இதயத்தின் ஒலிகள் புரிந்துவிடில் மனிதற்கு மொழியே தேவை இல்லை

சில சமயங்களில் எதுமே் கேட்க விருப்பமில்லை.ஒலிகளை குறைத்துக்கொள்ள ஆர்வம் மேலிடுகிறது.
தூரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பெரும் ஊர்தியின் ஓசை,தற்போது விசைப்பலகையில் வார்த்தைளை தட்டிக்கொண்டிருக்கும் சத்தம்,மௌனமாக இருப்பது போல் பாசாங்கு செய்துக்கொண்டு மெலிதாக பிண்ணனியில் ஒலித்துக்கொண்டிருக்கும் ஹீட்டரின் சத்தம்.இவை தவிர வேறு ஒலிகள் கேட்கவில்லை.அவ்வப்போது உடல் அசைவினால் ஏற்படும் மெல்லிய சத்தங்கள் மட்டுமே இந்த வழக்கமான சத்தங்களில் இருந்து வேறு படுகிறது.
இவை தவிர முழுவதும் மனதின் சத்தங்கள் தான்.பார்த்த படித்த பேசிய விஷயங்களின் எண்ணங்கள் கனீரென்று மனதில் இருந்து ஒலிக்க ஆரம்பிக்கின்றன.
"இதயத்தின் ஒலிகள் புரிந்துவிடில் மனிதற்கு மொழியே தேவை இல்லை" என்ற பாடல்வரிகள் தான் ஞாபகம் வருகின்றன.

இதை கேட்க முடியாமல் தானே மொழிகள் வார்த்தைகள் என்ற சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டோம்.எண்ணங்களை முழுவதுமாக வெளிப்படுத்தும் வார்த்தைகள் எங்கேயாவது கண்டிருக்கிறோமா?? அப்படியே இருந்தாலும் அதை முழுமையாக உபயோகித்து நாம் நினைத்ததை அப்படியே வெளிப்படுத்தும் தேர்ச்சி யாருக்கேனும் இருக்குகிறதா???? வெறும் வார்த்தைகளில் அடைக்க எண்ணி எத்தனை எண்ணங்களை மடித்து கத்தரித்து முடமாக்கி இருக்கிறோம்.அப்படி செய்தும் அதை தெளிவாக வெளிப்படுத்த முடிக்கிறதா? நான் சொல்லும் வார்த்தை எனக்கான அர்த்தத்தோடு!! ஆனால் அவை ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தம்,ஒவ்வொரு புரிதல்கள்,அவரவரின் பிரச்சினைகள்,சந்தேகங்கள்,கோபங்கள்,அனுபவங்களை பொருத்து மாறுபட்டுக்கொண்டு.குழப்பங்கள்,சாடல்கள்,மறுதலிப்புகள்,சண்டைகள்!! மேலும் வார்த்தைகள்,மேலும் மேலும் வார்த்தைகள்,மேலும் குழப்பங்கள்,மேலும் வார்த்தைகள்!!சொல்லாடலின் விளையாட்டுகளில் கேலிப்பொருளாகிவிடும் கருத்துப்பறிமாற்றங்கள். வார்த்தைகளின் பலவீனத்தால் தோற்கடிக்கப்படும் எண்ணங்கள்.

