சோகமான கோவளம் கடற்கரை

நேற்று முன் தினம் தந்தையுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள் கோவளம் கடற்கரைக்கு சென்றிருந்தேன். வீட்டை விட்டு கிளம்பும்வரை கொளுத்திக்கொண்டிருந்த வெயில் கடற்கரையை நெருங்க நெருங்க மேக மூட்டமாகி விட்டது :-(
எடுத்த படங்கள் அத்தனையும் ஒளி குறைந்து சோகம் நிறைந்தது போல் இருந்ததாக ஒரு உணர்வு. இருந்தாலும் சுக துக்கம் இரண்டையும் பகிர்ந்து கொள்ள தானே நண்பர்கள் அதான் இதையும் உங்களிடம் காட்டி விடலாம் என்று எண்ணம். அதுவும் இல்லாமல் ஒளி குறைந்த படங்கள் என்றால் உடனே கலை ரசனை நிறைந்தது (artistic) என்று சொல்லிக்கொள்ளலாம், அல்லவா ஹிஹி!!வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 3

போன பாகத்தை முடிக்கும் போது

"இவ்வளவு பெரிய அண்ட வெளியில் தம்மாத்தூண்டு பூமியில் மட்டும் எப்படி உயிர் உருவானது?? மற்ற இடங்களில் ஏன் உருவாக வில்லை??? உருவாக சாத்தியக்கூறுகள் உள்ளனவா??? இருந்தும் நாம் அறியாமல் இருக்கிறோமா?? இல்லை தெரிந்தும் மறைக்கப்பட்டுள்ளதா??? "
இப்படி சராமாரியா கேள்விகளை அள்ளித்தெளிச்சிருந்தேன்.பதிவை அச்சேற்றும் போதுதான் "கேள்வி கேக்கறது ரொம்ப சுலபம் தான்,ஆனா பதில் சொல்றதுதான் ரொம்ப கஷ்டம்" அப்படின்னு பஞ்ச தந்திரம் கமலஹாசன் காதுல வந்து சொல்லிட்டு போனா மாதிரி ஒரு உணர்வு. அடாடா!! நாம பாட்டுக்கு தீபாவளி தள்ளுபடி மாதிரி கேள்விகளை அள்ளி வீசிக்கிட்டு இருக்கோமே ,இதுக்கு எல்லாம் பதிலும் சொல்லியாகனுமே அப்படின்னு நினைக்கும் போது தான் நம்ம கே.ஆர்.எஸ் ஒளி வருடம் பற்றி அடுத்த பதிவுல போடுன்னு குறிப்பிட்டு இருந்தாரு. சரி அதுல இருந்தே ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

எனக்கு சின்ன வயசுல இருந்த சந்தேகம் உங்க எல்லோருக்குமே இருந்திருக்கும்னு நினைக்கிறேன். வருடம் எனபது நேரத்தை அளக்க உதவும் ஒரு அளவுகோல்,அதை வைத்துக்கொண்டு தூரத்தை ஏன் கணக்கிடுகிறார்கள்?? அதுவும் விண்வெளி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் இந்த அளவுகோல் ஏன் உபயோகப்படுத்தப்படுகிறது என்பதுதான். எனக்கும் இந்த சந்தேகம் நெடு நாட்களாக இருந்து வந்தது. சிறிய வயதில் ஒரு முறை பிர்லா கோலரங்கம் சென்ற போதுதான் இந்த சந்தேகம் விடு பட்டது.


பொதுவாகவே இந்த அண்டத்திலேயே ஒளி தான் மிக வேகமாக செல்லக்கூடிய பொருள் என்று விஞ்ஞான உலகில் ஒத்துக்கொள்ளப்பட்ட விஷயம். ஒளியின் வேகம் என்பது மணிக்கு 1079252848.8 கிலோமீட்டர்கள். அதாவது ஒரு மணித்துளியில் ஒளி 299792.458 கிலோமீட்டர்கள் பயனப்பட்டு விடும்,குத்துமதிப்பாக 3 லட்சம் கிலோமீட்டர்கள். தலை சுற்றுகிறதா?? கொஞ்சம் பொறுங்கள்,நான் இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறேன்.ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞான மேதைகளின் கணிப்புப்படி இந்த அண்டத்திலேயே ஒளியை விட வேகமாக போகக்கூடிய பொருள் வேறு எதுவும் இல்லை. "யாமறிந்த வரையிலே ஒளியை போல வேகமானது வேறொன்ரும் காணோம்" என்கிறார்!! :-)
அப்படிப்பட்ட ஒளி ஒரு வருடம் நிற்காமல் பயனப்பட்டால் எவ்வளவு தூரம் செல்லும்?? அதிகம் இல்லை ஜென்டில்மேன்,வெறும் 5,879,000,000,000 மைல்கள் தான்,அதாவது 9,460,730,472,580.8 கிலோமீட்டர்கள். சில பேருக்கு ரத்தத்தை கண்டால் மயக்கம் வருவது போல்,எனக்கு கணக்கு,எண்கள் போன்ற விஷயங்களை கண்டாலே மயக்கம் வரும். இவ்வளவு பெரிய எண்களை எல்லாம் எழுதும்போதே கண்ணைகட்டுகிறது.

இப்படி ஒளி ஒரு வருடத்தில் பயனப்படும் தூரத்தை தான் ஒரு ஒளி வருடம் என்ற அளவுகோலின் மூலம் அறியப்படுகிறது. அப்பப்பா!!! எதற்கு இவ்வளவு பெரீஈஈஈஈஈஈஈஈய அளவுகோல் என்கிறீர்களா??? நம் அண்டத்தில் உள்ள பொருட்கள் எல்லாம் லேசுப்பட்ட தூரத்திலேயா இருக்கிறது??? உதாரணமாக நம் சூரியனுக்கு "மிக பக்கத்தில்" உள்ள நட்சத்திரமான பிராக்சிமா செஞ்சுரி (Proxima Centauri) 4.3 ஒளிவருடங்கள் தள்ளி இருக்கிறது. அதாவது 4.3 X 9,460,730,472,580.8 = 40681141032097.44 கிலோமீட்டர்கள்!!!!!!! இந்த தூரத்தை எல்லாம் என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.இதுதான் நம் சூரியனுக்கு மிக பக்கத்தில் உள்ள நட்சத்திரம் என்பதை திரும்பவும் நினைவு கூர விரும்புகிறேன்.

நம் இப்போதைய விண்களங்கள் போகும் வேகத்தில்(?!) போனால் ஒரு ஒளி வருடத்தை அடைவதற்கு 40,000 வருடங்கள் பிடிக்குமாம். அதாவது நமது "நெருங்கிய" நட்சத்திரமான பிராக்சிமா செஞ்சுரிக்கு போக வேண்டும் என்றால் தற்போதைய நிலையில் 172000 வருடங்கள் பிடிக்கும்.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால்,பிராக்சிமா செஞ்சுரிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் 4.3 ஒளி வருடங்கள் என்று சொன்னேன் அல்லவா. அதாவது பிராக்சிமா செஞ்சுரியில் இருந்து புறப்படும் ஒளி நம்மை வந்து சேர 4.3 வருடங்கள் பிடிக்கும். அதாவது பிராக்ஸிமா செஞ்சுரியில் இப்பொழுது ஏதாவது பிரச்சினை உண்டாகி அந்த நட்சத்திரமே இருண்டு போய் விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள்,அந்த செய்தியே நமக்கு 4.3 வருடங்களுக்கு பின்னால் தான் தெரியும்!!!!!!!


