இதயப்போராட்டம் - பாகம் 1

நான் முடிவு செய்துவிட்டேன். இன்று சொல்லியேதீர போகிறேன். தினம் தினம் நான் படும் சித்திரவதையை தாங்க முடியவில்லை.நேற்றிரவு திரும்பவும் ஓர் நிம்மதியில்லா இரவாக கழிந்தது. காதலை முதலில் சொல்லுவது கொஞ்சம் அல்பத்தனமாகவும் என் பக்கம் சிறிது மன உறுதி குறை போன்றும் காணப்பட்டாலும் எனக்கு கவலை இல்லை. காதல் என்பது நீ கீழே, நான் மேலே என்று போட்டி போடும் விளையாட்டு அல்ல. அது தன்னிகரில்லாத தெய்வீக உணர்வு.
நானா இவ்வளவு மாறி விட்டேன் என்று நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது. நான் ஒரு காலத்தில் காதலை மிக கடுமையாக எதிர்த்து வந்தேன். கல்லூரி காலத்தில் என் தோழி ஒருத்தியிடம் ஒருத்தன் காதல் கடிதம் கொடுத்திருந்தான்,அவளும் என்னிடம் ஆலோசனை கேட்க வந்தாள். நான் அவளுக்கு அளித்த பல மணி நேர அறிவுரைக்கு பின் அவள் அவன் அருகே கூட பிறகு செல்லவிவில்லை. அன்று ஏதோ அவளை பாழும் கிணற்றில் இருந்து காத்தது போல் பெருமிதம் கொண்டேன்.
பொதுவாகவே எனக்கு ஆண்களை கண்டால் அவ்வளவாக பிடிக்காது,என் அப்பாவை தவிர. ஆண்கள் என்றாலே காட்டுமிராண்டிகள் என்று தோன்றக்கூடிய அளவுக்கு அருவரக்கத்தக்க பல கதைகளை கேட்டிருக்கிறேன். இறைவன் படைப்பிலேயே இந்த ஆண் / பெண் பாகுபாடு நியாயமில்லாத பங்கீடு என தீவிரமாய் நம்பியிருந்தேன் , இப்பொழுதும் அவ்வப்போது எண்ணி கொள்வேன். நான் பெரியவளான பின்பு கூட எனக்கு ஆண்களிடத்தில் பெரிதாக ஈர்ப்பு ஒன்றும் கிடையாது , சினிமா நடிகர் மாதவனை தவிர. இது எல்லாம் நான் பரத்தை காண்பதற்கு முன்னால்.
என் வாழ்வில் பரத்தின் நுழைவு மிக ஆரவாரமற்றதாக இருந்தது. ஒரு நாள் நான் அமைதியாக வேலை பார்த்துக்கொண்டு இருக்கும்போது ஒரு மிடுக்கான சட்டை போட்ட இளைஞன் என்னை நோக்கி வந்தான். என் மேலாளரின் இருக்கை எங்கே என்று கேட்டு விட்டு நான் வழி காட்டியவுடன் கண்ணியமான ஒரு நன்றியை உதிர்த்து விட்டு நான் காட்டிய வழி நோக்கி நடந்தான். அவன் பேசியவிதத்தில் ஒரு அமைதியான புத்துணர்வு இருந்தது. அவன் எங்கள் நிறுவனத்தின் வேறு ஒரு பிரிவிலிருந்து இங்கே இடமாற்றம் வாங்கி வந்திருக்கிறான் என்று எனக்கு சிறிது நேரத்தில் தெரிந்தது. இவன் என்னை விட பணியில் எவ்வளவு மூத்தவன் என்றும்,இவனால் என் வெளிநாடு சந்தர்ப்பம் எவ்வளவு பாதிக்கப்படும் என்பதை பற்றி மட்டும் தான் எனக்கு அப்பொழுது கவலை!!
சே இப்பொழுது நினைத்தால் எவ்வளவு சிறுபிள்ளைதனமாக இருக்கிறது .யாரும் பார்ப்பதற்கு முன் என் சிரிப்பை அடக்கி கொண்டேன். இப்பொழுதெல்லாம் என் உணர்ச்சிகள் என் அனுமதிக்கு காத்திருக்காமல் வெளிப்பட்டு விடுகிறது. அவன் வந்த புதிதில் என் ப்ராஜெக்ட் பற்றி பல விஷயங்களை என்னிடமிருந்து அவன் கற்று கொள்ள வேண்டி இருந்தது, அதனால் பல சமயங்கள் அவன் என்னிடம் பேசி பழக வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. அவனை எங்கோ பார்த்த உணர்வு அவ்வப்போது எழுந்து விழுந்து கொண்டு தான் இருந்தது.பிறகு தான் , என் அடிமனதில் நான் கற்பனை செய்திருந்த ஒரு முழுமையான ஆண்மகனின் உருவம்தான் அது என்று தெரிந்தது. அசடு வழியும் ஆயிரம் பேர் நடுவில் கண் பார்த்து கண்ணியமாய் பேசி எனை அசத்தினான். அவன் பேசும் பொழுதுகள் மிக குறைவு,சிரிக்கும் சமயங்கள் அதை விட குறைவு. ஆனால் பேசினால் அச்சு தெரித்தால் போல் பேசுவான்,சிரித்தால் உதட்டளவே இல்லாமல் உள்ளத்திலிருந்து சிரிப்பான். வெளிநாட்டிலிருக்கும் எங்கள் குழு உறுப்பினர்களுடன் அவன் பேசும் லாவகத்திற்கு நான் தீவிர ரசிகை ஆகிவிட்டேன். ப்ராஜெக்டில் பல பிரச்சினைகள் இருக்கும் சமயங்களிலும் நிதானம் தவறாமல் அவன் வேலை செய்யும் பாங்கு என்னை கவர்ந்தது.குழுவில் பெண்கள் யாரும் வெகு நேரம் தங்காமல் வீடு செல்ல அவன் எடுத்துகொண்ட அக்கறை எனக்கு பிடித்து இருந்தது.
