங்களின் பதிவில் நான் இடும் முதல் பின்னூட்டம் என்று நினைக்கின்றேன், இதுபோல் தங்களுக்குப் பிடித்த படங்களை தொடந்து பதிவிடவும்.அருமையான விமர்சனம் நண்பரே! பகிர்ந்தமைக்கு நன்றி!

Anonymous said...

myself also enoyed the dancing - how they are dancing - athe staps are so fast - fatastic -
friend

My days(Gops) said...

remba nalla eludhi irukeeenga cvr..
vimarsanam topu... andha dance chancey illa cvr.... kalakals..
thanks for the link.... :)

Ayyanar Viswanath said...

சிவிஆர் அட்டகாசமான விமர்சனம் .நல்ல விரிவா எழுதி இருக்கீங்க

மியூசிக்கல் படங்கள் பார்க்க ரொம்ப நல்லாருக்கும்..ஆனா பல பேர் அறுவைம்பாங்க :)
இந்த படம் எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.
அப்படியே இந்த மியூசிக்கல் படங்களையும் பாருங்க
sound of music
oliver
wizart of oz
my fair lady
cabaret

ம்ம்.. இன்னும் நிறைய இருக்கு நினைவுக்கு வரும்போது சொல்றேன்

CVR said...

@இளா
வாங்க விவசாயி!!
இப்போ எல்லாம் ஆராய்ச்சி கட்டுரையா போட்டு போட்டு பட விமர்சனம் கூட ஆராய்ச்சி கட்டுரை ரேஞ்சுக்கு எழுத தோனுது!! :(
என்ன பண்ணுறது! :D

@நெல்லை காந்த்

//I have seen the movie in the Youtube, the dance performance is fantastic.
//
உண்மைதான் காந்த்,அதை பார்த்து தான் நான் அசந்து விட்டேன்.

//This is another one from the Movie
http://www.youtube.com/watch?v=FW02c5UNGl0 //
இணைப்புக்கு நன்றி. இந்த பதிவை எழுதும் போதே இந்த படத்தின் பாடல்கள் பலவற்றை யூ ட்யூபில் பார்த்தேன்!! :-)
பிறகு கடைசியாக இந்த பாடலை தேர்ந்தெடுத்து பதிவிட்டேன்!! :-)
கருத்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)

@மதி கந்தசாமி

வாங்க மதி.
//ஜீன் கெல்லி, Singing in the rain பாடற்காட்சியில் எந்தெந்த puddleஇலில் எப்படிக் குதிக்க வேண்டும் என்பதையும் முன்பே தீர்மானித்துப் படம் பிடித்ஹார்களாம். ஆச்சரியமாகவில்லை?//
ஹ ஹா!! அது மட்டுமா!! அவர் தண்ணீரை உதைக்கும்போது அது தெறிப்பது அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக அதில் பாலை கலந்திருந்தார்களாம் தெரியுமா??

ஒரு நல்ல படத்தை எவ்வளவு எல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது!! :-)

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி

@கே.ஆர்.எஸ்

////எது எப்படியோ இது வரை எடுக்கப்பட்ட ம்யூசிகல்களிலேயே தலைசிறந்த படம் இதுதான்//

சற்றே மிகைப்படுத்தப்பட்ட வாசகம்!//
நான் சொல்வதை முழுசா பாருங்க தலைவா.நான் என்ன எழுதியிருந்தேன் என்றால்
"எது எப்படியோ இது வரை எடுக்கப்பட்ட ம்யூசிகல்களிலேயே தலைசிறந்த படம் இதுதான் என்று பல இடங்களில் குறிப்பிடப்படும் பெருமை இந்த படத்திற்கே சாரும்!!"