வார்த்தைகள் இல்லையென்றால் உலகில் குழப்பங்கள் இல்லை.கண்களை பார்த்து மனதில் இருப்பதை அறிய முடிந்தால் உலகில் 85% செயல்பாடுகளுக்கு தேவையே இருக்காது என்று தோன்றுகிறது.குழப்பங்களும் குழப்பங்களை களைவதற்குமான தேடல்களும் தான் பலரின் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு சென்றுக்கொண்டிருக்கிறது.குழப்பங்கள் தீர வார்த்தைகளும்,வார்த்தைகளால் குழப்பங்களும்,அதை தீர்ப்பதற்கான தேடல்களும். வெளிப்பாடுகளின் அர்த்தம் புரியாமல் பறந்து விரிந்து செல்லும் தேடல்கள்களோடு.புரிதல் என்பதையே புரிந்துக்கொள்ளாமல், வார்த்தைகளால் இதயத்தின் ஓசையை கேட்கவிடாமல் இரைச்சல் எழுப்பிக்கொண்டிருக்கிறோம். சற்றே அமைதி காத்து உங்களை சுற்றி உள்ள ஒலிகளை கவனித்தது உண்டா??
மின்னஞ்சல்,அரட்டை,பேச்சு,பாட்டு,இசை ஏதுமில்லாமல் உங்களை சுற்றி என்னென்ன ஒலிகள் உள்ளன என்று பட்டியல் போட்டிருக்கிறீர்களா???அவ்வாறு செய்யும் போது ஒரு இரண்டு வயது குழந்தையை போல உங்கள் மனது உங்களிடம் பேசுவதை கேட்டிருக்கிறீர்களா?? வார்த்தைகளின் அலங்காரங்கள் இல்லாமல்,அதன் குழப்பங்கள் இல்லாமல் உங்கள் மனது உங்களிடம் பேசும்.அவரவர் மனதோடு பேச யாருக்கும் வார்த்தைகள் தேவையில்லை. நமது மனதை புரிந்துக்கொள்ளாமல்,அதன் கதறல்களை கேட்காமல் மற்றவர்களின் வெளிப்பாடுகளை பதிவுகளை வார்த்தைகளால் புரிந்துக்கொள்ள முயல்வதில் அர்த்தமே இல்லை.

வார்த்தை இல்லாத புரிதல் பழக பழக,உங்களையே நீங்கள் புரிந்துக்கொள்ளலாம்.உங்கள் பயங்கள்,சந்தேகங்கள்,பாசாங்குகள்,ஆசைகள் ஆகியவற்றை முழுமையாக உணர்ந்துக்கொள்ளலாம்.போகப்போக பிறரிடம் அவருக்குத்தெரியாமலே அவரின் மனதோடு பேச துவங்கிவிடலாம்.உங்கள் மனதோடு பேசி நண்பராகி விட்டதால்,பிறரின் மனதுடன் பேசுவது சுலபமாகிவிடும்.வார்த்தைகள் மூலம் புரிந்தும் புரியாமலும் ஒருவர் வெளிப்படுத்தும் போது,சிரித்துக்கொண்டே அவரின் மனதோடு அவருக்கே தெரியாமல் நீங்கள் பேசத்துவங்கலாம்.வார்த்தைகளற்ற சம்பாஷனைகளை நாம் பழக பழக குழப்பங்களும் குறையும்.
கருத்து பறிமாற்றமற்று வெறும் பேச்சில் மட்டுமே குழுமியிருக்கும் நம் வாழ்வில் புதுமையான புரிதல்களும் பூபூக்கலாம்.
உங்கள் மனதோடு வார்த்தைகளற்று உரையாட தயாரா??



பி.கு:என்ன எழுதவேண்டும் என்றெல்லாம் யோசிக்காமல் மனதில் தோன்றியதை எல்லாம் அப்படியே எழுதியதின் விளைவுதான் இந்தப்பதிவு!
இதற்கு அர்த்தம் புரிந்து,உங்களின் யோசனைக்கு தீனியாக இருந்தால் சந்தோஷம்!!
இல்லனா பையன் ஏதோ ஒளரிட்டு போறான்னு ஃப்ரீயா விடுங்க!! :-)

குறும்பின்றி அமையாது உலகு - 2 (நிறைவு பாகம்)

போன பாகம்

சுந்தர் இரு கை சேர்த்து "வணக்கம் சார்" என்றான். அவரின் புன்னகை சற்றே விரிவடைந்தது.தலையையும் சற்றே அசைத்தார்.அது அவனின் வணக்கத்தை ஏற்றுக்கொண்டது போலும்,அப்படியே அவனை உள்ளே அழைப்பது போலும் இருந்தது.