நான் இவனை இப்படி பார்த்து பார்த்து ரசித்து கொண்டு இருக்க,அவனோ என்னை கண்டும் காணாதது போல் இருந்தான். வேலை நிமித்தம் தவிர நாங்கள் பேசி கொள்ள சந்தர்ப்பங்கள் மிக குறைவு. குழுவில் நாங்கள் வெளியே எங்காவது சென்றாலும்,அவன் அவ்வளவாக ஒட்டிக்கொள்ள மாட்டான். ஆனால் நானோ ,அவன் இல்லாமல் ஒரு வாழ்க்கையை கற்பனை செய்து கூட பார்க்க முடியாமல் இருந்தேன். திரையில் புதிதாக வெளிவந்த காதல் பாடல்கள் எல்லம் எங்களை ஒட்டியே எழுதப்பட்டது போன்று இருந்தது. நான் பார்க்கும் பொருள் ஒவ்வொன்றும் எப்படியாவது அவனை நினைவுபடுத்துபவையாகவே இருந்தது. என் வாழ்வில் கஷ்டங்கள் வேண்டும் என்று விரும்பினேன்,அப்பொழுது தான் அவன் தோளில் சாய்ந்து அவன் அரவணைப்பை ரசிக்கலாம் என்பதற்காக. அவன் அம்மாவோடு நான் கடைத்தெரு செல்லும் போது அவன் கேலி செய்வதைபோல் கற்பனை கண்டு திளைத்தேன். வேதனை தரும் மூன்று நாட்களில் ஆறுதல் அளிக்கும் அவன் கதகதப்பிற்காக ஏங்கினேன். போர்வையாய் அவன் கரம் போர்த்த முடிவில்லா கடலில் தொலைந்திருக்க ஆசை பட்டேன். குழந்தையை யார் பள்ளிகூடத்தில் விடுவது போன்ற சண்டை சச்சரவுகளை கனவில் சிரித்தபடி போட்டேன்.
அலுவலகம் செல்லும்போது கூட அவனிடத்தில் என்ன பேச வேண்டும் மனதிற்குள் பயிற்சி செய்தி கொண்டே போனேன். அவனுக்கே இவ்வளவு சமயத்தில் சந்தேகம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்,அவனிடம் இருக்கும் போது துடிக்கும் மனதை கட்டு படுத்த முடியவில்லை. இதோ வந்து விட்டான். எளிதாக கண்டுபிடிக்க முடியாத ஒரு மெல்லிய புன்னகையை பூத்து கொண்டு!!
தேனீர் அருந்த போவது போல் பாவனை செய்து கொண்டு அவன் முன் நடந்தேன்.
“ஹை பரத்”
“ஹலோ தேஜஸ்வினி, வீகெண்ட் எப்படி இருந்தது??”
“எப்பவும் போல தான், ஹே நான் உன் கூட கொஞ்சம் பேசனும்”
“ஹ்ம்ம்ம் ஆமாம் நானே உன்கிட்ட அது பத்தி பேசனும்னு நெனெச்சேன்”
“என்னது??” , எனக்கு மயக்கமே வந்து விடும் போல இருந்தது.
“அந்த ஏழாவது ஸ்க்ரீன் – ல இருக்கற பக்கு(bug) தானே?? வெள்ளிகிழமை சாயந்திரம் 11 மணி வரைக்கும் அதுலதான் வொர்க் பண்ணிட்டு இருந்தேன்”என்று சொல்லிவிட்டு ஈஈ என்று இளித்து கொண்டு இருந்தான். எனக்கு அவன் முகத்தில் ஒரு வாளி பச்சை தண்ணீர் ஊற்ற வேண்டும் போல இருந்தது.
“இல்ல பரத், இது வேற விஷயம்”
“அப்படியா!! என்னது”,திடீரென்று ஆச்சரியத்தை வரவழைத்துகொண்டு கேட்டான்.
நான் என்ன சொல்ல போறேன்னு உனக்கு உண்மையாவே தெரியாதா கள்ளூளி மங்கா என்று நினைத்துக்கொண்டே தொடர்ந்தேன்.
“அப்புறமா சொல்றேன்,இன்னைக்கு சாயங்காலம் காபி ஒன்னா சாப்பிடலாமா??”
அவன் முகத்தில் கொஞ்சம் லேசாய் மாற்றம் தெரிந்தது.
“ஒகே, நோ ப்ராப்ளம்” . அவன் முகத்தில் புன்னகை திரும்பினாலும் அது முழுமையாக இல்லை.
“ஓகே, பாக்கலாம்!!” என்று புன்னகைத்து விட்டு, காபி இயந்திரம் இருக்கும் இடம் நோக்கி விடு விடுவென்று நடந்தேன். இனிமேல் மறைக்க முடியாது,பாதி கிணறு தாண்டியாகிவிட்டது. அவனை திரும்பி பார்க்க கூடாது என்று என்னை மிகவும் கட்டுபடுத்திக்கொண்டேன். வாழ்க்கையிலேயே என்னை கட்டுப்படுத்திகொள்ள அன்றுதான் மிகவும் கஷ்டப்பட்டேன்.

