வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 6

என் இனிய தமிழ் மக்களே,
போன பகுதியோட பின்னூட்டங்களிலே பாத்தோம்னா,அண்ணாத்த சிங்கலே ACE ஒரு பின்னூட்டம் போட்டிருந்தாரு.

//இந்த மாதிரி வேற்று கிரக உயிரினங்களை radio waves மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்வதாய் படித்த மாதிரி ஞாபகம்//

அப்படின்னு ஒரு நமக்குள்ள ஒரு கேள்வி எழுப்பி இருந்தாரு!! இதை பாத்த உடனே எனக்கு சொல்ல தோன்றிய விஷயங்கள் எல்லாவற்றையும் பின்னூட்டமாக இடுவதை விட பதிவாகவே போட்டு விடலாம் என்று தோன்றியது. ஏனென்றால் இது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு சுவாரஸ்யமான தலைப்பு.

வேற்று கிரக உயிர் என்ற பேச்சு வந்தாலே அவிங்க நம்ம கிட்ட தொடர்பு கொள்றாங்களா?? நாம அவங்க கிட்ட தொடர்பு கொள்ள முடியுமா?? இதுக்கு முன்னாடி ஏதாவது தொடர்பு ஏற்பட்டிருக்கிறதா?? என பல கேள்விகள் உண்டு. வேற்று கிரக் உயிர்களுடன் நமக்கு தொடர்புகள் ஏற்பட்டிருக்கா இல்லையா,அதற்கான சான்றுகள் உள்ளனவா என்பதையெல்லாம் பார்ப்பதற்கு முன் தொடர்பு கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விஞ்ஞானிகள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்ப்போம்.

இந்த விஷயத்தை பொருத்த வரை விஞ்ஞானிகளின் நிலைப்பாட்டை மூன்று விதமாக பிரிக்கலாம். ஒரு சாரார் இந்த அண்டத்தில் பூமியை தவிர வேறு எங்கும் உயிர்கள் இல்லை என்று உறுதியாக நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைக்கு பெரும்பாலும் அவர்களின் மத நம்பிக்கையே அடித்தளமாக அமைந்து விடுகிறது.இந்த நம்பிக்கைக்கு "Rare earth theory" என்று ஒரு பெயர் உண்டு. அதாவது அண்டத்தில் நம் பூமியில் இருப்பதை போன்ற அமைப்பு மிக மிக அபூர்வம் என்றும் இது போன்று அமைப்பு வேறு எங்கும் அமைய சாத்தியமே இல்லை என்பது இவர்கள் வாதம்.
அடுத்த வகையை சேர்ந்தவர்கள் வேற்று கிரகங்களில் உயிர்கள் இருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் மனிதனை போன்ற அறிவில் வளர்ச்சி அடைந்த உயிரினங்களை காண்பது அரிது என்றும்,அவை நுண்ணுயிர் வகை போன்று சிறியதாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள். இதனால் வேற்று கிரக உயிரினங்களோடு தொடர்பு கொள்ள முயற்சிப்பது வீண்் என்றும், அதற்கு செலவு செய்யும் பணத்தை வேறு ஆராய்ச்சிகளில் செலவு செய்யலாம் என்பது இவர்கள் வாதம்.

மூன்றாமவர்கள் அண்டத்தில் மனிதனை போல அறிவு பெற்ற உயிர் நிச்சயமாக உண்டு என்று நம்புபவர்கள். இவ்வளவு பெரீஈஈஈய அண்டத்தில் பூமியில் மட்டும் தான் உயிர் இருக்கிறது என்றால் நம்பும்படிய இருக்கிறது??? "இது என்ன சிறுபுள்ள தனமாக இருக்கு" என்பது இவர்கள் வாதம்.

ஹ்ம்ம்ம் நமக்கு எதுவும் பிடிபடலை,எல்லாமே இவங்களே கண்டு புடிச்சு சொன்னா சரிதான்!!
ஆனா, வேற்றுகிரகத்துல அறிவார்ந்த உயிர் இருக்குன்னு நம்பினாலும் கூட அவிங்க கூட தொடர்பு கொள்வது சாத்தியமா?? என்பது மிக சுவாரஸ்யமான கேள்வி. ஏன்னா அப்படி தொடர்பு கொள்வதற்கு நமக்கு இருக்கற தடங்கல்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை.

1.) தூரத்து இடி முழக்கம்: நான் பல முறை சொன்னது போல விண்வெளியில் இருக்கும் பொருட்கள் எல்லாம் ஒன்றும் பக்கத்தில் இல்லை,ஒவ்வொன்றும் பல ஒளி வருடங்கள் தள்ளி இருக்கு. அதனால தொடர்பு கொண்டாலும்,அதற்கு அவிங்க மறுமொழி அளித்தாலும் அது வந்து போற நேர காலம் கொஞ்ச நஞ்சம் இருக்காது. உதாரணத்திற்கு ஒரு ஆயிரம் ஒளி வருடம் தள்ளி ஒரு கிரகம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்,அதற்கு நாம் அனுப்பும் செய்தி 1000 வருடங்களுக்கு பின் போய் சேரும். அதற்கு அவர்கள் உடனடியாக மறுமொழி அனுப்பினாலேயே அது வந்து சேர இன்னொரு ஆயிரம் வருஷம் ஆகும்!!! 2000 வருஷத்துல நம்ம ஊருல என்ன என்ன மாற்றங்கள் வரும்னு கற்பனை பண்ண முடியுதா?? ஒரு அஞ்சு வருஷம் ஆட்சி மாறினாலேயே அவிங்க ஆரம்பிச்ச மேம்பாலத்தை இவிங்க முடிக்க மாட்றாங்க,இவிங்க ஆரம்பிச்ச மேம்பாலத்தை அவிங்க முடிக்க மாட்றாங்க!!! இதுல 2000 வருஷத்துல என்ன ஆகும்னு யாருக்கு தெரியும்??? அதுவும் நாம் விண்வெளியை கடந்து போகற அளவுக்கு சமிஞைகள் எல்லாம் சமீப காலமாதான் அனுப்பிக்கிட்டு இருக்கோம்.
இதெல்லாம் எப்போ வேற்றுகிரகத்துக்கு போய் சேர்ந்து,எப்போ அவிங்க அதை புரிஞ்சிகிட்டு,எப்போ அதுக்கு மறுமொழி அனுப்பி,அது எப்போ நம்மள வந்து சேருவது???
இது செல்லாது செல்லாது!!அப்படின்னு நாட்டாம்மை சொல்லுறா போல இருக்கா??
ஹ்ம்ம்ம்!!! சில மக்கள் அப்படிதான் சொல்றாய்ங்க.

2.)நேரம் காலம் கூடி வரனும்: இன்றைய தேதியில் வேற்று கிரகத்திலே இருந்து ஏதாவது செய்தி இருந்தால் அடிச்சு புடிச்சு என்ன மேட்டருன்னு கண்டு புடிச்சு ,அமெரிக்கா,ரஷ்யா,ஜப்பான் அப்படின்னு எல்லா நாடுகள் கிட்டையும் கலந்து பேசி ,ஐ.நா சபையில் அறிவித்து,உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து அல்லோல கல்லோல படுத்திருவோம்ல!!!
இதே ஒரு 200 ஆண்டுகளுக்கு முன்னாடி வந்திருந்தா??ஒரு 500 ஆண்டுகளுக்கு முன்னாடி வந்திருந்தா??? ஒரு 1500 ஆண்டுகளுக்கு முன்னாடி வந்திருந்தா??? ஒன்றரை லட்சம் வருடங்களுக்கு முன் வந்திருந்தால்???
நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதுல்ல??நாம அனுப்பர செய்தி சரியான சமயத்துல போய் சேரனும்!! அவங்க அறிவும் தொழில்நுட்பமும் அதுக்கு ஏத்தா மாதிரி வளர்ந்திருக்கனும். நம்ம ஊரு மாதிரி இடைத்தேர்தல்,உலக அழகி போட்டி அது மாதிரி முக்கியமான விஷயங்கள் எல்லாம் நடந்துட்டு இருந்தா நாம அனுப்பர செய்தியை அவிங்க கண்டுக்கவே மாட்டாங்க!! அதனால் அறிவில் வளர்ந்த உயிரினம் உள்ள ஒரு உலகத்தை நம் செய்தி சென்று சேர்ந்தாலும் அதற்கு கட்டாயமாக எல்லா சமயமும் மறுமொழி வரும் என்று கூற முடியாது. நாம் அனுப்பும் செய்தி சரியான நேரத்தில் போய் சேர வேண்டும். நம் அண்டம் எண்பது பல பல பில்லியன் வருடங்களாக இருந்து வருவதால் நாம் செய்தி வெளியிடும் சமயத்தில் வேற்றுகிரக உயிர்களும் அதை புரிந்து கொள்ளும் நிலையில் இருந்தால் அது மிக மிக அபூர்வமான விஷயம்.

3.)நம்ம காது கொஞ்சம் மந்தம்:நாம எவ்வளவுதான் அறிவியல்ல சூரப்புலின்னு நெனைச்சிகிட்டு இருந்தாலும் நாம் கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு தான். புற ஊதா கதிர்கள்,X கதிர்கள்,காமா கதிர்கள் போன்ற விஷயங்கள் எல்லாம் நாம் சில நூறு ஆண்டுகளாக தான் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறோம். இவைகளை அளக்கவும்,உணர்ந்துகொள்ளவும் இருக்கும் கருவிகளும் எந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவை என்று சொல்ல முடியாது. நம் கருவிகள் காதில் படாத அலைவரிசையிலோ அல்லது அவை உணர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு சக்தி குறைந்து சமிஞைகள் வரலாம். அதை போன்ற செய்திகள் இப்பொழுது கூட வந்துகொண்டு இருக்கலாம் ,அல்லது இதற்கு முன் வந்திருக்கலாம். அப்படி இருந்தால் நாம்் அவைகளை கேட்காமல் தவற விட்டிருப்போம். இல்லை என்றால் நமக்கு தெரியவே தெரியாத கதிர் இயக்க அலைகளை கொண்டு அவர்கள் நம்மை தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம்.
இதே போன்று நாம் அனுப்பும் செய்திகளும் அவர்களுக்கு தெரிந்த அலைகளில் இருந்தால் தான் அவர்களால் அதை உணர்ந்து கொள்ள முடியும்.