அதே போல் நமது சூரியனிற்கும் பூமிக்கும் உள்ள தூரம் 8.317 ஒளி நிமிடங்கள். அதாவது சூரியனில் ஏதாவது மாறுதல் உண்டானால் அதன் ஒளி நம்மை வந்து சேர 8 நிமிடங்கள் பிடிக்கும்.
நான் சென்ற பதிவில் பேரிடி கோட்பாடு (Big Bang theory) பற்றி சொல்லும்போது,இந்த கோட்பாட்டை முழுமையாக நம்மால் நிரூபிக்க முடியாது என்று சொல்லி இருந்தேன் அல்லவா??? அதற்கான காரணம் இதுதான். விண்வெளியில் நாம் தெரிந்துகொள்ளும் எல்லாமே நம்மை தேடி வரும் ஒளியை பொருத்து தான் இல்லையா. தூரம் போக போக ஒளி நம்மை வந்து சேரும் நேரமும் கூடிக்கொண்டே போகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் நம்முடைய மிக "நெருங்கிய" அண்டமான (Galaxy) ஆண்ட்ரோமேடா (Andromeda galaxy) நம்மை விட 2.5 மில்லியன் ஒளி வருடங்கள் தள்ளி இருக்கிறது.(இதை கிலோமீட்டர் கணக்கில் தயவு செய்து நீங்களே மாற்றிக்கொள்ளுங்கள் :-))

அதாவது நாம் இப்பொழுது பார்த்துகொண்டிருக்கும் ஆண்ட்ரோமேடா அண்டம் 2.5 மில்லியன் வருடங்களுக்கு முன் இருந்த அண்டம். நம் மிக "மிக நெருங்கிய" அண்டத்துக்கே இந்த கதி என்றால் நம்மை தள்ளி அதிக தூரம் கொண்ட விண்வெளி பொருட்களை எல்லாம் பார்க்க பார்க்க நாம் காலத்தில் பின் நோக்கி பார்த்துக்கொண்டே போகிறோம் என்று தான் பொருள். இப்படியே போக போக ஒரு சமயம் ஒளியே உருவாகாத நேரத்திற்கே நாம் போய்விடுவோம்.
அதென்ன ஒளியே உருவாகாத நேரம்???

பேரிடி கோட்பாட்டின் படி எல்லா பொருளும் ஒன்று சேர்ந்து இருந்து பின் வெடித்து சிதறின என்று சொல்கிறார்கள் அல்லவா?? அவர்களின் கூற்றுப்படி பேரண்டம் உருவாக ஆரம்பித்து முதல் 100000 வருடங்களுக்கு ஒளியே கிடையாது,ஒளி எங்குமே செல்ல முடியாத படி பிண்ணிப்பிணைந்து இருந்ததாம். ஓளியே இல்லை என்றால் அதை நாம் எப்படி பார்ப்பது?? பார்க்கவே முடியவில்லை என்றால் வேறு எப்படி நிரூபிப்பது???
இதனால் தான் பேரிடி கோட்பாட்டை முழுமையாக நிரூபிக்க முடியாது என்று போன பதிவில் சொல்லி இருந்தேன்.

என்ன தலை சுற்றுகிறதா?? பாவம்!!நானும் உங்களை ரொம்பவே குழப்பிவிட்டேன். பதிவை ஒரு முறைக்கு நான்கு முறை படித்துவிட்டு புரிகிறதா என்று சொல்லுங்கள். வானில் இது பல நூறு அதிசயங்கள் பரந்து விரிந்து இருக்கின்றன. அதை அடுத்த முறை தொடர்கிறேன்.

வரட்டா?? :-)

References :
http://school.discovery.com/schooladventures/universe/itsawesome/lightyears/
http://answers.yahoo.com/question/index?qid=20070501080843AADJMQg&show=7
http://www.nasa.gov/lb/facts/Space/space_facts_archives.html
http://starchild.gsfc.nasa.gov/docs/StarChild/questions/question19.html
http://www.howstuffworks.com/question94.htm
http://hypertextbook.com/facts/KathrynTam.shtml
http://curious.astro.cornell.edu/question.php?number=84

படங்கள் :
www.astrocruise.com/m31.htm
http://en.wikipedia.org/wiki/Speed_of_light
http://img.dailymail.co.uk/i/pix/2007/05_01/

வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 1 (பிரபஞ்சம் உருவானது எப்படி)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 2(Big bang theory)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 3(Light years)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4(Black holes)
வானத்தில் விரியும் அதிசயங்கள் - பாகம் 5(Extra terrestrial life)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 6(Alien communication)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 7(UFOs)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 8(Roswell - part 1)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 9(Roswell - part 2)

புதுவை புகைப்படங்கள் - பாகம் 2

இந்த பதிவின் முதல் பகுதியை இங்கு சொடுக்கி பார்த்துக்கொள்ளலாம்
பி.கு: படங்களை பார்க்க முடியவில்லை என்றால் Adobe Flash player latest version-ஐ இந்த சுட்டியில் சென்று தரையிறக்கம் செய்துக்குள்ளுங்கள்.நன்றி!! :-)

வானத்தில் நடக்கும் ஓவியக்கண்காட்சி

இந்த மாடர்ன் ஆர்ட்டு, மாடர்ன் ஆர்ட்டுனு சொல்றாய்ங்களே,இதெல்லாம் நமக்கு அவ்வளவா புரியாதுங்க!! ஏதோ இஷ்டத்துக்கு கோடு போடுவாய்ங்க,கன்னா பின்னான்னு கலரு எல்லாம் கொட்டி மாடர்ன் ஆர்ட்டுன்வாய்ங்க!!!

இதுக்கு எல்லாம் காசு கொடுத்துட்டு போகற அளவுக்கு எல்லாம் நமக்கு அது பெரிய விஷயமா தெரியல!! ஆனா நம்ம கலை தாகத்தை போக்கிக்கறதுக்காக நான் தெனமும் ஒரு ஓவியக்கண்காட்சியை பார்த்திடுவேணுங்க!!! அது நம்ம இயற்கை நடத்தும் ஓவியக்கண்காட்சிதான். சுத்தமா ஒரு ரூபாய் கூட செலவில்லாம மொட்டை மாடிக்கு போய்ட்டு எவ்வளவு நேரம் வேணும்னாலும் பார்க்கலாம். நேத்தைக்கு கூட நம்ம சென்னையில மழை வரா மாதிரி ஒரே சீன்னு போட்டுட்டு இருந்திச்சு. மழை வந்திச்சோ இல்லையோ ஆனா வானத்துல ஒரு படம் காட்டிச்சு பாருங்க,அதை பார்த்த உடனே நம்மலால படம் புடிக்க முடியாம இருக்க முடியலை!!
நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்!! :-)இனிமே நீங்களும் இந்த கண்காட்சியை மறக்காம பாருங்க!! :-)
சரியா??

பி.கு: படங்களை பார்க்க முடியவில்லை என்றால் Adobe Flash player latest version-ஐ இந்த சுட்டியில் சென்று தரையிறக்கம் செய்துக்குள்ளுங்கள்.
நன்றி!! :-)

பார்த்த ஞாபகம் இல்லையோ - பாகம் 3

இந்த தொடர்கதையின் முதல் இரண்டு பாகங்களை கீழே உள்ள இணைப்புகளை சொடுக்கி பார்த்துக்கொள்ளலாம்.

பாகம் 1
பாகம் 2

பாகம் 3

ட்யூஷன் முடித்து விட்டு தோழிகளோடு வெளியே வரும்போது தான் வினோத்தை முதன் முறையாக பார்த்தாள். மற்ற பசங்க சிரித்து பேசி அரட்டை அடித்து கொண்டு வெளியே வந்து கொண்டிருக்க இவன் புத்தகத்தினுள் எதையோ தேடிக்கொண்டு மிதிவண்டி நிறுத்துமிடம் நோக்கி நடந்து கொண்டு இருந்தான்.


அவன் பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றும் வசீகரமாக இல்லை என்றாலும் அவன் முகத்தில் படிப்பின் வேகத்தையும் தாண்டி ஒரு வித தெளிவு இருந்தது. ஆள் சற்றே சராசரிக்கு அதிகமான உயரம்,ஒடிசலான உடம்பு. கத்தினாலே நடுங்கி விடக்கூடிய முகத்தோற்றத்துடன் இருந்தாலும்,அவனிடம் வேறு யாரிடமும் இல்லாத சக்தியும் நம்பிக்கையும் இருப்பதாக அவளுக்கு பட்டது.
அவள் அவனை சற்றே ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்த போது தோழிகளிடமிருந்து சிரிப்பொலி கேட்டு திரும்பினாள்.