- இதயப்போராட்டம் தொடரும்………..

பி.கு:Game of hearts எனப்படும் என் ஆங்கில கதையின் தமிழாக்கம்.

இதயப்போராட்டம் - பாகம் 1
இதயப்போராட்டம் – பாகம் 2
இதயப்போராட்டம் – பாகம் 3
இதயப்போராட்டம் – பாகம் 4

அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 5

அமெரிக்காவில் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு போக வேண்டும் என்றால் அதற்கு “Freeway” எனப்படும் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன் படுத்தலாம். இந்த சாலைகளில் போக்குவரத்து விளக்குகள் ஏதும் இருக்காது. இங்கு வண்டியை மெதுவாக ஓட்டி செல்லவோ அல்லது நிற்கவோ கூடாது. குறைந்த பட்சம் 45 மைல்கள் மற்றும் அதிகபட்சமாக 70 மைல்களுக்குள் செல்ல வேண்டும் (இது மிசிகன் மாநிலத்தில் உள்ள விதி, வேக அளவு ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடும்). ஊருக்குள் செல்வதற்கு வெளிவழிகள் (exits) எனப்படும் தனி சாலைகள் பிரிந்து செல்லும்,மற்றும் நெடுஞ்சாலைக்குள் சேருவதற்கு “ramps” எனப்படும் பாதைகளை பயன்படுத்த வேண்டும் . கூடவும் தடப்போக்குவரத்து (lane traffic) இந்த சாலைகளில் மிக கண்டிப்பாக பின்பற்றப்படும். டிட்ராய்டிலிருந்து ஆன் ஆர்பருக்கு சென்று கொண்டிருந்த எங்கள் வாகனம் I-94 எனும் இதுபோன்ற நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அங்கிருந்து 177 எனப்படும் வெளிவழியை எடுத்து ஆன் ஆர்பருக்குள் நுழைந்தோம்.

டிட்ராய்ட் நகரத்தில் இருந்து சுமார் 45 மைல்கள் தொலைவில் இருக்கும் ஆன் ஆர்பர் (Ann Arbor) , 1824 ஆம் வருடம் ஜான் அல்லென்,எலிசா ரம்சி ஆகிய இரு நில பேர வல்லுனர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. (Ann) எனப்படும் அவர்களின் மனைவிகளின் பெயரையும் (அவர்கள் மனைவிமார்கள் இருவரின் பெயரும் Ann-தான்), இங்கு பரவலாக வளரும் burr oak மரங்களின் பெயரையும் சேர்த்து இந்த ஊருக்கு Ann Arbor என்று பெயர் வைத்து விட்டார்கள். 1837-ஆம் வருடம் டிட்ராய்டில் இயங்கிக்கொண்டு இருந்த மிசிகன் பல்கலைகழகம் இங்கு மாற்றப்பட்டது. அப்பொழுதிலிருந்து இந்த ஊருக்கு எல்லாமே இந்த பல்கலைகழகம்தான். ஊரில் பெரிதாக வேறு ஒன்றும் கிடையாது!!! சென்னையில் உள்ள மாம்பலத்தையும், சைதாப்பேட்டையும் சேர்த்தால் அதுதான் இந்த ஊரின் மொத்த நிலப்பரப்பாக இருக்கும் என நினைக்கிறேன். 2000 ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி இந்த ஊரின் மொத்த மக்கட்தொகை 1,14,024.

ஒரு ஒப்பீடுக்காக பார்த்தோம் என்றால் சென்னையின் மக்கட்தொகை குத்து மதிப்பாக நாற்பது லட்சம் இருக்கும்.
ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தபின் பசி பிடுங்கித்தின்றது. நம் ஊராக இருந்தால் பத்தடிக்கு ஒரு டீ கடை அல்லது உணவகம் இருக்குமல்லவா?? ஆனால் இங்கு நிலைமையே தலை கீழ். எல்லோரிடமும் கண்டிப்பாக கார் இருக்கும் என்று முழுமையாக அனுமானம் பண்ணிக்கொண்டே இங்கு உள்ள ஊர்களை எல்லாம் கட்டி இருக்கிறார்கள் போல இருக்கிறது.அதற்கு ஏற்றார்போல் இங்கு எல்லோரிடமும் கார் இருப்பது தான் வியப்பு. வெளியே பார்த்தால் ஒருவர் கூட நடந்து செல்வதில்லை.எங்குமே கார் இல்லாமல் செல்ல முடியாது. அரசு போக்குவரத்து பேருந்துகள் பேருக்கு அங்கொன்று இங்கொன்றுமாய் ஓடிக்கொண்டு இருக்கும்,ஆனால் அதனால் பெரிதாக ஒன்றும் பயன் இல்லை. டவுண்டவுன் (Downtown) எனப்படும் முக்கியமான பகுதியை விட்டால் எல்லா வளாகங்களும் எங்கெங்கோ தள்ளி தள்ளி இருக்கும். எல்லா கடை மற்றும் அலுவலகங்களும் நல்ல பெரிதாக மற்றும் பூதாகாரமான வாகன நிறுத்துமிடங்களோடு (car parking) இருக்கும் . எல்லோரும் போக்குவரத்து விதிகளை தவறாமல் கடை பிடிக்கிறார்கள்.
எனக்கு என்னமோ மக்கள் செய்யும் பெரும்பாலான விஷயங்கள் எல்லாமே மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொருத்தே உள்ளது என்று ஒரு நம்பிக்கை. ஆங்கிலத்தில் இதற்கு உடன் இருப்போர் நிர்பந்தம் (Peer pressure) என்று ஒரு பெயர் உள்ளது. நம் ஊரில் யாரும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில்லை அதனால் பின் பற்ற வேண்டும் என்று நினைப்பவருக்கும் செய்ய தோன்றுவதில்லை. அப்படி செய்தாலும் மற்றவர் எல்லோரும் ஒரு மாதிரியாகவும் இவர் வேறு மாதிரியும் செய்து கொண்டு இருப்பார்,நிச்சயம் எங்கேயாவது ஏதாவது இடிக்கும். ஆன் ஆர்பரில் மக்கள் எல்லோரும் போக்குவரத்து விதிகளை கடை பிடிப்பதற்கும் உடன் இருப்போர் நிர்பந்தம் தான் காரணம்!!

