சாப்ட்வேர் கனவுகளும் நிஜங்களும்

வாழ்க்கை எப்படி எல்லாம் மாறி போகுதுன்னு சில சமயம் நினைத்து பார்த்தால் சிரிப்புதாங்க வருது. நான் எப்பவுமே ஏதாவது கனவுகளிலே கற்பனைகளிலே மூழ்கியேதான் இருப்பேன்.அதுவும் நான் காலேஜ் படிக்கர சமயத்துல எல்லாம் வேலைக்கு சேர்ந்த அப்பறமா எப்படி எல்லாம் இருக்கனும் எப்படி எல்லாம் இருக்கும் அப்படின்னு நிறைய யோசிப்பேன் ,கனவுகள் கானுவேன்.
அப்போ எல்லாம் சாப்ட்வேர் வேலைனா எனக்கு என்ன கனவுன்னா,மணி கணக்கா சும்மா ஏதாவது கீபோர்ட்ல தட்டிட்டே இருக்கனும்,ஆயிர்க்கனகான வரிகளிலே கோடு எழுதி தள்ளனும்,கன்னா பின்னானு யோசிச்சி உருப்படியான சாப்ட்வேர் எல்லாம் உருவாக்கனும்னு அப்படின்னு கனவு கண்டுக்கிட்டு இருந்தேன்.

உருவாக்கம்!!! அதுதான் நான் பண்ண விரும்பியது. எல்லோருக்கும் உபயோகமான விஷயங்களை பண்ணனும், கணிணிகளை மக்கள் சுலபமா பயன்படுத்தரா மாதிரி விஷயங்கள உருவாக்கனும். இது மாதிரி ஒரு விஷயம் இருந்தா நல்லா இருக்கும்னு எனக்கு எதெல்லாம் தோனுதோ அதெல்லாம் நானே உருவாக்கலாம் அப்படின்னு எல்லாம் யோசிச்சிட்டு இருப்பேன்.

நாம வழக்கமா உபயோகபடுத்தர ஒரு சின்ன ஒரு வலை கருவியில இருந்து இயக்குத்தளம் (operating system) வரைக்கும் என் கனவுகள் நீண்டுக்கிட்டே போகும். உருவாக்கனும்!!! அதுதான் நான் பண்ணனும்னு நெனைச்சது. மக்கள் கண்கள் விரிந்து தன்னை அறியாமல் புன்னகைக்கரா மாதிரி கலை நுனுக்கமான விஷயங்களை உருவாக்கனும் (flash movies மாதிரி) , மக்கள் கவலைகளை மறக்கரா மாதிரி விஷயங்களை பண்ணனும், கணிணியின் பயன்பாடுகளை உரக்க பறைசாற்றும் படைப்புகளை பண்ணனும், மக்களை பூரிக்க வெச்சு தகவல் தொழில்நுட்பத்தின் மந்திரத்துல மயக்க வெக்கரா மாதிரி விஷயங்கள பண்ணனும்னு நினைத்தேன். என் உருவாக்கங்களால் மக்களை சந்தோஷப்படுத்தனும்னு நினைப்பேன்.எனக்கு
இப்போ இந்த துறையில் மூன்று வருடங்களுக்கு மேல் பணியாற்றிய பிறகு கொஞ்சம் திரும்பி பார்க்கும் போது இதுல எத்தனை கனவுகள் நனவாகி இருக்குன்னு யோசிச்சு பார்த்தால் சிரிப்புதான் வருது.

ஆரம்பம் எல்லாம் ஒழுங்காதான் இருந்தா மாதிரி இருந்துச்சு. பெங்களுருல இந்தியாவிலேயே மிக புகழ் பெற்ற ஒரு தகவல் தொழில்நுட்ப கம்பெனியிலதான் வேலைக்கு சேர்ந்தேன். அகா புடிச்சாலும் புடிச்சோம் நல்ல புளியங்கொம்பாதான் புடிச்சிருக்கோம்,இனிமே நம்ம இஷ்டப்படி சாப்ட்வேர் உருவாக்கங்களா உருவாக்கித்தள்ளிக்கிட்டே இருக்கலாம்னு நினைத்தேன். மக்களை நேரடியா போய் சேரும் ஜனரஞ்சகமான பொருட்கள் பண்ணனும்னு எனக்கு ரொம்ப ஆவல் (அதாவது Google,Youtube,Meebo,Flickr/Picassa மாதிரியான உருவாக்கங்கள்)
ஆனா B2B(Business to business) என்று சொல்லப்படும் அலுவல் சார்ந்த தொழில் அமைப்பு பற்றி எல்லாம் நான் அவ்வளவாய் அறிந்திருக்கவில்லை.. அதாவது ஒரு சின்ன கம்பெனியில் ஒரு சில நூறு அல்லது அதற்கும் கம்மியான மக்கள் பயன்படுத்தும் மென்பொருட்கள் எல்லாம் நான் யோசிச்சே பார்க்காத விஷயங்கள்.
இதெல்லாத்தையும் விட சப்போர்ட் (support) எனப்படும் மென்பொருள் மெகானிக் வேலை பற்றி நான் கேள்வி பட்டிருக்கவில்லை.

