ஏக்குருவி,சிட்டுக்குருவிகுருவிக்கு தன் கூடு ,கட்டிக்கொடுத்தது யாரு??
கடுங்குளிரிலும் ,கடும் மழையிலும் காப்பாத்துவதாரு?? :-)

வெயில் ஏறிப்போச்சுன்னு ஒரு எண்ணம் வந்த போது பனிக்காலத்துல எங்க ஊருல நான் எடுத்த சில படங்கள எடுத்து பாத்துட்டு இருந்தேன்.
அதான் உங்க கிட்டேயும் காட்டலாம்னு!! :-)

டொர்னாடோவாவது ரொனால்டோவாவது!!

இன்னைக்கு ஆபீசுல வழக்கம் போல ஆணி பிடுங்கறேன் பேர்வழின்னு நம் வலையுலக நண்பர் ஒருத்தரு கூட தொலைபேசியில் மொக்கைய போட்டுகிட்டு இருந்தேன் மக்கா!!

திடீர்னு ஒலிப்பெருக்கியில ஒருத்தன் மூச்சிறைக்க கத்துறான்!! "எலே எல்லோரும் எங்கியாச்சும் ஓடுங்கலே!!! டொர்னாடோ (Tornado) வருது!!! நம்ம வானிலை ஆராய்ச்சி நிலையத்துல சொல்லீருக்காய்ங்க!!! எல்லாம் ஒழுங்க பேஸ்மெண்ட்டுகுள்ள போய் புகுந்துக்கோங்க!!! அப்புறம் ஆணி புடுங்குனவன் அத்தோட அடிச்சிகிட்டு போனான்னு நாளைக்கு நூஸ்பேப்பருல செய்தி போட்டுருவாய்ங்க!!! சொன்ன பேச்ச ஒலுங்க கேளுங்கலே" னு டென்சன் ஆயிட்டான்!!!
நான் ஒடனே தொலைபேசியுல "அண்ணாச்சி!! என்னமோ ஆயிருச்சு,உயிரோட இருந்தா நான் உங்களுக்கு அப்புறமா போன் பண்ணுறேன்" அப்படின்னு காலை கட் பண்ணிட்டேன் (அவர் காலை இல்லைய்யா!! போன் கால!! ஆசை!! :-P)

போன வெச்சுட்டு சுட்டும் முட்டும் பாக்குறேன். நம்ம தேசி மக்கள் (அதாங்க,நம்ம இந்தியர்கள்) எல்லாம் திரு திருன்னு முழிச்சிகிட்டு இருக்காய்ங்க!! நான் ஒடனே ஒருத்தன் கிட்ட போய்ட்டு
"அண்ணே!! இப்ப என்ன ஆச்சுன்னு எல்லோரும் டென்சன் ஆகுறாய்ங்க அண்ணே" அப்படின்னு அப்பாவியா (?!) கேட்டேன்!!

அவரு ரெண்டு பக்கமும் பாத்துட்டு!!
"எலே வெளயாடுற வேளையால்லே இது???? புயல் வருதாம்லே!!அதுவும் சாதாரண் புயல் இல்ல,சூறாவளி புயலு. "Twister" படம் பாத்திருக்கியா?? அதுல வரும்ல!! அதான்"

"ஆகா!!! அப்போ நம்ம பார்க்கிங்கு எடத்துல இருக்கற காரு எல்லாம் அந்த படத்துல வரா மாதிரி பறக்குமா?? புயல்ல எறுமை மாடு எல்லாம் அடிச்சிட்டு வந்து சுத்தி சுத்தி பறக்குமா??" அப்படின்னு கண்கள் விரிய கேட்டேன்.

"எலே நெக்கலா??? விட்டா உன்னையே அடிச்சிட்டு போயிரும் தெரியும்லே" அப்படின்னு அண்ணாச்சியும் பீதியை கிளப்ப முயற்சி பண்ணிட்டு இருந்தாரு.

"அட சும்மா இருங்க அண்ணாச்சி,நான் இது வரைக்கும் ஒரு டொர்னாடோ கூட நேருல பாத்ததே கிடையாது.இன்னைக்காவது பாக்கலாம்னு பார்த்தேன்,விட மாட்டீங்க போல இருக்கே" என்று வருத்தப்பட்டேன்.

"ஏண்டா டேய்!!! இதென்ன ஷகீலா படமா??? கும்பலா உக்காந்து பாக்குறதுக்கு!!!!புயல் டா புயல்!! அது அடிச்சா ஒரு பயல் மிஞ்ச மாட்டான் தெரியுதா???" அப்படின்னு ஏறுராரு!!

"நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்க அண்ணாச்சி!! இன்னைக்கு டொர்னாடோ பாத்துட்டு தான் மறு வேலை(?!)" அப்படின்னு சொல்லிட்டு விரு விருன்னு வெளியே கிளம்பிட்டேன்.

நான் போறத பாத்துட்டு மற்ற நம்ம ஊரு பசங்க சில பேரு நம்ம கூடவே வந்துட்டாய்ங்க!! எவனாவது ஏதாவது செஞ்சா யோசிக்காம பின்னாடி வரது தமிழனுக்கு புதுசா என்ன???

வெளியில வந்துட்டு பாத்தா ஒரே மேகமும் காத்துமா இருக்கு!! கொஞ்ச நேரம் கழிச்சு டொர்னாடோ பாக்குற ஆசையில் அண்ணாச்சியும் குடு குடுன்னு ஓடி வந்துட்டாரு!! எல்லோரும் காத்துல நிந்துக்கிட்டு ஒரு 15-20 நிமிஷம் சுத்தி சுத்தி பாத்தோம்!!!! டொர்னாடோவும் வரல்ல,ரொனால்டோவும் வரல்ல!!! :-(
இருந்தாலும் வெளியில போன தோஷத்துக்கு கைப்பேசியில் ஒரு 3-4 படங்களை சுட்டு தள்ளினேன்!!!அதை என் வலையுலக நண்பர்களாகிய உங்களிடம் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று தோன்றியது!!
அதுக்கு தான் இவ்ளோ பில்ட் அப்பு!! :-D

படங்கள் எல்லாம் அலைப்பேசியில் எடுத்ததால் அவ்வளவாக குவாலிடி நல்லா இருக்காது (pixel wise),அதனால கண்டுக்காதீங்க!! :-)ஆங்கிளு பாத்தீய்ங்கல்ல!!!! B-)

கொஞ்சம் திரும்பினா

இன்னும் கொஞ்சம் திரும்பினா


அட்ரா அட்ரா இதுக்கு பேருதான் ஒளி வட்டம்னு சொல்றாய்ங்களா??என்ன வேணுமினாலும் சொல்லுங்க மக்கா. கறுப்பு வெள்ள படம்னாலே ஒரு தனி கலை தான்!! மொத படத்தையே கறுப்பு வெள்ளையா மாத்துனா எப்படி தூள் கெளப்புது பாத்தீகளா???

என்ன???
ஓவரு மொக்கையாயிருச்சா??
கோபம் கோபமா வருதா???? பின்னூட்ட பொட்டி தொறந்துதான் கெடக்கு!!
இதுக்கு மேல நான் ஒன்னும் சொல்லல!!

வரட்டா?? :-)

Singing in the rain - திரைப்பட விமர்சனம்

"Siiiiiiiiiiiiiiiiiiing in the rainnnnnnnnn,iam swaaaaiiiiiiiiiiiiiing in the rain"
இந்த வரியை பார்த்தவுடனே வடிவேலுவின் பிரபலமான காமெடி காட்சிகள் தான் ஞாபகம் வருகிறது அல்லவா?? கொஞ்ச நாட்களுக்கு முனபு வரை் எனக்கும் இதுதான் ஞாபகம் வரும்,ஆனால் இன்றிலிருந்து அப்படி இல்லை.
சமீபத்தில் ஜிராவை ஜி-டாக்கில் அறுத்துக்கொண்டிருந்த போது எதேச்சையாக ஒரு படத்தை சிபாரிசு செய்தார். படத்தின் பெயர் என்ன என்று கேட்டால் "Singing in the rain" என்று சொன்னார். சரி என்னை வைத்து காமெடி செய்கிறார் போல என்று நினைத்து பலமாக சிரித்தேன். அவர் உடனே "அட!! உண்மையாலுமே இது மாதிரி ஒரு படம் இருக்குப்பா,நல்லா இருக்கும் பாரு" என்று சொன்னார். உடனே என் நூலகத்தின் இணைய பக்கத்தை திறந்து அந்த படத்தை முன்பதிவு செய்து கொண்டேன். சிறிது நேரத்தில் அதை பற்றி மறந்து போனேன். கொஞ்ச நாள் கழித்து நூலகத்தில் இருந்து வீட்டிற்கு எடுத்து வந்தேன்.அட்டையை பார்த்தால் ஏதோ பழைய்ய்ய்ய்ய்ய்ய படம் போல இருந்தது. அதுவும் படம் ஒரு ம்யூசிகல் என்று தெரிந்தது.

ம்யூசிகல் - னா???
நம்ம ஊரு படங்கள் எல்லாவற்றிலும் பாட்டுடன் சேர்ந்து தானே படம் இருக்கும்?? ஆனா ஆங்கில படங்களில் பொதுவாக பாட்டுக்கள் இருக்காது. அதனால் படத்திலேயே பாட்டும் சேர்ந்து வந்தால் அதை ம்யூசிகல் என்று சிறப்பான பெயர் கொடுத்து அழைப்பார்கள். சமீபத்திய படங்களில் ரிசர்ட் கியர் நடித்த "சிகாகோ" என்ற ம்யூசிகலின் பெயர் ஆஸ்கர் அரங்குகளில் ஒலித்திடும் அளவுக்கு புகழ் பெற்றது. மற்றபடி சமீப காலங்களில் ஆலிவுட்டில் ம்யூசிகல்கள் அவ்வளவாக பிரசித்தம் கிடையாது.
கடந்த சில நாட்களாக வேற்று கிரக உயிர் பற்றி எல்லாம் தொடர் எழுதி மண்டை காய்ந்திருந்ததால் இன்று (11-ஜூலை-2007) இந்த படத்தை பார்க்க முடிவு செய்தேன்!!!படத்தை பார்த்து முடித்தவுடன் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி மனதில் கமழ உடனே இந்த பதிவை எழுத ஆரம்பித்து விட்டேன்.