4.) விருப்பமேயில்லை : இது வரைக்கும் தொடர்பு கொள்ள முடியுமா என்று தானே பேசிக்கொண்டிருந்தோம் ஆனால் சில பேரின் கருத்து கொஞ்சம் வித்தியாசமானது. சிலர் என்ன நினைக்கிறார்கள் என்றால் வேற்றுகிரக பிராணிகளால் நம்மை தொடர்பு கொள்ள முடிந்தாலும் அவர்கள் நம்மோடு தொடர்பு கொள்ளாமல் விட்டு வைத்திருக்கின்றார்கள் என்று சொல்கிறார்கள்.
அதாவது நாம் மிருக காட்சி சாலையில் மிருகங்களை தனியே அடைத்து வைத்திருப்பது போல நம்மை பூமியில் தனியே விட்டு விட்டு அறிவில் உயர்ந்த வேற்று கிரக உயிர்கள் நம்மை கண்கானிக்கின்றன என்பது இவர்களின் கூற்று. இதற்கு ஆங்கிலத்தில் "Zoo hypothesis" என்று பெயர் உண்டு.
இது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு !! என்று தோன்றுகிறதா???
என்ன செய்வது?? தொழில்நுட்ப காரணங்களுக்கு அப்பாற்பட்டு மனிதன் விண்ணுயிர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமைக்கு,மக்களிடையே இப்படி ஒரு அனுமானமும் இருக்கிறது என்று காட்டுவதற்காகவே இதை நான் இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன்.

5.) அவிங்க இங்கிட்டு தான்யா இருக்காய்ங்க!! : எல!!! வேற்றுகிரக மக்கள் எங்க இருக்காய்ங்கன்னு இங்கேயும் அங்கேயும் பாத்துகிட்டு இருக்க?? அவிங்க ஏற்கெனெவே நம்ம உலகத்துல வந்துட்டாய்ங்கப்பா!!
"Men in Black" படம் பாத்திருக்கீங்கல??? அது மாதிரி உலகத்தில் ஏற்கெனவே வேற்று கிரக மக்கள் இருக்கிறார்கள் என்றும் ,ஆனால் நமக்கு தான் தெரியவில்லை என்றும் ஒரு கருத்து உண்டு.
இதை பற்றி அரசாங்கத்திற்கு தெரிந்திருந்தும் மக்களிடையே இது மறைக்கப்பட்டிடுக்கிறது என்று ஒரு பிரிவினர் நம்பி வருகிறார்கள். ஆங்காங்கே வேற்று கிரகத்தினரால் கடத்தப்பட்டதாகவும் ,அவர்களால் தன் மேல் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதாக கூறுபவர்களும் உண்டு. இது தவிர பல இடங்களில் பறக்கும் தட்டுகளோ , அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள்(UFO-Unidentified flying objects) கண்டதாக பல கதைகளை நாம் கேட்டிருக்கிறோம்.

வேற்று கிரக உயிர் பற்றிய அறிமுகம் இந்த பதிவில் உங்களுக்கு கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.இந்த அறிமுகத்தை வைத்துக்கொண்டு பல விஷயங்களை நாம் பின் வரும் பாகங்களில் காணலாம்.

வரட்டா?? ;-)

References:
http://en.wikipedia.org/wiki/Fermi_paradox

படங்கள்:
http://pwp.netcabo.pt/susana.ribeiro1/img_ogame/universe_lonleyplanet_1024.jpg
http://www.wvp-consulting.com/astronomy/images/andromgal.jpg
http://www.cheryllavender.com/Time%20and%20Space.jpg
http://en.wikipedia.org/wiki/Image:Terrestrial_Planet_Finder_PIA04499.jpg
http://www.jpl.nasa.gov/images/superhighway_square_browse.jpg
http://us.movies1.yimg.com/movies.yahoo.com/images/hv/photo/movie_pix/columbia_pictures/men_in_black/fakehead.jpg

வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 1 (பிரபஞ்சம் உருவானது எப்படி)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 2(Big bang theory)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 3(Light years)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4(Black holes)
வானத்தில் விரியும் அதிசயங்கள் - பாகம் 5(Extra terrestrial life)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 6(Alien communication)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 7(UFOs)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 8(Roswell - part 1)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 9(Roswell - part 2)

எட்டுக்குள்ளே வாழ்க்கை இருக்கு ராமைய்யா

என் இனிய தமிழ் மக்களே,
இந்த எட்டு விளையாட்டு அண்மைக்காலமா வலைப்பதிவுகளில் காட்டுத்தீ போல பரவிகிட்டு வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும். விளையாட்டுல அண்ணன் நாகை சிவாவும், அண்ணாத்த ஜிராவும் என்னை சேர்த்து விட்டுட்டாங்க. பல "எட்டு" பதிவுகளை பார்த்துட்டு நான் வெலவெலத்து போயிருந்தேன்க. ஆரம்பத்துல தன்னை பற்றிய ஏதாவது எட்டு விஷயங்களை கூற வேண்டும் என்றுதான் இது ஆரம்பிக்கப்பட்டது என நினைக்கிறேன்,ஆனால் இப்பொழுது பரவலாக எல்லோரும் தான் பெருமை படக்கூடிய 8 விஷயங்களை எழுத ஆரம்பித்து விட்டார்கள். நான் என்னை பற்றி பெருமைப்படுவதற்கு ஒரு விஷயம் கூட இல்லை இதில் 8 விஷயங்களை எங்கிருந்து எழுதுவது??? அதுவும் எனக்கு பொதுவாகவே என்னை பற்றி பெருமையாக பேசிக்கொள்வது பிடிக்காது
(பெருமையாக பேச ஒன்றுமே இல்லை என்பது வேறு விஷயம்!! :-P).

என்னுடைய கம்பெனியில வருஷா வருஷம் தன்னை பற்றி பேசுவதற்கும்,தான் செய்த பணியின் அருமை பற்றி விளக்குவதற்கும் ஒரு சந்தர்ப்பம் தருவார்கள். பவர் பாயிண்டு ஸ்லைடுகளை உருவாக்கி டேமேஜர் எதிரில் நம் சுய புராணத்தை எடுத்து கூற வேண்டும். இதன் அடிப்படையில் தான் டேமேஜர் என்னுடைய ஆப்புரைசலை பரிசீலனை செய்வார். நான் அங்கே கூட என்னை பற்றி கூறிக்கொள்ள விருப்பமில்லாமல் பேருக்கு ஏதோ படம் காட்டிவிட்டு வருவேன். நான் செய்யும் பணியை புரிந்துகொண்டு சம்பள உயர்வு வர வேண்டும் என்றால் வரட்டும்,இதற்காக எல்லாம் விளம்பரம் செய்து கோண்டிருக்க முடியாது என்று இருந்து விடுவேன்.அப்படிப்பட்ட மன நிலையில் நான் இருப்பதால் இந்த டேக் எழுதவே வேண்டாம் என்று தான் நான் முடிவு செய்திருந்தேன்.

ஆனால் ஜிரா அவர்களின் பதிவை பார்த்துவிட்டு,அட!! இதுபோல என்றால் நானும் எழுதலாமே என்று எனக்கு தோன்றியது. ஆனாலும் என்ன எழுதுவது என்று தெரியவில்லை,அதனால் அவரிடமே என்ன எழுதுவது என்று கேட்டேன். அதற்கு அவர் கொடுத்த பதில தான் இப்பொழுது இந்த பதிவாய்!!! :-))


1.) எளியவன் : இது எந்த அளவுக்கு உண்மை என்று நண்பர்கள் தான் சொல்ல வேண்டும். என்னை பற்றி கேட்கும் போது ஜிரா சொன்ன முதல் விஷயம் இது தான். ஒரு காலத்தில் மின் அஞ்சல் கையெழுத்தில் (Email signature) Simply,CVR என்று எழுத ஆரம்பித்து அதுவே ஒட்டிக்கொண்டு விட்டது.இதையே என் ஆர்குட் பெயராகவும்,என் ஆங்கில வலைப்பதிவின் பேராகவும் வைத்து விட்டேன். எனக்கு எப்பொழுதுமே வாழ்க்கையை "முடிந்த வரை" எளிமையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை. தேவை இல்லாத சிக்கல்கள் தான் பிரச்சினைகளுக்கு காரணம் என்று நினைப்பவன்.அதுவுமில்லாமல் எனக்கு தெரிந்த சிலரை போல இல்லாமல் நான் மிகவும் சாதாரணமானவன்,என்னிடம் பெரியதாக ஒன்றும் சிறப்பு கிடையாது என்பதால் இந்த Simply CVR எனக்கு நன்றாக பொருந்திய பெயர் ஆகி விட்டது.

2.)திரைப்படம் பார்ப்பது: நல்ல படங்களை தேர்ந்தெடுத்து பார்ப்பது சமீபத்திய பொழுது போக்காகி விட்டது. இங்கு ஆன் ஆர்பரில் என் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள நூலகத்தில் படங்களை இலவசமாக வாடகைக்கு எடுத்து கொள்ளலாம் என்பதால் வார இறுதிகளில் படங்களை தேர்ந்தெடுத்து வாடகைக்கு எடுப்பது பழக்கமாகி விட்டது.எனக்கு பொதுவாக வன்முறை நிறம்பிய படங்களோ,நெஞ்சை உருக்கும் சோகப்படங்களோ அறவே பிடிக்காது. டைட்டானிக் திரைப்படம் சோகம் ததும்பும் படம் என்பதாலேயே தான் அதை பார்க்கவில்லை. இதன் காரணமாகத்தான் வெயில்,பருத்தி வீரன்,300 போன்ற படங்களை கூட பார்க்காமல் தவிர்த்து விட்டேன்.வேட்டையாடு விளையாடு படத்தை தெரியாத்தனமாக பார்த்து தொலைத்து விட்டேன்!! :-(
எனக்கு பொதுவாக நகைச்சுவை,நல்ல கதையமைப்பு, படப்பிடிப்பு, ஊக்கமளிக்கும் மற்றும் தெம்பளிக்கும்(Inspiring and motivating) படங்கள் என்றால் பிடிக்கும்(Shawshank Redemption போன்றவை). பெரியதாக கதை இல்லாவிட்டாலும் நல்ல திரைக்கதை,இசையோடு ரசனையோடு தயாரிக்கப்பட்ட படமாக இருந்தாலும் அவ்வப்போது ஓகே தான். ஆனால் பொதுவாக மசாலா படங்களை பார்க்க அவ்வளவாக விருப்பமில்லை.