இப்படிப்பட்ட சப்போர்ட் மற்றும் பராமரிப்பு வேளைகள்தான் இந்திய தகவல் தொழில்நுட்ப கம்பெனிகளின் முக்கியமான தொழில் என்று எனக்கு என்றைக்குமே தோன்றியது இல்லை. ஒட்டு போடுவது, பயன்பாடுகளை (applications) “எப்படியாவது” ஓடவைப்பது மட்டுமே இந்த கம்பெனிகளின் முக்கியமான வேலைகள் என்று நான் அறிந்திருக்கவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளாக நான் செய்து வந்திருக்கும் வேளைகளை இவ்வாறாக பிரிக்கலாம். பல பிரிவினருடன் பேசி வேலையை முடிப்பது, உடன் வேலைசெய்பவரிடம் தாஜா செய்து வேலை வாங்குவது, உபயோகமே இல்லாத ஆயிரக்கணகான எக்செல் கோப்புகளை நிரப்புவது, ப்ராசஸ் (process) எனும் பெயரால் கோடிக்கணக்கான மணிகள் உப்பு சப்பில்லாத சொத்தை வேலைகள் செய்வது, வெளிநாட்டில் இருந்தால் இந்தியாவில் இருக்கும் சக பணியாளரிடம்,இந்தியாவில் இருந்தால் வெளிநாட்டில் இருக்கும் சக பணியாளரிடமும் வேலை நிமித்தமாக சண்டை போடுவது, திடீரென்று கொடுக்கப்படும் உன்றுமே தெரியாத வேலைகளை வைத்துக்கொண்டு திரு திரு என முழிப்பது, ஆயிரம் வேலைகள் வந்து குவிந்த வண்ணம் கிடக்க, எதை எடுப்பது,எதை விடுப்பது என தெரியாமல் திக்கு முக்காடுவது, அவைகளை முக்கியத்துவத்திற்கு ஏற்றார்போல் வரிசை படுத்துவது, முக்கியத்துவம் திடீரென்று மாற்றப்பட அவற்றை மறுபடியும் வரிசை படுத்துவது, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இதில் கோட் எழுதுவதற்கான சந்தர்ப்பங்கள் எவ்வளவு என்று கேட்டால் மிகவும் சொற்பமே. சிறிதும் கலைத்திறனை வெளிக்கொனற முடியாத வேலை வகைகள். இதெல்லாம் கூட பரவாயில்லை என்று இருந்திருப்பேன்,ஆனால் எனக்கு சுத்தமாக பிடிக்காத இன்னொன்றும் நான் எதிர்கொள்ள நேரிட்டது.
இரவு வேளைகளில் வேலை பார்ப்பது.

இந்த கம்பெனியில் சேருவதற்கு முன்னாலே அமெரிக்காவில் இருப்பவருக்கு கம்ப்யூட்டர் பழுதாகிவிட்டால் தொலைபேசி வழியே உதவும் தொழில்நுட்ப உதவி குழு ஒன்றில் ஓரிறு மாதங்கள் பணியாற்றி இருந்தேன். அது இரவு வேளைகளில் பணியாற்றும் வேலைதான். அப்பொழுதே இரவில் பணியாற்றுவது நமக்கு சரி பட்டு வராது என்று தெரிந்துவிட்டது.

ஆனால் இந்த சப்போர்ட் தொழில் வந்தால் இரவில் வேலை செய்யும் கட்டாயங்கள் உண்டு. முடிந்த வரை வெளிநட்டில் வேலை செய்வோரின் எண்ணிக்கையை குறைத்து, அங்கு பகல் நேரமாய் இருக்கும்போது நமது இரவு நேரங்களில் அந்த வேலையை செய்தால்தான் இந்த நிறுவனங்கள் காசு சேர்க்க முடியும்.
அவர்களுக்கும் வேறு வழி கிடையாது. தகவல் தொழில்நுட்பத்தொழில் மிகவும் போட்டி நிறைந்த ஒரு சந்தை. வேலை முடிக்கும் நேரத்தை குறைத்துக்கொண்டே போக வேண்டும், தேவையான ஆட்கள் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டே போக வேண்டும் அப்பொழுது தான் லாபத்தை கூட்டி இந்த சந்தையில் நிலைக்க முடியும். இதனால் இரவில் வர வேண்டிய கட்டாயம் ஏற்படுமா?? வேலை பளு காரணமாக வேலை செய்பவருக்கு மன உளைச்சல் அதிகமாகுமா?? கஷ்டம்தான்!!! ஆனால் ஒன்றும் செய்ய முடியாது.
நீங்கள் செய்ய வில்லை என்றால் வேறு ஒரு கம்பெனி ஆர்டரை தட்டிக்கொண்டு போய்விடும்.இந்த பைத்தியக்காரத்தனமான ஓட்டப்பந்தயத்தில் எதையும் விட்டு கொடுக்க முடியாது. போட்டி கம்பெனி தொழிலாளருக்கு என்னென்ன சலுகைகள் அளிக்கிறதோ அதற்கு மேலாக பெரிதாக ஒன்றும் கொடுக்க முடியாது . கொடுத்தால் போட்டி விளிம்பை விட்டுக்கொடுக்க வேண்டிய அபாயத்திற்கு இந்த கம்பெனிகள் தள்ளப்பட்டு விடும்.