உள்ளே நுழையும்போது "என்ன சொல்றாரு" என்பது போல சுந்தர் கண்ணாலே அவரின் முதுகுக்கு பின்னால் கேள்வி கேட்க,"எனக்கு என்ன தெரியும்" என்பது போல் தோள்களை குலுக்கி விட்டு ஆனந்தி உதட்டை சுழித்தாள்.
"என்னப்பா?? வீடு எல்லாம் ஒழுங்கா கண்டு பிடிச்சாச்சா??" என்று கேட்டபடி இருக்கையை காட்டினார்.

"பிரச்சினை இல்லை சார்,முன்னமே ஒரு தடவை ஆன்ந்தியை சைட் அடிக்க இந்த பக்கம் வந்திருக்கேன் என்றான் சுந்தர்.
மணிகண்டன் சற்றே புருவத்தை உயர்த்த,ஆனந்தி திடீரென்று உரக்க சிரித்துக்கொண்டே "சுந்தர் இப்படிதான் ,அடிக்கடி ஜோக் அடிச்சிட்டே இருப்பாரு.இதுகூட ஜோக்கு தான்,இல்லையா சந்தர்ர்ர்ர்ர்ர்ர்" என சுந்தரை பார்த்து நறநறக்க.

"ஹி ஹி....ஆமாம் ஆமாம்....ஜோக்கு தான்....ஹி ஹி ஹி" சுந்தர் அசடு வழிந்தான்.

மணிகண்டனின் முகம் சற்றே இறுக்கம் குறைந்தது."வேர்க்க விருவிருக்க வந்திருக்கீங்க,நெற்றியில விபூதியெல்லாம் பூசியிருக்கீங்க,தம்பிக்கு தெய்வ பக்தி அதிகமோ" என்று கேட்டு வைக்க.

"அது சும்மா சீனுக்கு சார்,நான் பெருசா பக்திமான் எல்லாம் கிடையாது" என்று யதார்த்தமாக உளறி வைத்தான்.

"அப்போ சாமி எல்லாம் அவ்வளவா கும்பிட மாட்டீங்களா"என்று மணிகண்டன் சற்றே குரலில் கண்டிப்பு சேர கேட்டார்.

அப்பொழுதுதான் சுந்தருக்கு உறைத்தது.
"ஐ மீன்!! நான் சாமியெல்லாம் பாத்திருக்கேன்,ஐ மீன் கும்பிட்டிருக்கேன்.நான் கோவிலுக்கு எல்லாம் கூட போவேன்.வெள்ளிக்கிழமையெல்லாம் பொண்ணுங்க கூட வருவாங்களே,அந்த கோவிலுக்கு!! அதுக்காக பொண்ணுங்களை பாக்க தான் கோவிலுக்கு போவேன்னு இல்லை,அது பாட்டுக்கு சைட் பை சைட்!! அப்படின்னு நான் சொல்ல மாட்டேன்...ஹி ஹி" என்று இஷ்டத்துக்கு உளறிக்கொண்டு போனான்.

ஆனந்திக்கு கிலி பற்றிக்கொண்டது!!
"சுந்தர்!! இப்போதான் வந்திருக்கீங்க,கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க,நான் போய் உங்களுக்கு ஜூஸ் கொண்டு வரேன்்.வெயில்ல வேற வந்திருக்கீங்க,அதான் கொஞ்சம் மூளை...அதாவது களைப்பாக இருக்கீங்கன்னு சொல்ல வந்தேன்" அப்படியென்று ஆனந்தி சமயறைக்குள் ஓடி ஒளிந்துக்கொள்ள முற்பட்டாள்்.
போவதற்கு முன் மணிகண்டனின் பின்னால் நின்றுக்கொண்டு எல்லா அபினயங்களையும் காட்டி ஏதேதோ சொல்லிவிட்டு சென்றாள்.அறைக்குள் செல்லும் போது."முருகா!!! என்னை காப்பாத்து"என்று முனகிக்கொண்டே தான் போனாள்.