3.)புகைபடக்கலையில் ஆர்வம் : சின்ன வயதில் ஒரு முறை என் சித்தப்பாவின் நிச்சயதார்த்தத்திற்கு படம் எடுக்க யாரும் இல்லாததால் என் கைக்கு வந்த கேமராவை கண்டவுடன் வந்தது காதல்,இன்று வரை பெருகிக்கொண்டே இருக்கிறது. ஆர்வம் நிறம்ப இருந்தும் வீட்டில் வெகு நாட்களாக கேமரா இல்லை. பின்பு மாமா ஒரு கேமரா பரிசளித்தார்,ஆனால் அது ஒரு சாதாரணமான ஃபிலிம் கேமரா என்பதால் அதில் பெரியதாக ஒன்றும் சுட்டு தீர்க்கவில்லை. ஆனால் இங்கே அமெரிக்கா வந்த பிறகு நான் வாங்கிய முதல் பொருள் ,ஒரு டிஜிட்டல் கேமரா. அது வாங்கிய உடன் எனக்கு தலைகால் புரிய வில்லை,வாங்கிய புதிதில் கன்னா பின்னா என்று படம் எடுத்து கொண்டிருந்தேன். இப்பொழுது முன்பிருந்ததை போல வேகம் இல்லாவிட்டாலும் நிறைய ஆர்வம் உண்டு. புகைப்படக்கலை என்பது ஒரு விதமான மாஜிக் என்று நம்புபவன் நான். நன்றாக எடுக்கப்பட்ட எந்த ஒரு படமும் அதிர்ஷ்டத்தால் வந்து விடுவதில்லை,அதன் நிறைய நுணுக்கமும்,திறமையும்,பொறுமையும் ஒளிந்திருக்கிறது. அதையெல்லாம் அடையும் பயணத்தின் முதல் படியை ஏற முயற்சி செய்து வருகிறேன்.

4.)எல்லாம் இறைவன் செயல் : என்னை பற்றி நன்றாக தெரிந்த நண்பர்கள் என்றால் கண்டிப்பாக இதை கவனித்திருப்பார்கள். பேச்சுவாக்கில் பல நூறு தடவை "எல்லாம் இறைவன் செயல்" என்று சொல்லிக்கொண்டிருப்பேன்.என்னை பொருத்த வரை இந்த உலகம்,வாழ்க்கை எல்லாமே நம் அறிவுக்கு எட்டாத விந்தைகள். நம்மை சுற்றி என்ன நடந்து கொண்டீருக்கிறது,நாம் எங்கிருந்து வந்தோம்,எங்கே போகப்போகிறோம்,எதற்காக இவையெல்லாம் நடக்கிறது இப்படி பல்லாயிரம் கேள்விகளுக்கு நமக்கு கிஞ்சித்து கூட விடை தெரியாது.ஏதோ எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் எல்லாம் செய்கிறோம்,நாளுக்கு நாள் நமக்கிருக்கும் ஆயிரம் பிரச்சினைகளில் ஆழ்ந்து போகிறோம். ஆனால் இந்த கூத்து எல்லாம் எதற்காக என்று சுத்தமாக தெரியாது. இருந்தும் நமக்குள் எத்தனை ஈகோ,குழப்பங்கள்,சண்டைகள்,திட்டங்கள்?? இந்த மாயையில் வீழ்ந்து விடாமல் இருப்பதற்காக அவ்வப்போது நான் "எல்லாம் இறைவன் செயல்" என்று நினைவு படுத்திக்கொள்வேன். இந்த பழக்கம் என்னை தேவையில்லா குழப்பங்களில் இருந்து மீட்டு நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை நான் அவ்வப்போது உணர்ந்து கொள்ள உதவுவதாக எண்ணுகிறேன். இதேபோல் ஆங்கிலத்தில் "Nothing stays" எனும் சொற்றொடரும் எனக்கு மிகவும் பிடித்தது. என் க்யூபிகிளில் நான் இந்த சொற்றொடரை தனி பேப்பரில் கொட்டை எழுத்தில் பதித்து ஒட்டி வைத்திருக்கிறேன்.
சுகம் , துக்கம்,ஆத்திரம்,பயம் என பல நேரங்களில் பல விதமான புரிதல்களை தரவல்ல வார்த்தைகள் இவை இரண்டும்.இதை பற்றி எழுத ஆரம்பித்தால் இந்த பதிவில் முடியாது,அதனால் அடுத்த தலைப்புக்கு போகலாம்

5.) அப்பா/அண்ணன் சென்டிமென்ட் : படங்களில் பொதுவாக அம்மா,தங்கை சென்டிமென்டுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் தருவார்கள். ஆண்பிள்ளைகளை அழ வைப்பதற்கு பதிலாக தாய்குலங்கள் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வரவைப்பது எளிது என்று நினைத்துக்கொண்டு இதை செய்கிறார்கள் என எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு. ஆனால் இவை எல்லாவற்றையும் விட எனக்கு அப்பா/அண்ணன் சென்டிமென்ட் உள்ள காட்சிகளில் நான் உருகி விடுவேன்.
அதுவுமில்லாமல் தமிழ்மணத்தில் எனக்கு கிடைத்த நண்பர்கள் எல்லோரையும் வாய் நிறைய அண்ணா என்று கூப்பிடுவதையும் நான் பெரிதும் விரும்புவேன். நான் மிகவும் சிறிய வயது இருக்கும்போது (சுமார் மூன்று வயது இருக்கும் போது) என்னுடைய அண்ணனை இழந்தேன் என்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எனக்கு அப்பொழுது மிக சிறிய வயது என்பதால் எனக்கு என் தாய் தந்தை சொல்லி தான் எல்லா ஞாபகமும்,எனக்கு வேறு ஞாபகமோ வருத்தமோ இதனால் கிடையாது. இருந்தும் உள்மனதில் (Subconscious) இதனால் தான் எனக்கும் எல்லோரையும் அண்ணா என்று கூப்பிடவேண்டும் என்று தோன்றுகிறது என்று நினைக்கிறேன்.

6.)இசை: என் வாழ்வில் மிக முக்கியமான அங்கம் , இசை. தனிமை விரும்பியாக நான் இருந்தாலும் நான் எழுதும்போது சில சமயங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் இசை என்னுடைய உற்ற நண்பன். தமிழ்,ஹிந்தி,ஆங்கிலம்,கர்நாடக சங்கீதம் என பல இடங்களில் இருந்தும் இசையை ரசிப்பேன்.ஆனால் எதிலும் பெரியதாக தெரியாது,அவ்வப்போது நண்பர்கள் மூலம் கிடைக்கும் அறிமுகங்களின் மூலம் தெரிந்து கொள்வதுதான். எப்பொழுதும் ஏதாவது பாட்டு ஓடிக்கொண்டே இருக்க மற்ற வேலைகளை செய்வது தினமும் நடக்கும் விஷயம். அதிலும் மெலடி எனப்படும் மெல்லிய இசை வகை எனக்கு மிகவும் பிடிக்கும். குத்து பாட்டு அல்லது இரைச்சல் மிகுந்த பாடல்கள் எனக்கு அவ்வளவாக ஒத்து வராது. ஓவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான ரசனை. :-)
குறிப்பாக இளையராஜா இசை அமைப்பில் அமைந்த பல நல்ல பாடல்கள் 80-களில் வந்திருக்கும்,அதை நான் பெரிதும் விரும்பி கேட்பேன்.

7.)எழுத்து : பள்ளிக்கூட சமயத்தில் ஒரு சமயம் என்னிடம் ஆசிரியை ஒருவர் நீ நன்றாக எழுதுகிறாய்,உன் திறமையை வளர்த்துக்கொள் என்று சொல்லி இருந்தார். நான் அதை பெரியதாக எடுத்துக்கொள்ள வில்லை. ஒரு ஒன்றிரண்டு வருடங்கள் முன்பு வரை எனக்கு எழுத்தின் மேல் இவ்வளவு பெரிய ஆர்வம் தொற்றிக்கொள்ளும் என்று நான் எண்ணிப்பார்த்து இல்லை. எதேச்சையாக ஒரு கதை எழுத போய் அது சற்றே வரவேற்ப்பை பெற அப்படியே தொடர்ந்து ஒரு 20 - 25 கதைகள் எழுதி தள்ளினேன்(ஆங்கிலத்தில்) ஒரு காலத்தில். பின் அமெரிக்கா வந்த பிறகு அது அறவே நின்று போனது
பல மாதங்களாக நேரம் எப்படி செலவிடுவது என்று தெரியாமல் ஆர்குட் வலைத்தளத்தில் நேரத்தை வீனடித்தேன். பின் ஒரு நாள் ஏதோ யோசித்துக்கொண்டிருந்த போது நாம் மூன்றாவது வரை தானே தமிழ் படித்திருக்கிறோம்,எழுத்துபிழையோடு இவ்வளவு மோசமாக எழுதுகிறோமே. ஆங்கிலத்தில் எல்லாம் பெரிய பிஸ்தா போல எழுதி விட்டு , நாம் பெரிதும் நேசிக்கும் தாய்மொழியில் இவ்வளவு கேவலமான நிலைமையில் உள்ளோமே என்று நினைத்த போது தோன்றியது தான் இந்த தமிழ் வலைப்பதிவு. அதற்கு பின் ஒன்றிரண்டு மொக்கை பதிவுகளுக்கு பின் வேறு சில தமிழ் பதிவுகள் ஏதாவது பார்க்கலாம் என்று விளையாட்டாக கூகிளில் தேட போய்,தமிழ்மணம்,தேன்கூடு எல்லாம் கண்டு,அவற்றில் எல்லாம் பதிவு செய்துகொண்டு,அன்பான பல நண்பர்கள் பெற்று,அப்பப்பா!!