இந்த கம்பெனிகளுக்கு ஆர்டரை தரும் வெளிநாட்டு கம்பெனிகளுக்கும் இதே போன்ற நிலைதான்.ஒரு வேலையை ஒரு அமெரிக்க கம்பெனி செய்வதற்கு 100 டாலர்கள் ஆகும்,அதே வேலையை ஒரு இந்திய கம்பெனி 40 டாலரில் முடிக்கும் என்றால் கண்டிப்பாக இந்திய கம்பெனிக்கு தான் கொடுக்க தோன்றும். அதில் மிச்சமாகும் 60 டாலரை அவன் கம்பெனியின் இதர வளர்ச்சி பணிகளில் செலவிடுவான். அதே இந்திய கம்பெனிகளில் ஒரு கம்பெனி 40 டாலருக்கு செய்கிறது என்றும்,மற்றொன்று 35 டாலருக்கு செய்கிறது என்றால் அவன் 35 டாலர் கம்பெனியிடம்தான் கொடுத்தாக வேண்டிய சூழ்நிலை . இல்லையென்றால் அவன் அவனுடைய போட்டி கம்பெனியிடம் தோற்று விடுவான்!!! இங்கே யாரையும் குறை சொல்ல முடியாது. எல்லோருக்கும் அவர்கள் அவர்களின் நிர்பந்தங்கள்,பிரச்சினைகள்,
அப்பொழுது எங்கள் கனவுகளுக்கு யார் பதில் சொல்வது?? என்னை போன்று எதிர்பார்ப்புகளுடம் வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நிலைமை தான் என்ன?? எதையாவது உருவாக்க வேண்டும் என்று எங்களின் தாகம் என்ன ஆவது?
இது மாதிரி பல கேள்விகளுக்கு எனக்கு இன்னைக்கு வரை சரியான பதில் இல்லை


இத்தனையும் சொன்ன பிறகு இந்த துறையால் நான் பெற்ற நன்மைகளை பற்றி குறிப்பிடவில்லை என்றால் நான் நன்றிகெட்டவனாகி விடுவேன். தீவிரமான வேலை சூழ்நிலைகளால் நான் முன்னைவிட பொறுமையாய் யோசிக்கும் மனநிலை பெற்றேன். நிறைய பேசி பேசி என் பேச்சாற்றல் கொஞ்சம் வளர்ந்து விட்டது. பெங்களுர் எனும் ஒரு வேற்று நகரில் தங்கி வேலை செய்யும் அனுபவம் கிடைத்து. உலகத்தின் முக்கியமான நாடுகளில் ஒன்றிற்கு சென்று தங்கி வாழும் அனுபவம் கிடைத்தது. எங்கள் குடும்ப பொருளாதார நிலைமை மேம்பட்டது. எல்லவற்றிற்கும் மேலாக என்னால் என் பெற்றோருக்கு முன்னை விட சிறப்பான வாழ்க்கை நிலையை என்னால் அளிக்க முடிந்தது. மற்ற எல்லாவற்றையும் விட கடைசி விஷயம் தான் எனக்கு மிகவும் திருப்தி அளிக்கும் விஷயம்.

ஆனால் ஏதாவது கலைத்திறன் வாய்ந்த விஷயங்களை உருவாக்கவேண்டும் என்ற என் கனவுகளை என்னால் மறக்க முடியவில்லை. பல சமயங்களில் , என் திறைமைகள் மற்றும் எண்ண ஓட்டத்துக்கும் இந்த துறைக்கும் சம்பந்தமே இல்லையே, நான் இந்த துறையில் என்ன செய்துகொண்டு இருக்கிறேன்?? என்று இயலாமை கலந்த ஒரு ஏக்கம் எனை குழப்பமடைய செய்து விடும். பேசாமல் புகைப்பட துறையில் புகுந்து விடலாமா?? விளம்பரத்துறையில் விழுந்து விடலாமா?? எழுத்து துறையில் எழுந்து விடலாமா?? என்று நிறைவேராத கோட்டைகளை கட்ட ஆரம்பித்து ,சிறிது நேரத்தில் எதார்த்தத்திற்கு திரும்பி விடுவேன்.
சேருமிடம் ஏதும் இல்லாவிட்டாலும் வாழ்க்கை படகு ஓடிக்கொண்டுதான் இருக்கிறது! :-)

பி கு : இது Dreams and realities எனப்படும் என்னுடைய ஆங்கிலப்பதிவின் தமிழாக்கம்.

உள்ளேன் டீச்சர்

வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு வார இறுதியின் சோம்பேரித்தனத்தில் மூழ்கி இருக்கையில் மை ஃபிரண்டின் இந்த பதிவை பார்த்தேன். நம்ம படிச்ச பள்ளிக்கூடம் ,வகுப்பு டீச்சருங்க பெயர எல்லாம் எழுதனுமாம். நமக்கும் ஞாபக சக்திக்கும் ஏணி வெச்சாலும் எட்டாது. அப்படியே பாஸ் சொல்லிட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு பார்த்தேன் ,இருந்தாலும் ஒரு முயற்சி செஞ்சிடலாமே அப்படின்னு களத்துல இறங்கியாச்சு.

LKG - மேரி மிஸ்
UKG - எனக்கு சொல்லி கொடுத்த டீச்சர் பேரும் நியாபகம் இல்லை,அவங்க முகமும் நியாபகம் இல்லை. ஆனா அவங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் என்பது மட்டும் நியாபகம் இருக்கு. நானும் எங்க அம்மாவும் ஸ்கூலுக்கு போய்ட்டு இருக்கும்போது அவங்க பஸ்ல இருந்து பார்ப்பாங்க. ஸ்கூல் இருக்கர பஸ் ஸ்டாப்-க்கு முந்தைய ஸ்டாப்லயே இறங்கி எங்க கூட பேசிட்டு வருவாங்க.