"என்னங்கடி சிரிக்கிறீங்க???"

"அதோ போகுதே! அது சரியான லூசு!! பொன்னுங்கள திரும்பி கூட பாக்காது!!! எப்போ பாத்தாலும் குனிஞ்ச தலை நிமிராம பொஸ்தகத்து குள்ளேயே தலைய மூடிக்கிட்டு போகும். உனக்கு ஏத்த கேசுன்னு பேசிக்கிட்டு இருந்தோம்" என்றாள் தோழி ஒருத்தி.

ஏதோ சொல்ல நினைத்த காவேரி,ஆர்வம் மேலிட்டு வினோத் போகும் திசையை திரும்பி பார்த்தாள். அவனும் அவளை திரும்பி பார்த்துக்கொண்டு சென்றுக்கொண்டு இருப்பது தெரிந்தது. அவன் அவளை தான் திரும்பிபார்த்தானா இல்லை தன்னை பற்றி சில பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து பார்த்தானா என்று அவளால் முடிவு செய்ய முடியவில்லை. உடனே முகத்தை திருப்பி கொண்டாள்.

"ஒருத்தன் ஒழுங்கா இருப்பது உங்களுக்கு எல்லாம் பிடிக்காதே. அவன் ஒருத்தனாச்சும் ஒழுங்கா இருக்க விடுங்களேண்டி"என்றாள்.

"அடிப்பாவி!! அவன சொன்னா உனக்கு ஏண்டி கோபம வருது?? சரி இனிமே உன் ஆள பத்தி நாங்க ஒன்னுமே சொல்லல. போதுமா??" என்று சொல்லிவிட்டு அவள் தோழிகள் எல்லோரும் கலகலவென்று சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.


அவளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. பொதுவாகவே இந்த நகரத்து பெண்களின் போக்கு அவளுக்கு பிடிக்க வில்லை. அவள் பத்தாவது வரை படித்த கிராமத்திலெல்லாம் பெண்கள் இப்படி கிடையாது. இங்கு தான் எப்பொழுது பார்த்தாலும் எந்த பையன் நல்லா பேசுவான்,எந்த பையன் ஜொள்ளு விடுவான் என்பதை பற்றியே பேச்சு. எப்போ பார்த்தாலும் ஏதாவது ஜோடி சேர்ப்பதே இவர்களுக்கு பொழப்பு.
அவள் ஒன்றும் பதில் சொல்லாமல் வகுப்பறைக்குள் நுழைந்தாள்.சிறிது நேரத்தில் அவள் கவனம் பாடத்தில் சென்று விட்டது.


அன்று மாலை தனியாக வீட்டிற்கு வரும்பொழுது அவள் மனத்தில் அவனின் முகம் தோன்றி மறைந்தது.
காவேரியை பொருத்த பொருத்த வரையில் அவளுக்கு அவளேதான் உற்ற தோழி. அவள் தந்தை வயதான காலத்தில் அவளை பெற்றெடுத்ததால்,அவளின் வயதை ஒத்த உறவுக்கார பிள்ளைகள் யாரும் அவளுக்கு கிடையாது. உறவினர்கள் விஷேங்களுக்கு சென்றால் கூட அவள் கூட விளையாடுவதற்கு யாரும் கிடையாது. அவளுக்கு பள்ளியில் வாய்த்த தோழிகள் கூட அவளின் அறிவுத்திறனுக்கும் மன நிலைக்கும் ஒத்தவர்கள் அல்ல. அதனால் குழந்தைப்பருவத்தில் இருந்தே அவள் தனிமையுடன் வாழ பழகி விட்டிருந்தாள். இருந்தாலும் அவள் பருவத்தை அடைந்த பிறகு தனக்காக யாருமே இல்லையே என்ற ஏக்கம் பெரியதாகி விட்டிருந்தது. அந்த வயதிற்கே உண்டான குழப்பமும்,பயமும்,வலியும்,வேதனைகளையும் பகிர்ந்து கொள்ள யாருமே இல்லாமல் பல முறை அழுதிருக்கிறாள். தந்தை எவ்வளவுதான் பாச மழை பொழிந்தாலும் பருவப்பெண்ணிற்கு ஒரு அம்மாவை போல வருமா?? ஏதாவது சந்தேகம் பயம் என்றால் கூட யாரை போய் கேட்பது?? அதுவும் அப்பாவோ வயதானவர், அவரின் அன்பு ஒரு தாத்தாவின் பரிவை போன்று இருந்ததே அவள் வேண்டிய ஒரு தந்தையின் அரவணைப்பு அவளுக்கு இருந்தது இல்லை.


இதில் பட்டணத்திற்கு போய் படிக்கற பொறுப்பு வேறு. புது இடம்,புது நண்பர்கள் இப்படி வாழ்க்கையே ஒரு புரியாத ஓட்டப்பந்தையம் போல ஓடிக்கொண்டிருந்தது அவளுக்கு.
அன்று விட்டிற்கு வந்தவுடன் வீட்டு வேலையெல்லாம் செய்ய ஆரம்பித்தாள்,என்றாலும் மனதில் ஒரு விதமான அலுப்பு நிறம்பிக்கிடந்தது.
சாப்பிடப்போகும்து அப்பா கேட்டார்.

"என்னமா ஒரு மாதிரி இருக்க?? க்ளாஸ்ல டீச்சரு ஏதாவது சொன்னாங்களா??".

"இல்லப்பா!! கொஞ்சம் அசதியா இருக்கு அவ்வளவுதான்" என்றாள் காவேரி .

"சரி சீக்கிரமா சாப்டுட்டு தூங்க போ,நாளைக்கு சரி ஆகிடும்"

"இல்லப்பா நாளைக்கு ஒரு பரீட்சை இருக்கு,கொஞ்சம் படிக்கனும்"

பொன்னுச்சாமி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு தன் பெண்ணை ஏறிட்டு பார்த்தார்.

"கொஞ்சம் கஷ்டப்பட்டு படிச்சிரு கண்ணு.இந்த ரெண்டு வருஷம்தான் வாழ்க்கையிலேயே ரொம்ப முக்கியம். இப்போ கஷ்டப்பட்டுடா அப்புறமா சமாளிச்சுக்கலாம்"என்றார்.

இதையே பல்லாயிரக்கணக்கான முறை அவள் கேட்டிருந்ததால்.
"இதையே எத்தனை தடவைப்பா சொல்லுவீங்க!! நான் பாத்துக்கறேன் விடுங்க"என்றாள்.
தன் பெண் தன் பேச்சை கேட்காமல் அவ்வப்போது கோபப்படுகிறாள் என்று பொன்னுச்சாமி உணர்ந்திருந்தாலும்,இது அவளின் வயதுக்கே உரித்தான பிரச்சினை என்று அவருக்கு தெரிந்திருந்தது.தான் இரண்டாவதாக திருமணம் செய்ய முயற்சி செய்யாதது சரியான முடிவுதானா என்று அவர் பல முறை யோசித்திருக்கிறார்.

"என்னமோ மா,நீ நல்லா இருக்கனும்!! அதுதான் எனக்கு வேணும். உங்க அம்மா மட்டும் இப்போ உயிரோடு இருந்தா உன்னை இப்படி கஷ்டப்பட விடுவாளா??" என்றார்.

காவேரி இதை கேட்டு கேட்டு அவள் காது புளித்து போயிருந்தது.
"அய்யோ அப்பா!!! நீங்க மொதல்ல சாப்டுட்டு தூங்கற வழிய பாருங்க" என்றாள் சற்றே எரிச்சலுடன்.