நினைத்து பார்த்தாலே மலைப்பாக இருக்கிறது,எங்கிருந்து ஆரம்பித்து எங்கே வந்து நிற்கிறேன். ஆனால் என்னை சுற்றி உள்ள பதிவர்களை பார்த்தால் இன்னும் பயணத்தையே ஆரம்பிக்க வில்லையோ என்று தோன்றும் அளவுக்கு பின் தங்கி இருப்பதாக தோன்றுகிறது. நிறைய எழுத வேண்டும்,மேலும் சிறப்படைய வேண்டும் என்று ஊக்கம் மனதில் நிறம்புகிறது. எழுத்து என் வாழ்க்கையின் ஒரு முக்கியமான ஒரு அங்கமாகி விட்டது என்பது என்னை நன்றாக தெரிந்த யாராலும் மறுக்கு முடியாத உண்மை. எதனால் என்று தெரியாத பல விஷயங்களை போல் இதையும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு என்னுடைய ஒவ்வொரு நாளும் விடிந்துக்கொண்டு இருக்கிறது.

8.)தமிழ்மண நண்பர்கள் : இவர்களை பற்றி கூறியே ஆக வேண்டும். வாழ்க்கையில் நாம் பல பேரை சந்திக்கிறோம்,அதில் சிலர் மட்டுமே நண்பர்கள் ஆகிறார்கள். பள்ளிக்கூடம்,கல்லூரி,வேலை என பல இடங்களை நாம் கடந்து வந்த போதும் தமிழ்மணத்தில் கிடைத்தது போல நண்பர்கள் எனக்கு வேறு எங்கேயும் கிடைத்ததில்லை. எல்லா இடங்களிலும் நாம் மக்களோடு பழகி,அவர்களின் நல்ல/கெட்ட பழக்கங்களை தெரிந்து கொண்டு சிறிது சிறிதாக நட்பை வளர்த்துக்கொள்வோம்.ஆனால் இங்கே மிக குறைந்த நேரத்திலேயே என்னுடன் நெருக்கமான நட்பு எனக்கு சிலரோடு அமைந்து விட்டது. அவர்களின் நகைச்சுவை உணர்வு ,எழுத்து திறமை,சிந்தனை வளம், அறிவுத்திறன், எல்லாவற்றிற்கும் மேலாக இனிமையான நட்பு பாராட்டும் திறன் இவைகளால் என்னை இவர்கள் அசத்தி விட்டார்கள். தமிழ்மணத்தில் கிடைத்ததை போல் என்னோடு ஒத்துப்போகக்கூடிய நெருக்கமான நண்பர்கள் எனக்கு வேறு எங்கும் இவ்வளவு சீக்கிரமாக கிடைக்கவில்லை. இது எனக்கு மட்டும்தானா இல்லை எல்லோருக்கும் இப்படியா என்று தெரியவில்லை.மற்ற இடங்களில் எல்லாவற்றையும் விட இங்கு நாம் விரும்பும் விஷயங்களே அதிகமாக பேசிக்கொண்டு,விரும்பாத விஷயங்களை பேசாமல் விட்டு விடுகிறோமா??
இதை போன்ற பல விஷயங்களை தனி பதிவாகவே எழுதலாம்,இதை பற்றி முன்பே ஒரு கதை கூட எழுதி இருக்கிறேன்.
இந்த ஆராய்ச்சி எல்லாம் இப்போ எதுக்கு. என் வாழ்வில் இன்றைய தேதியில் பல தமிழ் பதிவர்களின் நட்பு ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது. அவர்களுடன் தினம் செய்யும் அலம்பல்கள் மற்றும் அரட்டைகளினால் எனது நாள் கலகலப்பாகிறது எனபது உள்ளங்கை நெல்லிக்கனி. என் வாழ்க்கையை பற்றி ஒரு பதிவு போடும் போது இதை சொல்லாமல் இருக்க முடியுமா??? ;-))

என்னது?? கடைசி வரைக்கும் பொறுமையா படிச்சிட்டீங்களா?? உங்களுக்கு உண்மையாவே பொறுமை அதிகம்தாங்க!!! :-)

சரி, நான் இந்த விளையாட்டுல அறிமுகப்படுத்த போற எட்டு பேரு யார் யார் தெரியுமா??


1.) வெட்டிப்பயல்.
2.)ட்ரீம்ஸ்.
3.)சத்தியப்பிரியன்.
4.)கே.ஆர்.எஸ்.
5.)சீ.டீ.கே
6.)சிங்கம்லே ஏஸ்.
7.கார்த்தி
8.) துளசி டீச்சர்.


விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும

படங்கள் :

படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 2என் இனிய தமிழ் மக்களே,
போன பகுதியில சொல்லிக்கொடுத்த மேட்டர வெச்சு ஏதாவது படம் எடுத்து பாத்தீங்ளா?? இல்லனா எடுத்த படத்துலையே இந்த முப்பகுதி கோட்பாட்டிற்கு ஏற்றால் போல் வெட்டி (Crop) விட்டு ஏதாவது முயற்சி பண்ணீங்களா?? உங்க முயற்சி அனுபவங்கள் எல்லாம் பின்னூட்டத்துல சொல்லுங்க!!
இன்னைக்கு நாம பாக்க போற தலைப்பு "வழிநடத்தும் கோடுகள்". ஆங்கிலத்துல இதை "Leading lines" அப்படின்னு சொல்வாங்க!!
அப்படின்னா??
அதாவது ஒரு படத்துல ஏதாவது கோடு இருந்துச்சுனா,நம்ம கண்ணு அந்த கோட்டை பின்பற்றியே தான் செல்லுமாம்!! அதாவது நம் படத்தில் இருக்கும் கோடு நம் படத்தின் கருப்பொருள் (Subject)-ஐ சென்று சேருகிறார் போல் பார்த்துக்கொண்டால் நம் படம் பார்ப்பதற்கு அழகாக தெரியுமாம். அதே போல் நம் படத்தில் இருக்கும் கோடுகள் நம் படத்தின் கருப்பொருளை நீங்கி செல்வது போலவோ அல்லது படத்தை விட்டு வெளியே செல்வது போலவோ இருந்தால் படம் பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருக்குமாம்.

நல்லா இருக்கு!! இதுக்காக நான் எங்கே இருந்து கோடுகளை தேடி போவது??? நானே படங்களுக்கு ஸ்கேல் வெச்சுகிட்டு கோடு வரையணுமா?? அப்படின்னு எல்லாம் டென்ஷன் ஆகாதீங்க!!!
கோடுகள் என்றால் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டிடங்கள்,ரோடுகள்,வேலிகள், வானம்,கடல்,நிலப்பரப்பு என எதுவாக இருந்தாலும் கோடுகளாகத்தானே தெரிகிறது. அந்த கோடுகளை எல்லாம் நமக்கு சாதகமாக உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டியது தான்!! :-))

ஹ்ம்ம்!! புரியறாப்போல இருக்கு ஆனா புரியலை!! இருக்கு ஆனா இல்லை அப்படின்னு சொல்றீங்களா???
சரி இருங்க!! ஒரு சில படங்கள் கீழே இருக்கு!! அதை பாருங்க!! உங்களுக்கே தெளிவாத்தெரியும்!! :-)
என்ன துரு துரு கண்கள், குறும்பும் அப்பவித்தனமும் நிறைந்த அழகிய முகம். குழந்தைகள் என்றாலே அழகுதான்!! ஆனால் இந்த அழகிய முகத்தை நோக்கி போகும் கோடுகளை கவனித்தீர்களா?? ஜன்னல் கம்பிகள் எப்படி இந்த அழகிய முகத்தை நோக்கி செல்கின்றன பார்த்தீர்களா?? இந்த கோடுகளை பின்பற்றி போய் தான் நம் பார்வை இந்த குழந்தையின் அழகு முகத்தில் போய் முடிகிறது.


நீங்க இங்க பார்த்துக்கொண்டிருப்பது ந்யூயார்க்கின் ப்ரூக்களின பாலம். இந்த படத்தில் பாலத்தின் கோடுகளை எவ்வளவு அழகாக பயன்படுத்தி நம் பார்வையை ந்யூயார்க் நகரினுள் எடுத்து செல்கிறார் பாருங்கள் புகைபடக்காரர். இதைப்போல் நாம் எந்த புகைப்படம் எடுத்தாலும் காட்சியில் இருக்கும் கோடுகளை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு காட்சி யை அமைத்துக்கொள்ளலாம்.
இந்த படம் முப்பகுதி பரிமாணத்திற்கும் ஒரு அற்புதமான உதாரணமாக விளங்குவதை காணலாம்
படத்தில் அமையும் கோடுகள் நேர்கோடுகளாக இருக்க வேண்டும் என்று கூட கட்டாயம் இல்லை என்பதை காட்டுவதற்காகத்தான் இந்த உதாரணம். அதுமில்லாமல் படத்தில் கருப்பொருள் ஒன்றும் இல்லாவிட்டால் "எங்கே செல்லும் இந்த பாதை" என்பதை போல கோடுகள் எங்கேயாவது உள்நோக்கி சென்றுகொண்டிருந்தால் அதுவும் படத்திற்கு அழகாக இருக்கும். எப்படி இருந்தாலும் கோடுகள் படத்தை விட்டு வெளிநோக்கி செல்லக்கூடாது, அதுதான் முக்கியம்.


என்ன மக்களே?? "வழிநடத்தும் கோடுகள்" மேட்டர் என்னன்னு புரிங்சுதா??
புரிஞ்சதோ புரியலையோ ,பின்னூட்டத்துல சொன்னீங்கன்னா தொடரை வழிநடத்திச்செல்ல உதவியா இருக்கும். அடுத்த முறை அடுத்த புகைப்படக்கலை சம்பந்தமான விஷயத்தோட உங்களை சந்திக்கிறேன்!!