"Singing in the rain" 1952-இல் வெளியான ஒரு காமெடி ம்யூசிகல் படம். படத்தின் கதை இதுதான். டான் லாக்வுட் (Don Lockwood) மற்றும் லீனா லெமோண்ட(Lina Lemont)் ஆலிவுட்டில் புகழ்பெற்ற நடிகன்/நடிகை. இவர்கள் ஜோடியாக நடிக்கும் படங்கள் எல்லாமே மிகப்பிரபலம்.இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் லீனா லெமோண்ட் ஒரு அழகி என மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவரின் குரல் ஒரே கீச்சு கீச்சென்று இருக்கும். அது ஊமை படங்கள் வெளி வந்த காலங்கள் என்பதால் பிரச்சினை எதுவும் இல்லாமல் இருந்தது இந்த நிலையில் நம் கதாநாயகன் தற்செயலாக கதாநாயகி கேத்தி செல்டனை (Kathy Seldon) சந்திக்கிறார். கேத்தி ஒரு வளர்ந்துவரும் நடிகை,நடிப்புத்தொழிலில் தனக்கான இடத்தை பிடிக்க முயன்று வருபவர். இருவருக்கும் இடையே சிறிது வாய்துடுக்கு பேச்சு என கலகலப்பாக அறிமுகம் ஏற்பட்டாலும் கதாநாயகியை கதாநாயகனுக்கு முதலில் இருந்தே பிடித்து விடுகிறது. சந்தர்ப்ப வசத்தால் இருவரும் ஒரே பட நிறுவனத்தில் வேலை செய்கிற வாய்ப்பு அமைகிறது,இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.

இந்த சமயத்தில் பேசும் படங்கள் ஆலிவுட்டில் அறிமுகம் ஆகின்றன , நம் கதாநாயகனின் கம்பெனிக்கு பிரச்சினை. இதுவரை லாக்வுட்-லமோண்ட் நட்சத்திர ஜோடியை வைத்து படம் எடுத்துக்கொண்டு வந்தவர்களுக்கு என்ன செயவதென்று புரியவில்லை. லமோண்ட்டின் குரல் தான் கீச்சு கீச்சென்று இருக்கிறதே!! இந்த குரலை வைத்து படம் எடுத்தால் மக்கள் எள்ளி நகையாட மாட்டார்களா??
ஏற்கெனவே அவர்கள் இருவரையும் வைத்து குரலுடன் எடுத்த படத்தை பரிட்சார்த்த முறையில் திரையிட்டால் மக்கள் காறித்துப்பி மானத்தை வாங்கி விடுகிறார்கள். என்னடா இப்படியாகிவிட்டதே என்று எல்லோரும் இடிந்து போகும் வேலையில் தான் காதாநாயகனின் நண்பர் காஸ்மோ பிரவுன் (Cosmo Brown) ஒரு அற்புதமான ஐடியாவை சொல்கிறார். கதாநாயகி கேத்தியின் சாரீரம் தான் நன்றாக இருக்கிறதே!! அவரின் குரலை லெமோண்ட்டிற்கு பயன்படுத்தி படத்தை ஒரு ம்யூசிகள் ஆக்கி விடலாம் என திட்டம் தீட்டுகிறார். இது அந்த பட கம்பெனி அதிபருக்கும் பிடித்து விடுகிறது. ஆனால் லேமோண்டிற்கும் கேத்திக்கும் எப்பொழுதுமே ஆகாது என்பதால் லெமோண்டிற்கு தெரியாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறார்கள்.ஒரு சமயத்தில்் இது லெமோண்டிற்கு இது எப்படியோ தெரிந்து போய் விடுகிறது. லேமோண்ட் பெருத்த கோபம் கொள்கிறார். ஒரு கட்டத்தில் படத்தில் பாடல்கள் எல்லாம் தானே தான் பாடியதாக பத்திரிக்கைகளுக்கு பொய் செய்தி அனுப்பி எல்லோரையும் தர்ம சங்கடத்திற்குள்ளாக்குகிறார். இப்படி சூழ்ந்துகொள்ளும் குழப்பத்தில் கடைசியில் என்ன ஆகிறது?? கேத்தியின் திறமை வெளி உலகத்திற்கு தெரியாமலே போய் விடுமா?? லாக்வுட் மற்றும் கேத்தியின் காதல் என்ன ஆகிறது??? இந்த கேள்விகளுக்கான விடையை வெள்ளித்திறையில் காண்க!! :-)

ம்யூசிகல் என்பதால் இந்த படத்தில் பாடல்கள் தான் மிக முக்கியமான ஒரு அங்கம். நம்ம தமிழ் படங்களில் சராசரியாக இருப்பதை விட பாடல்களும் அவற்றின் கால அளவும் அதிகமாக தோன்றினாலும்,பல பாடல்கள் கதையை ஒற்றியே அமைந்ததாக எனக்கு தோன்றியதால,் என்னால் அவற்றை பெரிதும் ரசிக்க முடிந்தது. அதுவும் கதாநாயகன் லாக்வுட்டாக நடிக்கும் ஜீன் கெல்லியும் (Gene Kelly), அவரின் நண்பராக நடிக்கும் டானல்ட் ஓ கான்னரும்் (Donald O Connor) அவர்களின் நடனத்திறமையால் அசத்தியிருக்கிறார்கள். தட்டு ஆட்டம் (Tap dancing) வகையை சேர்ந்த அவர்களின் ஆட்ட ஜாலம் என்னை திறந்த வாய் மூடாமல் பார்க்க வைத்தது. கதாநாயகியும் தன் பங்குக்கு தன் ஆட்டத்திறமையால் அசத்தியிருக்கிறார். மூவரும் சேர்ந்து ஆடுவது போல் அமைந்திருக்கும "Good morning"் பாட்டு மிக அருமை. பாடல்கள் பழைய பாணியில் இருப்பதால் சில பேருக்கு நடுவில் சற்றே தொய்வளிக்கலாம் , ஆனால் எனக்கு ரசிக்கும் படியாகத்தான் இருந்தது. அதுவும் "Broadway Melody Ballet" பாட்டின் காட்சியமைப்பு அதி அற்புதம். கதாநாயகனும் அவர் நண்பரும் பேச்சு பயிற்ச்சியாளரை கலாய்த்து கொண்டு பாடும் "Moses" பாட்டில் சரியான கலாட்டா!!

படத்தின் பெயர் கொண்டு ஆரம்பிக்கும் "Singing in the rain" மிக புத்துணர்ச்சியான பாடல். இதை பார்க்கும் போது என் மனம் என்னையும் அறியாமல் மௌன ராகம் படத்தில் வரும் "ஓஹோ..மேகம் வந்ததோ" பாட்டைநினைவு படுத்திக்கொண்டது!!! அனேகமாக இரு பாடல்களும் ஒரே ராகத்தில் அமைந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை,இசை பற்றி தெரிந்தவர்கள், உண்மையாகவே இந்த இரண்டு பாடல்களிலும் ஒற்றுமை உள்ளதா ,இல்லை எல்லாம் "மனப்பிராந்தியா" என்று எடுத்து சொன்னால் உண்டு. பாடல் எடுக்கப்பட்ட விதமும் நம் மௌன ராகம் பாடலை நினைவு படுத்தியது. மணிரதனம் "மௌன ராகம்" படம் எடுப்பதற்கு முன் இந்த படத்தை நிச்சயமாக பார்த்திருப்பார் என்று தோன்றியது.
கதாநாயகனின் நண்பன் காஸ்மோ பிரவுன் பாடுவதாக அமைந்திருக்கும் "Make them laugh" எனும் பாட்டு அவரின் சிறந்த திறைமைக்கு சரியான தீனி.

கதாநாயகனும் அவர் நண்பரும் சேர்ந்து கலக்கும் ஒரு பாட்டை இப்பொழுது கொஞ்சம் பாருங்கள

படத்தின் பாத்திரங்கள் அத்தனை பேரும் மிக அழகாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகன் நடனத்திலும் காமெடி காட்சிகளிலும் கலக்குகிறார்.இந்த படத்தில் இணை இயக்குனராகவும்,நடன இயக்குனராகவும் அவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகி கேத்திக்கு் சரியான ஜோடி. கேத்தியாக நடிக்கும் டெப்பி ரேனோல்ட்ஸ் (Debbie Reynolds) படத்தில் அழகாக மிளிர்கிறார் (நமீதா கூட மார்ஃப் பண்ணி நம்மள டேமேஜ் பண்ணதுக்கு பதில இவிங்க கூட மார்ஃப் பண்ணியிருந்தாலாவது சந்தோஷமா இருந்திருக்கும் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்). இருவரின் திரை இரசாயனம் (On - screen chemistry ஹி ஹி) நன்றாக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. கதாநாயகனின் நண்பனாக நடிக்கும் டானல்ட் அவரின் நடிப்பு,நடனம்,முக அசைவுகள்,காமெடி சென்ஸ் என புகுந்து விளையாடுகிறார். படத்தில் வில்லியாக வரும் ஜீன் ஹேகன் (Jean Hagen) உட்பட படத்தில் நடிக்கும் அனைவரும் குறையின்றி அவரவர் பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்!!
உங்கள் ரசனைக்கு இந்த படம் எந்த அளவுக்கு ஒத்து வரும் என்று தெரியவில்லை ஆனால் எனக்கு இந்த படம் மிகவும் பிடித்திருந்தது. விக்கிபீடியாவில் சற்றே நோட்டம் விட்ட போது இந்த படத்தின் பாடல் காட்சிகளுக்கு எவ்வளவு உயிரை கொடுத்து ஆடிப்பாடி நடித்திருக்கிறார்கள் என்று தெரியும்.
உதாரணத்திற்கு சொல்லப்போனால்

1.) "Singing in the rain" பாட்டிற்கு சொட்டச்சொட்ட தண்ணீரில் நனைந்தபடி நடித்துக்கொண்டிருந்த போது ஜீன் கெல்லிக்கு 103 டிகிரி ஜுரம் கொதித்துக்கொண்டிருந்ததாம்.