ஆண்கள் இருவரும் ஏதாவது பேசி கொண்டு ஒரு விதமான சமாதான நிலைக்கு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் அவர்களை தனியே விட்டு சென்றாளே தவிர,அவளுக்கு உள்ளுக்குள்பயம் குறைவதாய் இல்லை. சிறிது நேரத்தில் எலுமிச்சை சாறு பிழிந்து ஜூஸ் செய்து எடுத்துக்கொண்டு ஹாலுக்குள் செல்லும் போது இருவரும் ஏதோ வாதிட்டுக்கொண்டிருந்தார்கள்.

"நீங்க என்ன சொன்னாலும் சரி,என்னால ஏத்துக்க முடியாது.இது என் தனி மனித சுதந்திரத்துக்கு விடப்பட்டிருக்கும் சவால்"சுந்தர் கோபமா ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தான்.

"அதுக்காக காலம் காலமா கட்டிக்காத்துட்டு வர பாரம்பரியத்தை விட முடியுமா??எங்க குடும்பத்துல எல்லோரும் இதையே தான் பழக்கமா அனுசரிச்சிட்டு வரோம்"

"அதுக்காக நானும் அதை ஃபாலோ பண்ணனும்னு நீங்க எதிர்பார்க்கறது ரொம்ப தப்பு.இதை என்னால் ஏத்துக்கவே முடியாது" சுந்தரும் பதிலுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
ஆனந்திக்கு ஒன்றும் புரியவில்லை.
"அப்பா!! என்னாச்சு!! எதுக்கு ரெண்டு பேரும் சண்டை போடறீங்க??"என்றாள் பதட்டமாக.

"நீ சும்மா இரும்மா!! நீ இதுல தலையிடாத !! நாங்க என்ன நீங்க எல்லாம் நல்லா இருக்க கூடாதுன்னா சொல்றோம்??? எல்லாம் உங்க நல்லதுக்கு தானே?? இப்படி விதண்டாவாதமா பேசிட்டு இருந்தா எப்படி"
"சுந்தர்! என்ன ஆச்சு?? நான் எவ்வளவு பேசினாலும் பொறுமையா ஜோக் அடிச்சிட்டு இருப்பீங்க!! நீங்களே ஏன் இப்படி சண்டை போடுறீங்க??கொஞ்சம் பொறுமையா இருங்க ப்ளீஸ்" என்று ஆனந்தி நடுவில் சமாதானம் செய்ய முயன்றாள்்.

"என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு ஆனந்தி!! பெரிய மனுஷன்னு நானும் பொறுமையா தான பேசிட்டு இருந்தேன்,ஆனா போக போக பேசிட்டே போறாரு"என்றான் சுந்தர் ரோஷத்துடன்.
ஆனந்திக்கு அழுகையே வந்து விட்டது!! தன்னை உயிரினும்் மேலாக வளர்த்த தந்தை ,தன் மேல் அன்பும் பாசமும் வைத்து உருகி உருகி காதலிக்கும் சுந்தர்,இவர்கள் இருவரும் பேசி நல்ல நண்பர்கள் ஆவார்கள்,எந்த பிரச்சினையும் இன்றி திருமணமும் நடந்து விடும் என்று அவள் நினைத்திருந்தாள்.ஆனால் இவர்கள் இவ்வளவு தீவீரமாக சண்டை போடுவார்கள் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.
"சுந்தர் ப்ளீஸ் எனக்காக கொஞ்சம் நேரம் பொறுமையாக இருங்களேன்,அப்பா நீங்களும் ஏன் இப்படி சண்டை போடுறீங்க"என்று சொல்லிக்கொண்டே அவளின் அப்பவின் அருகில் உட்கார்ந்து அவரின் தோள் மீது கை வைத்தாள்.
அவளின் முகம் இதோ இப்பொழுதே அழ போகிறேன் என்று அறைக்கூவல் விடுவது போல இருந்தது.அவளின் கண்களில் கண்ணீர் சேர்ந்துக்கொண்டு எந்நேரமும் வழிந்துவிடுவேன் என்று மிரட்ட ஆரம்பித்தது.