வரட்டா?? ;-)

பி.கு: மனிதர்களாகிய நாம் வழக்கமா இடது பக்கத்துல இருந்து பார்க்க ஆரம்பிச்சு வலது பக்கமா முடிப்போம். அதே மாதிரி கீழிருந்து ஆரம்பித்து பார்வை மேலே போய் முடியும்!! அதனால உங்க வழிநடத்தும் கோடுகளின் தொடக்கமும் முடிவும் இதை அடிப்படையா வெச்சு தான் இருக்கும்!! :-)அனானி நண்பர் கேட்டுக்கொண்டதற்கினங்க பின் சேர்க்கை:நான் முன்பே சொன்னது போல் இந்த நுணுக்கங்கள் எல்லாமே ஒரு வழிகாட்டுதலுக்கு மட்டும் தானே தவிர இவை எல்லாம் பயன் படுத்தியே ஆக வேண்டும் கட்டயம் இல்லை. இந்த நுணுக்கங்களை சாராத படங்கள் கூட நமக்கு அழகாக தெரியலாம்,அது அவரவர் ரசனையை பொருத்தது.இந்த "வழிநடத்தும் கோடுகள்" கோட்பாட்டை சாராத படங்களை இணையத்தில் தேடி பார்த்தால் ஒன்றும் கிடைக்கவில்லை. எல்லோரும் தான் எடுத்த நல்ல படங்களை தான் வெளியிட விரும்பிவார்களே தவிர,நன்றாக இல்லாத படங்களை வெளியிட மாட்டார்கள். இதனால் நான் எடுத்த படங்களில் ஒன்றை எடுத்து வழிநடத்தும் கோடுகள் சாராத ஒரு படத்திற்கான உதாரணமாக கீழே கொடுத்துள்ளேன்.


இப்போ நீங்க மேலே பாத்துக்கிட்டு இருக்கற படம் ஆன் அர்பர்ல குளிர்காலத்துல எடுத்தது. ஒரு நாள் அலுவலகத்துல இருந்து வெளியே வந்தபோது இப்படி எல்லாமே உறைந்திருப்பதை கண்டு அதிசயித்து சும்மா என் கேமரா போனில் சுட்டது.

படத்தை பார்த்தீர்கள் என்றால் கிளைகள் வடிவில் இருக்கும் கோடுகள் படத்தை விட்டு நம் பார்வை இட்டு செல்வதாக அமைந்திருக்கின்றன. இதனால் உறைந்திருக்கும் பழங்களின் நம் ஒட்டுமொத்த கவனம் செல்லாமல்,படம் அவ்வளவாக சுவாரஸ்யம் இல்லாமல் போய் விடுகிறது.

இதனால் தான் படத்திற்கு வெளியே இட்டு செல்வது போலவோ ,அல்லது கருப்பொருளை விட்டு செல்வது போல் கோடுகள் அமையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்.

படங்கள்:
http://www.cnn.com/interactive/travel/0507/gallery.vacation.photos/02.super.leadinglines.jpg http://photoinf.com/General/Gao_Mu/slide0004_image016.jpg
http://www.tipsfromthetopfloor.com/library/lib/exe/fetch.php/image_composition:road_leadingline.jpg


படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 1(Rule of thirds)
படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 2(Leading lines)
படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 3(Double action pics)

வானத்தில் விரியும் அதிசயங்கள் - பாகம் 5

என் இனிய தமிழ் மக்களே,
போன தடவை கருந்துளைகள் அப்படிங்கற வான்வெளியின் அதிசயத்தை பற்றி பார்த்தோம். இன்றைக்கு விண்வெளி ஆர்வலர்கள் அனைவரையும் கவரக்கூடிய ஒரு தலைப்பான "வேற்றுகிரக உயிர்" என்பதை பற்றி பார்க்கலாம்.

நிறைய பேருக்கு விண்வெளி மேல ஆர்வத்தை கிளப்பி விடுவதே இந்த வேற்றுகிரக மேட்டர் தான். என்னுடைய முதல் பகுதியிலேயே எனக்கு விண்வெளியின் மேல் ஆர்வத்தை கிளப்பிவிடக்காரணமான "Independendence Day" படத்தை பற்றி கூறி இருந்தேன். அது வேற்றுகிரகத்திலிருந்து உயிர்கள் வந்து இங்கே மனிதர்களை அழிக்க முயலும் கதை தான். இது போன்று தொன்று தொட்ட காலத்தில் இருந்தே மற்ற உலகங்களில் உள்ள உயிர்கள் குறித்தும் அங்கிருக்கும் விந்தையான ஜீவ ராசிகள் குறித்தும் மனிதனுக்கு குழப்பமும்,பயமும் கற்பனைகளும் இருந்திருக்கின்றன.

நம்ம கலாசாரத்திலேயே பார்த்தீர்கள் என்றால் நம் புராண கதைகளில் கூட சொர்க்கம்,நரகம்,தேவலோகம்,அசுரலோகம் போன்ற பற்பல உலகங்களும் அங்கு இருக்கக்கூடிய மனிதனில் இருந்து வித்தியாசப்படக்கூடிய பல உயிர்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. ஆனால் இதை பற்றிய தெளிவான சிந்தனை இது வரையில் மனிதனிடம் இருந்ததில்லை. இந்த பேரண்டம் ஆனது எவ்வளவு பெரியது என்று கற்பனை செய்யக்கூட முடியாத அளவுக்கு பரந்து விரிந்து உள்ளது. இதில் வேறெங்கேயும் இல்லாமல் இந்த பூமியில் மட்டுமே உயிர் உருவானது ஏன்??
இதற்கும் வல்லுனர்கள் இடையில் இருவேறு கருத்துகள் உண்டு. சிலர் உயிர் என்பது ஒரு இடத்தில் உருவாகி வெவ்வேறு இடத்திற்கு பிரிந்து சென்று அங்கு உள்ள நிலைகளுக்கு ஏற்றார்போல் மாற்றம் பெற்று பெருகியிருக்கும் என்றூ கூறுகிறார்கள். வேறு சிலரோ எல்லா இடத்திலேயும் உயிர் தனித்தனியாக உருவாகி வளர்ந்திருக்கும் என்று கூறுகிறார்கள்.
இதை பற்றி மேலும் யோசிக்க வேண்டும் என்றால் இந்த உலகத்தில் உயிர் எப்படி உருவாகியது என்று நமக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.ஆனால் அதிலேயே நமக்கு தெளிவு கிடையாது. பொதுவாக வல்லுனர்கள் எல்லோருமே தண்ணீரில் இருந்து முதன்முதலில் பாக்டீரியா போன்ற ஜீவராசிகள் தோன்றியது என்றும் பிறகு பரிணாம வளர்ச்சி மூலமாக அவை இப்பொழுது இருக்கும் நிலைக்கு உயர்ந்தன என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

உயிர் அமைவதற்கு தேவையான எல்லா சூழ்நிலைகளும் சரியாக அமைந்தும் பல கோடி வருடங்களுக்கு உலகில் உயிர் எதுவும் உருவாகாமல், திடீரென்று தோன்றியது போலவே தான் தெரிகிறது. இந்த திடீர் தோன்றலுக்கு காரணமாக சிலர், வேற்றுகிரகத்திலிருந்து வந்து நம் பூமியில் விழுந்த பொருளினால் உயிர் தோன்றியிருக்கலாம் என்று சொல்கிறார்கள்.வேறு சிலரோ எல்லாமே ஒரு குருட்டு அதிர்ஷ்டம் தான்,பல்வேறு வேதிப்பொருட்கள் பல முறை ஒன்று சேர்ந்து ஏதோ ஒரு முறைஅதிர்ஷ்டத்தில் (by chance) உயிர் தோன்றுவதற்கான சேர்க்கை (combination) அமைந்து விட்டது என்று கூறுகிறார்கள்.
இப்படி நம் பூமியிலேயே உயிர் எப்படி உருவாகியது என்று நமக்கு தெரியாமல் இருக்கையில் வேற்றுகிரகத்தை பற்றி எல்லாம் நாம் அனுமானிப்பது சிரமம்தான்!!! இருந்தாலும் மனிதன் சும்மா இருந்து விடுவானா?? அவனுக்கு தெரிந்தவரை இதை பற்றி சிந்தித்து பார்க்காமல் இல்லை.
இங்கு போன்று வேறெதாவது கிரகத்தில் உயிர் தோன்றியிருக்க சாத்தியமா என்றால் அது பல உட்கேள்விகளை கிளப்பி விடுகிறது.நம் உலகில் உயிர் ஆனது கார்பன் ஹைட்ரோஜென் எனப்படும் இரு வேதிப்பொருட்களினால் உருவானது. இது போன்ற வேதிப்பொருட்கள் எக்கச்சக்கமாய் பேரண்டம் முழுதும் பரவிக்கிடக்கிறது என்று விஞ்ஞானிகள் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் இவை மட்டும் இருந்தால் போதுமா???

"நிரின்றி அமையாது உலகு" எனும் முதுமொழிக்கு ஏற்ப உயிர் வளர்வதற்கு தண்ணீர் மிக அவசியம் என்று அறிவியல் உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது. அதுவும் தண்ணீர் திரவ நிலையில் இருக்க வேண்டும். கிரகத்தில் தட்பவெட்பம் மிக அதிகமாக இருந்தால் தண்ணீர் எல்லம் கொதித்து ஆவியாகிடும்,ஒரே குளிர்ச்சியாக இருந்தால் தண்ணீர் உறைந்து போய் பனிக்கட்டி ஆகி விடும். அதனால் ஒரு கிரகத்தில் தண்ணீர் திரவநிலையில் இருக்க வேண்டும் என்றால் அது நட்சத்திரத்தை விட்டு தள்ளி இருக்கும் தூரம் மிக தொலைவாகவும் இருக்க கூடாது,மிக நெருக்கமாகவும் இருக்க கூடாது. அதனால் ஒவ்வொரு நட்சத்திரத்தின் அளவுக்கு ஏற்றார்போல் குத்துமதிப்பாய் ஒரு தூரத்தை நிர்ணயித்து அந்த ் தூரத்திற்குள் ஒரு கிரகம் இருந்தால் அதில் உயிர் இருப்பதற்கு சாத்தியம் உண்டு என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
நம் சூரிய குடும்பத்தையே எடுத்து கொண்டால் கூட நிறைய இடங்களில் உயிர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்று ஒரு கருத்து உண்டு. குறிப்பாக நமது பக்கத்து கிரகமான செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான (இருந்ததற்கான) சான்றுகள் இருக்கின்றன் அதனால் அங்கே நுண்ணுயிர் கிருமிகள் போன்ற சிறிய உயிர்கள் இருக்கலாம் என்று வெகு நாட்களாகவே பேச்சு உண்டு. செவ்வாய் கிரகத்தை தவிர்த்து நம் சூரிய குடும்பத்தில் உள்ள வேறு சில இடங்களிலும் உயிர்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அவை எந்தெந்த இடங்கள் என்று பார்க்கலாமா??