நான் இந்த படத்தை வாங்கி வந்த போது ,அட்டையில் இது குறிப்பிடப்பட்டிருந்ததை பார்த்தேன். அதுவும் தவிர விக்கியில் பல்வேறு வெகு ஜன ஊடகங்களில் இது தலை சிறந்த ம்யூசிகல் என குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று போட்டிருந்தார்கள்.
//The movie is frequently described as one of the best musicals ever made,[1] topping the AFI's 100 Years of Musicals list, and ranking tenth in its list of the greatest American films.//

http://en.wikipedia.org/wiki/Singin%27_in_the_Rain_%28film%29#_note-0
அதனால் தான் நானும் பதிவில் அப்படி சொன்னேன். இது என் சொந்த கருத்து அல்ல!! :-)

//நீங்கள் தொலைபேசியில் சொன்ன உடனேயே, ஆர்வம் உந்த, blockbuster-இல் எடுத்து உங்களுக்குத் தெரியாமல் கள்ளத்தனமாகப் பார்த்து விட்டேன் :-)//
நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று தெரிந்து தான் நானும் தொலைபேசியில் அப்படி ஒரு வார்த்தை போட்டு வைத்தேன்!! :D


//கவலையை விடுங்க CVR!
அடுத்த முறை என்னை morph செய்யும் போது இவர்களுடன் சேர்த்துச் செய்யச் சொல்கிறேன்! //
ஆசைதான்!! :P
இருங்க அண்ணி கிட்ட சொல்றேன்!! :D

@சரா
//CVR உங்களின் பதிவில் நான் இடும் முதல் பின்னூட்டம் என்று நினைக்கின்றேன்//
இனிமே அடிக்கடி வந்துட்டு போங்க சரா!! :)
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.


@கோப்ஸ்
//remba nalla eludhi irukeeenga cvr..
vimarsanam topu... andha dance chancey illa cvr.... kalakals..
thanks for the link.... :) //

எல்லா புகழும் ஜிராவிற்கே!!
இந்த படத்தை பார்க்க சொன்னதும்,பார்த்துவிட்டு பதிவு போடு என்று ஊக்குவித்ததும் அவர்தான்!! :)
பாடல் உங்களுக்கு பிடித்தொருந்ததில் மகிழ்ச்சி


@அய்யனார்
வாங்க அய்யனார்.
//மியூசிக்கல் படங்கள் பார்க்க ரொம்ப நல்லாருக்கும்..ஆனா பல பேர் அறுவைம்பாங்க :)//

நானும் படத்தை பார்ப்பதற்கு முன் அப்படி தான் நினைத்தேன்!! :)

//இந்த படம் எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.
//
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ,இந்த படத்திற்கு இத்தனை ரசிகர்கள் இருப்பார்கள் என்று நான் நினைத்து பார்க்கவே இல்லை.
உங்களுக்கு இந்த படம் பிடித்த படம் என்று அறிந்ததில் மகிழ்ச்சி!! :)

G.Ragavan said...

singing in the rain is one of the best movies ever made. இப்படிச் சொல்வது உயர்வு நவிற்சியல்ல. ஆனால் உண்மை. ஆங்கிலத்திரைப்படங்களில் Gone with the wind, Roman holiday வரிசையில் singing in the rain படத்துக்கும் ஒரு சிறப்பான இடமுண்டு.

ஜீனி கெல்லி, டெபி ரெனோல்ட்ஸ், டொனால்ட்ஸ் ஓ கொனர் கூட்டணி படத்தைக் கலக்கியது என்றால் யேன் ஹேகன் பெருங்கலக்கு கலக்கியிருப்பார்.

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//எது எப்படியோ இது வரை எடுக்கப்பட்ட ம்யூசிகல்களிலேயே தலைசிறந்த படம் இதுதான்//

சற்றே மிகைப்படுத்தப்பட்ட வாசகம்! //

மிஸ்டர். ரவி. நீங்க சொன்னத ஒடனடியா திரும்ப வாங்கலைன்னா மிகக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்னு மிகமிகக் கடுமையா எச்சரிக்கிறேன்.