2.) டெப்பி ரெனோல்ட்ஸுக்கு சரியாக ஆட தெரியவில்லை என்று ஜீன் அவரை படப்பிடிப்பின் போது கன்னாபின்னா என்று திட்டி இருக்கிறாராம். கடுமையாக பயிற்சி செய்து இந்த படத்தில் நடித்து கொடுத்தாராம். "Good Morning" பாட்டு நடித்து முடிக்கும் போது அவர் காலில் இருந்து ரத்தம் கசிந்ததாம்.

3.) "Make then laugh" பாட்டு எடுத்து முடித்ததும் அதில் அதிமாக சிரமம் எடுத்து நடித்தால் டானல்ட் ஓ கானரை ஒரு வாரத்திற்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாம்!!

இப்படி இன்னும் சில

எது எப்படியோ இது வரை எடுக்கப்பட்ட ம்யூசிகல்களிலேயே தலைசிறந்த படம் இதுதான் என்று பல இடங்களில் குறிப்பிடப்படும் பெருமை இந்த படத்திற்கே சாரும்!!
கடைசியாக சொல்லவேண்டும் என்றால் ,நான் ரசித்ததை போல் உங்களுக்கும் இந்த படம் விருந்தாக அமைந்தால், மகிழ்ச்சி. :-)

வரட்டா?? :-)

References:
http://en.wikipedia.org/wiki/Singin%27_in_the_Rain_%28film%29

படங்கள் :
http://www.brooklynrecord.com/archives/09singing.jpg
http://www.gonemovies.com/WWW/MyWebFilms/Drama/SingingTrap.jpg
http://www.poster.net/anonymous/anonymous-gene-kelly-singing-in-the-rain-2400101.jpg
http://images.greencine.com/images/article/musicals-rain.jpg
http://en.wikipedia.org/wiki/Image:SingingKathy.jpg

வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 9

போன பகுதியில வேற்று கிரக ஊர்தி மட்டும் இல்லாம வேற்று கிரக மனிதர்களும் ராஸ்வெல் சம்பவத்தில் இருந்து மீட்டெடுக்கப்பட்டாங்க என்று சொல்லியிருந்தேன். இதை பத்தி பார்க்கனும்னா நாம ராஸ்வெல் சம்பவத்தின் உபகதைகள் பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கனும்.க்ளென் டென்னிஸ் (Glenn Dennis) என்பவர் ராஸ்வெல்லில் சம்பவம் நடந்த சமயத்தில் பிரேத உடல் பதனப்படுத்தும் நிபுணராக ் (mortician) பணியாற்றி வந்தார். 1989-ஆம் ஆண்டு திடீரென்று, அவர் ராஸ்வெல் சம்பவம் நடந்த சமயத்தில் நடந்ததாக சில விஷயங்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவரின் கூற்றுப்படி ஜூலை 1947-இல்,ராஸ்வெல் சம்பவம் நடந்துகொண்டிருந்த சமயம் அவருக்கு ராஸ்வெல்லின் விமானப்படை தளத்தில் இருந்து இரண்டு தொலைப்பேசி அழைப்புகள் வந்தனவாம். முதல் அழைப்பில், சராசரிக்கும் சிறியதான அளவில் பிரேதங்களை பதனப்படுத்த பெட்டிகள் வேண்டும் என்று கேட்கப்பட்டது என்றும்,இரண்டாவது அழைப்பில் பாலைவனப்பகுதியில் பல நாட்கள் கிடந்த பிரேதங்களை எப்படி பாதுகாப்பது என்பது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது என்றும் கூறினார்.பிறகு வேறு ஏதோ வேலையாக வெளியே சென்ற போது ப்ரேசலின் பண்ணை வழியாக செல்லவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது என்றும்.

அப்பொழுது தனக்கு அறிமுகமான ஒரு நர்ஸை அங்கு பார்த்ததாகவும். அந்த நர்ஸ், விபத்துக்குள்ளான இடத்தில் வேற்றுகிரக மனிதர்களின் சடலங்கள் மீட்டெடுக்கப்பட்டன என்று சொன்னதாகவும்,அவற்றின் மேல் பிரேத பரிசோதனை கூட செய்யப்பட்டது என்றும் கூறுகிறார். சம்பவம் நடந்த கொஞ்ச நாட்களிலேயே அந்த நர்ஸ் காணாமல் போய்விட்டதாகவும்,தான் எவ்வளவு தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் கூறுகிறார் அந்த நர்ஸ் வரைந்து கொடுத்ததாக சொல்லிக்கொண்டு சில வரைபடங்களை கூட காட்டினார்.
அவரின் பேச்சை கேட்டுக்கொண்டு சிலர் ஆராய்ச்சி செய்து பார்த்ததில்,அவர் சொன்ன பெயரில் எந்த ஒரு்ரு நர்ஸும் ராணுவத்தில் வேலை செய்ததாக சான்று இல்லை.அரசாங்கம் தான் இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக எல்லா தடயங்களையும் அழித்து விட்டது என்கிறார் இவர். வயதாகிவிட்டது அல்லவா??அதனால் பாவம் புத்தி மழுங்கி போய் விட்டது என்கின்றனர்,இவற்றை நம்பாதவர்கள்!!
இப்படி இந்த ராஸ்வெல் சம்பவத்தை ஒத்தி பல உபகதைகள். பல்வேறு நேரில் கண்ட சாட்சியங்கள் மற்றும் கதைகளின் பிரகாரம், இந்த சம்பவத்தின் போது சில வேற்று கிரக வாசிகள் மீட்டெடுக்கப்பட்டனர் என்றும். அந்த உடல்களின் மீது பிரேதப்பரிசோதனையும் செய்யப்பட்டன என்று ஒரு கருத்து முன்னமே இருந்து வந்தது.

1995-ஆம் ஆண்டு ரே சாண்டில்லி (Ray Santilli) எனும் படத்தயாரிப்பாளர் , வேற்று கிரக மனிதர்களின் மேல் செய்யப்பட்ட பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட படம் என்று ஒரு குறும்படத்தை வெளியிட்டார்!! இது வேற்று கிரக ஆர்வலர்கள் இடையே பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதை அவர் வேற்று கிரக ஆராய்ச்சியாளர்களிடையே போட்டு காண்பித்தார். இப்படியே இது ஒரு 30 நாடுகளில இந்த படம்் போட்டு காண்பிக்கப்பட்டது. இதை பார்த்த சில பேர் இதை சுத்த ஏமாற்றுவேலை என்று முதலில் இருந்தே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இதனையடுத்து 2006-ஆம் ஆண்டு,ரே சாண்ட்டில்லி இந்த படம் முழுவதுமாக உண்மை கிடையாது,இதில் சில காட்சிகள் மட்டுமே உண்மையில் நடந்த பிரேதப்பரிசோதனையின் போது நடந்தது என்றும் ,மீதி தான் முன்பு பார்த்ததை வைத்து ரீமேக் செய்யப்பட்டது என்றும் ஒத்துக்கொண்டார். படம் பார்ப்பதற்கு சற்றே களேபரமாக இருக்கும் என்பதாலும் , இது உண்மையான படம் அல்ல என்று பரவலாக கருதப்படுவதாலும் அதை நான் இந்த பதிவில் வெளியிடவில்லை. "Alien autopsy" என்று யூட்யூபில் தேடினால் உடனே உங்களுக்கு கிடைக்கும்.

ராஸ்வெல் சம்பவம் நடைபெற்றதில் இருந்துதான் மனிதனுக்கு வேற்று கிரக உயிர்களுக்கும் முதன் முதலில் தொடர்பு ஏற்பட்டது என்றும் அதற்கு பின் பல சமயங்களில் வேற்று கிரகத்தினர் வந்து சென்று கொண்டு இருக்கின்றனர் என்றும் பரவலாக வேற்று கிரக ஆர்வலர்கள் நம்பி வருகிறார்கள். இப்படி வேற்று கிரக உயிர்களை வைத்திருக்கவும் ,அவர்களிடம் ஆராய்ச்சி செய்யவும் நெவாடா(Nevada) எனும் மாநிலத்தில் உள்ள ஏரியா 51 (Area 51) எனும் ராணுவ தளம் பயன்படுத்தப்படுகிறது என்று நம்பப்படுகிறது. இந்த ஏரியா 51-இல் வைக்கப்பட்ட வேற்று கிரக உயிர்களிடத்தில் எடுக்கப்பட்ட பேட்டி என்று சொல்லிக்கொண்டு ஒரு நிகழ்படம் இணையத்தில் உலவிக்கொண்டு இருக்கிறது தெரியுமா??
இந்த நிகழ்படம் பற்றியும் பொதுவாக ஏரியா 51 பற்றியும் ,அங்கு நடப்பதாக கூறப்படும் ஆராய்ச்சிகள் பற்றியும் இந்த நிகழ்படத்தில் விலாவாரியாக கூறியிருக்கிறார்கள். பொறுமையும் ஆர்வமும் இருந்தால் பாருங்கள்.
இது உண்மையா பொய்யா என்று நான் சான்றளிக்கப்போவதில்லை!! உங்கள் சுய புத்தியை கொண்டு முடிவு செய்து கொள்ளுங்கள்!! :-)போன பகுதியோட பின்னூட்டத்துல மக்கள் எல்லாம் இந்த பேட்டி எந்த மொழியில நடந்தது என்று கேட்டிருந்தாங்க!!! வேற்று கிரக மனிதர்களோடு நாம தொடர்பு கொள்வதற்கு உளவுரையாடல் மற்றும் சொல்லோவிய உரையாடல்களை (Telepathy,Mind reading and pictography) பயன் படுத்துகிறார்களாம்