யூரோப்பா (Europa) : இது வியாழன்(Jupiter) கிரகத்தின் நான்காவது பெரிய துணைக்கோள். இதன் மேல்பகுதி முழுவதும் பனிக்கட்டியால் உறைந்து போய் இருக்கிறது. ஆனால் அதன் அடியில் திரவ நிலையில் தண்ணீர் உள்ளது என்றும், அதில்் தண்ணீர் சார்ந்த உயிர்கள் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

வியாழன் கிரகம் (Jupiter) : என்னப்பா கதை அளக்கிறாய்!! வியாழன் என்பது ஒரு வாயு கிரகம். அதாவது பூமியை போல் திண்ம நிலையில் இல்லாமல் முழுக்க முழுக்க வாயுவினால் உருவானது!! இதில் தண்ணீரே கிடையாது. இதில் எங்கிருந்து உயிர் வந்தது என்று கேட்கிறீர்களா??
இந்த கிரகத்தில் ஒரு விதமான மிதக்கும் வகை உயிர்கள் இருக்கலாம் என்று ஒரு கருத்து உண்டு!! நமக்கு தண்ணீரைப்போல இவைகளுக்கு அம்மோனியா வாயு உயிரின் அடிப்படையாக இருக்குமாம்!! சுவாரஸ்யமான அனுமானம்!! அல்லவா?? :-))


கனிமீட் (Ganymede) : இது வியாழன் கிரகத்தின் மிகப்பெரிய துணைக்கோள். சொல்லப்போனால் நம் சூரியக்குடும்பத்திலேயே இதுதான் மிகப்பெரிய துணைக்கோள். இந்த துணைக்கோளிலும் யூரோப்பாவில் இருப்பதை போல் நிலத்தடி நீரும்,அதில் உயிர்களும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

கலிஸ்டோ (Callisto) : கிட்டத்தட்ட மெர்குரி கிரகம் அளவுள்ள வியாழன் கிரகத்தின் மூன்றாவது பெரிய துணைக்கோள். இதிலும் யூரோப்பாவை போன்ற உயிரப்பற்றிய கணிப்புகள் தான்!! :-)

சனி கிரகம் (saturn): இந்த கிரகத்திலும் வியாழன் கிரகம் போன்ற மிதக்கும் உயிர்கள் இருக்கலாம் என்ற அனுமானம்தான்!!

என்சிலாடஸ் (Enceladus) : இது சனி கிரகத்தின் ஆறாவது பெரிய துணைக்கோள். இதிலும் உறைய வைக்கும் பனி தான் எங்கேயும் இருக்கிறது. ஆனால் இந்த துணைக்கோளின் தென் துருவத்தின் (இங்கு தான் இருக்கறதிலேயே சூடான தட்பவெட்பமாக ~-112C) கீழே நடைபெரும் சில மாறுதல்களினால் ஏற்படும் வெப்பமானது நிலப்பரப்பின் கீழ் உள்ள பனிக்கட்டியை உருக்கி அதில் உயிர் இருக்கலாம் என்று ஒரு கனிப்பு உண்டு!!!

டைடன் (Titan) : சனி கிரகத்தின் மிகப்பெரிய துணைக்கண்டம்.நம் பூமியைப்போல் பரந்து விரிந்து இல்லாவிட்டாலும இதில்் ஆங்காங்கே ஒரு விதமான ஹைட்ரோ கார்பன் திரவ குட்டைகள் இருப்பதாக அறியப்படுகிறது. பூமியில் இருப்பது போன்று ஒரு விதமான் வாயுமண்டலம் இந்த துணைகிரகத்தை சுற்றி இருப்பதால் இங்கேயும் உயிர் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

இப்படி சுவாரஸ்யமான விஷயங்கள் நம் சுரியக்குடும்பத்திலேயே இருக்கிறது. இதற்கு மேல் ஒன்றை சொல்ல வேண்டும் என்றால் நான் முன்னமே சொன்ன "சரியான நட்சத்திர தூரத்தில் "தோன்றக்கூடிய Gliese 581C ஒரு கிரகம் Gliese 581 எனும் நட்சத்திரத்தை சுற்றி வருவதை கண்டு பிடித்திருக்கிறார்கள். (கிரகத்தின் பேருக்கும் நட்சத்திரத்தின் பேருக்கும் ஒரு C தான் வித்தியாசம்) இந்த நட்சத்திரம் நம்மை தள்ளி 20.4 ஒளி வருடங்கள் தொலைவில் உள்ளது,இதை பற்றி அவ்வளவாக தகவல்கள் இல்லாவிட்டாலும் ,இது ஒரு திண்ம நிலையில் உள்ள கிரகம் என்றும்,இதில் திரவ நிலையில் தண்ணீர் இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது.திரவ நிலையில் தண்ணீர் ஒரு கிரகத்தில் இருந்தாலே அங்கு உயிர் இருக்கும் சாத்தியக்கூறுகள் அதிகமாக உண்டு என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

இப்படி அண்டத்தில் பரவி இருக்கும் உயிர்கள் நம்மை தொடர்பு கொள்கின்றனவா என்று பார்ப்பதற்கும், வேற்றுகிரக உயிர்களை தொடர்பு கொள்ளுவதற்கான ஆரய்ச்சிகளை செய்வதற்கென்றே SETI (Search for Extraterrestrial Intelligence) எனும் ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பை சேர்ந்த கார்ல் சேகன் (Carl Sagan) என்பவரால் எழுதப்பட்ட Contact எனும் நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. வேற்றுகிரக உயிர் பற்றிய ஆர்வலர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது.

மன்னிக்கனும் மக்கா, எழுத ஆரம்பிச்சு வுடனே எவ்வளவோ சொல்லனும்னு மனசுல எண்ணங்கள் அலைமோத எங்கெங்கேயோ போய் பதிவு கொஞ்சம் பெருசா போயிருச்சு. இப்போ கூட நிறைய சொல்லனும்னு தோணினாலும் , ரொம்ப மொக்க போட்டா திரும்ப வர மாட்டீங்களோன்ற பயத்துனால அவசரம் அவசரமா முடிக்கறேன்!! :-) இந்த வேற்றுகிரக மேட்டரை பத்தின நிறைய சுவாரஸ்யமான விஷயங்களும் கதைகளும் இருக்கு. அப்படிப்பட்ட ஒரு விஷயத்தோட உங்களை அடுத்த முறை சந்திக்கறேன்!!

வரட்டா!! :-)

References :

http://www.discoveringfossils.co.uk/Earth%20Development.jpg
http://en.wikipedia.org/wiki/Extraterrestrial_life
http://www.quantumconsciousness.org/penrose-hameroff/cambrian_files/camfig_1.gif
http://www.fas.org/irp/imint/docs/rst/Sect19/Sect19_2a.html
http://en.wikipedia.org/wiki/Image:Glieseupdated.jpg
http://upload.wikimedia.org/wikipedia/commons/9/94/Habitable_zone-en.svg
http://en.wikipedia.org/wiki/Image:EuropaInterior1.jpg
http://en.wikipedia.org/wiki/Europa_%28moon%29
http://en.wikipedia.org/wiki/Ganymede_%28moon%29
http://en.wikipedia.org/wiki/Callisto_%28moon%29
http://en.wikipedia.org/wiki/Enceladus_%28moon%29
http://www.pbs.org/wgbh/nova/titan/porco.html

வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 1 (பிரபஞ்சம் உருவானது எப்படி)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 2(Big bang theory)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 3(Light years)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4(Black holes)
வானத்தில் விரியும் அதிசயங்கள் - பாகம் 5(Extra terrestrial life)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 6(Alien communication)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 7(UFOs)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 8(Roswell - part 1)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 9(Roswell - part 2)

படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 1

என் இனிய தமிழ் மக்களே,
எல்லோரும் எப்படி இருக்கீங்க??
மனிதர்களாகிய நாம் காட்சிப்பிரியர்கள். உன் பதிவுக்கு பத்து பேரு வந்தாய்ங்க,ஆறு பேரு துப்பிட்டு போய்ட்டாய்ங்க,நாலு பேரு இந்த மொக்கைய கூட மெனக்கெட்டு படிச்சாய்ங்க,ரெண்டு பேரு கும்மி அடிச்சாய்ங்க, அப்படிங்கற சொத்த மேட்டர கூட சும்மா சொல்லாமா படம் போட்டு காட்டுனா ஆஆஆ-னு வாயை பொளந்து பாத்துகிட்டு இருப்போம். அதனால தான் கதை கவுஜை இது எல்லாத்தையும் விட படங்கள்னா மக்கள விரும்பி பாக்கறாங்க!!!்
எல்லோர் கிட்டேயும் இருக்கற கேமராதான் நம்ம கிட்டையும் இருக்கு,எல்லோரையும் போல தான் நாமளும் க்ளிக்கிட்டு இருக்கோம்,ஆனா சில பேரு மட்டும் எப்படிய்யா பாத்தா பாத்துக்கிட்டே இருக்கறா மாதிரி படம் எடுக்குறாய்ங்க அப்படின்னு நான் பல சமயம் யோசிச்சிருக்கேன். அட!! அவனுங்க எல்லாம் லட்ச கணக்குல பணத்தை கொட்டி கேமரா வாங்கி இருக்காங்கையா!! நாம எல்லாம் அது மாதிரியா அப்படின்னு சொல்றீங்களா???அதென்னமோ நானும் அது மாதிரி தாங்க நெனைச்சிட்டு இருந்தேன்,ஆனா கொஞ்சம் கொஞ்சமா எடுக்க எடுக்க இதுல நாம எல்லாம் கூட சுலபமா தெரிஞ்சுக்கறா மாதிரி சில நுணுக்கங்கள் இருக்குன்னு தெரிஞ்சுது!!! அதான் உங்க கிட்ட அப்பப்போ இதை பத்தி கொஞ்சம் கதை அடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். இதெல்லாம் நாம தெரிஞ்சுக்கிட்டு உபயோகப்படுத்தியே ஆகனும்னு அர்த்தம் இல்லீங்கன்னா. ஒரு காட்சி நல்லா இருக்கும்னு உங்க மனக்கண்ணுல தோனிச்சுன்னா டப்புனு அதை ஒரு படம் புடிச்சுறனும்!! அங்க போய்ட்டு நம்ம நுணுக்கம் எல்லாம் யோசிச்சிட்டு இருக்க முடியாது தான்.ஆனா இந்த மேட்டரு எல்லாம் காதுல போட்டு வெச்சா நம்மல அறியாமையே அதெல்லாம் நம்ம யோசனையில ஊறி படம் எடுக்கும்போது தானா தோனாதா??சும்மா கேட்டு தான் வெச்சுக்கலாமே்!! என்ன நான் சொல்லுறது???