// இதோ அடியேன் Musical பட்டியல்! உங்கள் நூலகத்தை வாட்டி எடுக்க :-)
An American in Paris
Saturday Night Fever
Pink Floyd the Wall
Chicago (இது broadway show ஆகவும் இப்போதும் நடக்குது! நீங்கள் நியுயார்க் வரும் போது அழைத்துச் செல்கிறேன் CVR) //

I totally reject all the movies you have listed under the musical category. I know "An american in Paris" ( I know Indian too ;) ) Itz not worth to compare with Singing in the Rain. And just imagine about fantastic musicals like Sound of Music. Then King and I....How dare you ignore these movies and list such movies.!!!!!! atrocious and outrageous.

கோபிநாத் said...

ஆஹா...தலைவா

சூப்பராக விமர்சனம் ;)))

இது போன்ற நல்ல ஆங்கிலபடங்களை பற்றி எழுதுங்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//CVR said...
நான் சொல்வதை முழுசா பாருங்க தலைவா.
இது வரை எடுக்கப்பட்ட ம்யூசிகல்களிலேயே தலைசிறந்த படம் இது தான்...
The movie is frequently described as "one of the best" musicals ever made//

ஐயா, Singing CVR அவர்களே! :-)
விக்கியில் கூட one of the best என்று தான் சொல்லியுள்ளார்கள். அதை விட்டுவிட்டு இது தான் தலைசிறந்த என்று மொழிபெயர்த்து விட்டீர்கள்!
தலைசிறந்த தலையை என்ன செய்யலாம்?:-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மிஸ்டர். ரவி. நீங்க சொன்னத ஒடனடியா திரும்ப வாங்கலைன்னா மிகக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்னு மிகமிகக் கடுமையா எச்சரிக்கிறேன்//

அடேங்கப்பா....CVR......
என்னை மிரட்டச் சொல்லி என் நண்பர் ஜிராவை மிரட்டி இருக்கீங்க! ஹூம்...

ஜிரா வாபஸ் வாங்கிட்டேன் தல!
"சற்றே மிகைப்படுத்தப்பட்ட வாசகம்!" - இதில் சற்றே-வை மட்டும் வாபஸ் வாங்கி விட்டேன்!
போதுமா? :-)

// totally reject all the movies you have listed under the musical category. I know "An american in Paris" ( I know Indian too ;) //

தெரியுமே! யாரு அந்த Indian in Paris, Thamizhan in Paris, Every weekend in Paris, எல்லாம் எமக்குத் தெரியும்! :-)

Singing in the rain - Nominated for 2 Oscars.
An American in Paris - Reputed to be Gene Kelly's favorite of all his films - Won 6 Oscars

போதுங்களா அண்ணாத்த?
Paris-இல் நீங்க நினைச்சது நடக்கலை-ங்கிறத்துக்காக American in Paris வெறுக்கலாமா? :-)))

Sound of Music. King and I எல்லாமும் சிறந்த படங்களே! ஆனால் நான் இட்ட பட்டியல், musical களின் பரிணாம வளர்ச்சி!
Singing in the rain இல் தொடங்கிய அற்புதம், இசை மற்றும் நடனத்தையும் தாண்டி, மிக ஆழமான கதைக் களனையும் Musicalகளில் வைக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவை!

அதன் அண்மைக் கால அற்புதம் Chicago. அங்கு ஒரு Debbie Reynolds என்றால் இங்கு ஒரு Catherine Zeta-Jones!
How dare you ignore The Chicago on your list? atrocious! outrageous! anachronous! autocratic!!!!!!!!!!!!!!!!!!!!

Dreamzz said...

இந்த படம் நானும் பாக்கனும்! இனிமே தான்!

Dreamzz said...

நீங்க சொன்னப்பறம் சீக்கிரம் படம் பாக்கனும்!

CVR said...

//ஐயா, Singing CVR அவர்களே! :-)
விக்கியில் கூட one of the best என்று தான் சொல்லியுள்ளார்கள். அதை விட்டுவிட்டு இது தான் தலைசிறந்த என்று மொழிபெயர்த்து விட்டீர்கள்!
தலைசிறந்த தலையை என்ன செய்யலாம்?:-)//

மன்னிக்க வேண்டும் கே.ஆர்.எஸ்,விக்கியில் உள்ள வரிகளை எடுத்துக்கொண்டால் நான் எழுதியது சரியான மொழி பெயர்ப்பு அல்ல!!
தவறுக்கு வருந்துகிறேன்.