ஒன்றாவதுல இருந்து மூன்றாவது வரை - அஜய் குமார் மாஸ்டர், கணக்கு வாத்தியார், தமிழ் டீச்சர் (பெயர் மறந்து போச்சு)

நான்காவதில் இருந்து பத்தாவது வரை:
ஆங்கிலம் - எமிலி வெர்கீஸ்
அறிவியல் - விமலா ராணி
கணிதம் - நிறைய பேரு இருந்தாங்க,யாருமே ஞாபகம் இல்லை. ஆனா ஆறாவதில் ஒருத்தங்க நல்ல உருட்டு கட்டை வெச்சிட்க்கிட்டு ஓங்கி அடிப்பாங்க,அவங்க பேரு ஞாபகம் இல்லை.
இந்தி - ராதா மேடம்,அவங்களுக்கு அப்புறமா வந்தவங்க பேரு ஞாபகம் இல்லை
வரலாறு - பெயர் ஞாபகம் இல்லை. என்னையும் என் ஊரையும் நிறைய கேலி செய்து என்னை கேலிப்பொருள் ஆக்கி விடுவார்.அதனால் அவரை எனக்கு அவ்வளவாக பிடிக்காது.
பூகோலம் - ரெபெக்கா

பதினொன்றாவது / பனிரெண்டாவது

ஆங்கிலம் - இவாஞ்சலின்
கணிதம் - கவிதா மேடம்
வேதியியல் - கனேஷ் சார்
இயற்பியல் - அவர்கள் வீட்டிற்கெல்லாம் சென்று படித்திருக்கிறோம்,ஆனால் பெயர் ஞாபகத்திற்கு வரவில்லை.
இந்தி - பெயர் ஞாபகம் இல்லை
கணிணி அறிவியல் – பேசினால் காதில் கூட கேட்காத அளவுக்கு மென்மையாக பேசுவார் , பழகுவார். பெயர் ஞாபகம் இல்லை

பாதிக்கு மேல் ஞாபகம் இல்லை என்றுதான் எழுதி இருக்கிறேன். மன்னித்து விடுங்கள் மை ஃபிரண்ட்.:-)

உலகம் விரிஞ்சிருக்கு,நம் மனங்களிலே உரம் இருக்கு

ஒருத்தர் தனது சமூக நல ஸ்தாபனத்துக்கு பாட்டு ஒன்னு வேணும்னு Orkut-ல ஒரு சமூகத்துல(community) பொதுவா எல்லோரையும் கேட்டிருந்தாரு. சரி நாமலும் எழுதி பார்ப்போமேன்னு எழுதுனது!!
அவரு இதை எடுத்துப்பாரான்னு இல்லையானு தெரியல. இருந்தாலும் எழுதினதுக்காக அனுப்பி வெச்சேன்.
எப்படி இருக்கு ,இன்னும் எப்படி செம்மை படுத்தலாம்னு படிச்சிட்டு சொல்லுங்க!! :-)
------------------------------------------------------------------------------------

உலகம் விரிஞ்சிருக்கு அண்ணே அண்ணே
நம் மனங்களிலே உரம் இருக்கு அண்ணே அண்ணே

என்னதான் கஷ்டங்கள் இருக்கட்டும் நமக்குள்ளே
இருந்தாலும் பயம் வேண்டாம், விட்டுத்தள்ளு பரவாயில்ல
கடலலை போல் கஷ்டங்கள் திரண்டுருண்டு வந்தாலும்
தலைமேல எழுந்தோடி இடிபோல விழுந்தாலும்
மலை போல நிப்போமே, அசங்காது சிரிப்போமே
ஒரு கை பார்த்திடுவோம்,எதுவாக இருந்தாலும்

என்னத்தான் வாழ்க்கையிது,எது உண்மை,எது நன்மை
ஒன்னுமே புரியலதான்,என்ன பண்ண நீ சொல்லு
அதுக்காக ஓயாத, சுவரோரம் சாயாத
இருக்கரவரை வாழ்ந்திருபோம்,சிரிப்போடு சேர்ந்திருப்போம்
முடிஞ்ச வர முயற்சி செய்வோம்,வாழும்வரை உதவி செய்வோம்
மனசிருக்கு வானளவு, அன்பிருக்கு அரவனைப்போம்

விழுந்தாக்கா ஏத்தி விட நட்பிருக்கு கவலையில்ல
தோள் மேல சாய்ஞ்சிக்கலாம், களைப்பான நாட்களிலே
பாலைவன தேசம் போல் உன் வாழ்க்கை காய்ஞ்சிருக்கும்
கஷ்டங்கள் பல பார்த்து ஓடாக தேய்ஞ்சிருக்கும்
மழை போல நாங்க உன் நெஞ்சத்த குளிர வைப்போம்
கலங்காதே என் தோழா, உன் தாகம் தீர்த்திடுவோம்

உலகம் விரிஞ்சிருக்கு அண்ணே அண்ணே
நம் மனங்களிலே உரம் இருக்கு அண்ணே அண்ணே

விசித்திரமான மனிதர் ஐயா நீர்!! :-)