அதை பார்த்ததும் சுந்தரின் முகம் உடனே இளகியது!!
"ஹே!!! ரிலாக்ஸ் டா நானும் அங்கிளும் சும்மா விளையாடிட்டு இருக்கோம்"என்றான்.

"அட!! சும்மா இருப்பா!! கொஞ்ச நேரம் இன்னும் விளையாடலாம்னு பாத்தா,அவ கொஞ்சம் கண்ணை கசக்கின உடனே மயங்கிட்டியே"என்றார் மணிகண்டன்,சிரித்துக்கொண்டே.

"என்ன பண்ணுறது அங்கிள்,அவ கண்ணுல தண்ணியை பாத்தாலே எனக்கு விளையாடவே மனசு வரல!! அவ மனசு கஷ்டப்பட்டா என்னால ஒரு நொடி கூட தாங்க முடியாது",என்றான் சுந்தர் புன்னகைத்தபடி.

"என்னா புள்ளையோ!! இப்படி இருந்தா என் பொண்ணு உன்னை ஏய்ச்சுபுடுவா பாத்து இருந்துக்கோ"என்றார் மணிகண்டன்,பலமாக சிரித்தப்படி.
இருவர் பேசுவது ஒன்றும் புரியாமல் முழித்துக்கொண்டே ,தந்தையை பார்த்தாள் ஆனந்தி.

"என்னமா பாக்கற?? உன் சுந்தர் சாதாரண ஆளு கிடையாது.முதல்ல என் கிட்ட சொல்லச்சொல்லி உன்னை ரொம்ப வற்புறுத்தி பாத்தான்,ஆனா நீ சொல்லுறதா இல்லை,அதான் நேர போய் அவங்க அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டான்"என்றார்.
கண்களில் குழப்பத்துடன் சுந்தரை பார்த்தாள் ஆனந்தி.
"அவங்க அப்பா அம்மா சில வாரங்களுக்கு முன்னாலயே என்னை பாத்து பேசிட்டாங்க!! எதெல்லாம் பிரச்சினையா இருக்கும்னு நீங்க எல்லாம் பயந்துட்டு இருந்தீங்களோ,அதெல்லாம் நாங்க பெரிய விஷயமாவே பார்க்கல.
அவங்க பையனுக்கு ஏத்த மனைவியா நீ இருப்பன்னு அவங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை,அதே போல என் பொண்ணு சுந்தர் வீட்டுல சகல சந்தோஷத்தோட இருப்பாங்கறதுலா எனக்கும் சந்தேகம் கிடையாது.சரின்னு சட்டு புட்டுன்னு பேசி முடிச்சிட்டோம்" என்று தொடர்ந்தார் மணிகண்டன்,தன் மகளை அணைத்தபடி.

"உனக்கு சர்ப்ரைஸ்னா ரொம்ப பிடிக்குமேன்னு தான்,வெளியில சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேன்.உங்க அப்பாவும் என்னை மாதிரி விளையாட்டு புள்ளையா இருப்பாரு போல!! உடனே ஒத்துக்கிட்டாரு.இவ்வளவு நாளா உனக்கு தெரியாம நாங்க இந்த ட்ராமாவுக்கு அரேஞ்ச் பண்ணிட்டு இருந்தோம்!! இப்போ கூட எங்களுக்குள்ள என்ன சண்டைன்னு நெனைக்கற???தோசைக்கு தொட்டுக்க சட்னியை போட்டுக்கலாமா,இல்லை மொளகா பொடி போட்டுக்கலாமான்னு தான் சண்டையே!!! உங்க வீட்டுல எப்பவுமே சட்டினியைதான் போட்டுப்பீங்களாமே???? எங்க வீட்டுல உனக்கு மொளகா பொடி தான் தருவோம்னு சொன்னா ஒத்துக்க மாட்டேங்குறாரு" என்றான் சிரித்தபடி.