அதன் பிறகு அவர்கள் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சாப்பிட்டு விட்டு வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு கணக்கு புத்தகத்தை திறக்கும் போது நெஞ்சில் வினோத்தின் முகம் அவளையும் அறியாமல் தோன்றி மறந்தது. அவளை போலவே அவனின் மனதிலும் ஒரு வெறுமை,தனிமை இருப்பது போல் அவளுக்கு திடீரென்று தோன்றியது.
அந்த எண்ணத்தை மனதில் இருந்து ஒதுக்கிவிட்டு சைன் டீட்டாவையும் காஸ் டீட்டாவையும் கவனிக்க ஆரம்பித்தாள்.
சிறிது நேரம் கழித்து அவ்வளவாக படிப்பில் மனம் செல்லாததால் அவள் தூங்கியே போனால். அடுத்த நாளே அவள் வாழ்வின் அதி முக்கியமான நட்பின் ஆரம்பம் அமையப்போகிறது என்று அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

(நியாபகங்கள் தொடரும்)

==================-oOo-==================
நண்பர்களேஇந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி. இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும். இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும். இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும். ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும். இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.

நான்காவது அத்தியாயத்தை எழுத அன்பு நண்பர் ஜி அவர்களை அழைக்கிறேன்.

புதுவை புகைப்படங்கள் - பாகம் 1

சமீபத்தில் புதுவை சென்றிருந்த போது நான் எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு :-)

மீதி படங்கள் அடுத்த பகுதியில!!!

படங்கள் நல்லா இருக்கா?? :-)

இரண்டாவது பகுதி

விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இந்தியா திட்டம் : ஒரு செய்தி விமர்சனம்

இன்னும் எட்டு ஆண்டுகளில் வெண்வெளிக்கு மனிதனை அனுப்ப போவதாக மே 9-ஆவது தேதியன்று இந்திய விண்வெளி கழகத்திடமிருந்து வந்த செய்தி இந்திய வெண்வெளி ஆர்வலரிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த செய்தி நமது "சற்றுமுன்"வலைத்தளத்திலும் இடம் பெற்றது.

இந்திய வெண்வெளி கழகம் என்பது இந்தியர்கள் உலக அளவில் பெருமை பட்டுக்கொள்ளக்கூடிய விஞ்ஞான சாதனைகளில் ஒன்று என்றால் அதை மறுப்பதற்கில்லை. மோசமான பொருளாதார நிலைமையிலும் ஆர்வம் மற்றும் கடும் உழைப்பை மட்டுமே நம்பி நம் விஞ்ஞானிகள் இந்த அளவுக்கு இயங்கிக்கொண்டு இருப்பதே பாராட்டுக்குறிய விஷயம் தான். செயற்கை கோள்களை வேற்று நாடுகளுக்கு அனுப்பி அங்கிருந்து ஏவுவதில் இருந்து சுயமாக பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ஏவுகளங்களை ஏவுவது வரை வளர்ந்துவிட்ட நமது விண்வெளிக்கழகத்தின் வளர்ச்சி பெரிமிதத்திற்குறியது . இன்னிலையில் விண்வெளிக்கழகத்தின் இந்த அறிவிப்பையும் அதன் காரண காரியங்களை பற்றியும் சற்றே இந்த பதிவில் பார்ப்போம்.

விண்வெளிக்கு மனிதனை இது வரை மூன்று நாடுகள் மட்டுமே அனுப்பி வைத்திருக்கின்றன. முதன் முதலில் 1961-ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அன்று ரஷ்யா மனிதனை விண்வெளிக்கு அனுப்பியது. பனிப்போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த அந்த காலக்கட்டத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் எல்லா துறைகளிலும் நேரடியாகவே போட்டி போட்டுக்கொண்டன. இதன் ஒரு பகுதியாக விண்வெளிக்கு மனிதனை முதலில் அனுப்புவது யார் என்ற போட்டியில் ரஷ்யா வெற்றி பெற்றது. ரஷ்யாவின் இந்த சாதனை முடிந்த 23 நாட்களிலேயே அமெரிக்கா தனது நாட்டவரை விண்வெளிக்கு அனுப்பி தாங்களும் விண்வெளிப்போரில் ஒன்றும் சோடை போகவில்லை என்று காட்டிக்கொண்டது. இருந்தாலும் ரஷ்யாவை வெண்வெளிக்கு முதன்முதலில் போக விட்டது அமெரிக்காவுக்கு ஒரு பெரும் அவமானமாக கருதப்பட்டது.இதனால் தான் 1969-இல் நிலவுக்கு மனிதனை அனுப்பி அது தன் அவமானத்திற்காக பழி தீர்த்துக்கொண்டது. அதன் பின் பல ஆண்டுகளாக எந்த நாடும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பவில்லை. ஆனால் அமெரிக்காவும் ரஷ்யாவும் மாற்றி மாற்றி விண்வெளிக்கு பல களங்களை அனுப்பிக்கொண்டுதான் இருந்தது. அதில் அவர்கள் நாட்டு வீரர்களை தவிர மற்ற நாட்டு வீரர்களையும் பயிற்சிக்காக ஏற்றி கொண்டு சென்றன. இதன் ஒரு பகுதியாகத்தான் இந்தியாவை சேர்ந்த ராகேஷ் சர்மா 1984ஆம் வருடம் Soyuz T-11 விண்களம் மூலமாக விண்வெளிக்கு பயனப்பட்டார். அதன் பிறகு மூன்றாவதாக 2003ஆம் வருடம் யாங் லிவெய் (Yang Liwei) என்பவரை சீனா வெண்வெளிக்கு அனுப்பியது.
சீனாவின் இந்த செயலினால் தான் இந்தியாவிற்கும் மனிதனை வெண்வெளிக்கு அனுப்பும் ஆசை தொற்றிக்கொண்டுள்ளது என கொள்ளலாம்.
1950 1960-களில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் நடந்த பனிப்போரை போன்று இன்று ஆசிய நிலப்பரப்பில் இந்தியா சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையில் பல துறைகளில் போட்டா போட்டி இருந்து வருவது தெரிந்த விஷயம் தான். இந்த போட்டியில் வெற்றிபெருவதற்கான முயற்சி என்பதை தவிர இந்த விஷயத்தினால் வேறு என்ன பயன்கள் இருக்க முடியும் என கொஞ்சம் பார்க்கலாம்.

உலக அரங்கில் விண்வெளித்துறையில் இந்தியா என்ற பெயர் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் கூட அது செயற்கைகோள் அனுப்புவதோடு நின்று விடுகிறது. சமீபத்தில் உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து சர்வதேச விண்வெளி மையம் (International space station) அமைக்க ஆயுத்தங்கள் நடைபெற்ற போது இதில் இந்தியாவின் பங்களிப்பு ஒன்றுமே இல்லாதது ஏமாற்றம் அளிக்க கூடிய விஷயம். உலக அரங்கில் வெண்வெளித்துறையில் இந்தியாவை ஒரு பெறும் சக்தியாக யாரும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. இதை மாற்றி உலக அளவில் மனித இனம் விண்வெளியில் செய்யும் ஆராய்ச்சிகளில் பங்கு கொள்ள இந்த முயற்சி பெரும் பங்கு வகிக்கும்.

விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதால் இதை போன்ற அரசியல் சார்ந்த விஷயங்களை தவிர விஞ்ஞான ரீதியாக வேறு என்ன பயன் என்று பார்க்கலாமா??
சந்திர மண்டலத்தில் ஆய்வு என்பது அமெரிக்கா போன்ற நாடுகள் பெரும் உற்சாகத்துடன் ஈடுபடும் ஆராய்ச்சி தலைப்பு. சந்திர மண்டலத்தில் கிடைக்கும் கற்கள்,பாறைகள் போன்றவை வைத்து நம் சூரிய குடும்பத்தை பற்றியும் அண்டத்தின் உருவாக்கத்தை பற்றியும் பல விஷயங்களை அறியும் முயற்சி நடை பெற்று வருகிறது. இது தவிர செவ்வாய் கிரகத்துக்கு செல்வதற்கான முயற்சிகளிலும் உலக நாடுகள் ஆர்வமாக உள்ளன. இந்த முயற்சிகளில் நிலவை ஒரு நடுநிலை ஏவு மையமாக உபயோகித்துக்கொள்வதின் பங்கு இன்றியமையாதது. இதையும் தவிர நிலவை, ஆராய்ச்சி மையம் அமைத்துக்கொள்வதற்கோ அல்லது வருங்காலத்தில் குடி பெயர்ந்து செல்லவும் உபயோகித்துக்கொள்ளலாம் என்ற கருத்துக்களும் உண்டு.
நிலவில் விலை மதிப்பற்ற கணிமங்கள் பல புதைந்திருப்பதாகவும் இதை எல்லாம் வருங்காலத்தில் மனிதன் உபயோகிக்க போட்டா போட்டி நிலவலாம் என்று கூறப்படுகிறது. இதையும் தவிர நிலவில் இருந்து சூரிய ஒளியை தேக்கி எரிபொருளாகவும் உபயோகித்துக்கொள்ளலாம். இப்படி பலவிதங்களிலும் நிலவில் மனிதன் செய்வதற்கு ஆராய்ச்சிகள் கொட்டிக்கிடக்கின்றன.
இவையெல்லாவற்றிற்கும் விண்வெளியில் மனிதன் வாழ்ந்து பயிற்சி பெறுவது இன்றியமையாதது. நிலவையும் செவ்வாய் கிரகத்தையும் தாண்டி விண்வெளியில் பல தரப்பட்ட ஆராய்ச்சிகளை செயவதற்கும் விண்வெளியில் மனிதனில் இருப்பு அவசியம். இப்பொழுதெல்லாம் இயந்திர மனிதர்கள் எவ்வளவு முன்னேறி இருந்தாலும் சாதாரணமாக ஒரு ஸ்க்ரூவை முடிக்கிவிட தர வேண்டிய கட்டளைகளை தருவதற்குள் ஒரு மனிதன் அதே செயலை சத்தமே இல்லமல் திறம்பட செய்து முடிப்பான். அதையும் தவிர வெண்வெளியில் அதிமாக முடிவெடுக்க வேண்டிய விஷயங்கள் அடங்கிய ஆராய்ச்சிகள் நடத்தும் போது அங்கே மனிதனின் இருப்பு அவசியமாகி விடுகிறது.

இந்தியா போன்ற ஏழை நாட்டில் இவ்வளவு செலவு செய்து இவ்வளவு பெரிய ஆராய்ச்சிகள் எல்லாம் தேவையா என்று கேள்விகள் எழுந்தாலும்,நாட்டின் முழுமையான வளர்ச்சிக்கும்,உலக அளவில் வல்லரசாக இந்தியா முன்னேறும் முயற்சிக்கு இது போன்ற விஷயங்கள் தேவை என்றே தோன்றுகிறது.


பி.கு: இந்த கட்டுரை சற்றுமுன் போட்டிக்காக எழுதப்பட்டது.

References :
http://www.atimes.com/atimes/South_Asia/HK07Df01.html
http://www.dnaindia.com/report.asp?NewsID=1095669
http://news.bbc.co.uk/1/hi/sci/tech/137462.stm
http://en.wikipedia.org/wiki/International_space_station
http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/3192330.stm
மற்றும் சில

வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 2

வணக்கம் மக்களே!
இரண்டாவது பாகம் போடுறதுக்கு இவ்வளவு நேரம் ஆக்கியதற்கு முதலில் மன்னிக்கனும்.இசை இன்பத்துல கொஞ்சம் வேலை இருந்ததால இந்த பக்கம் வர முடியலை. (ஹி ஹி ,சும்மா ஒரு விளம்பரம்தான்!! :-D)

போன பாகத்துல சூரியன் எப்படி உருவாச்சு அப்படின்னு பார்க்க போய்,பொதுவா நட்சத்திரங்கள் எப்படி உருவாகுது,கிரகங்கள்,துணை கோள்கள் எல்லாம் எப்படி உருவாச்சு அப்படின்னு பார்த்தோம். எதை கேட்டாலும் எல்லாத்துக்கும் தூசு மேகக்கூட்டங்கள் தான் காரணம் அப்படின்னு நானும் சொல்லிட்டு தப்பிச்சிட்டு இருந்தேன் . நீங்களும் டென்ஷனாகி "எலே!! எல்லாத்துக்கும் மேகக்கூட்டம் மேகக்கூட்டம்னு கதை சொல்லுதியேலே!!!இந்த மேகக்கூட்டம் எங்கிட்டு இருந்து வந்துச்சு????"அப்படின்னு அறிவுபூர்வமா ஒரு கேள்வி கேட்டீங்க. அப்போதான் நானும் எஸ்கேப் ஆகிட்டேன்.

இந்த அண்ட வெளியில் இருக்கும் பொருட்கள் எல்லாம் எங்கே இருந்து வந்தது என்பது வெகு காலமாக யாருக்கும் தெரியாமல் இருந்தது. உலகெங்கிலும் உள்ள பல மதங்கள் எல்லாம் தங்கள் கோட்பாட்டுக்கு ஏற்றார்போல் படைப்பின் கதைகளை சொன்னாலும்,விஞ்ஞானப்பூர்வமாக விண்வெளி எப்படி உருவாகியது என்ற தெளிவான அறிவு மனிதனிடம் இருபதாவது நூற்றாண்டு வரை இல்லை. மக்கள் சொல்லி வந்த ஒன்றிரண்டு கோட்பாடுகள் கூட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் இருபதாவது நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க வான்வெளி அறிவியல் புனைவான (invention) "ஹப்பில் தொலைநோக்கி" (Hubble's telescope) முலமாக இந்த விஷயத்தில் ஓரளவு ஒற்று கருத்து ஏற்பட்டது.

அப்படி என்ன தில்லாலங்கடி வேலையை இந்த தொலைநோக்கி செய்து விட்டது என்று கேட்கிறீர்களா?? இப்போ உங்க வீட்டு வாசலுக்கு வந்து வெளியிலே பார்க்கறிங்கன்னு வெச்சுக்கோங்க அப்போ என்ன தெரியும்?? அது வீடு இருக்கற இடத்தை பொருத்தது. பக்கத்து வீடு தெரியும்,நம்ம வீதி தெரியும்,கொஞ்சம் தள்ளி இருக்கற வீதி தெரியலாம். நம்ம வீடு மாடியிலே ஏறி பார்த்தா இன்னும் கொஞ்சம் தள்ளி இருக்கற வீடு எல்லாம் தெரியும். அப்படியே ஊரு பக்கத்துல இருக்கற மலையில ஏறி பார்த்தா ஊரே தெரியும்!!! இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் ஹப்பில் தொலைநோக்கியையே உருவாக்கினாங்க.

எவ்வளவு நாள் தான் கீழே இருந்து வான்வெளியை பார்த்துட்டு இருக்கறது அப்படின்னு மலை முட்டுல போய்ட்டு பெரிய பெரிய தொலைநோக்கிகள் எல்லாம் மக்கள் முதலில் கட்டினார்கள். அங்கேயும் கூட சரியா பார்க்க முடியலைன்ன உடனே,நாம ஏன் வான்வெளிக்கே ஒரு தொலைநோக்கியை அனுப்பி அங்கே இருந்து பார்க்க கூடாதுன்னு முடிவெடுத்தாங்க. அப்படி அனுப்பப்பட்டது தான் ஹப்பில் தொலைநோக்கி. ஹப்பில் தொலைநோக்கியை பத்தியே ஒரு பதிவை போடலாம்,அதனால அதை அப்புறம் பார்க்கலாம். இப்போ நம்ம கதைக்கு வருவோம். இந்த ஹப்பில் தொலைநோக்கி மூலமாக என்ன கண்டுபிடிச்சாங்கன்னா, நம்ம அண்ட வெளியில் உள்ள பொருட்கள் எல்லாம் விரிவடைஞ்சிட்டே இருக்குன்னு.