ஏதோ நான் உண்டு என் மடிக்கணிணி உண்டுனு எப்பவும் போல வலைபதிவுகள்ல நேத்து மூழ்கி இருந்தேங்க !! மானாவாரியா பதிவெல்லாம் படிச்சிட்டு அப்பப்போ லூசு மாதிரி தனக்கு தானே சிரிச்சிட்டு பாத்துக்கிட்டு இருந்த போது நம்ம அருமை நண்பர் (அறுவை நண்பர் இல்ல) ஜி அவர்களின் பதிவு கண்களில் பட்டுது!! அவர் பதிவை விரும்பி படிக்கும் வாசகன்றதுனால சிரிச்சு ரசிச்சு படிச்சிட்டு இருக்கும்போது ரொம்ப பரிச்சயமான காமெடி நடிகர் ஒருவரின் பெயர் கண்ணில் பட்டது. இந்த பெயரை எங்கேயோ கேட்டது மாதிரி இருக்கேன்னு யோசிக்கும்போது தான் உறைத்தது.
அது என் பெயர்!!! :O

அட பாவிகளா !! ஆட்டை கடிச்சு,மாட்டை கடிச்சு கடைசியில சும்மா காமெடி பண்ணிக்கிட்டு திரிஞ்சிக்கிட்டு இருந்தவனையே கடிச்சிட்டாங்களாடா அப்படின்னு நெனைச்சிக்கிட்டேன்!!
அது ஒன்னும் இல்லைங்க, நம்மல பத்தி ஒரு ஐந்து விசித்திரமான விஷயங்கள் பற்றி எழுதனுமாம்!! நானே ஒரு விசித்திர பிறவிதான் இதுல ஐந்து என்ன ஐயாயிரமே எழுதலாம் அப்படின்னு எழுத ஆரம்பிச்சுட்டேன்.

லெட்ஸ் ஸ்டார்ட் த மீசிக்!!!

1.)தனிமையிலே இனிமை காண முடியுமா??
அது என்னவோ தெரியலைங்க ,எனக்கு தனிமையா இருக்கறது புடிச்சு போயிருச்சு!! நான் வீட்ல தனியா வளர்ந்ததாலேயோ என்னவோ ( எனக்கு சகோதர சகோதரிகள் யாரும் கிடையாது!! உங்களை தவிர!! :D ) , எனக்கு தனியா இருப்பது பழகி போச்சு. இங்க வந்து அறை நண்பர்கள் இல்லாமல் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போது தான் தனியாக இருப்பதில் உள்ள சுதந்திரம் எனக்கு முழுமையா தெரிஞ்சுது. நம்ம இஷ்டப்படியான நேரத்தில் எழுந்திருக்கலாம்,சமைக்கலாம்,வெளியே கிளம்பலாம். எப்போ வேனும்னாலும் குளிக்க,முகம் கழுவ பாத்ரூம் காலியா இருக்கும்!! நேரத்தை கச்சிதமா திட்டமிடலாம்,கூட யாராவது இருந்தா அவங்க தயாராகறதுக்கு ஏத்தா மாதிரி நம்ம திட்டங்களும் மாறும்,ஆனா தனியா இருந்தா அந்த பிரச்சினை இல்லை!! நம்மளுக்கு வேண்டிய அளவுக்கு சமையல் பண்ணிக்கலாம்,சாப்பாடு வீணாகற சந்தர்ப்பங்கள் கம்மி. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

இதுக்காக எனக்கு மனிதர்களே பிடிக்காது,எனக்கு தனியா இருந்தா தான் பிடிக்கும் அப்படின்னு அர்த்தம் அல்ல. நான் 24 மணி நேரமும் ஏதாவது நண்பரிடம் சாட் பண்ணிக்கொண்டுதான் இருப்பேன். பெற்றோர்களிடம் ஒரு நாள் பேசவில்லை என்றால் கூட ஏதோ குறையா இருக்கும். ஆனா எனக்கு தெரிஞ்ச சில பேர் “நீ எப்படி ஒருத்தரும் இல்லாமல் வீட்ல தனியா இருக்க?? என்னால நினைத்து கூட பாக்க முடியாது” அப்படின்னு எல்லாம் சொல்லுவாங்க.ஆனா எனக்கு அப்படி இல்லை. ஒழுங்கான வீடும்,சாப்பாடும், இணையத்தொடர்பும் இருந்தால் தனிமையில் இனிமை கண்டிப்பாக காணலாம் என்பது என் கருத்து!! :-)

2.)வலது கையில் கடிகாரம் கட்டுவது
எனக்கு பொதுவாகவே கடிகாரம் கட்டுவதே பிடிக்காது. கையை உறுத்திட்டே இருக்கறாப்போல இருக்கும். எப்பயாச்சும் கடிகாரம் ரிப்பேர் ஆகிடிச்சுன்னா சனியன் ஒழிஞ்குதுன்னு ரொம்ப நாளைக்கு சரி செய்யாமலே வெச்சிருப்பேன்!! அப்படியே கட்டினாலும் வலது கையிலேதான் கட்டிப்பேன். அது என்னமோ சின்ன வயசுல இருந்து அதுவே பழகிபோச்சு. கடிகாரத்தை இடது கையிலே தான் கட்டனும்னு யார் யாரோ சொல்லி பாத்துட்டாங்க!! நான் எப்பவும் கேட்டதே இல்லை.ஒரு தடவை ஒரு கடிகார கடைக்காரர் என்கிட்ட சண்டைக்கே வந்து விட்டார். நிறைய பேர், வலது கையில எல்லாம் பெண்கள்தான் கட்டுவாங்க,ஆண்கள் எல்லாம் இடது கையிலதான் கட்டனும் அப்படின்னு சொல்லுவாங்க. எனக்கு எது சௌகரியப்படுதோ அப்படி நான் கட்டிக்கறேன்,உங்களுக்கு என்ன?? எம்,ஜி.ஆர்,நரசிம்மராவ் இப்படி நிறைய பேர் வலது கையிலதான் கட்டிப்பாங்களாம் தெரியுமா?? அப்படி இப்படின்னு சொல்லி மழுப்பிடுவேன்!!

