புரிதல் இன்றி, உலகை கண்டு
பரிவு இல்லா, தனலில் வெந்து
எதற்கு பிறந்தோம்,எதனால் உழன்றோம்,
எதற்கு சிரித்து, எங்கு வீழ்ந்தோம்
எதையும் அறியும் ஆற்றல் இன்றி
உலக வாழ்வில் தினமும் ஓட்டம்
பிறவித்தேடல் தனியே தேடி
விடையே இன்றி குழப்பம் மூடி
விழுந்து புரண்டு நிமிர்ந்து பார்த்தால்
உலகம் உருண்டு தொலைவிலிருக்கும்
தனிமை இனிமை,பழகிப்பார்த்து
வெறுமை கொடுமை,சகித்துப்பார்த்து
விழிகள் மூடி,ஒளிந்து ஓடி
விலக நினைத்து,துவண்டு வாடி
கேள்வி கேட்டு,பரிதவித்து
முடிக்க நினைத்து,முயன்றும் கூட
முடிவு ஒன்று,பிறக்கும் வரையில்
முடிய மறுக்கும் நெடிய பயணம்
வாழ்க்கை
இது போதும் எனக்கு
இது போதும் எனக்கு
------------------
மாலை நேரம்,
கடற்கரை ஓரம்,
மடி தனில் அவள்,
ஒளிந்து கொள்ளும் நிலவு
இது போதும் எனக்கு
இருட்டிருந்தும் கண்களில் ஒளி,
மறைத்திருந்தும் மறக்காத மேனி,
அணைத்திருந்தும் அகலாத பிரிவு,
அனைத்திருந்தும் தீராத மோகம்.
இது போதும் எனக்கு
தனியாக ஒரு தீவு,
தண்ணீரில் விளையாடும் கால்கள்,
கரம் பிடிக்கும் மென்மை,
கண் எதிரே குளுமை
இது போதும் எனக்கு
வான் முழுதும் மேகம்,
வெளி முழுதும் மழை,
கையருகில் அவள் துணை,
ஜன்னல் வழி சிறு தூறல்
இது போதும் எனக்கு
வெளிநாட்டில் பிள்ளைகள்,
லேசாக மூட்டு வலி,
எனக்குத் துணை அவள்,
அவளுக்குத் துணை நான்
இது போதும் எனக்கு
கலங்காதே தமிழா, தமிழுக்கு அழிவில்லை!!
முந்தைய இந்த பதிவை போல இதுவும் ஒரு மீள்பதிவு.முன்பு எப்பொழுதோ எழுதியதுஉங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.
பிடித்திருக்கிறதா இல்லையா என்று பின்னுட்டத்தில் தெரிவிக்கலாமே!! :-)
கலங்காதே தமிழா, தமிழுக்கு அழிவில்லை!!
--------------------------------------------
கலங்காதே தமிழா, தமிழுக்கு அழிவில்லை!!
நீர் பொங்கி கரை கடந்து நாடுகளை அழித்தாலும்
கட்டுமரங்களும் கப்பல்களும் இமயத்திலே சேர்ந்தாலும்
தமிழுக்கு அழிவில்லை , அதன் உணர்வுக்கு முடிவில்லை
காடு மலை யாவும்,காணாமல் போனாலும்
கண்களுக்கு எட்டாத தூரத்தில் விழுந்தாலும்
இங்கிலாந்தும் ஈக்வடாரும் இடித்து கொண்டு உடைந்தாலும்
தமிழ் இருக்கும் வளமாக, அதன் புகழ் இருக்கும் நலமாக
ஈரைந்து ஆயிரங்கள் வாழ்ந்துள்ளோம் இப்புவியில்
போர்களையும் கடலலையும் கண்டுள்ளோம் நம் விழியில்
சோதனைகள் பலவற்றை கடந்துள்ளோம் நம் காலால்
பகைவர்கள் எவர் இருந்தும் அழித்திடுவொம் நம் வாளால்
கவலை விடு, வற்றாத இளைஞர் படை நமக்குண்டு
குறை இன்றி தமிழ் மகளை வளர்த்திடுவோம் அதை கொண்டு
திக்கெட்டும் தமிழர் மொழி கதிரவன் போல் பரவட்டும்
ஒற்றுமையால் உயர்ந்திடுவோம் பிரிவினைகள் நொறுங்கட்டும்
சுற்றி உள்ள சூழ்நிலைகள் சங்கடங்கள் ஏற்படுத்தும்
எதிர் வரும் நாட்கள் பற்றி பீதி கொள்ள செய்து விடும்
சங்கடங்களை எதிர் கொள்வொம்,வெற்றி வரும் காத்திருப்போம்
எது வந்தாலும் குறை இல்லை,தமிழுக்கு என்றும் அழிவில்லை!!!