இந்த விஷயத்தில் அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்ட சில முயற்சிகளை கொஞ்சம் பார்க்கலாமா?? 1940-களில் எவன பார்த்தாலும் பறக்கும் தட்டு பார்த்தேன்னு சொல்லிட்டு திரிஞ்சிக்கிட்டு இருந்ததாலையும்,1947-ல் ராஸ்வெல் சபவம் போன்ற சம்பவங்களினால் மக்களிடையே இது பற்றி பல கேள்விகள் இருந்ததாலும் ,1952-இல் அமெரிக்க அரசாங்கம் "Project Bluebook" என்ற ஒரு ஆராய்ச்சி கழகத்தை நிறுவியது. இவிங்க கொஞ்சம் வருஷம் இந்த மாதிரி வேற்று கிரக சம்பந்தப்பட்ட செய்தியெல்லாத்தையும் விசாரணை பண்ணாங்க. பண்ணிட்டு கடைசியில இதுல இதுக்கு மேல ஆராய்ச்சி எல்லாம் பண்ணா நம்ம நேரம் தான் வீணாகும். இவனுங்க எல்லாம் சொல்லுறாப்போல அடையாளம் காண முடியாத பறக்கும் விண்களங்கள்னு எதுவும் கிடையாது. இவங்க பாத்து ஏமாறுனது எல்லாம் பொதுவா ஒளி விளையாட்டு தான்,ஒளியின் பிரதிபலிப்புகள்,பூமியில் இருந்து வெளியாகும் புகை,வானவெளியில் பளிச்சென்று தெரியும் நட்சத்திரங்கள் மற்றும் வெள்ளி கிரகம் போன்ற வான்வெளிப்பொருட்கள் என்று சொல்கிறார்கள். அப்போ இத்தனை பேர் பாத்ததா சொல்லுற பறக்கும் தட்டு எல்லாம் என்னது??
எல்லாம் பொய் தான் !! அப்படின்னு சாதிக்குது அரசாங்கம்.அதுக்கு அவங்க சொல்லுற விளக்கம் இதான்.

1.) மக்கள்க்கு ஒரு விதமான "கூட்டு பைத்தியக்காரத்தனம்" (Mass hysteria). ஒருத்தர் ஏதாவது சொன்னா ,தானும் அதை பாத்ததா சொல்லுறது மனித இயல்பு. அதான் தானும் இது மாதிரி பாத்ததா சொல்லுறாங்க.
2.)சில பேருக்கு இது மாதிரி ஏதாவது புரளி கிளப்பி விட்டு பிரபலமாகலாம்னு நப்பாசை.
3.)சில பேரு மனநிலை பாதிக்கப்பட்டவங்களா இருக்காங்க,அதனால அவங்களையும் அறியாம ஏதோ பாத்ததா தப்பா நம்பிட்டு இருக்காங்க!
4.)நான் முன்னமே சொன்னா போல ஒளி விளையாட்டில் ஏமாந்து போவது.

இது மாதிரி முடிவு கட்டிட்டு 1969-70 களில் இவர்கள் கடையை கட்டி விட்டார்கள்!!
இந்த அமைப்பே ஒரு கண் துடைப்பு என்றும், வேற்று கிரக வாசிகளின் இருப்பை மறைப்பதற்காகவே இது உருவாக்கப்பட்டது என்று வேற்று கிரக உயிர்கள் இருப்பதாக நம்புபவர்கள் கூறுவார்கள். அதுவும் பேருக்கு மூடினாப்போல காட்டிட்டு, வேற்று கிரக உயிர்களிடம் ஆராய்ச்சிக்கு, அரசாங்கம் ப்ராஜெக்ட் செர்போ (Project Serpo) எனும் ரகசிய அமைப்பை நடத்தி வருவதாகவும் கூறுவார்கள்.

வேற்று கிரக மனிதர்களின் வகைகள்,அவர்களால் கடத்தப்பட்டதாக கூறிக்கொண்டு சில கதைகள்,அவர்களின் இருப்பு பற்றி மறுக்க முடியாத சான்று என்று கூறிக்கொள்ளும் படங்கள்,நிகழ்படங்கள் இப்படி இணையத்தில் இது பற்றி பக்கங்கள் ஏராளம்.இது பற்றி ஏழுத வேண்டும் என்று திட்டமிட்ட பின் சனி ஞாயிறு இரண்டு நாட்கள் இதிலேயே மூழ்கி இருந்தேன். இதை பற்றி படித்தது பார்த்தது எல்லவற்றையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தால் எப்பொழுது முடிப்பேன் என்று சொல்ல முடியாது,அவ்வளவு நிறைய இருக்கிறது. விண்வெளி என்று சொல்லும் போது பறக்கும் தட்டுகள்,வேற்று கிரக உயிர்கள் என்பது மிக முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான தலைப்பு என்பதால், ஒரு அறிமுகம் இருக்கட்டுமே என்று தொடருக்குள் தொடராக இதை எழுத ஆரம்பித்தேன்.
பறக்கும் தட்டுகள் பற்றி நம்புபவர்களில் சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் விஞ்ஞானிகள்,அறிஞர்கள்,விமானிகள்,விண்வெளி வீரர்கள் (Astronauts), ராணுவ அதிகாரிகள் போன்றவர்களும் இருப்பதால் தான் எனக்கு இதை முற்றிலுமாக பைத்தியக்காரத்தானம் என்று ஒதுக்கி விட முடியவில்லை.

"யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்............."என்ற பாட்டு தான் ஞாபகம் வருகிறது!! அட இசையரசி பதிவுக்கு ஒரு தலைப்பு கிடைத்து விட்டதே!! :-))

சரி!!! கடந்த இரண்டு மூன்று பகுதிகளாக இந்த தலைப்பை பற்றியே மாவாக அரைத்து போர் அடித்து விட்டேன்,கொஞ்சம் இளைப்பாற நிலவு வரை சென்று வரலாமா??
நிலவுக்கு தான் மனிதன் 1969-ஆம் ஆண்டே கால் பதித்து விட்டானே என்கிறீர்களா????

மனிதன் ஒன்றும் நிலவுக்கு எல்லாம் போகவில்லை, அமெரிக்க அரசாங்கம் பூமியிலேயே ஒரு செட் போட்டு படம் காட்டி ஏமாற்றிவிட்டது என்று சில பேர் சொல்கிறார்கள் தெரியுமா???
அதை பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்!!!!
வரட்டா?? :-)References:
http://en.wikipedia.org/wiki/Glenn_Dennis
http://en.wikipedia.org/wiki/Alien_autopsy#The_Santilli_film
http://en.wikipedia.org/wiki/Project_Blue_Book

படங்கள்:
http://en.wikipedia.org/wiki/Image:Glenn_Dennis.gif
http://roswellproof.homestead.com/files/aliens.gif
http://en.wikipedia.org/wiki/Image:Alien_autopsy.jpg
http://www.skeptic.com/eskeptic/04-11-19images/UFOalienphotographer.gif
http://www.mysticalblaze.com/2aliens.jpg

References for all three parts:
http://hubpages.com/hub/Roswell_What_Really_Happened
http://www.roswellproof.com/
http://www.watchtheskycampaign.com/
http://ufo.whipnet.org/roswell/timeline/index.html
http://ufo.whipnet.org/roswell/cover-up/index.html
http://ufo.whipnet.org/roswell/
http://www.news.com.au/story/0,23599,21994224-2,00.html
http://www.conspiracynews.org.uk/roswell.php
http://www.ufoevidence.org/welcome.asp
http://www.crystalinks.com/roswell.html
http://video.google.com/videoplay?docid=5952399139521551437

and some more.....

வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 1 (பிரபஞ்சம் உருவானது எப்படி)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 2(Big bang theory)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 3(Light years)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4(Black holes)
வானத்தில் விரியும் அதிசயங்கள் - பாகம் 5(Extra terrestrial life)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 6(Alien communication)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 7(UFOs)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 8(Roswell - part 1)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 9(Roswell - part 2)

வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 8

நம்ம ராஸ்வெல் கதையை போன பகுதியில விட்ட இடத்துல இருந்து தொடரலாமா???

நம்ம ப்ரேசல்லு கொண்டு வந்த பொருட்களை எல்லாம் பாத்துட்டு அவருடைய பக்கத்து பண்ணைகாரரு லொரெட்டா ப்ராக்டர் செமத்தியா டென்சன் ஆகிட்டாரு.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான நம்ம தொழிலதிபர் கென்னெத் அர்னால்ட்டு ஏதோ பறக்கும் தட்டு பார்த்தேன்னு சொன்னாருல!! அதனால நீ பேசாம அதிகாரிகள் கிட்ட இதை ஒப்படைச்சிடு. இது பத்தி ஏதாவது தகவல் கொடுத்தா ஏதோ பரிசு தரேன்னு வேற சொன்னாங்க அப்படின்னு பிராக்டர் நம்ம ப்ரேசலை உசுப்பேத்தி விட்டுட்டாரு. சரி இவரு சொல்லுறதும் சரிதான் அப்படின்னு நம்ம ப்ரேசல் அடுத்த நாள் 6ஆம் தேதி ராஸ்வெல் நகரத்துக்கு பயணப்படுறாரு.