மூன்றுக்குள்ளே காட்சி இருக்கு ராமைய்யா

நம்ம தலைவரு என்னடான்னா எட்டுக்குள்ளே வாழ்க்கையே இருக்குன்னு சொல்லிட்டு போயிருக்காரு. ஆனா இந்த புகைப்படக்கலையில் இருக்கற தலைங்க எல்லாம் என்ன சொல்றாங்கன்னா ,ஒரு காட்சியை மூனா பிரிச்சு குறுக்கையும் நெடுக்கையும் கோடு போட்டோம்னு வெச்சுக்கோங்க ,அந்த கோடுகள் ஒடுற பகுதிகளும் ,அவை ஒன்றுக்கொன்ரு குறுக்கிட்டுக்கொள்ளும் பகுதிகளும் தான் மனிதனின் பார்வை இயற்கையாக விழும் பகுதிகள் அப்படின்னு சொல்றாய்ங்க. அதாவது எந்த படத்தை நீங்க எடுத்துக்கிட்டாலும் உங்க பார்வை இயற்கையாக நாம கோடு போட்ட பகுதிகளை தான் முக்கியமா கவனிக்குமாம். எந்த ஒரு படம் பாத்தாலும் அதுல ஏதாவது ஃபிகரு தேறுமா அப்படின்னுதான் என் கண்ணு போகுதுன்னு என்று எல்லாம் யோசித்துக்கொண்டு இங்க போட்டு குழப்பிக்காதீங்க!!
அது உங்கள சொல்லி குத்தம் இல்லை!!! உங்க வயசு அப்படி!!! அதுக்கும் புகைப்பட கலைக்கும் ஒன்னும் சம்பந்தம் கிடையாது.
அதாவது நீங்க எந்த ஒரு படம் எடுத்தாலும் படத்தோட முக்கியமான பொருள் இந்த கோடுகளிலோ அல்லது கோடுகள் தொட்டுக்கொள்ளும் புள்ளிகளிலோ இருக்கிறார்போல் பார்த்துக்கொண்டால் பார்வையாளர்களுக்கு படம் அழகாக தெரியும் என்று சொல்கிறார்கள்.இதற்கு ஆங்கிலத்தில் "Rule of the thirds" என்று பெயர். தமிழிலே இதற்கு உங்களுக்கு சௌகரியமான பெயரை நீங்களே சூட்டிக்கொள்ளுங்கள்!!முப்பகுதி கோட்பாடு என்று வேணும்னா கூப்டுக்கலாமா??

சரி சரி!!! சாதாரணமாவே நான் எழுதினா ஒன்னும் புரியாது அதுலையும் பெரிய கோட்பாடு எல்லாம் சொன்னால் புரியுமா?? இருங்க ஒரு உதாரணத்தோடு இந்த நுணுக்கத்தை தெளிவா பாக்கலாம்.
இப்போ நீங்க வலது பக்கத்துல இருக்கற படத்தையே எடுத்துக்கோங்களேன்,எவ்ளோ சீரா அழகா இருக்கு. படத்தோட முக்கியமான பகுதின்னு பாத்தீங்கன்னா அது வானமும் தண்ணீரும் சேருகிற தொடுவானப்பகுதி. அது எப்படி சரியா மேலிருந்து போடப்பட்ட இரண்டாவது கோடுடன் இணைந்து இருக்கு பாருங்க. அதுவும் இல்லாம படத்தின் ஒரு முக்கிய பொருளான மரமும் கூட இரண்டாவது கோடுகள் சேரும் புள்ளியில் இருப்பதால் படத்துக்கு அது பாந்தமாக இருக்கு. படத்தின் இன்னொரு முக்கியமான விஷயமாக இருக்கும் வானில் தோன்றும் ஒளித்திட்டு பகுதி சரியா புள்ளிக்கு மேல இல்லாட்டாலும் கொஞ்சம் பக்கத்துல இருக்கறதுனால பரவாயில்லை.

(இந்த படத்தை இந்த சுட்டியில் சென்று பார்த்தால் அசைவூட்டத்துடன் தெளிவாக இருக்கும்.)

அப்போ இனிமே படம் எடுக்க போனா ஸ்கேல்,டேப்பு எல்லாம் எடுத்துட்டு போய் புள்ளி வெச்சு கோடு போட்டு தான் படம் எடுக்கனுமா??? அப்படின்னு கேக்கறிங்களா???
நான் முன்னமே சொன்னா மாதிரி இதுப்படி எடுக்கும் படங்கள் தான் அழகாக இருக்கும் என்று ஒன்னும் சட்டம் அல்ல. எடுத்த படங்கள் எதனால் நன்றாக வரவில்லை என்று குழப்பம் இருந்தாலோ மற்றும் நம் படம் எடுக்கும் திறனை பட்டை தீட்டிக்கொள்ள வேண்டும் என்றாலோ இந்த நுணுக்கங்களை எல்லாம் கருத்தில் கொள்ளலாம். ஏதாவது ஒரு காட்சி அழகாக உங்களுக்கு தோன்றினால் உடனே எதை பற்றியும் யோசிக்காமல் படம் எடுத்து விடுங்கள்!! இந்த நுணுக்கங்கள் எல்லாம் வெறும் வாழிகாட்டுதலுக்காக மட்டும்தானே தவிர செயல்படுத்தியே ஆக வேண்டும் என்று கட்டாயம் இல்லை.

அதுவுமில்லாமால் நீங்கள் இந்த கோட்பாட்டை போட்டோ எடுக்கும்போது தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று இல்லை. ஏற்கெனெவே எடுத்த படத்தில் கூட இந்த கோட்பாட்டிற்கு ஏற்றார்போல் கொஞ்சம் வெட்டி (crop) செய்து கூட போட்டோக்களை மெருகேற்றலாம். அதற்கான உதாரணத்தை கீழே பார்க்கலாம்!! :-)
வேறு ஒரு புகைப்படக்கலை சார்ந்த தலைப்போடு அடுத்த பகுதியில் உங்களை சந்திக்கிறேன். அது வரை இந்த முப்பகுதி மகத்துவத்தை புரிஞ்சிக்கறா மாதிரி சில படங்களை விட்டு செல்கிறேன்.
பார்த்து விட்டு போங்க!!

வரட்டா??? :-)

References:
http://en.wikipedia.org/wiki/Rule_of_thirds

படங்கள்:
http://digital-photography-school.com/blog/rule-of-thirds/
http://www.silverlight.co.uk/tutorials/compose_expose/thirds.html
http://www.allensphotoblog.com/blog1/images/WolfRuleThirds.jpg
http://www.asme.org/Jobs/Entrepreneurs/Blogging_Way_Business_Success.cfm
http://www.digicamhelp.com/learn/shoot-pro/rule.php

படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 1(Rule of thirds)
படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 2(Leading lines)
படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 3(Double action pics)

வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4

எனது இனிய தமிழ் மக்களே,
போன பதிவுக்கு அப்புறமா கொஞ்ச நாளா பதிவு எதுவும் போடாததுக்கு மன்னிக்கனும். கொஞ்சம் நெடுந்தூர பிரயாணம் செய்ய வேண்டி இருந்ததால ஜெட்லாக் எனப்படும் நேரக்குழப்பத்தில் என் உடம்பு மாட்டிக்கொண்டு விட்டது. இந்திய நேரம்,அமெரிக்க நேரம்னு மாத்தி மாத்தி விட்டதுனால திடீர்னு ஐரோப்பா நேரத்துல தூக்கம் வருது,ஆஸ்திரேலியா நேரத்துல பசி வருது , எதை எப்ப பண்ணனும்னே தெரியல. ஆணியை மட்டும் எந்த நேரத்துல பிடுங்கறன்னு கேக்கறீங்களா?? அதை தான் நான் எந்த நேரத்துலையும் செஞ்சது கிடையாதே!! அதனால பிரச்சினை இல்லை!! ஹி ஹி!
சரி , விஷயத்துக்கு வருவோம்.

போன பகுதியில் ஒளியோட வேகத்தை பத்தி வானளாவ புகழ்ந்திருந்தேன். இந்த பேரண்டத்திலேயே ஒளியை விட வேகமாக செல்லக்கூடிய பொருள் எதுவும் கிடையாதுன்னு சொல்லியிருந்தேன்ல?? ஆனா அந்த ஒளியின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டக்கூடிய விஷயம் இந்த பேரண்டத்தில் உண்டு. ஆங்கிலத்தில் "There is always a bigger fish" என்று சொல்வது போல் ஒருத்தன் என்னதான் கில்லாடியா இருந்தாலும் அவனவனுக்கு ஆப்பு ரெடியா வெச்சிருக்காரு கடவுள். இப்படி ஒளியையே தூக்கி சாப்பிடறதுக்கு தயாரா இருக்கற பொருள் தான் கருந்துளைகள் (Black holes)

என்னப்பா!! பேரே கேக்கறதுக்கு பயங்கரமா இருக்கே,என்ன இதுன்னு கேக்கறீங்களா.
இப்போ,உலகத்துல இருக்கற எல்லா பொருளுக்கும் ஈர்ப்பு விசை (Gravity) இருக்கு. இல்லையா???
அப்படி இருக்கறதனால தான் மத்த பொருட்களை தன் கிட்ட இழுத்துக்கறதோட தானும் பிரிந்து போகாமல் பிணைந்து ஒரே பொருளா இருந்துட்டு இருக்கு. ஒரு பொருளோட நிறை (mass)-ஐ பொருத்து அந்த பொருளின் அளவும் ஈர்ப்பு விசையும் மாறும். அப்படி இருக்கும் பொழுது பேரண்டத்தில் தன் அதிகமான ஈர்ப்பு விசையால் சுருங்கி போய் நிறை கூடி (நரை கூடி அல்ல!! :-)) மேலும் மேலும் சுருங்கிக்கொண்டே போய் தனக்குள்ளாகவே புள்ளியாகிவிடும் பொருட்களே கருந்துளைகள் எனப்படுபவை. இந்த கருந்துளைகளின் ஈர்ப்பு விசை எவ்வளவு சக்தியானது என்றால்,இதன் ஈர்ப்பு விசையை விட்டு ஒளியால் கூட தப்பிக்க முடியாது!!