நம் ஊரில் விதிகள் கடைப்பிடிப்பது என்பது சாதாரணமாக அனைவரும் செய்ய கூடிய விஷயமாக ஆகும் வரை நம்மை போன்ற சில இளைஞர்கள்தான் இந்த பழக்கம் பெரும்பான்மையாக்க விழைய வேண்டும்.இது போக்குவரத்துக்கு மட்டுமில்லாமல் லஞ்சம்,இன - மொழி வேறுபாடு,சுத்தம் சுகாதாரம் எல்லாவற்றிற்கும் பொருந்தும்.
சரி சரி என் சமூக அக்கறை பிரசங்கத்தை நிறுத்து கொள்கிறேன். ஹோட்டலிலிருந்து பசியோடு கிளம்பினேனே ,அப்புறம் என்ன ஆயிற்று தெரியுமா??நானும் என் நண்பன் ஒருவனும் சாப்பிடுவதற்கு இடம் தேடி இங்கும் அங்கும் அலைந்து திரிந்தோம்.ஒரு 30-40 நிமிடங்கள் குளிரில் அலைந்த பிறகு வெண்டீஸ் (Wendy’s) எனப்படும் ஒரு உணவகத்துக்குள் ஒதுங்கினோம்.அங்கு இருந்த ஒரு பலகையில் சைவ உணவு ஏதாவது இருக்கிறதா என்று கண்ணில் விளக்கெண்ணையை விட்டு தேடி கொண்டிருந்தேன். ஆழ்ந்த ஆராய்சிக்கு பின் “simple classic ஏதோ” வாங்களாம் என்று முடிவு செய்தேன். அங்கு நின்றிருந்த பெண்மணியிடம் சென்று எனக்கு அந்த “சிம்பிள் க்லாசிக் சமாசாரம்” ஒன்று தரவும் என்று சொல்லி விட்டு,”இது சைவ உணவு தானே??” என்றேன்!! நான் ஏதோ வேற்றுகிரக மொழியில் பேசும் ஜந்து போல,என்னை பார்த்து அந்த பெண்மணி திரு திரு என முழித்தாள்!! “அட கடவுளே!!!” என நினைத்துக்கொண்டு எனக்கு தெரிந்த எல்லா அமெரிக்க உச்சரிப்பையும் வரவழைத்து கொண்டு ஒரு 5-10 நிமிடங்கள் வெவ்வேறு ஸ்வரங்களில் சைவ உணவு வேண்டும் என்று பேசி/பாடி பார்த்தேன். அவள் புரிந்து கொண்டுதாகவே தெரியவில்லை. கடைசியில் “அம்மா தாயே,மாமிசம் இல்லாமல் (no meat)ஏதாவது கொடம்மா!!” என்று ஒரு வழியாக மன்றாடிவிட்டு நகர்ந்தேன்!!

சிறிது நேரத்திற்கு பிறகு என்னிடம் ஒரு பொட்டலம் வழங்கப்பட்டது. அதில் இரண்டு பன்னிற்கு நடுவில் கொஞ்சம் சீஸ், சிறிது முட்டைகோஸ் ,ஏதோ இலை தழைகள் வைத்து கொடுத்திருந்தார்கள். அதை தவிர ஏதோ வறுத்த பதார்த்தம் தென்பட்டது!!! அந்த பதார்த்தம் என்னவென்றே தெரியவில்லை, ஆனால் எனக்கு அதை பார்த்தாலே ஏதோ குமட்டிக்கொண்டு வந்தது. திரும்பி அந்த பெண்மணியிடம் சென்றால் பயனில்லை என்று தெரிந்ததால் அதை என்னுடைய அசைவ நண்பரிடம் கொடுத்து விட்டு ,மிச்ச பர்கரை (burger) எப்படியோ முழுங்கி தொலைத்தேன்!! என்னடா அமெரிக்கா இது!! கனவுகள் எல்லாம் நனவாகும் என்று சொல்கிறார்கள்,ஒரு வேலை சோற்றுக்கு ததிகனத்தோம் போட வேண்டி இருக்கிறதே என்று என் நண்பரிடம் புலம்பி தீர்த்தேன்.