3.)நேரில் சந்திப்பதில்,போனில் பேசுவதில் தயக்கம்.
எனக்கு வலை நண்பர்கள் (online friends) பலர் உண்டு. ஒரு காலத்துல நிறைய கதை எல்லாம் எழுதிட்டு இருந்ததால என் கம்பெனியில நிறைய பேர் பரிச்சயம் ஆனாங்க. எல்லாம் மின் அஞ்சல் மூலமாதான்!! அதுக்கு அப்புறம் தமிழ் வலைப்பதிவு, ஒர்குட் அப்படின்னு ஆயிரம் நண்பர்கள். ஒருத்தரையும் நேரில் பார்த்தது கிடையாது. எல்லோர்கிட்டேயும் வள வளனு அரட்டை அடிப்பேன் (சாட்ல தான்) ஆனா ஒருத்தரையும் நேரில பாக்க ஆசைபட்டது கிடையாது. அது என்னமோ நேர்ல பார்த்தா நம்ம மேல முன்ன இருந்தா மாதிரி மரியாதை,அன்பு இருக்காதுன்னு ஒரு எண்ணம். நான் எப்பவும் ஒரு ஆங்கில சொற்றொடரை சொல்லிக்கொண்டே இருப்பேன். “The unseen is the most wonderful” அப்படின்னு.
அதாவது நாம ஒருத்தர பாக்கலைன்னா அவர் மேல் ஒரு தனி மரியாதை,சிரத்தை இருக்கும். ஆனால் நேரில் பார்த்து விட்டால் அந்த பிரம்மிப்பு போய்விடும் என்பது என் கருத்து. இந்த கருத்து பற்றி விளக்கமாக இந்த கதையில் கூறி இருப்பேன்.
அதே மாதிரி போனில் பேசுவதை விட சாட் மூலம் அரட்டை அடிப்பதையே நான் பெரிதும் விரும்புவேன். போனில் பேசும் போது இருவரில் ஒருவர் ஏதாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் திடீரென்று மௌனமாகி விடும். தொடர்பை நிறுத்தியாக வேண்டும்.ஆனால் சாட்டில் அப்படி அல்ல.நம் இஷ்டப்படி பேசிக்கொள்ளலாம். பேச ஒன்றும் இல்லையென்றால் கொஞ்ச நேரம் சும்மா இருக்கலாம்,ஏதாவது தோணிச்சுனா சும்மா தட்டி விடலாம்!!
எப்பா!! எவ்வளவு சௌகரியம்!! இப்படியே சொல்லிட்டே போகலாம். அதனால தான் எனக்கு வெட்டி அரட்டைக்கு (வெட்டியோட மட்டும் அரட்டைன்னு அர்த்தம் இல்ல!!  ) தொலைபேசியை விட சாட் தான் பிடிக்கும்.
அதுக்காக போன் பேசவே பிடிக்காதுன்னு அர்த்தம் இல்ல,பச சமயங்கள்ல பல விஷயங்களுக்கு போன்ல எடுத்தோமா முடிச்சோமான்னு இருக்கும் ஆனா அரட்டைக்கு சாட்டை (chat-ஐ) அடிச்சிக்க முடியாது என்பது என் கருத்து!!

4.) பெரிதாக வருங்காலத்தை பற்றி திட்டமிடாதது
எனக்கு எல்லாமே சீராக திட்டமிட்டு செய்ய வேண்டும் என்று தோன்றும். ஆனால் இந்த திட்டமிடுதல் எல்லாம் நிகழ்காலத்துக்கு தான்!!நாளைக்கு வெளியே போக வேண்டுமா,சரி இந்த மணிக்கு எழுந்திருக்கலாம்,பின் இதை செய்யலாம்,பின் இந்த மணிக்கு கிளம்பலாம் என்று என்னை அறியாமல் மனதில் திட்டங்கள் தோன்றி விடும். ஆனால் நேர்முக தேர்வில் கேட்பது போல “3 வருடங்களுக்கு பிறகு நீ உன்னை என்னவாக காண்கிறாய்??”, “5 வருடத்திற்கு பிறகு என்னவாகா இருக்க ஆசைபடுகிறாய்??” “7.5 வருடங்களுக்கு அப்புறம் வெங்காயத்தின் விலையில் எவ்வளவு மாற்றம் இருக்கும்??” என்பது போல கேள்விகள் கேட்டால் எனக்கு பதில் தெரியாது!! நானும் வருங்காலத்தில் என்ன செய்ய வேண்டும்,எப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று எல்லாம் தீவிரமாக திட்டமிட்ட ஆசாமிதான். ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் நடப்பது எதுவும் நம் கையில் இல்லை,எல்லாம் இறைவன் செயல் என்ற சிந்தனை என்னில் வேரூன்றி விட்டது. அதனால் நான் வருங்காலம் பற்றி எல்லாம் யோசிப்பது இல்லை. அடுத்த வாரம் போக போகும் சுற்றுலாவில் என்ன செய்ய வேண்டும்,அடுத்த மாதம் இந்தியா அனுப்பி விட்டால் “external hard disk” வாங்கிக்கொண்டு போகலாமா?? என்பது வரைக்கும் தான் என் திட்டங்கள் எல்லாம்!!
தொந்தரவு இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும்.பெறோர்களை முடிந்த வரைக்கும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்,முடிந்த வரை மற்றவைகளுக்கு உதவ வேண்டும்,முடிந்தால் இந்த தகவல் தொழில்நுட்ப வேலையில் இருந்து எஸ்கேப் ஆகி அனிமேஷன்,புகைபடத்துறை, எழுத்து சம்பந்தமான தொழில் இது மாதிரி கலை திறன் சம்பந்தப்பட்ட தொழிலில் இறங்கிவிடவேண்டும் என்பது போன்ற மேலோட்டமான சிந்தனைகளை தவிர வேறெந்த லட்சியமோ குறிக்கோளோ எனக்கு கிடையாது.