ராஸ்வெல் நகரத்துக்கு போய்ட்டு அங்கிட்டு அந்த ஊரோட ஷெரீஃப் (sherif - நம்ம ஊரு இன்ஸ்பெக்டரு மாதிரின்னு நெனைச்சுக்கோங்களேன்) ஜார்ஜ்.ஏ.வில்காக்ஸ் (George.A.Wilcox) கிட்ட இந்த மாதிரி மேட்டரு அப்படின்னு சொல்லுறாரு. கூடவே தான் கொண்டு வந்த விபத்தில் சிதைந்து போன பொருட்களையும் வில்காக்ஸ் கிட்ட காட்டுறாரு. இதை பாத்தவுடனே வில்காக்ஸ்கு இது சாதாரணமான வான ஊர்தி இல்லைன்னு தோணுது. அவருக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம தொழிலதிபர் கண்ட பறக்கும் தட்டுக்கள் பத்தி ஞாபகம் வந்துருச்சு.சரின்னு உடனே அந்த ஊரு விமான படை முகாம்னு தொடர்பு கொள்றாரு. அங்கு அந்த ஊருக்கான விமான படை
கமாண்டிங் ஆப்பீசர் கர்னல் வில்லியம் ப்ளான்கர்ட் (Colonel.William Blanchard) விஷயத்தை கேட்டுவிட்டு ஜெஸி மார்செல் (Jesse.A.Marcel) என்பவரை பார்வையிட பணிக்கிறார்.
இதையடுத்து மார்செல் நம்ம ப்ரேசல் கூட அவரோட ஊருக்கு அடுத்த நாள் போய்ட்டு சம்பவ இடத்தை பார்வையிடறாரு (அவரு கூட காவிட் (Cavitt) என்பவரும் போனதாக ஒரு கருத்து உண்டு,ஆனா இதில் சிறிது குழப்பம் இருக்கிறது). அங்கே போயிட்டு, அங்கிட்டு இருக்கற பொருட்களை எல்லாம் ராப்பகலா சேகரிக்கறாரு. இப்படி சேகரிச்ச பொருட்களை எல்லாம் எடுத்துகிட்டு ராஸ்வெல்க்கு திரும்பி வராரு. வீட்டுக்கு வரும் போது ராத்திரி இரண்டு மணி கிட்ட ஆகிடுது.இருந்தாலும் தூங்கிகிட்டு இருக்கற மனைவி குழந்தைகளை எல்லாம் எழுப்பி தான் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் காட்டுறாரு. பாத்தியா இது மாதிரி நாம எப்பயாச்சும் ஏதாவதும் பாத்திருக்கோமா??இது நிச்சயமா வேற்றுகிரகத்தில் இருந்து வந்த பொருட்கள் மாதிரி தான் இருக்குன்னு சொல்றாரு.

அடுத்த நாள் காலையில எழுந்து போய்ட்டு தன்னுடைய மேலதிகாரி ப்ளான்கர்ட்டை பார்த்து மார்செல்லு பேசறாரு. தான் கொண்டு வந்த பொருட்கள் எல்லாம் காண்பித்து தான் இது பற்றி என்ன நினைக்கிறேன் என்று விளக்குறாரு. இதை கேட்டுட்டு நம்ம ப்ளான்கர்ட்டு உடனே ஒரு ஆலோசனை கூட்டம் நடத்துறாரு.நடத்திட்டு உடனடியா டெக்ஸாசில் உள்ள தன்னுடைய மேலதிகாரி பிரிகேடியர் ஜெனெரல் ரோஜர் ராமி (Brig. Gen. Roger M. Ramey) என்பவரை தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை சொல்லுறாரு.உடனடியா அந்த பொருட்கள் எல்லாத்தையும் எனக்கு அனுப்பி வை என்று பிரிகேடியர் அவருக்கு ஆணை போடறாரு. "சொறிங்க ஆப்பீஸர்" அப்படின்னு நம்ம மார்செல்ல இந்த பொருட்களை எல்லாம் எடுத்துட்டு டெக்சாஸ் போக சொல்லிடறாரு.
அவரு கிளம்பறதுக்கு ஆயுத்தம் பண்ணிட்டு இருக்கும் போதே உள்ளூர் செய்தியாளர்கள் கிட்ட "ஒரு பறக்கும் தட்டு நம்ம ஊருல விழுந்து நொறுங்கி இருக்குது,அத எங்க ஆளுங்க போய்ட்டு ஆராய்ஞ்சு ,அதன் சிதைந்த பொருட்களை எல்லாம் பொருக்கிட்டு வந்திருக்காய்ங்க" அப்படின்னு ஒரு செய்தியை வேற வெளியிடறாரு. அது அந்த ஊருல வெளி வரும் சாயங்கால பத்திரிக்கைல கூட வருது.

இதனிடையே நம்ம மார்செல் சிதைந்த பொருட்கள எல்லாம் ஒரு விமானத்துல போட்டுகிட்டு டெக்ஸாசுக்கு பயணப்படுறாரு . அங்கே போன உடனே ராமி அவரு கிட்ட இந்த பொருட்களை எல்லாம் எந்த இடத்துல கண்டுபிடிச்சன்னு எனக்கு மேப்ல காட்டு அப்படின்னு தனியா ஒரு ரூமுக்குள்ள கூட்டிக்கிட்டு போயிடறாரு. போய்ட்டு திரும்பி வந்து பாத்தா நம்ம மார்செல்லு ராஸ்வெல்ல இருந்து எடுத்திட்டு வந்த பொருட்கள் எல்லாம் காணல்ல!!! அதுக்கு பதிலா ஏது பிஞ்சு போன வானிலை பலூனின் சிதைவுகள் தான் இருக்கு. மார்செல் திரு திரு-னு முழிக்க அதுக்குள்ள பத்திரிக்கையாளர் சந்திப்பு ஆரம்பம் ஆகிடுது.
அதுல நம்ம ராமி "விழுந்து நொறுங்கினது வெறும் சாதாரண வானிலை பலூன் தாம்பா!! அது ஒன்னும் பறக்கும் தட்டும் கிடையாது,தாம்பாலமும் கிடையாது!!! நம்ம ப்ளான்கர்ட்டு ஏதோ 'மனபிராந்தியில' குழம்பிப்போய் செய்தி வெளியிட்டுட்டாரு். இந்த புள்ள கென்னத்து அர்னால்ட்டு (தொழிலதிபர்) சொன்னதுல இருந்து எல்லாம் பைத்தியம் பிடிச்சிக்கிட்டு அலையுதுங்க! லூசாப்பா நீங்க எல்லாம்?? எல்லாம் போய்ட்டு ஒழுங்க வேலையை பாருங்க பா!! எலே மார்செல்லு!! இந்த பொருட்களை எல்லாம் பொறுக்கி போட்டுகிட்டு ஓஹயோவுல(Ohio) இருக்கற நம்ம விமானப்படை ஆராய்ச்சி முகாம்ல ஒழுங்கா போய்ட்டு சேத்துரு!! சரியா??"
அப்படின்னு டோட்டல்லா ப்ளேட்டையே மாத்திட்டாரு.

அதுக்கு அப்புறமா அந்த சிதைந்த பாலுன் பொருட்களை எல்லாம் எடுத்துக்கிட்டு நம்ம மார்செல்லு ஒஹாயோ போய்ட்டாரு. போய்ட்டு வந்த அப்புறமா வேற்றாவது கிரகமாவது,அய்யா வாயையே திறக்கலை.யாரு என்ன சொன்னாங்களோ தெரியல. அரசாங்கத்துல இருந்து நிறைய பேரு அதுக்கு அப்புறமா ராஸ்வெல் வந்தாங்க. வந்துட்டு ஊருல இதுக்கு சம்பந்தமான ஆளுங்கலை எல்லாம் புடிச்சு "எலே!! இங்கிட்டு பறக்கும் தட்டும் வரலை,பறக்காத தட்டும் வரலை!! சரியா??ஏதாவது ஏடாகூடமா சொல்லிட்டு திரிஞ்சனா அப்புறமா பேசறதுக்கு வாய் இருக்காது!! சொல்லிட்டேன்" அப்படின்னு எல்லோரையும் மெரட்டி உருட்ட ஆரம்பிச்சுட்டாய்ங்களாம். பறக்கும் தட்டு பத்தி வந்த பத்திரிக்கையை கூட எல்லா இடத்துல இருந்தும் சேகரிக்க ஆரம்பிச்சாங்களாம்.அப்புறமா கொஞ்ச நாளைக்கு மக்கள் இது பத்தி மறந்தே போய்ட்டாங்க.
ஆனா கதை இதோட முடியல!!!
சுமார் 30 வருடங்களுக்கு அப்புறமா இந்த மாதிரி வேற்று கிரக மேட்டர் எல்லாம் ஆராய்ச்சி பண்ணுற ஸ்டாண்டன்.டி.ஃப்ரீட்மான் (Stanton.T.Friedman) என்பவர் இந்த ராஸ்வெல் மேட்டர பத்தி ஆராய்ச்சி பண்ணுறேன்னு கிளம்புனாரு. அப்போ நம்ம மார்செல்லு கிட்டேயும் இதை பத்தி பேட்டி எடுத்தாரு. அப்போ நம்ம மார்செல்லு "இதுல ஏதோ மர்மம் இருக்குதய்யா!! எனக்கு தெரிஞ்சு அரசாங்கம் இதை பத்தி ஏதோ மறைக்கறாய்ங்க!! அப்போ என் வேலைக்கு ஆப்பு வெச்சுருவாங்கன்னு நானும் பேசாம இருந்துட்டேன்.ஆனா மக்கள் கிட்ட அரசாங்கம் முழு உண்மையை ஒன்னும் சொல்லல" அப்படின்னு கொளுத்தி போட்டுட்டாரு!! கிணறு வெட்ட பூதம் கிளம்பினாப்போல இந்த விஷயம் பத்தி திரும்பவும் மக்கள் ஓவரா சவுண்டு குடுக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க!! அதுக்கு அப்புறம் எவ்வளவு புத்தகங்கள்,டி.வியில் செய்தி தொகுப்புகள் அப்படி இப்படின்னு அல்லோல கல்லோலப்பட ஆரம்பிச்சிடுச்சு.
இதையெல்லாம் பாத்துட்டு அரசாங்கம் கடைசியா 1997-ல ஒரு அறிக்கை வெளியிட்டாங்க!! அதுல "நாங்க அந்த சமயத்துல 'பிராஜெக்ட் மொகல்' (project Mogul) அப்படின்னு ஒரு உளவுத்துறை திட்டம் ஒன்னு பண்ணிக்கிட்டு இருந்தோம்.அதுல பலூன்ல ரேடார் எல்லாம் கட்டி விட்டு ரஷ்யாவின் அனு சோதனைகளை கண்காணிப்பது போன்ற தில்லாலங்கடி வேலை எல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தோம்.அன்னிக்கு ராஸ்வெல்ல விழுந்து நொறுங்கினது அது மாதிரியான ஒரு பலூன் தான். அதெல்லாம் அப்போ சொல்ல முடியாதுங்கறதுனால தான் வானிலை பலூன் அப்படின்னு கப்சா விட்டோம்" அப்படின்னு சொல்லியிருந்தாங்க.
ஹ்ம்ம்!!