அதாவ்து பூமிக்கும் நிலாவுக்கும் நடுவுல இன்றைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தூரம் இருக்குன்னு வெச்சிக்கோங்க,இதையே நாளைக்கு போய் பார்த்தோம்னா தூரம் அதிகமாகி இருக்கும்,அடுத்த வருஷம் போய் பார்த்தோம்னா இன்னும் அதிகமாகி இருக்கும். இப்படி விரிவடைஞ்சிகிட்டு இருக்கற வேகம் சொற்பமாக இருந்தாலும் காலப்போக்கில் இதன் தீவிரம் அதிமாக தெரியும். இது நிலாவுக்கும் பூமிக்கும் மட்டும்மல்லாது எல்லா வான்வெளி பொருளுக்கும் பொருந்தும். இப்படி எல்லாம் விரிவடைஞ்சிக்கிட்டே போய்ட்ருக்கே அப்போ இன்னைய விட நேத்து பூமியும் நிலாவும் கிட்டக்க இருந்திருக்கும் இல்லையா???
உண்மைதான் இருந்திருக்கும்!!
அப்போ கொஞ்சம் கொஞ்சமா பின்னாடி போய்ட்டே இருந்தா இன்னும் இன்னும் கிட்டக்க போய்ட்டே இருக்கும்ல.
ரைட்டுதான்!!
அப்போ இப்படியே போய்ட்டு இருந்தா என்னிக்காவது ஒரு நாள் இந்த அண்ட வெளியில் உள்ள அனைத்து கோள்கள்,கிரகங்கள்,மேகங்கள் எல்லாமே ஒரு பொருளா பிணைந்து இருக்கும் இல்லையா??
ஆமாம்!!!

அப்போ நாம இப்போ நம்மை சுத்தி பார்த்திருக்கற பொருள் எல்லாமே ஒன்றாக பிணைந்து இருந்து என்னிக்காவது ஒரு நாள் வெடித்து சிதறி இருக்கும். அப்படி வெடித்து சிதறின பொருட்கள்தான் இப்பவும் பல கிரகங்களாகவும்,நட்சத்திரங்களாகவும்,கோள்களாகவும்,தூசு மேகங்களாகவும் பல விதமாக இருந்துகொண்டு, தங்களூடே இடித்துக்கொண்டு,பிணைந்துக்கொண்டு பலவேறு பொருட்களாகவும், நட்சத்திர மண்டலங்கலாகவும் உருமாறிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறது. இப்படி நம்பப்படும் கோட்பாடு தான் "பேரிடி கோட்பாடு"(இதற்கு வேறு தமிழ்ச்சொல் இருக்கிறதா என்று தெரியவில்லை) எனப்படும் "Big bang theory".

இன்றைய நிலையில் அண்டத்தின் உருவாக்கம் பற்றி முக்கால்வாசி அறிஞர்களாலும், விஞ்ஞானிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிந்தாந்தம் இதுதான். இதை விட ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு சிந்தாந்தம் இல்லையே என்பதானால் தான் இதை எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்களே தவிர,இது எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும் கோட்பாடு அல்ல. இதை பற்றி கேள்வி கேடக வேண்டும் என்றால் பல நூறு கேள்விகள் கேடகலாம்,ஆனால் எல்லாவற்றிற்கும் விடை இருக்குமா?? என்றால் இல்லை!! :-(

உதாரணத்திற்கு எல்லாமே இந்த அண்ட முட்டையான "cosmic egg" இல் இருந்து வெடித்து சிதறியது என்றால் இந்த அண்ட முட்டை எங்கிருந்து வந்தது??? இதற்கு முன்னால் ஏன் சிதற வில்லை?? சிதற வைத்தது எது?? ஏன் இந்த வெளி இவ்வளவு வேகமா விரிவடைந்து கொண்டு இருக்கிறது????
என்று எல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

இப்படியே விரிவடைந்து கொண்டே இருந்தால் கடைசியில் என்னதான் ஆகும்???
வல்லுனர்களின் கணிப்பு படி அண்டம் இப்படி விரிவடைந்து போய்க்கொண்டே இருக்குமாம். அண்டத்தின் நிறை (mass) மற்றும் அடர்த்தி(density) இப்படி குறைந்து கொண்டே போக போக ஒரு சமயம் அண்டத்தின் விரிவடைதல் நின்று போகுமாம். பின் விரிவடைந்துக்கொண்டிருந்த அண்டம் சுருங்க ஆரம்பித்து விடும் இப்படியே சுருங்கி சுருங்கி திரும்பவும் அண்ட முட்டையாகி விடும் என்று சில பேர் கூறுகிறார்கள்.
இதற்கு எல்லாம் என்ன சான்று?? நீங்கள் சொல்வது சரி என்று நான் எப்படி நம்ப முடியும்?? என்றால்,எல்லாம் ஒரு நம்பிக்கை தான்!!
ஏன் என்றால் இந்த கோட்பாட்டை தெளிவாக நிரூபிக்க சான்று ஒன்றும் கிடையாது ,முழுமையாக நிரூபிக்கவும் முடியாது.(ஏன் என்பது மிக பெரிய கதை,அதனால் அது இப்பொழுது வேண்டாம்)
விஞ்ஞானத்தின் மூலம் எல்லாவற்றிற்கும் ஆதாரம் தேடும் மனிதனுக்கு சில சமயங்களில் சில விஷயங்களுக்கு ஆதாரமே தராமல் இயற்கை தண்ணி காட்டி விடுகிறது. மனிதனும் முயன்று கொண்டு தான் இருக்கிறான்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் படைப்பின் ரகசியம் பற்றி மனிதனுக்கு சுத்தமாக தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். "பேரிடி கோட்பாடு" போன்ற விஷயங்கள் அதை புரிந்துக்கொள்ள விழையும் முயற்சியே தவிர இது படைப்பை பற்றிய முழுமையான அறிவாக கருத முடியாது. வருங்காலத்தில் வரும் விஞ்ஞானிகளாவது இதற்கான புரிதலை உலகுக்கு அளிப்பார்களா என பொருத்திருந்து பார்ப்போம்.


இரவில் நட்சத்திரங்களோடு மௌன மொழி பழகும் நாட்களில் நான் யோசித்த இன்னொரு விஷயம் என்னவென்றால்,நமக்கு தெரிந்து கோடான கோடி ஒளி வருடங்கள்* வரை எங்கேயும் உயிர் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. அப்படி இருக்கும் போது எதற்காக இவ்வளவு பெரிய அண்டத்தை கடவுள் படைக்க வேண்டும்?? என்பது.

இதையே வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால்,இவ்வள்வு பெரிய அண்ட வெளியில் தம்மாத்தூண்டு பூமியில் மட்டும் எப்படி உயிர் உருவானது?? மற்ற இடங்களில் ஏன் உருவாக வில்லை??? உருவாக சாத்தியக்கூறுகள் உள்ளனவா??? இருந்தும் நாம் அறியாமல் இருக்கிறோமா?? இல்லை தெரிந்தும் மறைக்கப்பட்டுள்ளதா???

இப்படி பல கேள்விளுக்கான அலசல்களை எதிர்வரும் பதிவுகளில் பார்ப்போம்!! :-)
வரட்டா??

*ஒளி வருடம் : நட்சத்திரங்கள் நடுவில் இருக்கும் மிக அதிமான தொலைவுகளை அளக்க உதவும் ஒரு அளவுகோல்.

வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 1 (பிரபஞ்சம் உருவானது எப்படி)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 2(Big bang theory)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 3(Light years)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4(Black holes)
வானத்தில் விரியும் அதிசயங்கள் - பாகம் 5(Extra terrestrial life)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 6(Alien communication)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 7(UFOs)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 8(Roswell - part 1)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 9(Roswell - part 2)

ட்யூலிப் மலர் கண்காட்சி

நம்ம ஊருல ஆலந்து (Holland) அப்படிங்கற இடத்துல ( ஐரோப்பாவில் இருக்கும் ஆலந்து அல்ல,இது அமெரிக்காவின் மிசிகன் மாகாணத்தில் உள்ள ஆலந்து),ட்யூலிப் மலர் கண்காட்சி அப்படின்னு சொன்ன உடனே அடுத்த மணித்துளியே வருகிறேன் என்று நண்பனிடம் சொல்லிவிட்டேன்.இயற்கை ரசிப்பவன் இல்லையா,இந்த மாதிரி தருணத்தை எல்லாம் தவற விட கூடாது. ட்யூலிப் மலர் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா?? அன்னியன் படத்தில் 'குமாஆஆஆஆஆஆஆஅரீஈஈஈஈஈஈஈஈஈ" பாட்டில் வருமே அந்த பூக்கள்தான். எனக்கு புகைபடக்கலையில் ஆர்வம் உண்டு என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும் அல்லவா(என்னது?? தெரியாதா?? அப்போ இப்போ தெரிஞ்சுக்கோங்க!! :-), அதனால எனது இந்த பயணம் எனக்கு மிகவும் திருப்தியை அளித்தது.
கண்காட்சியில் நான் எடுத்த சில புகைபடங்கள் உங்கள்பார்வைக்கு!! :-)


படங்கள் நல்லா இருக்கா??
உங்கள் கருத்துக்களை கொஞ்சம் கமென்டிட்டு போங்களேன்!! :-)

வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 1

நான் சின்ன வயசா இருக்கும் போது எங்க அப்பா என்னை "இண்டிபென்டென்ஸ் டே" (Independence Day) அப்படின்னு ஒரு படத்துக்கு கூட்டிக்கிட்டு போனாரு. படத்தோட கதை என்னனா வேற்று கிரகத்துல இருந்து மக்கள்ஸ் எல்லாம் வந்து நம்ம ஊரு மக்கள்ஸ் எல்லோரையும் அழிக்கறது தான் கதை. வழக்கம் போல கடைசியிலே நம்ம கதாநாயகன் இல்லாத தில்லாலங்கடி வேலை எல்லாம் பண்ணி கடைசியிலே நம்ம பூமியை காப்பாத்திருவாரு. படத்தோட திரைவிமர்சனம் வேணும்னா வேற ஒரு பதிவுல போடறேன் ஆனா நான் முக்கியமா இந்த விஷயத்தை எதுக்காக சொன்னேன்னு கேட்டீங்கன்னா,படத்துல ஒரு அம்சமான சீன் ஒன்னு வரும் (மனசுல ஏதாவது தப்பா நினைச்சுக்கிட்டீங்கன்னா அது உங்க தவறு)

சீன் தொடங்கும் போது நிலாவுல இருந்து நம்ம பூமியை காட்டுவாங்க. சத்தமே இல்லாம அமைதியா நிலவோடு பரப்பு இருக்கும் அதுல இருந்து பூமி நீல கலருல ரொம்ப சமத்தா சாந்தமா தெரியும் (நம்ம தமிழ்மணத்துல நடக்கற சண்டை எல்லாம் அங்கிட்டு இருந்து தெரியறது இல்லை) . அப்படியே கேமெராவை திருப்பி நிலாவோட மேல்பரப்பை காட்டுவாங்க. சூரியனோட லேசான வெளிச்சத்துல அதுல மணல்பரப்பு விரிஞ்சு இருக்கறது தெரியும். கொஞ்சமா க்ளோஸ் அப் போக போக நிலா மேல பூமி மனிதன் விட்டு போன காலடி தடங்கள் தெரியும் (சில பேரு அமெரிக்கர்கள் நிலாவுக்கு போகவே இல்லை,எல்லாம் சும்மா ஊரை ஏமாத்திட்டு இருக்காங்கன்னு சொல்றானுங்க!! ஆனா நாம அதை பத்தி அப்புறமா பார்க்கலாம்) நிலாவுல நம்ம பூமியில இருக்கறா மாதிரி காற்று வெளி மண்டலம் கிடையாது. காற்றே அவ்வளவா கிடையாதுங்கறதுனால என்னிக்கோ விட்டு போன காலடி தடம் கூட அழியாம பத்திரமா இருக்கும்.அச்சு அசலான அந்த காலடி தடத்தை நாம பார்த்துட்டு இருக்கும் போதே அங்க மணல்பரப்பு லேசா நில நடுக்கம் மாதிரி நடுங்க ஆரம்பிக்கும் . என்னடா இது?? இங்க எப்படி நடுக்கம் வந்துச்சுன்னு நாம யோசிக்கும் போதே நடுக்கம் அதிகமாகிடும். கொஞ்ச நேரத்துல அந்த நடுக்கத்துல மனிதனின் காலடித்தளமே மறைஞ்சு போயிடும்,கூடவே பெருசா சத்தம் வேற கேட்க ஆரம்பிச்சுடும். இப்போ அப்படியே கேமராவை மேல தூக்கி காட்டுனா திரை முழுவதும் மறைத்து முதல் எது,முடிவு என்பதே தெரியாத அளவுக்கு பெரியதான ஒரு பறக்கும் தட்டு பூமியை நோக்கி போய்க்கொண்டிருக்கும்.. கூடவே பெரிதான ட்ரம்பெட் சத்தத்தோட கலக்கலா அந்த சீனை முடிச்சிருப்பாங்க!!

இந்த சீனை பார்த்த கொஞ்ச நேரத்துக்கு நான் திறந்த வாயை மூடல. பாட புஸ்தகத்துல சூரியன்,பூமி,நிலா, பூமி சூரியனை சுத்தி வருது, நிலா பூமியை சுத்தி வருது அப்படின்னு எல்லாம் படிச்சாலும் மொத முறையா இது மாதிரி அப்போ தான் பாக்குறேன். அன்னிக்கு ஆரம்பிச்சது தாங்க நமக்கு அண்ட வெளி மேல் உள்ள காதல். இன்னைக்கு வரைக்கும் தொடர்ந்துட்டு இருக்கு. நான் வாழ்க்கையிலே பெரிய ஆளா ஆனா என்னவா ஆகனும்னு இரண்டு விஷயத்துல தான் தீவிரமா இருந்தேன். ஒன்னு கிரிக்கெட் ஆட்டக்காரனாகனும்னு, இன்னொன்னு விண்வெளி வீரன் ஆகனும்,நாஸாவுல போய் வேலை பார்க்கனும்னு எனக்கு சின்ன வயசுல ரொம்ப ஆசை. அப்போ எல்லாம் இப்போ இருக்கறா மாதிரி இந்திய விண்வெளி கழகம் அவ்வளவா பிரசித்தி கிடையாது. அப்துல் கலாம்னு சொன்னா யாருன்னு கேப்பாங்க. அப்போ எனக்கு எல்லாம் நாஸாதான் தெரியும். பேப்பர்ல அவிங்க செவ்வாய் கிரகத்துக்கு விட்ட விண்கலமும்,சனி கிரகத்துக்கு விட்ட விண்கலமும் என்ன ஆச்சுன்னு ஆவலா செய்திகளை பின்பற்றுவேன். சரி சரி அதை பத்தி எல்லாம் இப்போஎதுக்கு. நம்ம விண்வெளி ஆர்வத்தின் உந்துதளால இப்போ விண்வெளி பற்றிய சுவையான விஷயங்களை என் பதிவுல தொடரா எழுதலாம்னு பாக்கறேன். நம்மளுக்கு பெருசா ஒன்னும் விஷயம் தெரியாட்டாலும் இருக்கவே இருக்கு விக்கிபீடியா. திக்கற்றவருக்கு விக்கிபீடியாவே துணைனு பழங்காலத்து வழக்குச்சொல் இருக்குல.அதான் ஆரம்பிச்சாசு!! :-)