ஆனால் பொதுவாக பல இடங்களில் இந்த படம் எல்லாவற்றையும் விட தலைசிறந்த ம்யூசிகல் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை நான் பார்த்தாலேயே அந்த வரியை இணைத்தேன்.

உதாரணத்திற்கு.
"No one even bothers to argue about it any more--by any standard and international consensus, this is the best movie musical of them all."
http://www.amazon.com/Singin-Rain-Cyd-Charisse/dp/0790743507

'"Just about the best Hollywood musical of all time," wrote Pauline Kael about SINGIN' IN THE RAIN'

"Hollywood's best musical"


"At the time, this film was treated as just another MGM musical but over the years it has gained in stature and is now considered as one of the best American films ever made--Read why."
http://www.rottentomatoes.com/m/singin_in_the_rain/

Rotten Tomatoes-ஐ பற்றி உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்! :)

"Singin' in the Rain is considered by many people to be among the best Hollywood musicals of all time"
http://www.reelviews.net/movies/s/singin_rain.html

"In short, this is not only the best musical ever made...this has to be looked at as one of the top ten best overall movies ever made. If you're ever blue, this movie is the ulitmate pick-me-up...guaranteed."
http://video.barnesandnoble.com/search/product.asp?ean=012569562127

இப்படி பல!!! :-)

CVR said...

@அனானி ஃபிரண்ட்
உங்கள் பின்னூட்டத்திற்கு காலையில் பதிலளிக்கவில்லை மன்னிக்கவும்.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

@ட்ரீம்ஸ்
சீக்கிரம் படம் பாத்துட்டு பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க தல!! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// CVR said...
மன்னிக்க வேண்டும் கே.ஆர்.எஸ்,விக்கியில் உள்ள வரிகளை எடுத்துக்கொண்டால் நான் எழுதியது சரியான மொழி பெயர்ப்பு அல்ல!!தவறுக்கு வருந்துகிறேன்//

ஐயோ CVR! கொஞ்ச நேரம் உங்க கூட விளையாடக் கூட விடமாட்டீங்களா? உடனே இப்பிடியா?

//Rotten Tomatoes-ஐ பற்றி உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்! :)//

ஆகா...நல்லாத் தெரியும். உங்களுக்குக் கோபம் வரும் போது எடுத்து எறிவீங்களே! அதானே!
பாருங்க...மறுபடியும் மிரட்டறீங்க...நான் என்ன செய்ய!

மறுபடியும் பாவம் ரொம்பவே தேடிப் பிடிச்சு, எல்லா reviewகளையும் போட்டுள்ளீர்கள்! நன்றி CVR!
Singing in the Rain is undoubtedly one of the best musicals ever produced. More importantly, it set the starting point of success for Musicals in Hollywood. ஏன் அதற்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை! Nominationஓடு நின்று விட்டது!

நான் சொல்ல வந்தது என்னவென்றால், Singing in the Rain-இல் தொடங்கிய அற்புதம்...படிப்படியாகக் காலத்துக்கு ஏற்றா மாதிரி வளர்ந்து, மேலும் பல நல்ல Musicalகளைக் கொடுத்துள்ளது!
Also, more plot was successfully introduced in the musicals as they evolved.

An American in Paris - Reputed to be Gene Kelly's favorite of all his films.
http://www.imdb.com/title/tt0043278/trivia

The movie was named as one of "The 20 Most Overrated Movies Of All Time" by Premiere
சரி...போதும் சுட்டிக்குச் சுட்டியா போயிக்கிட்டே இருக்கும்! :-)))

G.Ragavan said...

// CVR said...
மன்னிக்க வேண்டும் கே.ஆர்.எஸ்,விக்கியில் உள்ள வரிகளை எடுத்துக்கொண்டால் நான் எழுதியது சரியான மொழி பெயர்ப்பு அல்ல!!தவறுக்கு வருந்துகிறேன்//

என்னதிது? நீ என்னத்துக்கு மன்னிப்பு கேக்கனும்? நீ என்ன தப்பாச் சொல்லீட்ட? அவரு சொன்னதுதான் தப்புன்னு அப்பவே தட்டி வெச்சுட்டோமே ;) அப்புறம் என்னத்துக்கு மன்னிப்பு தண்டிப்புன்னு.