ஆனந்தியின் விழிகளில் இருந்து கண்ணீர்,ஆனால் அவள் உதடுகளில் இருந்த புன்னகை கொஞ்சம் கொஞ்சமா விரிவடைந்து பெரிய சிரிப்பாக மாறிக்கொண்டிருந்தது.
தன் மகளை மேலும் அணைத்தபடி மணிகண்டன் கண்ணை மூடிக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தார்.
சிரிப்பினூடே "கள்ளா!! இரு உன்னை வெச்சுக்கறேன்" என்று சத்தம் கேட்காமல் உதடுகளால் சொல்லிக்காண்பித்தாள் ஆனந்தி.

"சரி சரி" என்று தலையை ஆட்டிக்கொண்டே கண்ணை அடித்து விட்டு,சிரித்துக்கொண்டே சோப்பாவில் சாய்ந்துக்கொண்டான் சுந்தர்.

-சுபம்

பி.கு:கதை பெரியதாக இருந்ததால் இரண்டு பகுதிகளாக போட்டேன்.ஆனா இது ஒரே பகுதியா எழுதப்பட்ட கதைதான்,ஒரே மூச்சிலே படிச்சா இவ்வளவு ஏமாற்றம் இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.
இரண்டு பாகங்களாக போட்டது படிக்கறவங்க மனசுல தேவை இல்லாத எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது. :-(
மன்னிக்கவும்! :-)

குறும்பின்றி அமையாது உலகு - 1

மாலை நேரம்!!
மெல்லிய சூரிய ஒளி கிச்சு கிச்சு மூட்ட அவனின் விளையாட்டை தாங்க முடியாமல் கடல் கன்னி சினுங்கிக்கொண்டிருந்தாள்.அவளின் சிரிப்பும் துள்ளலும் அலையாய் மோத ,ஒரு குழந்தையின் விளையாட்டை ரசிக்கும் தந்தையை போல மணற்பறப்பு புன்னகைத்துக்கொண்டு தாங்கிக்கொண்டிருந்தது.இவ்வளவு புத்துணர்ச்சியும் குளிர்ச்சியும் இந்த கடலுக்கு யாரிடமிருந்து வந்திருக்கும் என்று யோசித்த படி கீழ்வானத்தை பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தர்.
சுந்தர்.உயரம் 5"7" ,சற்றே ஒல்லியான தேகம்,மருத்துவத்துறையில் முதுகலை படிக்கும் ஒரு சராசரி இளைஞன். அவனின் வயதில் பெரும்பாலானோருக்கு் பிடித்திருக்கும் நோயால் அவனும் பீடிக்கப்பட்டிருந்தான்.
ஆம்!! அவனும் காதல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான்!!

அட இது யாரது??
என்ன வேகம்?என்ன துடிப்பு??
என்ன நளினம்??என்ன அமைதி??

இது எல்லாம் சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்தீருக்கிறீர்களா??
இல்லையா??

அப்போ நீங்க ஆனந்தியை பார்த்ததில்லை போல!! யாரது ஆனந்தியா??
இதோ வேக வேகமாக சுந்தரை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறாளே ஒரு தேவதை,அவள் தான்......
அப்போ....
ஆமாம்!! குடுத்து வெச்ச பையன்!! வேற என்ன சொல்ல??


"சாரிடா கண்ணா கொஞ்சம் லேட் ஆயிடுச்சு"
சுந்தர் பதிலளிக்கவில்லை!! அவளின் வாசத்தில் இருந்து இன்னும் அவன் மீளவில்லை என்பது தான் காரணம்.எவ்வளவு கோபம் இருந்தாலும் அவளை பார்த்தவுடன் எப்படி குழைந்து விடுகிறான் என்று அவன் யோசித்து பார்த்திருக்கிறான்.
எல்லாம் பேரமோன்ஸ் (pheromones) செய்யும் மந்திரஜாலம் தான் என்று தெரிந்துக்கொள்ள அவனுக்கு பெரிதாக நேரம் பிடிக்கவில்லை.மருத்துவ மாணவன் அல்லவா??

"அப்பா கூட பேசினியா??"என்றான், அவளின் ஒற்றை முடியை காதினிடுக்கில் சேர்த்துவிட முயன்றுக்கொண்டு.