வெறுப்பு தவிர்ப்போம், நட்பு வளர்ப்போம்
எதற்கு இந்த வெறுப்பு அச்சம்
எதற்கு இந்த பகைமை கோபம்
இருக்கும் மனிதர் எவரும் சொந்தம்
எதற்கு இங்கே புன்னகை பஞ்சம்
உனக்கு ஒன்று எனக்கு ஒன்று
வேறு வேறான கருத்து உண்டு
பிரிந்து சிந்திக்கும் மனது ஒன்றல்ல
மொழிகள் ஒன்றானாலும் கருத்து இரண்டு
இருந்து போகட்டும்,எண்ணம் பேச்சுக்கள்
பிரிந்து போகட்டும் ஒன்றும் புதிதல்ல
எண்ணம் இரண்டானால் இதயம் சேராதா?
மனிதம் தழைத்தோங்கி நட்பு பூக்காதா??
எல்லாம் ஒன்றாக இருந்தால்தான் நட்புண்டு
ஒன்று குறைந்தாலும் மலராது பூச்செண்டு
என்று இருந்துவிட்டால் அமைதி என்று வரும்?
அழகான இவ்வுலகில் பூப்பொழுது என்று புலரும்??
எண்ணங்கள் எழும்பட்டும் வெறுப்புகள் உமிழாமல்
வண்ணங்கள் விளங்கட்டும் வேற்றுமை விரியாமல்
கண்களிலே சினம் வேண்டாம் ,கருணையில் அது திளைக்கட்டும்
கடும் சொற்கள் கலைந்து விடு,உதட்டில் இனிமை பெருகட்டும்
இரத்தம் சூடேற்றும் இடுகைகள் பார்த்து விட்டால்,
கலங்காது கண் மூடி கண நேரம் பொறுமை கொள்வொம்
சிறிது நேரம் பொறுத்து விட்டு,சீராக சிந்தித்தால்
என் நாடு,எம் மக்கள்,என உணர்ந்து அமைதி கொள்வொம்
தன் நிலையை இழக்காமல், தெளிவுடனே பதில் தரலாம்
மற்றவரின் நிலை புரிந்து,சினங்காத்து நலம் பெறலாம்
பல பேரின் குரல் கேட்போம்,நம் வாதம் முன் வைப்போம்
நம் நோக்கங்கள் ஒன்றேதான், கை கோர்த்து தமிழ் வளர்ப்போம்
இந்த நிலை இங்கு வர
அருள் புரிவாய் எனது இறைவா
உன் இனிய உலகம் வளமை பெற
உதவிடுவாய் என் இறைவா
உலகம் விரிஞ்சிருக்கு,நம் மனங்களிலே உரம் இருக்கு
ஒருத்தர் தனது சமூக நல ஸ்தாபனத்துக்கு பாட்டு ஒன்னு வேணும்னு Orkut-ல ஒரு சமூகத்துல(community) பொதுவா எல்லோரையும் கேட்டிருந்தாரு. சரி நாமலும் எழுதி பார்ப்போமேன்னு எழுதுனது!!
அவரு இதை எடுத்துப்பாரான்னு இல்லையானு தெரியல. இருந்தாலும் எழுதினதுக்காக அனுப்பி வெச்சேன்.
எப்படி இருக்கு ,இன்னும் எப்படி செம்மை படுத்தலாம்னு படிச்சிட்டு சொல்லுங்க!! :-)
------------------------------------------------------------------------------------
உலகம் விரிஞ்சிருக்கு அண்ணே அண்ணே
நம் மனங்களிலே உரம் இருக்கு அண்ணே அண்ணே
என்னதான் கஷ்டங்கள் இருக்கட்டும் நமக்குள்ளே
இருந்தாலும் பயம் வேண்டாம், விட்டுத்தள்ளு பரவாயில்ல
கடலலை போல் கஷ்டங்கள் திரண்டுருண்டு வந்தாலும்
தலைமேல எழுந்தோடி இடிபோல விழுந்தாலும்
மலை போல நிப்போமே, அசங்காது சிரிப்போமே
ஒரு கை பார்த்திடுவோம்,எதுவாக இருந்தாலும்
என்னத்தான் வாழ்க்கையிது,எது உண்மை,எது நன்மை
ஒன்னுமே புரியலதான்,என்ன பண்ண நீ சொல்லு
அதுக்காக ஓயாத, சுவரோரம் சாயாத
இருக்கரவரை வாழ்ந்திருபோம்,சிரிப்போடு சேர்ந்திருப்போம்
முடிஞ்ச வர முயற்சி செய்வோம்,வாழும்வரை உதவி செய்வோம்
மனசிருக்கு வானளவு, அன்பிருக்கு அரவனைப்போம்
விழுந்தாக்கா ஏத்தி விட நட்பிருக்கு கவலையில்ல
தோள் மேல சாய்ஞ்சிக்கலாம், களைப்பான நாட்களிலே
பாலைவன தேசம் போல் உன் வாழ்க்கை காய்ஞ்சிருக்கும்
கஷ்டங்கள் பல பார்த்து ஓடாக தேய்ஞ்சிருக்கும்
மழை போல நாங்க உன் நெஞ்சத்த குளிர வைப்போம்
கலங்காதே என் தோழா, உன் தாகம் தீர்த்திடுவோம்
உலகம் விரிஞ்சிருக்கு அண்ணே அண்ணே
நம் மனங்களிலே உரம் இருக்கு அண்ணே அண்ணே