5.)குழந்தைதனத்தை விரும்பாதது
நீங்க பொதுவா யாரை கேட்டாலும் அவங்க குழந்தையா இருந்த சமயத்தை பெரிதும் விரும்புவதாக சொல்வார்கள். சில பேரை கேட்டால் “விட்டா ஸ்கூல்-ல படிச்ச பருவத்துக்கே திரும்பி போனா எவ்வளவு நல்லா இருக்கும்” அப்படி இப்படின்னு கதை அடிச்சிட்டு இருப்பாங்க. இன்னும் சில பேரு கேட்டீங்கனா சின்ன வயசுல,காலேஜ் வயசுல நான் இது பண்ணேன் அது பண்ணேன் அப்படின்னு அவங்களோட வீர சாகசங்களை பற்றி பேச ஆரம்பிச்சிடுவாங்க.ஆனா எனக்கு இதெல்லாம் அவ்வளவா பேச பிடிக்காது. ஏன்னா என் குழந்தை பருவத்துல எதுவுமே சுவாரஸ்யமா நடக்காதது தான் காரணமா அப்படின்னு தெரியல.
நான் என் நண்பர்களிடத்தில் கூட என்ன சொல்லுவேன்னா “சில பேரு சின்ன வயசுல நல்லா படிச்சு,மார்க் எல்லாம் வாங்கி பெரிய ஆள் ஆவாங்க,சில பேரு குறும்புத்தனம் பண்ணிக்கிட்டு,ஊரை சுத்துக்கிட்டு எஞ்சாய் பண்ணுவாங்க,சில பேரு ரெண்டும் பண்ணுவாங்க. ஆனா என்ன பொருத்த வரைக்கும் நான் எதுவும் பண்ணலை” அப்படின்னு சொல்லுவேன்.
பள்ளிக்கூடத்துலையும் சரி கல்லூரியிலும் சரி சொல்லிக்கறா மாதிரியோ ஞாபகம் வெச்சிருக்கா மாதிரி எதுவும் நடக்கவில்லை என்பதினால் எனக்கு என் பள்ளிக்கூட வழ்வை பற்றியோ,கல்லூரி வாழ்கையை பற்றியோ பேசுவது பிடிக்காது.

இது வரைக்கும் பொறுமையா படிச்சீங்கன்னா உங்க பொறுமைக்கு என் பாராட்டுக்கள்.
இந்த விளையாட்டுல இன்னும் அஞ்சு பேரை சேத்து விடனும்னு சொல்லி இருக்காங்க. எனக்கு தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச தமிழ் பதிவாளர்களும் ஏற்கெனெவே இந்த விளையாட்டுல சேர்ந்திருக்காங்க. அதனால எனக்கு தெரிந்த சில நண்பர்களை இதுல சேர்த்து விடரேன்.
அவங்க யாருன்னா
1.)கார்த்தி
2.)ஷ்ரவன்
3.)பெரி
4.)கோபிநாத்
4.)தீபா

PS: What can I say? I know iam a weirdo!! :-)

சாப்ட்வேர் தொழிலும்,குடும்ப வாழ்வும்

“ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்று ஒரு பழமொழி உண்டு. இது இப்போதைய நடைமுறையில் கணிணி வல்லுனர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏன் என்று கேட்கிறீர்களா??
கணிணி வல்லுனர்களின் குழந்தைகள்தான் தாய் தந்தை கேட்பாரின்றி தனியே வளரும் நிலைமை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது!!
புரியவில்லையா???

இந்த சாப்ட்வேர் தொழில் செய்பவர்களில் பல நிறை குறைகளை பற்றி நாம் நிறைய கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் சமீப காலமாக என்னை பெரிதும் பாதித்த விஷயம் என்னவென்றால்,இந்த தொழிலால் நம் மக்களின் குடும்ப வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள் பற்றியது.