சுவாரஸ்யமான விஷயம் என்ன என்றால் என் மொத்த அமெரிக்க வாசத்திலேயே நான் சாப்பிட்ட மோசமான உணவு அதுதான்!! அதன் பிறகு எல்லாம் வீட்டிலேயே சமைக்கும் உணவுதான் (இங்கு வந்த அப்புறம்தான் சமைக்கவே பழகிக்கொண்டேன்). வெளியேவும் சைவ உணவு தேடி பிடிக்கும் லாவகம் வந்துவிட்டது!! இங்குள்ள உணவகங்களிலேயே சைவ பர்கர் (veg burger) கிடக்கும் ஒரே இடம் பர்கர் கிங் (Burger King) எனப்படும் உணவகம்தான். எங்கு சென்றாலும் சைவ பீட்சா (veg pizza) பரவலாக கிடைக்ககூடிய சைவ உணவு. இது போன்ற சில பல ஞானோதயங்களை இறைவன் அவ்வப்போது அருள்வதால் சாப்பாட்டிற்கு இன்று வரை குறை இல்லை.

இது போன்ற பல புதுசு புதுசான , தினுசு தினுசான விஷயங்கள் இங்கு வந்த புதுசில் நடந்தது, இப்போ கூட அங்கொன்றும் இங்கொன்றுமாய் சுவையான நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அதிவேகமாக காரில் சென்று மாமாவிடம் மாட்டிக்கொண்டது, சுதந்திர தேவி சிலை உட்பட ந்யூயார்க் நகரத்தில் சுற்றி திரிந்தது,மேக மூட்டமான ஒரு மாலை நேரத்தில் நயாகரா நீர்விழுச்சியின் அருகில் ஒரு பூங்காவில் கால நேரம் தெரியாமல் கண் மூடி புன்னகை பூத்து கிடந்தது,பாண்டி பஜாரை போன்று சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த சிகாகோவின் திவான் தெருவில் உள்ள ஒரு உடுப்பி ஹோட்டலில் சுட சுட மசால் தோசையை கபளீகரம் செய்தது, ந்யூ ஜெர்சியில் இருந்த ஆந்திர உணவகம் ஒன்றில் நம் மெட்ராஸ் காபியை ருசித்து குடித்தது,ஒன்றரை ரெண்டு மாதங்கள் அறை நண்பர்கள் கூட இல்லாமல் தனிமையின் இனிமையை புரிந்துகொண்டது ...............
அப்பப்பா!!! எங்கு ஆரம்பித்து எங்கு முடிக்க!!! எழுத வேண்டும் என்றால் எழுதிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்!! இருந்தாலும் இந்த பதிவின் ஆரம்பத்திற்கு ஒரு பொருத்தமான முடிவாக இருக்கவேண்டுமே என்பதற்காக இந்த இடுகையோடு இந்த தொடரை முடிக்கிறேன்.
தொடரை தொடர்ந்து படித்த அன்பர்களுக்கும் ,படித்து விட்டு பின்னூட்டங்கள் இட்ட நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த பதிவிற்கு பின் என் கதைகள் சிலவற்றை மொழி பெயர்க்கலாம் என்று திட்டமிட்டுள்ளேன். இன்று போல் என்றும் உங்கள் அன்பும் ஆதரவும் இருக்கும் என்ற நம்பிக்கையுடனும் , அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து விடை பெரும் உங்கள் இனிய நண்பன்.

CVR

-- முற்றும்


அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - முன்னுரை
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 1
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 2
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 3
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 4

அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 4

முன்பு வந்த இரண்டு விமானங்களை விட இந்த விமானம் சிறிது சொகுசாகவே இருந்தது. இந்த விமானத்தில் ஒவ்வொரு இருக்கைக்கு முன்னாடியும் ஒரு சின்னத்திரை பெட்டி பொருத்தப்பட்டிருந்தது!அதில் படங்கள் , விமானப்பாதை செய்திகள், விளையாட்டு போன்ற பல விதமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறம்பி இருந்தன.இதை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எனக்கு கிடைத்திருந்த இருக்கை ஜன்னல் இருக்கை!!
விமானத்தில் வந்திருந்த என் நிறுவனத்தை சேர்ந்த இருவரில் ஒருவரை சந்தித்து கொண்டேன். டிட்ராய்ட் சென்றவுடன் ஓட்டலுக்கு ஒன்றாகவே செல்லலாம் என்று அவரிடம் உடன்பாடு செய்து கொண்டேன்.
நாலாபுறமும் நீங்காது நிறைந்திருந்த நீல வர்ணத்தை உரிமையாக உரசிக்கொண்டே என் விமானம் அட்லான்டிக் பெருங்கடலை கடந்து கொண்டு இருந்தது. விமானத்தில் என்னிடம் நிறப்புவதற்கு இரண்டு படிவங்கள் கொடுக்கப்பட்டன. முதல் படிவத்தின் பெயர் I-94. இதில் நான் அமெரிக்கா சென்றவுடன் தங்கப்போகும் இடம் (அப்பொழுது தங்க இடம் ஒன்றும் பார்க்கவில்லை , குத்து மதிப்பாய் என் நண்பரின் விலாசத்தை கொடுத்தேன்) போன்ற விஷயங்களை கேட்டிருந்தார்கள். அடுத்தது நீல நிறத்தில் இருந்த ஒரு படிவம்.இதில் நீங்கள் ஏதாவது விலை உயர்ந்த பொருள் எடுத்து செல்கிறீர்களா?,நீங்கள் மண், செடி,கொடி,மிருகங்கள் போன்ற ஏதாவது எடுத்து செல்கிறீர்களா ?போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அந்த படிவங்களை நிறப்பி முடித்து விட்டு என் முன்னால் இருந்த சின்னத்திரையில் நான் சில படங்களை பார்த்துக்கொண்டு இருந்தேன். எனக்கு அசைவூட்ட படங்கள் (animation movies) என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் “Toy story” மற்றும் “A Bug’s life”ஆகிய படங்களை பார்த்து ரசித்தேன். பிறகு “Fun with Dick and Jane” என்ற ஜிம் கேரியின் படம் ஒன்றையும் பார்த்தேன். ஜிம் கேரியின் படம் எதுவாக இருந்தாலும் ஒரு முறையேனும் கண்டிப்பாக பார்க்கலாம்!! என்ன நான் சொல்வது சரிதானே!!
சில சமயங்களில் வெள்ளை மேகங்களில் பிரதிபலித்த சூரியனின் வெளிச்சத்தை தாங்க முடியாமல் ஜன்னல் கதவை மூடியே வைத்திருந்தேன்.விமானம் கானடா நாட்டின் நிலப்பறப்பில் நுழைந்த பிறகு கீழே பறந்து விரிந்த காடு,மலை,மரம் மற்றும் பல இயற்கை காட்சிகள் என் கண்ணுக்கு விருந்தளித்தது. இப்படி இனிதே கழிந்த பயணத்தின் கடைசியில் விமானம், டிட்ராய்டின் மேகக்கூட்டங்களிடம் சிறிது ஓடிப்பிடித்து விளையாடிவிட்டு, பிறகு சமத்து குழந்தை போன்று ஓடுதளத்தில் சத்தமில்லாமல் இறங்கியது.
விமானத்திலிருந்து வெளியே வந்ததும் என் நிறுவனத்திலிருந்து அந்த விமானத்தில் வந்திருந்த இரண்டு நண்பர்களோடு சேர்ந்து கொண்டேன்.பிறகு நாங்கள் அனைவரும் குடிநுழைவு முகப்பு (Immigration counter) உள்ள பகுதிக்கு சென்றோம். மனிதனால் புன்னகை கூட செய்ய முடியும் என்பதே அறியாதவர் போல் இருந்த ஒரு நடுத்தர வயது குண்டு பெண்மணி அங்கு என்னை சற்று ஏற இறங்க பார்த்தார்.
பின்
உங்களின் தொழில் என்ன?
உங்களின் நிறுவனத்தின் பெயர் என்ன?
நீங்கள் இங்கே எந்த ஊரில் தங்க போகீறிர்கள்??
என்று சில கேள்விகளை கேட்டுவிட்டு என் I-94 படிவத்தை என் அமெரிக்க விசா பக்கத்தின் எதிர் பக்கத்தில் ஊசியால் குத்தி கொடுத்தார்.
பின்பு என் பயணபெட்டிகளை பொறுக்கி கொண்டு சுங்கச்சாவடிக்கு சென்றேன்.என்னிடம் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லாததால் அங்கு இருந்த அதிகாரி என்னிடம் பெரிதாக கேள்விகள் ஒன்றும் கேட்க வில்லை.
“பெட்டிக்குள் என்ன இருக்கிறது??”
“துணிமணிகள் மற்றும் சில பாத்திரங்கள்”
“ஏதாவது உணவு பொருட்கள் எடுத்து வந்திருக்கிறீர்களா”
“இல்லை”
“சாப்பாடிற்கு என்ன செய்வீர்கள்?? இங்கு வாங்கிக்கொள்வீர்களா??”
“ஆமாம்”
“சரி!! உங்கள் வாசம் இன்பமயமாக அமைய என் வாழ்த்துக்கள்”
“நன்றி”

அவ்வளவுதான்!!!
எல்லா சோதனையும் முடிந்தாகிவிட்டது!!! கனவுகள் நினைவாகும் ஊர் என கூறப்படும் அமெரிக்கா நாட்டில் காலடி எடுத்து வைத்தாகிவிட்டது!!!!விமான நிலையத்தை விட்டு வெளியே சென்றால் முழுமையாக வேறு நாடு,வேறு மக்கள்,வேறு தட்பவெட்பம்,வேறு நடைமுறைகள்!!! இதெல்லாம் நினைத்து பார்க்கும் போதே சற்று வித்தியாசமாக இருந்தது. என் நண்பர்களுக்கு சோதனை முடியும் வரை காத்திருந்து விட்டு அவர்களுடன் விமான நிலையத்தை விட்டு வெளியே சென்றேன்.
அங்கு ஒரு விமானத்திலிருந்து இறங்கி வரும் பயணிகளின் போக்குவரத்து தேவைகளை பார்த்துகொள்வதற்க்காக நியமிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் எங்களை அணுகினார்.நாங்கள் எத்தனை பேர்,எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டு அறிந்துகொண்டு எங்களுக்காக ஒரு வாடகை வாகனத்தை ஏற்பாடு செய்தார். ரயில் நிலையங்களில் தொல்லை கொடுத்தும், அநியாய பணம் கேட்டு தகறாறு செய்தும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் பல ஆட்டோகாரர்களை கண்டிருந்த என் கண்களில், ஆனந்த கண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருகி வந்தது!!கண்ணிரை துடைத்துக்கொண்டு வாகனத்தில் பயணப்பட்டேன்.
இந்தியாவில் இருந்து அமெரிக்கா முதன் முறை வரும் அனைவரையும் முதலில் கவர்வது இங்கு உள்ள சாலைகளாக தான் இருக்கும் என நினைக்கிறேன். நல்ல அகலமாக , மேடு பள்ளம் இல்லாத மற்றும் சுத்தமான சாலைகள் மீது எங்கள் வண்டி சீரான வேகத்தில் சென்று கொண்டு இருந்தது(இந்த சாலைகளின் மேலே உள்ள மோகத்தினால் தான்,பிறகு ஒரு தரம், தலை கால் புரியாமல் காரை அதி வேகமாக ஓட்டி இங்கு உள்ள மாமாவிடம் மாட்டிக்கொண்டேன் என்பது வேறு கதை!! )
ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் சீராக வெட்டி வைக்கப்பட்ட புல்தரை அலங்காரம்,நீண்ட அகன்ற சாலையில் ஒரே வேகத்தில் சீரான இடைவெளி விட்டு சென்று கொண்டு இருந்த வாகனங்கள், இவை அனைத்தையும் பார்த்து என் மனதில் குதூகலம் தொற்றி கொண்டது!! நான் போய் சேர வேண்டிய ஊரான ஆன் ஆர்பர் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டிய ஆசை நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டு இருந்தது!!!
-ஆன் ஆர்பரிலிருந்து தொடரும்……

அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - முன்னுரை
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 1
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 2
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 3
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 5

அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 3

ஒரு 12:30 - 12:45 மணி வாக்கில், விமானத்தில் ஏறுவதற்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டது. முதலில் முதல் வகுப்பு பயணிகளும் பின் மற்றவர்களும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டார்கள். நான் இரண்டாவதாகதான் ஏறினேன் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா??
சென்னையில் நடமாடும் ஏணியின் வழியாக விமானத்தில் ஏறினேன் அல்லவா ஆனால் இங்கு சிறிது வித்தியாசாமான முறையில் விமானம் ஏற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.ஒரு குகை போன்ற அமைப்பின் உள்ளே சென்ற நான் குகையின் மற்றொரு வாயிலில் அமைந்திருந்த விமானத்தினுள் நுழைந்தேன். உள்ளே ஏறிய உடனேயே இது சென்னையில் இருந்து வந்த விமானத்தை விட பெரியது என்று தெரிந்து விட்டது.
விமானத்தின் ஒவ்வொரு வரிசையிலும் 9 இருக்கைகள் இருந்தன. அவை 2-5-2 என்று பிரிக்கப்பட்டு இருந்தன! எனது இருக்கை முதல் வரிசயில் 5-ஆவது இருக்கை.மறுபடியும் ஜன்னல் இருக்கை கிடைக்கவில்லை என்பதில் எனக்கு ஒரு 8 வயது சிறுவனுக்கு இருக்கும் வருத்தத்திற்கு சமமாக ஏமாற்றம் தான்!!
அதை விட மிகப்பெரிய ஏமாற்றம் என்ன என்றால் விமானத்தில் இருந்த பணிப்”பெண்கள்” எல்லோரும் 50 வயதுக்கு குறைவாக இல்லாததுதான்!!  சரி!! அவர்கள் எல்லோருக்கும் 50 வயது ஒன்றும் இருக்காது! ஒப்புக்கொள்கிறேன் , இருந்தாலும் நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் 40 வயதை ஒட்டியாவது இருக்கும்!!!
என்னையும் அறியாமல் என் உதடுகள் “ஏப்ரல் மேயில பசுமையே இல்ல,காய்ஞ்சிப்போச்சுடா...” என்ற பாடலை முனுமுனுத்தது!! பாட்டிகள் (மன்னிக்கவும்!! விமான பணிப்”பெண்கள்”) எல்லோருக்கும் காது கொஞ்சம் மந்தம் என்பதால் யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை!! இவர்களை பார்த்தவுடன் கோயம்புத்தூரில் உள்ள என் வயதான பாட்டியின் நியாபகம் தான் எனக்கு!! அன்பு மேலிட்டு வாய் தவறி இவர்கள் யாரையும் பாட்டி என்று கூப்பிட்டுவிட கூடாதே என்று கவனமாய் இருந்தேன்.
என் இருக்கையின் நேர் எதிரே ஒரு பெரிய தொலைக்காட்சி திரை இருந்தது.அதில் விமான தகவல் , விமானம் போகும் வழியின் வரைபடம் போன்ற வெவ்வேறு விஷயங்களை காட்டிக்கொண்டு இருந்தார்கள். பின் எனக்கு ஒரு காது ஒலிசேற்பி (earphone) தரப்பட்டது. பின்பு தூங்கும் போது வெறும் வயிற்றுடன் தூங்க கூடாது என்று சாப்பிடுவதற்கு உணவு அளிக்கப்பட்டது. எனக்கு சுத்த சைவ உணவு தான் வேண்டும் என்று சென்னை விமான நிலையத்திலேயே சேவை முகப்பில் கறாராய் சொல்லியிருந்ததால் எனக்கு மட்டும் தனியாக உணவுப்பொட்டலம் அளிக்கப்பட்டது!!
கொடுத்தது என்ன என்று கூட எனக்கு தெரியவில்லை! ஏதோ வேக வைத்த பழக்கூழ் போல ருசித்தது,ஆனால் எதோ தூக்க கலக்கத்தில் கலந்து அடித்துவிட்டு மெல்ல கண் அயர்ந்தேன்.