இது இப்படி இருக்க,இன்னொரு செய்தி ஒன்னு சொல்லுறேன் கேளுங்க.பறக்கும் தட்டுகள்தான் ராஸ்வெல்லில் நொறுங்கி விழுந்திருக்கின்றன என்று செய்தி நிறுவனங்களுக்கு நம்ம ப்ளான்கர்ட் செய்தி வெளியிட்டார் அல்லவா?? அந்த சமயத்தில் மக்கள் உறவு அலுவலராக (Public relations Officer) இருந்தவர் லெஃப்டினெண்ட் வால்டர் ஹாட் (Lieutenant Walter Haut). அவர் சமீபத்தில் தான் உயிர் இழந்தார். அவர் இறப்பதற்கு முன் தான் இறந்த பின் தான் பிரிக்க வேண்டும் என்று சொல்லி ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் அவர,் நடந்தது ஒரு பொய் பிரசாரம் என்றும் ஊண்மையை அரசாங்கம் மறைக்கிறது என்றும் கூறியிருக்கிறார். அது தவிர நான் அந்த சிதைந்த பொருட்களை பார்த்திருக்கிறேன்,அது ஒன்றும் வானிலை பலூன் எல்லாம் கிடையாது ,அதுவுமில்லாமல் அந்த விண்ணுர்தியில் சில வேற்று கிரக மனிதர்களை கூட நான் பார்த்தேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இது என்ன புது கதையா இருக்கு!! வேற்று கிரக மனிதர்களா?? அப்படின்னு கேக்கறிங்களா??
அட!! இதை நான் சொல்ல மறந்துட்டேனே!! இந்த ராஸ்வெல் விபத்தில் சில வேற்று கிரக சடலங்கள் கூட மீட்கப்பட்டன என்று ஒரு கருத்து வெகு நாளாகவே நிலவி வருகிறது. இந்த சடலங்களை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என்றும், பிறகு பிடிக்கப்பட்ட சில வேற்று கிரக மனிதர்களிடம் பேட்டிகள் கூட எடுக்கப்பட்டிருக்கின்றன என்று எல்லாம் சொல்கிறார்கள் தெரியுமா??

அதை பற்றியும் இந்த ராஸ்வல் நிகழ்வை பற்றிய அரசாங்க தரப்பு வாதங்களையும் அடுத்த பதிவில் பார்க்கலாம்!! :-)

வரட்டா??

References:
http://www.crystalinks.com/roswell.html
http://ufo.whipnet.org/roswell/timeline/index.html
http://ufo.whipnet.org/roswell/cover-up/index.html
http://www.roswellproof.com/
http://www.news.com.au/story/0,23599,21994224-2,00.html

படங்கள்:
http://www.ufo.se/ufofiles/images1/friedman/marcel.jpg
http://www.ufo.se/ufofiles/images1/friedman/blanchad.jpg
http://muller.lbl.gov/teaching/Physics10/Roswell/RoswellDailyRecord.jpg
http://www.v-j-enterprises.com/ufoart/gramey.jpg
http://www.ufoarea.com/pictures/haut.jpg

வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 1 (பிரபஞ்சம் உருவானது எப்படி)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 2(Big bang theory)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 3(Light years)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4(Black holes)
வானத்தில் விரியும் அதிசயங்கள் - பாகம் 5(Extra terrestrial life)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 6(Alien communication)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 7(UFOs)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 8(Roswell - part 1)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 9(Roswell - part 2)

வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 7

போன பதிவுல வேற்று கிரக உயிர்கள் கூட தொடர்பு கொள்ள முடியுமா என்பதை பற்றியும்,அவை சம்பந்தமான மனிதனின் நம்பிக்கைகளையும் பார்த்தோம். பதிவுல கடைசில

"எல!!! வேற்றுகிரக மக்கள் எங்க இருக்காய்ங்கன்னு இங்கேயும் அங்கேயும் பாத்துகிட்டு இருக்க?? அவிங்க ஏற்கெனெவே நம்ம உலகத்துல வந்துட்டாய்ங்கப்பா!!"
என்று சில பேர் நம்புகிறார்கள் என்று கூட சொல்லி இருந்தேன். இன்றைக்கு ஏன் அப்படி ஒரு நம்பிக்கை மக்களிடையே வந்தது என்று பார்க்கலாம்.
பறக்கும் தட்டுக்கள் அல்லது அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களை் (UFO - Unidentified flying objects) பற்றி நாம் போன பகுதியிலேயே பார்த்தோம். நாம் வானத்தில் பல விதமான பொருட்களை பார்க்கிறோம்.பறவைகள்,பல விதமான விமானங்கள் என நமக்கு அடையாளம் தெரியக்கூடிய பல பொருட்கள் உண்டு. ஆனால் நீங்கள் என்றைக்காவது வானத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது என்னவென்றே புரியாத மாதிரி ஏதாவது பொருளை பார்த்திருக்கிறீர்களா?? அது அங்குமிங்கும் ஆட்டம் போடும் ஒளி பிழம்பாக இருக்கலாம் ,அல்லது பறக்கும் தட்டு போன்ற விசித்திரமான விண்ணூர்தியாக இருக்கலாம். இது போல் நம்மால் அடையாளம் காண முடியாத பறக்கும் பொருட்களை தான் UFO என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். வேற்று கிரக ஆராய்ச்சியாளர்கள் அனைவருக்குமே இந்த UFO-க்கள தான்் முக்கியமான தடையங்கள்.

இவை இன்று நேற்று அல்லாமல் பல காலங்களாகவே மனிதர்களால் கவனிக்கப்பட்டு வந்திருக்கிறது. மாவீரன் அலெக்சாந்தர் காலத்திலேயே (கி.மு 0329) அவரின் படைகளை அடையாளம் காணமுடியாத ஒரு பறக்கும் ஒளிப்பேழை விளையாட்டு காட்டி இருப்பதாக ஒரு வரலாற்று ஆசிரியர் குறிப்பெடுத்து இருக்கிறார். நாம் நினைத்துக்கொண்டிருப்பது போல் இல்லாமல் இது போன்ற பறக்கும் தட்டுக்கள் அமெரிக்காவில் மட்டும் இல்லாமல் உலகெங்கெங்கிலும் மக்களால் பார்த்ததாக கூறப்படுகிறது. அந்த பட்டியலை நீங்கள் விக்கியின் இந்த இணைப்பை சுட்டி தெரிந்து கொள்ளலாம்.உலகெங்கிலும் வேற்று கிரக உயிர் தொடர்பான ஆதாரங்களின் கிடங்கு என்று கூறிக்கொண்டே ஒரு இனையதளம் இயங்கி வருகிறது. இந்த தளத்தில் உள்ள விஷயங்களை படிக்க வேண்டும் என்றாலே பல நாட்கள் பிடிக்கும் போல இருக்கிறது. இது தவிர இணையத்தில் கூகிலாண்டவரை துணைக்கு அழைத்தால் நாளாபுறங்களில் இருந்தும் தகவல்கள் வந்து கொட்டுகின்றன.எதை எடுப்பது ,எதை விடுப்பது என்றே தெரியவில்லை. சுத்தமாக உண்மையே இல்லாமல் இவ்வளவு பேர் குழம்பி போவார்களா?? என்று என் மனம் கேள்வி கேட்டு ,விடை தெரியாமல் முழிக்கிறது.

இவை பற்றி எல்லாம் அமெரிக்க அரசு சட்டை செய்வதே இல்லை (மற்ற அரசுகளை எல்லாம் மக்கள் கேள்வி கேட்க லஞ்சம் , ஏமாற்றுவேலை போன்ற விஷயங்கள் இருப்பதால் யாரும் இது பற்றி கவலை கொள்வதில்லை).
அமெரிக்க அரசை கேட்டால் விண்ணுயிர் எல்லாம் சும்மா உங்க "மனப்பிராந்தி", லைட்டா குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுத்துக்கோங்க.நாளைக்கு காலையில எழுந்தா எல்லாம் சரியாகிடும்,என்று சொல்றாங்க. இதெல்லாம் ஒரு விதமான கூட்டு பைத்தியக்காரத்தனம் (Mass hysteria) என்றும்,இவர்களின் ஆதாரங்கள் எல்லாம் ஜோடிக்கப்பட்டவை என்று சொல்கிர்கள்.
ஆனா வேற்று கிரக ஆர்வலர்களின் கூற்று என்னவென்றால், வேற்று கிரக உயிர் பற்றி எல்லாம் அரசாங்கத்துக்கு நல்லா தெரியும். அதுவுமில்லாமல் அவர்கள் விண்ணூர்திகள் எல்லாம் கூட அரசாங்கத்தின் வசம் உள்ளது. அது தவிர வேற்று கிரக உயிர்களோடு கூட அவை பேச்சு நடத்திக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் மக்கள் பீதி கொள்வார்கள் என்பதால் அரசாங்கம் மறைத்து வருகிறது. அதுவுமில்லாமல் விண்ணுயிர் களுடன் நாம் முதன்முதலில் தொடர்பு கொண்டது பனிப்போர் நடந்து கொண்டிருந்த சமயம். அந்த சமயம் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் எதிரி நாடுகள் இதை எப்படியாவது சாதகமாக்கிகொள்ள முயலும் என்பதால்,அந்த சமயத்தின் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அரசாங்கம் பல பொய்களை சொல்ல வேண்டி இருந்தது. பிறகு தான் சொன்ன பொய்களை மறைக்கும் பொருட்டு மேலும் பல பொய்கள் சொல்லி இந்த விஷயத்தையே ஒரு அதி ரகசிய மேட்டராக ஆக்கிவிட்டார்கள் என்று கூறுகிறார்கள்.