தனக்கு பக்கத்தில் வரும் பொருட்கள் எல்லாவற்றையும் கபளிகரம் செய்துவிட்டு நல்ல பிள்ளை போல் இது போன்ற கருந்துளைகள் பேரண்டத்தில் உலவிக்கொண்டிருக்கின்றன.
என்னப்பா கதை அளக்கிறாய். அண்டத்தில் உள்ள பொருட்கள் எல்லாமே நாம் ஒளியை கொண்டுதான் பார்க்கிறோம்,அதனால் ஒளியே இல்லாவிட்டால் ஒரு பொருள் இருக்கிறதா இல்லையா என்பதையே நாம் அறிய முடியாது என்று போன பாகத்தில் தானே குறிப்பிட்டாய் என்கிறீர்களா??
உண்மைதான்!!! கருந்துளைகளை விட்டு ஒளி கூட தப்பிக்க முடியாது என்பதால் அதனை நம்மால் நேரடியாக பார்க்கமுடியாது.ஆனால் அதன் ஈர்ப்பு விசையில் சிக்கி அதனுள் விழப்போகும் பொருட்களின் ஒளியை கொண்டே நாம் கருதுளைகளை பற்றி அறிகிறோம். அதுவும் தவிர இந்த பொருட்கள் சுற்றும் வேகத்தினால் ஏற்படும் X கதிர்களை வைத்தும் கருந்துளைகளின் இருப்பை பற்றி கண்டு பிடிக்கலாம்.

அதுவுமில்லாமல் இந்த பெரும் ஈர்ப்பு விசையினால் உந்தப்பட்டு இதை வேகமாக சுற்றி விழப்போகும் பொருட்களினால் ஏற்படும் சக்தி பெருத்த ஒளியோடு கருந்துளைகளின் மேலேயும் கீழேயும் பல ஒளிவருடங்களுக்கு நீண்டு இருக்கும்.
இவ்வளவு வேகமாக ஈர்க்கப்படும்பொருட்கள் கருந்துளைக்குள் உள்ளே சென்ற வுடன் என்ன ஆகும்???
இதை பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரியாது,ஏனென்றால் ஒளியே தப்பிக்க முடியாத கருந்துளையில் இருந்து மீண்டு யாரும் வந்ததில்லை என்பதால் நம்மால் யூகிக்க மட்டுமே முடியும்.
விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள் என்றால்,கருந்துளையின் ஈர்ப்பு விசையினால் மேலும் மேலும் ஈர்க்கப்பட்டு பொருட்கள் மேலும் மேலும் சுருங்கிப்போகும். இப்படியே முழுவதுமாக நசுக்கப்பட்டு பின் கருந்துளையின் மையப்பகுதியான ஒருமைப்புள்ளி (Singularity) எனும் இடத்தில் ஐக்கியமாகி விடும் என்கிறார்கள்.

ஆகா!! கொஞ்சம் வெவகாரமான விஷயமகத்தான் இருக்கும் போல இருக்கே இந்த கருந்துளை. அப்போ அண்டத்தில் உள்ள பொருட்களை எல்லாம் இந்த கருந்துளை தாவிப்பிடித்து சுவாஹா செய்து விடுமா??
கருந்துளை தானாக சென்று எந்த பொருளையும் விழுங்கி விடாது. ஒரு குறிபிட்ட புள்ளி வரை தான் அதன் ஈர்ப்பு விசை தப்பிக்க முடியாத படி இருக்கும். தொடுவான எல்லை (Event Horizon) எனப்படும் இந்த வரையறைப்புள்ளிக்கு அப்பால் உள்ள பொருட்கள் எல்லாம் நம் சூரியனை கிரகங்கள் சுற்றி வருவது போன்று அமைதியாக சுற்றி வந்து கொண்டிருக்கும் தொடுவான எல்லையை தொட்டுவிட்டால் எமனிடம் போன உயிரை போல அதோ கதிதான்!! அதுக்கு அப்பறம் திரும்பி வரவே முடியாது.
கொசுறு செய்தி ஒன்று. நம் பூமியை சுற்றியோ அல்லது சூரிய குடும்பத்தை சுற்றியோ நமக்கு தெரிந்தவரை கருந்துளைகள் எதுவும் கிடையாது. அதனால் நீங்கள் எல்லோரும் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடலாம்.

அடடா!! இவ்வளவு அதிசயமான விஷயம் எப்படி உருவாகிறது??
நம் அண்டத்தில் பல நூறு கோடி நட்சத்திரங்கள் உள்ளன. அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்,ஒவ்வொரு அளவு. பொதுவாக நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி அழிகின்றன தெரியுமா?? நட்சத்திரங்களில் ஹட்ரோஜென் வாயு ஹீலியம் வாயுவாக மாறிக்கொண்டே இருக்கும் என்று சொன்னேன் அல்லவா. அப்படி மாறிக்கொண்டே இருக்கையில் ஒரு சமயம் ஒரு நட்சத்திரத்தில் உள்ள ஹைட்ரோஜென் வாயு தீர்ந்து போகும் அப்படியான நிலையில் நட்சத்திரங்கள் விரிந்து சிகப்பு பூதம் (Red giant) எனும் நிலையை அடைகின்றன. நம்ம சூரியனை பார்த்தீங்கன்னா , ஒரு நான்கு ஐந்து பில்லியன் வருடங்களுக்கு அப்புறம் இந்த மாதிரி சிகப்பு பூதமாக மாறுமாம். அந்த சமயத்தில் அது பூமியையே விழுங்கக்கூடிய அளவுக்கு உப்பி விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
அதற்கு பின் ஒவ்வொரு நட்சத்திரமும் அதன் அளவுக்கு ஏற்றார்போல் அழிந்து போகும்.்திரமும் சூரியன் போன்ற அளவுள்ள நட்சத்திரங்கள் இதற்கு பின மிகவும்் சுருங்கிப்போய் வெள்ளைக்குள்ளன் (White dwarf) எனும் நிலைக்கு தள்ளப்படும். நம்ம சூரியன் இந்த நிலையில் பூமியை விட சின்னதாக சுருங்கி விடும் என்று சொல்கிறார்கள். நல்லா ஜெகஜ்ஜோதியா கம்பீரமா இருக்கற சூரியனுக்கு என்ன ஒரு பரிதாபகரமான நிலைமை!! ;-(
எப்படி இருந்த சூரியன் இப்படி ஆயிருச்சு பாத்தீங்களா??

சரி சூரியனை விட பெரிய நட்சத்திரங்களுக்கு என்ன ஆகும் தெரியுமா?? அவை அமைதியாக போகறதுக்கு பதிலா பெருசா சத்தம் போட்டுட்டு தான் போகும். இவைகள் இப்படி பெரிதாக வெடித்து சிதறுவதற்கு ஆங்கிலத்தில் Super Nova explosion என்று கூறுவார்கள். இந்த வெடிப்பினால் வெளியிடப்படும் சக்தி எவ்வளவு பெரியது என்றால்,இந்த வெடிப்பின் போது வெளியிடப்படும் ஓளியானது அந்த அண்டத்தில்(Galaxy) உள்ள மற்ற நட்சத்திரங்களின் ஒளி அனைத்தையும் விட அதிகமாக இருக்குமாம்.தலை சுற்றுகிறது!!
இப்படி வெடித்து சிதறும் நட்சத்திரமானது நம் சூரியனை விட பத்து மடங்குக்கு மேல் பெரியதாக இருந்தால் ஆவை வெடித்து சிதறிய பின் சுருங்கி ந்யூட்ரான் நட்சத்திரங்கள் (Neutron stars)ஆகி விடும். ஆனால் நம் சூரியனை விட நூறு மடங்குக்கு மேற்பட்ட அளவுள்ள நட்சத்திரமாக இருந்தால் சுருங்கிப்போய் அதன் அதிகபட்ச நிறையினால் ஈர்ப்புவிசை எக்கச்சக்கமாகி விட கருந்துளைகளாக மாறி விடுகின்றனவாம். இதுதான் கருத்துளைகளின் கதை.

என்னங்க!! இப்பவே கண்ணை கட்டுதா?? என்னை விட்டா் இதை பற்றி பேசிக்கொண்டே இருப்பேன் ஆனால் உங்களை பார்த்தாலும் பாவமாகத்தான் இருக்கிறது அதனால இப்போதைக்கு பதிவ நிறுத்திக்கறேன். போறதுக்கு முன்னாடி கருந்துளைகள பத்தின ஒரு குறும்படம் கீழே இருக்கு பாத்துட்டு போங்க!! நம்ம ஊருல நடக்கற சண்டைகள பாத்து மனசு கஷ்டப்படும் போது இது மாதிரியான விஷயங்கள பாத்தா அதை பார்த்துட்டு சிரிக்கற பக்குவத்தை வளர்த்துக்களாம்!! :-)
சரி உங்களை இன்னொரு சுவாரஸ்யமான விஷயத்தோட அடுத்த பதிவுல சந்திக்கரேன்!!
வரட்டா???

வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 1 (பிரபஞ்சம் உருவானது எப்படி)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 2(Big bang theory)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 3(Light years)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4(Black holes)
வானத்தில் விரியும் அதிசயங்கள் - பாகம் 5(Extra terrestrial life)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 6(Alien communication)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 7(UFOs)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 8(Roswell - part 1)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 9(Roswell - part 2)

Related Posts Widget for Blogs by LinkWithin