அவனின் விரலிடம் இருந்து விலகி ,தானாகவே அந்த முடியை காதில் சுருட்டிக்கொண்டாள் ஆனந்தி.
தன் கைப்பைய்யை பக்கத்தில் இருத்திவிட்டு ஒரு விதமான குறும்புப்புன்னகையுடன் சுந்தரை பார்த்தாள்!!

அவன் சடாரென நிமிர்ந்து உட்கார்ந்தான்!! "அடிப்பாவி!! சொல்லிட்டியா???? சொல்லவே இல்லை!!!"

"ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு தான் சொல்லல" என்றாள் தோள்களை குலுக்கிக்கொண்டே!!!

"உன்ன அப்படியே......." என்று இரண்டு கைகளையும் குவித்து அவள் முகத்தின் அருகே எடுத்துச்சென்றவன் "கள்ளி..." என்று சொல்லிவிட்டு நிறுத்திக்கொண்டான்.

அவனிடம் இருந்து பொய்யாக விலகிச்சென்றவள் "இன்னைக்கு காலையில தான் சொன்னேன்!! சொல்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு " என்றாள் தனது கீச்சுகுரலில்.

"சூப்பரு!! என்ன சொன்னாரு??"

"சூப்பரா!! இனிமே தான் அய்யாவுக்கு இருக்கு பூஜை......இதுக்கு நான் எவ்வளவு பாடு பட்டேன் தெரியுமா??"

"ஆமாம்...நீதான் சொல்லாமையே பயந்துட்டு இருந்தியே !! உன்னை சொல்ல வெக்கறதுக்கு நான் எவ்வளவு பாடு பட வேண்டி இருந்தது"

"பின்ன!! அம்மா இல்லாத என்னை தனியா வளர்த்தவராச்சே!! அவரு மனசு கஷ்டப்பட்டா என்னால தாங்க முடியாது அதனால சரியான நேரம் பார்த்து தானே் சொல்ல முடியும்"

"சரி சரி!! சொன்னியே அதுவே பெரிய விஷயம் தான் !! எப்படி ஆரம்பிச்ச??"

"மொதல்ல அவரு நம்பவே இல்லை!! நான் முன்ன எல்லாம் நான் ஒருத்தரை லவ் பண்றேன்னு சொல்லிட்டு கடைசியில ஒரு குரங்கு போட்டோ காமிச்சு ஏமாத்துவேன்...ஹி ஹி....அதனால மொதல்ல கொஞ்ச நேரம் அவரு கிட்ட நான் உண்மை சொல்லுறேன்னு நம்ப வெக்கவே நேரமாயிடுச்சு"

"ஹா ஹா ஹா!! அப்புறம் என்ன?? இவனுக்கு அந்த குரங்கே பெட்டெர்னு சொன்னாரா??"

"ஹா ஹா... அப்புறம் உங்க போட்டோ காட்டினேன்,நாம எப்படி மீட் பண்ணோம்னு சொன்னேன்,உங்க படத்தை காட்டினேன்,பையன் ரொம்ப சின்ன பையனா இருக்கானேன்னு சொன்னாரு"

"அது சரி"

"என்னது சரி!! பையன் பாக்கறதுக்குதான் இப்படி,ஆனா பழகினா தெரியும் சேதின்னு உண்மையை சொல்லிட்டேன்"

"ஓஹோ!! அப்போ நாம கிஸ் பண்ணதையும் சொல்லிட்டியா???"

"அட பாவி!! நாம என்னிக்கு கிஸ் பண்ணோம்??? இந்த வார கடைசியில உன்னை பாக்கறதுக்காக எங்க வீட்டுக்கு வர சொல்லியிருக்காரு அப்போ இது மாதிரி தத்து பித்துன்னு உளறி வைக்காதீங்க..."

"எனக்கு அதெல்லாம் தெரியாது!! உங்க அப்பா கிட்ட நாம கிஸ் பண்ணோம்னு சொல்லியே தீருவேன்" என்றான் அவன்,கண்களில் குறும்புத்தனம் மின்ன.