"ஒன்னுமே புரியல ....ஒலகத்துல......" என்ற பாட்டுதான் ஞாபகம் வருகிறது.

சரி இந்த பறக்கும் தட்டு கதைகள் பல இருக்கின்றனவே,இவையெல்லாம் எப்பொழுது இவ்வளவு பெரிய தலைப்பாக உருவெடுத்தது என்று பார்க்கலாமா??
நான் முன்னமே சசொன்னா மாதிரி பல சமயங்களிலும் மக்கள் இந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களை பார்த்தாக கூறியிருக்கிறார்கள். ஆனால் 1947-இல் நடந்த இரு சம்பவங்கள் இந்த வேற்று கிரக உயிர் பற்றி மக்களிடையே பெறும் அர்வத்தை ஏற்படுத்திவிட்டு சென்றன. 1947-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி கென்னெத் ஆர்னால்ட் எனும் அமெரிக்க தொழிலதிபர் தன் சொந்த விமானத்துல வாஷிங்டன் அருகில் மவுண்ட் ரைனியர் (Mount rainier) எனும் இடத்தில் பறந்துகிட்டு இருந்தாராம் . அப்போ அவரு நல்லா ஜெகஜ்ஜோதியா ஒரு 9 தட்டுக்கள் மாதிரியான விண்ணூர்திகள் மவுண்ட் ரைனியர்ல இருந்து மவுண்ட் ஆடம்ஸ் நோக்கி பறந்துகிட்டு இருந்தத பார்த்தாராம். மணிக்கு 1200 மைல் வேகத்தோட பறந்திருக்கும் அப்படின்னு குத்துமதிப்பா தோணிச்சாம்.அதை அவரு செய்தியாளார்களிடம் தெரிவிச்சாரு. அது அந்த சமயத்துல பெறும் பரபரப்பை ஏற்படுத்திச்சு. இதை பத்திரிக்கைல படிச்சுட்டு உலகத்தின் எல்லா மூலையில இருந்தும் மக்கள் ,நானும் இதே மாதிரியான ஊர்திகளை பாத்திருக்கேன் என்று கொஞ்ச கொஞ்சமா சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. அட எனக்கு தான் ஏதோ தோணிச்சுன்னூ நெனைச்சேன்,எங்க வெளியில் சொன்னால் எல்லோரும் கேலி பண்ணுவாங்கன்னு சொல்லாம இருந்தேன். இப்போ நீங்க சொன்ன அப்புறம் எனக்கும் சொல்லனும்னு தோணிச்சு,அப்படின்னு அமெரிகாவுல பல பகுதிகளீல் இருந்தும் ,ஒன்னு ஒன்னா நிறைய பேரு தன்னுடைய அனுபவங்களை சொல்ல அரம்பிச்சாங்க.

இந்த மாதிரியான சமயத்துல தான் நான் சொல்ல போகிற இரண்டாவது சம்பவம் நடந்தது. வேற்று கிரக உயிர் சம்பந்தப்பட்ட விஷயங்களிலேயே மிக பிரபலமானதும்,மிக சுவாரஸ்யமானதுமான மேட்டர் இது.
அமெரிக்காவில் ந்யூ மெக்சிகோ(New Mexico) எனும் மாநிலத்தில் ராஸ்வெல்(Roswell) எனும் ஊர் உண்டு. ஒரே பாலைவனம் நிறைந்த பிரதேசம் இதுன்னு சொல்லலாம். பெரிதாக ஏதும் செடி கொடிகள் ,காடுகள் ஏதும் இல்லாத வெறுமையான பிரதேசம் அது.இந்த இடத்துல மாக் ப்ரேஸல் (Mack Brazel) என்பவர் ஒரு பண்ணை நடத்திக்கொண்டு வந்திருந்தார். ஜூலை 2ஆம் தேதியிலிருந்து 4ஆம் தேதிகளில் அந்த பகுதிகளில் நல்ல புயல் மழை இருந்து வந்ததாம்,அதனால் 4ஆம் தேதி இரவு பெருத்த வெடிச்சத்தத்தை அவர் கேட்டிருக்கிறார். அதனால் அடுத்த நாள் காலை என்ன நடந்தது என்று அறிய தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பியிருக்கிரார் (அவரின் பண்ணை 8000 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்திருந்தது்மிகமிகம). அப்பொழுது அவர் தன் வீட்டிலிருந்து 7-8 மைல்கள் தள்ளி ஒரு விண்ணூர்தி விழுந்து நொறுங்கி கிடப்பதை கண்டார். அவரின் பண்ணையில் பல முறை வானிலை ஆராய்ச்சி பலூன்கள் விபத்துக்குள்ளாகியிருப்பதை அவர் பார்த்திருக்கிறார். ஆனால் இந்த விண்ணூர்தி சற்றே வித்தியாசமாக அவருக்கு பட்டது.
உடனே பத்து மைல் தொலவில் இருக்கும் தன் பக்கத்து(?!) பண்ணைக்காரர் லொரெட்டா ப்ராக்டர் (Loretta Proctor)என்பவர் வீட்டிற்கு தான் கண்டுபிடித்த பொருட்களை எடுத்து போட்டுக்கொண்டு போயிருக்கிறார். அவர் கொண்டு வந்த பொருட்கள்் சற்றே வித்தியாசமாக இருந்ததாம். அதாவது பார்ப்பதற்கு சாம்பல் நிறத்திலான சாதாரண உலோகப்பொருள் போன்று்று இருந்ததாம். தொட்டுப்பார்த்தால் மரமோ அல்லது பிளாஸ்டிக் பொருள் போல் லேசாக இருந்ததாம். அந்த பொருளை வெட்டவோ,உடைக்கவோ முடியவில்லை. அந்த பொருளை கசக்கினா திரும்பவும் விரிஞ்சுக்குது,கசக்கின சுருக்கம் எதுவும் தெரியல்ல!!
இதெல்லாம் பாத்துட்டு அவிங்க செம டென்சன் ஆயிட்டாய்ங்க!!
கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான நம்ம தொழிலதிபர் கென்னெத் அர்னால்ட ஏதோ பறக்கும் தட்டு பார்த்தேன்னு சொன்னாருல!! அதனால நீ பேசாம அதிகாரிகள் கிட்ட இதை ஒப்படைச்சிடு. இது பத்தி ஏதாவது தகவல் கொடுத்தா ஏதோ பரிசு தரேன்னு வேற சொன்னாங்க அப்படின்னு பிராக்டர் நம்ம ப்ரேசலை உசுப்பேத்தி விட்டுட்டாரு. சரி இவரு சொல்லுறதும் சரிதான் அப்படின்னு நம்ம ப்ரேசல் அடுத்த நாள் 6ஆம் தேதி ராஸ்வெல் நகரத்துக்கு பயணப்படுறாரு.
அங்கே என்ன ஆச்சுன்னா...........

இது கொஞ்சம் பெரிய கதை மக்கா. முழுசா என்ன ஆச்சுன்னு பார்த்து,இரண்டு பக்கமும் என்ன சொல்லுறாங்கன்னு கேட்டு,இந்த சம்பவத்துனால என்ன எல்லாம் ஆச்சு,இது அடிப்படையா வெச்சு வேற்று கிரக உயிர்கள் பற்றிய நிறைய விஷயங்கள் எல்லாம் பாக்கனும்.அதெல்லாம் எழுத ஆரம்பிச்சா என் பதிவும் உண்மை தமிழன் பதிவு மாதிரி ஆகிடும் (அண்ணாச்சி கோச்சிக்காதிங்க!! :-))). அதனால கதையை அடுத்த பதிவுல தொடருகிறேன். அடுத்த பதிவு சீக்கிரமே போட்டுருவேன்,கவலை படாதீங்க!!
வரட்டா?? ;-)
--ராஸ்வெல் கதை தொடரும்
References:
http://en.wikipedia.org/wiki/Unidentified_flying_object
http://www.roswellproof.com/RoswellSummary2.html
http://www.crystalinks.com/roswell.html
http://ufo.whipnet.org/roswell/

படங்கள்:
http://en.wikipedia.org/wiki/Image:PurportedNJUFO1952.jpg
http://ufocasebook.com/tepoztlan1992large.jpg
http://en.wikipedia.org/wiki/Image:Arnold_crescent_1947.jpg
http://www.neilkate.legend.yorks.com/roswell/matt_brazel.jpg
http://www.crystalinks.com/roswelldebris.jpg

வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 1 (பிரபஞ்சம் உருவானது எப்படி)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 2(Big bang theory)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 3(Light years)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4(Black holes)
வானத்தில் விரியும் அதிசயங்கள் - பாகம் 5(Extra terrestrial life)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 6(Alien communication)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 7(UFOs)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 8(Roswell - part 1)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 9(Roswell - part 2)

படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 3

ஹலோ மக்களே!
எல்லோரும் எப்படி இருக்கீங்க???