கணிணி வல்லுனராக பணியாற்றினால்,ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி,வெளிநாடு சென்று பணி புரியும் சந்தர்ப்பம் அவ்வப்போது வரும்.ஆன்சைட் எனப்படும் இந்த சந்தர்ப்பம் கிடைக்க வேலைக்கு சேர்ந்த புதிதில் அனைவரும் மிக ஆவலாக இருப்பார்கள்.காரணம் இந்தியாவை தவிர வேறு ஒரு நாட்டில் வாழ்ந்து வேலை செய்யும் ஒரு வித்தியாசமான அனுபவம் பெறவும் மற்றும் ஆன்சைட்டில் கிடைக்கும் அதிக்கப்படியான சம்பளமும் தான். இந்த ஆவல் புரிந்துக்கொள்ள கூடியது தான். அதுவும் வெளிநாடு சென்று வருவது குறிப்பாக ஆண்களுக்கு கல்யாண சந்தையில் மதிப்பை உயர்த்தும் நிகழ்வாக இருப்பது மறுக்க முடியாத உண்மை. மாப்பிள்ளை கண்டிப்பாக ஒரு முறையாவது வெளிநாடு சென்றிருக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே மணமகன் தேவை விளம்பரங்களில் சில சமயங்களில் பார்த்திருக்கிறேன்.

கல்யாணம் ஆவதற்கு முன் பெரிதாக வரவேற்கபடும் இந்த ஆன்சைட், திருமணம் ஆனதும் பல பேருக்கு தொல்லையாக அமைந்து விடுகிறது. அதுவும் கணிணி வல்லுனர்களில் பலர் இந்த சாப்ட்வேர் துறையிலே மாப்பிள்ளை/பெண் தேர்ந்தெடுப்பதால் இந்த தொல்லை இரட்டிப்பாகிறது. நான் இருக்கும் இடத்தில் என் மேலாளர் ஒருத்தரை தவிர கல்யாணமான அத்தனை பேரும் பிரம்மச்சாரிகளாக தான் வாழ்ந்து வருகிறார்கள். மேலாளரின் மனைவி வேலைக்கு போகாமல் இல்லத்தரசியாக இருக்கிறார்,மற்ற அனைவரின் மனைவிமார்களும் இந்தியாவில் வேலைக்கு செல்கின்றனர்.
அதுவும் இருவரும் கணிணி துறையில் உள்ளவர்கள் என்றால் இருவரும் வெவ்வேறு வெளிநாடுகளில் இருக்கும் நிலையும் பல சமயங்களில் உருவாகிறது.
திருமணம் ஆகி பல மாதங்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமலே வாழும் சந்தர்ப்பங்கள் பலவற்றை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு தெரிந்த ஒரு தம்பதியினர் திருமணம் ஆகி ஒன்று முதல் ஒன்றரை வருடங்கள் தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.கணவன் மலேசியாவில் ஆன்சைட்டில்,மனைவி சென்னையில் ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை
என்ன செய்வது?? இருவரும் வேறு வேறு கம்பெனி வேறு!!

ஒரே கம்பெனியில் இருந்தால் வெளிநாட்டில் ஒரே ஊரில் மாற்றல் வாங்கிக்கொண்டு வேலை செய்யும் சிலரும் உண்டு. ஆனால் அது சாதாரண விஷயம் இல்லை, மேலிடம் வரை சிபாரிசு பெற்று , வாய்ப்பு இருக்கிறதா என்று கண்ணீல் விளக்கெண்ணை வைத்து தேடி,நண்பர்கள், மற்ற ப்ராஜெக்டில் வேலை செய்பவர்களிடம் பேசி, விவாதித்து சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதுவும் எவ்வளவு நாளைக்கு என்று தெரியாது, நாளைக்கே கணவனுக்கோ மனைவிக்கோ மாற்றல் ஆகி விட்டால் திரும்பவும் பிரிய வேண்டியதுதான். என்றைக்கு பிரிவோமோ என்று எதிர்பார்த்துக்கொண்டே காலத்தை தள்ள வேண்டும்.

அதுவும் குழந்தை ஏதாவது பிறந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். தாய் ஒரு நாட்டில்,தந்தை ஒரு நாட்டில் என்று தாய் தந்தையரே பார்க்காமல் பாட்டியிடமும் உறவினர்களுடமும் வளரும் குழந்தைகளை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ஏற்கெனவே இந்த தொழிலில் குடும்பத்திற்காக நேரம் செலவிடவே முடியவில்லை என்ற பேச்சு ,இதில் இந்த தொந்தரவு வேறு. இதற்கு ஒரு முடிவே இருப்பதாகவே தெரியவில்லை. வேலையில் அனுபவம் கூட கூட வெளிநாடு செல்லும் சந்தர்ப்பங்கள் அதிமாகிக்கொண்டு தான் போகும்,அப்பொழுது மேலும் மேலும் பிரிவு தான் மிச்சம். இதில் குழந்தைகளின் நிலை என்ன என்று எனக்கு யோசிக்க தெரியவில்லை.

என்னை சுற்றி இருப்பவர்கள் இப்படி இருப்பதினால்தான் எனக்கு இப்படி தோன்றுகிறதா இல்லை உண்மையிலேயே இந்த ஒரு பிரச்சினை இருக்கிறதா என்று தெரியவில்லை. இதற்காகவே தான் சாப்ட்வேர் வேலை செய்யும் என் நண்பர் ஒருவர் கணிணி தொழில் செய்யும் யாரையும் திருமணம் செய்துகொள்வதில்லை என்று முடிவே செய்துள்ளார்.
என்னமோ மக்கள் சந்தோஷமாக இருந்தால் சரி.
என்ன நான் சொல்வது சரிதானே?? :-)

Related Posts Widget for Blogs by LinkWithin