"அடேய்.....என் செல்லம்ல.....கண்ணுல்ல!! ரொம்ப விளையாடாதேடா செல்லம்..."என்று அவளும் கொஞ்ச ஆரம்பித்து விட்டாள்.
இதற்குத்தானே அவனும் இப்படி பேச்சை தொடங்கினான். இனிமேல் அவங்களுக்குள்ள நடக்கறது எல்லாம் நமக்கு வேண்டாம் மக்கா,ஒரே கில்பான்ஸா இருக்கும்,அதனால நாம அவங்களை தனியா விடுவோம்.

உங்களுக்கே விஷயம் புரிஞ்சு போயிருக்கும்னு நினைக்கறேன்.தன்னுடைய காதலை தன் அப்பாவிடம் சொல்லிவிட்டாள் ஆனந்தி.தாய் இல்லாத பெண் என்று செல்லமாக வளர்த்தவர் அவளின் தந்தை மணிகண்டன்.அவரும் சுந்தரை பார்க்க அந்த வார இறுதிக்கு தன் வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அப்பொழுது என்ன ஆகிறது என்று பார்க்கலாமா??


***********************************************************************

தி.நகரின் அந்த குடியிருப்பு பகுதியில் வேர்க்க விருவிருக்க நடந்துக்கொண்டிருந்தான் சுந்தர்.வியர்வை இளங்காலைச்சூரியனால் ஏற்பட்டதா அல்லது அவனின் மனதினுள் ஏற்பட்டிருக்கும் பயத்தினாலா் என்று எனக்கு தெரியவில்லை.
பயம் எதற்கா??

ஆனந்தியின் அப்பாவை பார்க்க போய்க்கொண்டிருக்கிறான் அல்லவா??அதான்....
அவர்களின் வீட்டைசென்று அடைந்த வுடன்,ஒரு ஆழ்ந்த பெருமூச்சு எடுத்து விட்டு,லேசாக வாயிற்கதவை திறந்து உள்ளே சென்றான்.சத்தம் கேட்டு வெளியில் ஓடி வந்தால் ஆனந்தி.
"வா வா...உனக்காக தான் வெயிட்டிங்..." என்று சொன்னவள்,அவனை பார்த்து அப்படியே சொக்கி நின்றாள்.

முதன் நாள் பள்ளிக்கூடம் செல்லும் சிறுவனை போல தலையை வழித்து வாரிக்கொண்டு,நெற்றியில் சிறிய விபூதிக்கீற்றுடன் ஒரு விதமான ஞானப்பழத்தை போல காட்சியளித்தான் சுந்தர்.தன் குழந்தைக்கு தலை வாரிவிட்டு கட்டியனைத்துக்கொள்ளும் தாயை போல அவனை ஓடிச்சென்று கட்டிக்கொள்ள வேண்டும் போல இருந்தது ஆனந்திக்கு. அதற்குள் அவளின் தந்தை மணிகண்டன் வெளியே வந்துவிட்டார்.
பார்ப்பதற்கு ஜீன்ஸ் படத்தில் ஐஷ்வர்யா ராயின் தந்தையாக வரும் எஸ்.வி.சேகர் கதாபாத்திரத்தை போல இருந்தார்.அமைதியான முகம்,வெளிரிய நிறத்தில் பைஜாமா ஜிப்பா அணிந்திருந்தார்.சற்றே புன்னகைத்தபடி இருந்தாலும் முகத்தை பார்த்து அவரின் எண்ணங்களை அவ்வளவாக கணிக்க முடியவில்லை.
சுந்தர் இரு கை சேர்த்து "வணக்கம் சார்" என்றான். அவரின் புன்னகை சற்றே விரிவடைந்தது.தலையையும் சற்றே அசைத்தார்.அது அவனின் வணக்கத்தை ஏற்றுக்கொண்டது போலும்,அப்படியே அவனை உள்ளே அழைப்பது போலும் இருந்தது.


--- தொடரும்

Related Posts Widget for Blogs by LinkWithin