என்னிக்காவது கரண்ட் போயிடிச்சுனா வீட்டுக்கு வெளிய வந்து உட்கார்ந்திருக்கீங்களா?? நான் வீட்டுல கரண்ட் இருந்தா கூட அப்பப்போ எங்க வீட்டு வெளியில வந்து உட்கார்ந்துருவேன். அதுவும் மொட்டை மாடி தண்ணீர் தொட்டியில மல்லாக்க படுத்துக்கொண்டு வானத்தில் நட்சத்திரங்களை வேடிக்கை பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்தமான பொழுது போக்கு. அதுவும் மிக சிறியதாக இருந்து கொண்டு எப்பொழுதும் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களை கண்டால் சில சமயம் எனக்கு பாவமாக கூட இருக்கும். ஆனால் இவ்வளவு சாதுவாக இருக்கும் நட்சத்திரங்கள்தான் அண்ட வெளியிலேயே ஜாம்பவான்கள்.
இந்த நட்சத்திரங்கள் எல்லாம் என்ன?? இதெல்லாம் எப்படி உருவாகிறது?? எப்போ வெளியே வந்தாலும் நம்மை பார்த்து சிரித்துக்கொண்டே இருக்கின்றனவே ,இதற்கெல்லாம் அழிவே கிடையாதா??
முதலில் இந்த நட்சத்திரம்னா என்னதுங்க?? எப்படி அதுல இருந்து மட்டும் இவ்வளவு ஒளியும் , சூடும் வெளி வருகிறது?? அதற்கு இவ்வளவு சக்தியை யார் அளித்தார்கள்??

நட்சத்திரம் என்பது வானவெளியில் காணப்படும் மிக பெரிய ஒளிப்பிழம்பு. நட்சத்திரங்களுக்கு இவ்வளவு ஒளியும் சூடும் இருப்பது அதன் உள்ளே சதா சர்வ காலமும் நடந்து கொண்டிருக்கும் அணுக்கரு சேர்க்கையினால் (nuclear fusion) உண்டாவது. வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கற நாலு பசங்க ஒன்னா சேர்ந்தா சும்மா இருக்க முடியுமா?? எதாவது வெவகாரமா பண்ண ஆரம்பிப்பாய்ங்கல?? அதே மாதிரி வெண்வெளியில் சும்மாவேனும் சுற்றிக்கொண்டிருக்கும் மேகக்கூட்டங்கள் புவியீர்ப்பு விசையால் ஒன்றாக சேர்ந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள் அப்பொழுது அந்த அந்த மேகங்களில் உள்ள ஹைட்ரொஜென் வாயு ஹீலியம் வாயுவாக மாற ஆரம்பிக்கிறது. அது ஏன் தனியா இருந்தா மாற முடியாதா-னா முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவு மேகக்கூட்டம் சேர்ந்த பின் தான் இந்த ரசாயன மாற்றங்கள் ஆரம்பிக்கின்றன. இந்த ரசாயன மாற்றத்தால் ஏற்படும் சூடு ,வெளிச்சம் மற்றும் கதிர்வீச்சுகள் நாலா புறமும் பெரும் வேகத்துடன் வீசப்படுகின்றன. நம்மூருல இப்போ வெயில் கொளுத்துதுல?? எல்லாத்துக்கும் அணுக்கரு சேர்க்கைதான் காரணம்.
சரி நட்சத்திரம்ங்கறது ஒன்னா சேர்ந்த ஹைட்ரோஜென் மேகக்கூட்டங்கள் சும்மா இருக்கமுடியாம ஆட்டம் போடறதுனால உருவாகுதுன்னு சொல்றீங்க,அப்போ கிரகங்கள் எல்லாம் எப்படி உருவாகுது??
சும்மா சுத்திட்டு இருக்கற இந்த வாயுக்கூட்டம் ஒன்னா சேர்ந்தா நட்சத்திரம் ஆகும் ஆனா அதுவே ஒரு நட்சத்திரத்தால ஈர்க்கப்பட்டு அதை சுத்தி வர ஆரம்பிச்சுதுன்னு நினைச்சுக்கோங்க,அதுக்கு பேருதான் கிரகங்கள். அதுல பார்த்தீங்கன்னா பூமியை போல சில கிரகங்கள் தான் திண்ம பொருளா (solid state)இருக்கும். வாயுக்கள் எல்லாம் குளிர்ந்து போய்,பல ரசாயன மாற்றங்கள் எல்லாம் ஆகி சில கிரகங்கள்தான் இப்படி திண்மப்பொருளாகிடுது (solid state),மத்தபடி பார்த்தீங்கன்னா பெரும்பாலான கிரகங்கள் எல்லாம் வாயு நிலையில் தான் இருக்கும் (உதாரணத்துக்கு வியாழன் (Jupiter)).


சரி கிரகங்கள் எப்படி உருவாகுதுன்னு பார்த்தாச்சு,அப்போ துணைக்கோள்கள் (satellites)எல்லாம் ??
இப்போ நட்சத்திரங்கள் ஆகாத மேகங்கள் எல்லாம் பக்கத்துல இருக்கற நட்சத்திரங்களால ஈர்க்கப்பட்டு கிரகங்கலா சுத்துதுல?? அது மாதிரி சில குட்டி மேகங்கள் எல்லாம் கிரகங்களின் ஈர்ப்பு விசையினால் கவரப்பட்டு அதை சுத்தி துணைகோள்களா சுத்திட்டு இருக்கு. இங்கேயும் ரசாயன மாற்றங்களால் சில துணைகோள்கள் திண்ம நிலையில் இருக்கலாம்,சிலது வாயு நிலையில் இருக்கலாம். இதுல கவனிக்கவேண்டிய விஷயம் என்னனா நம்ம பூமிக்கு மட்டுமே ஒரே ஒரு துணைக்கோள் (நிலா) இருக்கே தவிர எல்லா கிரகங்களுக்கும் அப்படி இருக்கனும்னு அவசியம் இல்லை.
உதாரணமா செவ்வாய் கிரகத்துக்கு 2 கோள்கள் உண்டு, வியாழன் கிரகத்துக்கு சின்னதும் பெரிசுமா 63 கோள்கள் இருக்கு!!! :O

என்னடா எல்லாத்துக்கும் வாயு,மேகக்கூட்டம்னு சொல்ற!! எங்கே இருந்து இந்த வாயு மேகம் எல்லாம் வந்திச்சுன்னு கேக்கறிங்களா???
அதை அடுத்த பதிவுல பார்க்கலாம்!!
வரட்டா?? ;-)


நன்றி:
1.)Star. (2007, May 1). In Wikipedia, The Free Encyclopedia. Retrieved 00:29, May 4, 2007, from http://en.wikipedia.org/w/index.php?title=Star&oldid=127445493
2.)Planet. (2007, May 3). In Wikipedia, The Free Encyclopedia. Retrieved 00:39, May 4, 2007, from http://en.wikipedia.org/w/index.php?title=Planet&oldid=127999397
3.)Satellite. (2007, May 3). In Wikipedia, The Free Encyclopedia. Retrieved 00:41, May 4, 2007, from http://en.wikipedia.org/w/index.php?title=Satellite&oldid=127837210
4.) http://www.fas.org/irp/imint/docs/rst/Sect19/Sect19_2a.html
பி.கு : எனக்கு தெரிந்த புரிதலுக்கு ஏற்றார்போல் இந்த பதிவை எழுதியிருக்கிறேன். பதிவில் ஏதாவது தவறு இருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்கிறேன்.
நன்றி

வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 1 (பிரபஞ்சம் உருவானது எப்படி)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 2(Big bang theory)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 3(Light years)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4(Black holes)
வானத்தில் விரியும் அதிசயங்கள் - பாகம் 5(Extra terrestrial life)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 6(Alien communication)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 7(UFOs)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 8(Roswell - part 1)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 9(Roswell - part 2)

Related Posts Widget for Blogs by LinkWithin