சி.வி.ஆர்: ஜிரா
நான்: கம்முண்ணு கெட :)

// Singing in the rain - Nominated for 2 Oscars.
An American in Paris - Reputed to be Gene Kelly's favorite of all his films - Won 6 Oscars //

இங்க பார்ரா கூத்த....தல ஒன்னுதான இருக்கு. வெரலு பத்திருக்கு. எது பெருச்சுன்னு கேக்குறார்ப்பா ரவி. தலைக்குன்னு ஒரு வேல...விரலுக்குன்னு ஒரு வேல. ஒத்துக்கிறேன். ஆனா தலையில்லாம விரல் இல்லை. விரல் இல்லாம தலையுண்டு. ;)

தேசிய விருது எம்.ஜி.ஆருக்குக் குடுத்திருக்காங்க. நடிகர் திலகத்துக்குக் குடுக்கலை. இதுவும் தெரியுந்தானே. ;)

// அதன் அண்மைக் கால அற்புதம் Chicago. அங்கு ஒரு Debbie Reynolds என்றால் இங்கு ஒரு Catherine Zeta-Jones!
How dare you ignore The Chicago on your list? atrocious! outrageous! anachronous! autocratic!!!!!!!!!!!!!!!!!!!! //

ஆரமுதுண்ணுதற்கோர் ஆசை கொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவரோ! பால் போலக் கள்ளும் உண்டு. நிறத்தாலே ரெண்டும் ஒன்று.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
தேசிய விருது எம்.ஜி.ஆருக்குக் குடுத்திருக்காங்க. நடிகர் திலகத்துக்குக் குடுக்கலை. இதுவும் தெரியுந்தானே. ;)//

ஆகா...புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கே உ.குத்தா? :-))
ஏ தமிழகமே! வீறு கொண்டு எழு!

// அங்கு ஒரு Debbie Reynolds என்றால் இங்கு ஒரு Catherine Zeta-Jones!//
ஆரமுதுண்ணுதற்கோர் ஆசை கொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவரோ! //

ஆகா...கரெக்டு தான்...எனக்குக் கள் குடிக்கும் பழக்கம் இல்ல! So கள்ளில் அறிவைச் செலுத்தல!
ஆனா ஜிராவுக்கு பாருங்க டோய்! ஆரமுது உண்ணுதற்கு ஆசை கொண்டாராமே! ஆகா...ஆரமுது ஆசை நிறைவேறுச்சா ஜிரா? :-))

களவாணி said...

பழைய படங்கள்ல எனக்கு பிடித்த விஷயங்கள்ல ஒன்னு, வச்சி எடுத்திருப்பாங்க. அதுக்காக டைரக்டர் நடிகர்களை காய்ச்சு எடுத்திருவாரு. இந்த நடன காட்சிலயும் அதை நான் ரசிச்சேன். விமர்சனத்துக்கு நன்றி சி.வி.ஆர்.

களவாணி said...

//இந்த கேள்விகளுக்கான விடையை வெள்ளித்திறையில் காண்க!! :-)//

என்ன தல எங்கள வச்சி காமிடிலாம் பண்றீங்களா? இந்தப் படத்த பூனேல பார்க்க ஒரு டிக்கெட் புக் பண்ணித் தாங்க. வெள்ளித் திரைல பார்க்கிறேன். ;) விமர்சனம் அருமையா இருந்தது. நான் என்னமோ உலக சினிமா மாதிரி பூரா கதையையும் எழுதியிருப்பீங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன்...

நல்ல விமர்சனம். இன்னும் நிறய போடுங்க தல...

அப்புறம் இவரை பார்க்கத் தூண்டின ஜி.ராகவனுக்கும் நன்றிகள்...

Related Posts Widget for Blogs by LinkWithin