கண் விழித்து பார்த்த போது என் முன்னே இருந்த பெரிய சின்னத்திரையில் எதோ இந்திப்படம் போய்க்கொண்டு இருந்தது. சல்மான் கான்,கரீனா கபூர்,ஜக்கி சரோஃப்,ஓம் புரி, ஷில்பா ஷெட்டியின் தங்கை(என்ன பெயர் அவளுக்கு??? மறந்துபோய் விட்டது!!) இவர்கள் அனைவரும் நடித்த இந்த படத்தின் கதை இதுதான்!!
படத்தின் துவக்கத்தில் சல்மான் கான், ஓம் புரி நடத்தும் ஒரு பைத்தியக்கார மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஜாக்கி சரோஃபும் , ஓம் புரியின் பெண் கரீனாவும் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள். தன் மனைவியை(ஷில்பாவின் தங்கை) “தவறுதலாய்” கொலை செய்துவிட்டதால் சல்மான் பைத்தியமாகி (படத்தில்) இங்கு சேருகிறார்!! அதற்கு முன் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஐரோப்பாவின் அழகிய பிரதேசங்களில் ஷில்பாவின் தங்கையோடு சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் டூயட் பாட மறக்கவில்லை!!

இவரின் நிலையை கண்டு பரிதாபப்பட்டு கரீனா இவரின் மேல் காதல் வயப்படுகிறார்.இதில் ஒன்றும் எனக்கு ஆச்சரியம் இல்லை. காலா காலமாக பல இந்திய படங்களில் பார்க்கும் விஷயம் தானே இது!!படத்தில் வரும் அழகான இளம் கதாநாயகிகள் எல்லோருமே புத்தி சுவாதீனமுள்ள ஆண்களை விட்டுவிட்டு சுத்த பைத்தியகாரர்கள்,புத்தி சுவாதீனம் குன்றியவர்கள், கோபக்கார முரடர்கள்,பெண்களின் பின்னால் சுற்றும் புன்னாக்குகளையே ஏன் விழுந்து விழுந்து காதலிக்கிறார்கள் என்பது வெகு நாட்களாகவே எனக்கு புரியாத புதிராகவே உள்ளது!!!
சரி சரி!!! கிடைத்த இடைவெளியில் என் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது போதும்!! கதைக்கு திரும்பவும் வருவோம்!!!
தன் பெண் இப்படி ஒரு பைத்தியக்காரன் பின்னால் சுற்றுவதை பார்க்க சகிக்காத ஓம் புரி,ஏதோ ஒரு அறுவை சிகிச்சை செய்து சல்மானை பேச முடியாத ஒரு நடைப்பிணமாக மாற்றி விடுகிறார்!
இதை பார்க்க பொறுக்காத ஜாக்கி சரோப் சல்மான் கானை கொலை செய்து விட்டு சிறைக்கு சென்று விடுகிறார்!!! காதலனுக்கு ஆன நிலைமையால் பாதிக்கப்பட்டு கரீனா பைத்தியம் ஆகி விடுகிறார்.
இப்படிப்பட்ட ஒரு பைத்தியக்கார படத்தை பார்த்து முடித்த வுடன் பயணம் முடிய ஒரு சில மணி நேரங்களே இருந்தது. ஆம்ஸ்டர்டாமில் பெரிதாக ஒன்றும் வேலை இல்லாவிட்டாலும் சரியான நேரத்தில் அடுத்த விமானத்தை பிடித்தாக வேண்டுமே என்று மெல்லியதாக ஒரு சிறிய கவலை இருந்து கொண்டுதான் இருந்தது. என் விமானத்தில் இருந்த பல விமானிகள் டிட்ராய்ட் செல்லும் விமானத்திலும் செல்ல இருந்ததால் அந்த விமானம் நின்றிருக்கும் வாயில் என்ன என்று இறங்குவதற்கு முன்பாகவே சொல்லி விட்டார்கள்.

விமானத்தில் இருந்து இறங்கியதும் வாயில் எண் 9-இர்க்கு ,விமான நிலையத்தின் திறந்த வடிவமைப்பை பார்த்து ரசித்து கொண்டே விரைந்து கொண்டு இருந்தேன்.
இடம் , மக்கள் , தட்பவெட்பம் எல்லாமே சிறிது அந்நியமாகத்தான் இருந்தது. வாழ்க்கையில் முதல் முறையாக அத்தனை வெள்ளைக்காரர்களை அன்றுதான் பார்த்தேன். வாயிலில் இருந்த ஒரு பெண்மணி என் பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு கணிப்பொறியில் வெகு நேரமாய் ஏதோ தட்டிக்கொண்டு இருந்தாள். பின் மறுபடியும் ஒரு பாதுகாப்பு பரிசோதனைக்கு பின் முன்பு போல ஒரு குகைக்குள் நுழைந்து விமானத்தில் நுழைய காத்துக்கொண்டு இருந்தேன்.
வெறும் ஐந்து அடி ஏழு அங்குலம் உயரம் கொண்ட என் முன்னால் என்னுடன் குகைக்குள் நின்றிருந்த வெள்ளைக்கார தடியர்கள் எல்லோரும் கடோத்கஜர்கள் போல் தென்பட்டார்கள். ஒரு வழியாக விமானத்தில் ஏறி உட்கார்ந்த பின் விமானம் மெல்ல மெல்ல என் பயணத்தின் கடைசி இடமான டிட்ராய்டை நோக்கி புறப்பட்டது. மோட்டார் வாகன தயாரிப்புக்கு பெயர் போன டிட்ராய்ட் மாநகரம், அமெரிக்காவிலேயே சட்டம் ஒழுங்கில் மிக மோசமாக உள்ள ஊர்களிலும் ஒன்று .

-ஆன் ஆர்பரிலிருந்து தொடரும்……

அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - முன்னுரை
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 1
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 2
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 4

Related Posts Widget for Blogs by LinkWithin