போன பகுதியை பாத்துட்டு நிறைய பேரு பின்னூட்டம் போட்டிருந்தீங்க. அவங்க எல்லோருக்கும் என் நன்றிகள்.
அந்த பின்னூட்டங்களில் தான் ஒரு நண்பர் ,என்னுடைய Flickr தளத்துக்கு போய் பார்த்துட்டு அதுல இருந்த ஒரு படம் பத்தி கேட்டிருந்தாரு. அதை பத்தி பல பேரு பல சமயங்களிலே கேட்டிருந்ததால அதையே ஒரு பதிவா போட்டுறலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
நாம திரைபடங்களிலே இரட்டை வேட காட்சிகள் பலவற்றை பார்த்திருக்கோம்.முன்னாடி எல்லாம் சாதாரணமா ஓவ்வொரு பக்கம் நிக்கிறா மாதிரி வந்துகிட்டு இருந்தது,இப்போ ஜீன்ஸ் மாதிரி படங்களிலே பாத்தீங்கன்னா ரொம்பவே உண்மையா தெரியறா மாதிரி எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க!!
போன வருஷம் வீட்டுல இணையத்துல சும்ம உலாவிட்டு இருக்கும் போது கண்ணுல இது மாதிரி படம் ஒன்னு பட்டுச்சு,உடனே கையில காமெராவை தூக்கிக்கிட்டு கிளம்பிட்டேன். அப்போ முயற்சி பண்ணபோது கிடைத்தது தான் நீங்கள் கீழே பார்க்கும் படங்கள் எல்லாம்.

என் கற்பனை அண்ணன்
With my imaginary brother

வாக்குவாதம்
argument

உயிர் நண்பன்
Friend for life

இந்த மாதிரி படம் எடுக்கறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லீங்க.
ஒரு இரட்டை வேட படத்துக்கு தேவையான தலைப்பு முதலில் முடிவு செய்துக்கொள்ளுங்கள். அதாவது இரண்டு பேர்கள் வாக்குவாதம் செய்வது போல்,இல்லை சண்டை போடுவது போல்,என்று ஏதாவது காட்சி அமைப்பை முதலில் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த காட்சிக்கு ஏற்றார்போல் பின்புறம் (background) அமையுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்

முதலில் உங்க கேமராவை ஏதாவது கடினமான மற்றும் தட்டையான பரப்பில் வைத்துக்கொள்ளுங்கள் (Firm and flat base). உங்க கிட்ட ட்ரைபாட் இருந்திச்சுனா பாதி பிரச்சினை இல்லை.அதுல உங்க கேமராவை கெட்டியாக பொருத்திக்கொள்ளலாம். நான் ட்ரைபாட் இல்லாததுனால கேமராவை வைக்க இடம் கிடைக்காம தவியா தவிச்சேன். :-(

காமெராவை பொருத்திய பிறகு காமெராவை "self timer mode"-இல் செட் செய்து கொள்ளுங்கள். பின் கேமராஅவை ஆன் செய்து விட்டு ஓடி போய் ஒரு படம் எடுத்துக்கொள்ளுங்கள்.


இப்பொழுதுதான் இந்த வகை படங்கள் எடுப்பதில் முக்கியமான கட்டம். உங்கள் கேமராவின் இருப்பு நிலை (position) கொஞ்சம் கூட மாறாமல் உங்கள் கேமராவை திரும்பவும் self timer mode-க்கு மாற்றி விடுங்கள். என் கேமராவில் ஒவ்வொரு படத்திற்கும் இப்படி மாற்ற வேண்டும். உங்களுக்கு ஒரு முறை மாற்றினாலே போதும் என்றால் ரொம்ப நல்லது.
பிறகு உங்கள் காட்சியில் வேண்டிய இரண்டாவது பாத்திரத்தை படம் எடுத்துக்கொள்ளுங்கள்.
நான் முன்பே கூறியது போல இரண்டு படங்கள் எடுக்கும் போது உங்கள் கேமராவின் இருப்புநிலை (position) ஒரே மாதிரி
இருக்க வேண்டும். இரு படங்கள் எடுப்பதற்கு மத்தியில் "கொஞ்சம்" அசைந்தாலும் கூட இந்த காட்சி சரியாக வராது.
படங்கள் எடுக்கும் போது ஒளியின் அளவு பற்றி மிகவும் கவனம் செலுத்த வேண்டும். நம்மை பொருத்த வரை ஒளியின் அளவு காலை மதியம் மாலை என மூன்று நேரங்களை தவிர பெரிதாக மாறுவதாக தெரிவதில்லை அல்லவா. ஆனால் உண்மையாக சொல்லப்போனால் ஒளியின் அளவு நிமிடத்திற்கு நிமிடம் வேறு பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. அதுவும் வானீல் மேகங்கள் இருந்தால் அவற்றின் மாறுதலுக்கு ஏற்ப ஒளியும் மாறுபட்டு போய் தொடர்ச்சியை(continuity) குலைத்துவிடும். (மேலே கொடுத்த மூன்று படங்களில் கடைசி படத்தில் இதன் உதாரணத்தை காணலாம்!! :-))
அதுவுமில்லாமல் வெளியில் படம் எடுக்கும் போது நிழல்கள் பற்றி நிறைய யோசிக்க வேண்டும். இரண்டு படங்களிலும் இருக்கும் நிழல்களும் கடைசியில் ஒரே காட்சியில் சரியாக வருமா என்று படம் எடுக்கும் போதே நீங்கள் யோசித்துக்கொள்ள வேண்டும்.இந்த தொல்லைகள் எல்லாம் வேண்டாம் என்றால் உங்கள் முயற்சியை நீங்கள் வீட்டின் உள்ளே(Indoors) வைத்துக்கொளவதே நல்லது.
சரி இரண்டு படமும் எடுத்தாகி விட்டது இப்பொழுது என்ன??
உங்கள் இரண்டு படங்களையும் கணிணியில் பதிவேற்றிக்கொள்ளுங்கள். பிறகு ஏதாவது Image editing மென்பொருளில் இதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள். அப்புறம் உங்கள் முதல் படத்தின் இடது பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து வெட்டிக்கொள்ளுங்கள். அதை அப்படியே உங்கள் இரண்டாவது படத்தின் மேல் இடதுபுறம் சரியாக ஒட்டி விடுங்கள். ஒட்டும் போது மேலே கீழே போகாமல் சரியாக பார்த்து ஒட்ட வேண்டும்!!
அவ்வளவுதான் உங்கள் இரட்டை வேட படம் தயார்!!


இந்த வெட்டி ஒட்டுதல் வேலை செய்வதற்கு பெருசா Photoshop அல்லது Gimp போன்ற மென்பொருட்கள் வேண்டும் என்று அவசியம் அல்ல. ஏதாவது சாதாரண மென்பொருள் போதும். நானே Microsoft Photo editor என்ற ஒரு சாதாரண மென்பொருளை தான் பயன் படுத்தினேன். நாம் பெரிதாக எதுவும் செய்ய போவதில்ல,சாதாரணமாக வெட்டி ஒட்ட போகிறோம்!அவ்வளவுதான்!!! அதனால என்னிடம் Photoshop எல்லாம் கிடையாது ,எனக்கு அதுல எல்லாம் வேலை செய்ய தெரியாது என்று நினைத்துக்கொள்ள்ள வேண்டாம்.

ஆனால் Photoshop அல்லது Gimp போன்ற மென்பொருட்களில் "Layers" என்றொரு வசதி உண்டு. அதை வைத்துக்கொண்டு இரு பாத்திரங்களும் கலந்து இருப்பது போன்ற(overlapping photos) காட்சிகளை உருவாக்கலாம் . கலந்திருக்கும் படங்கள் என்றால் ஒருவரை ஒருவர் கை கொடுத்துக்கொள்வது, தோள் மேல் கை போட்டுக்கொள்வது போன்ற படங்கள்!!

எனக்கு அந்த மென்பொருட்கள் எல்லாம் என் கணிணியில் இல்லை,அவற்றை உபயோகிக்கவும் தெரியாது!! அதனால் அப்படிப்பட்ட படங்களை முயற்சிக்க வில்லை. நம்ம சாதாரணமாக வெட்டி ஒட்டி செய்யும் இரட்டை வேட படங்களில் இரு பாத்திரங்களும் தனித்தனியே இருக்க வேண்டும,கலந்திருப்பது போல் செய்ய முடியாது்.

மேலே உதாரணத்திற்குக் நான் காட்டிய படத்தை நான் வேறு எங்கும் வெளியே காட்டியது இல்லை. படங்கள் அவ்வளவாக தெளிவாக வரவில்லை. அந்த சமயத்தில் நிறைய குளிர் இருந்ததால் நான் ஆர அமர எதுவும் செய்ய முடியவில்லை. அவசரத்திற்கு ஏதோ படம் எடுத்து விட்டு வீட்டிற்குள் ஓடி வந்து விட்டேன். நான் முன்பே சொன்னது போல் வெளியே சரியான சமபரப்பு வேறு கிடைக்கவில்லை!! :-(
அதுவுமில்லாமல் படத்தை உன்னிப்பாக கவனித்தீர்கள் என்றால் இடது பக்கம் இருக்கும் சீவீஆரின் நிழல் தெரியாது!!!!ஏனென்றால் வெட்டி ஒட்டும் போது வலது புற படம் அதை மறைத்து விட்டது. இதனால் இந்த படத்தை நான் வெளியேகாட்டியது இல்லை. ஆனால் உங்களுக்கு புரிய வைப்பதற்காகவே இதை பிரசுரித்திருக்கிறேன். (என்னா நல்ல மனசு!! :P)

நீங்களும் முடிஞ்சா இதை முயற்சித்து பாருங்கள். உங்கள் மேராவின் இருப்பு நிலையும்,ஒளியின் அளவும் தான் இந்த காட்சி அமைவதற்கு மூலம். இவை இரண்டையும் சரியாக இருக்குமாறு பார்த்துக்கொண்டால் நீங்களும் ரஜினி கமல் மாதிரி இரட்டை வேடத்தில் அசத்தலாம்!!!உங்கள் முயற்சிகள் பற்றி மறக்காம பின்னூட்டப்பெட்டியில் பதிச்சிட்டு போங்க!! சரியா?? :-)

சரி,அடுத்து வேறு ஒரு புகைப்படக்கலை சார்ந்த தலைப்போடு உங்களை பார்க்க வருகிறேன். அது வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது,உங்கள் அன்பு சீவீஆர்!!!
வரட்டா??!!!!! ;-)

படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 1(Rule of thirds)
படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 2(Leading lines)
படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 3(Double action pics)

Related Posts Widget for Blogs by LinkWithin