மே மாத நாட்காட்டிகள்

முன்பெல்லாம் மாதத்திற்கு இரண்டு தான் வெளியிட்டுக்கொண்டிருந்தேன்.


ஆனால் வாரத்திற்கு ஒன்று என்ற கணக்கில் இனிமேல் ஒவ்வொரு மாதமும் 4 - 5 வெளியிடலாம் என்று பார்க்கிறேன்.
இந்த மாதத்திற்கான நாட்காட்டிகள் உங்கள் பார்வைக்கு... :)கண்ணிழந்த மாணவன் போல்....

கல்லூரியில் நாமெல்லாம் பாடத்தை என்றைகாவது கவனித்திருக்கிறோமா??
இவர்கள் ஏதாவது எடுக்கட்டும் நாம் பின்பு பார்த்துக்கொள்ளலாம்!! பிறகு வீட்டிற்குச்சென்று பார்த்துக்கொள்ளலாம் அல்லது தேர்வுக்கு முன் படித்துக்கொள்ளலாம் என்று விட்டு விடுவோம் அல்லவா??
வகுப்பில் ஆசிரியர் நடத்துவது தவிர நாம் பாடத்தை படிக்க வசதியே இல்லையென்றால்??? யாராவது படித்துக்காண்பித்தால் மட்டுமே பாடத்தை மறுபடியும் கிரகிக்க முடியும் என்ற நிலையிருந்தால் எப்படி இருக்கும்???

போன பதிவில் கூறியது போல இன்று கண்பார்வையற்றோருக்கான படித்தல் அமர்வுக்கு(reading session) சென்றிருந்தேன்.வள்ளுவர் கோட்டத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் வாரா வாரம் இப்படி நடக்குமாம்,கோடம்பாக்கம் இரயில் நிலையத்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டு சென்ற போது நண்பர் சொல்லிக்கொண்டு வந்தார்.நான் முந்தைய பதிவில் ஒரு கண்பார்வையற்றோருக்கான பள்ளிக்கு செல்லப்போவதாக கூறியிருந்தேன்!
அது தவறு!

நான் சென்றது ஒரு சாதாரண பள்ளியில் நடைபெறும் கண்பார்வையற்றோருக்கான படித்தல் அமர்வு.பள்ளியினுள் நுழைந்ததும் ஒரு அரங்கத்தில் ஆங்காங்கே 2-3 பேர்களாக கூட்டம் கூட்டமாக மக்கள் அம்ர்ந்திருப்பதை கண்டேன்.சிறியவர் பெரியவர் என்ற பேதம் இன்றி பல தன்னார்வலர்கள் இந்த படித்தல் அமர்வுக்கு வந்திருந்தார்கள்!! ஏதோ ஒரு சாய் அமைப்பு வாராவாரம் இந்த அமர்வை வாரா வாரம் நடத்துகிறது.அந்த சங்கத்தின் அங்கத்தினர்கள் பரவலாக இதில் ஈடுபட்டாலும் தற்போது நிறைய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களும் இந்த அமர்வில் கலந்துக்கொள்ளுகிறார்களாம்.ஒவ்வொருவரும் ஒரு மாணவரை தேர்ந்தெடுத்துக்கொண்டு அவர்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடநூல்களை வைத்துக்கொண்டு படித்துக்காட்டிக்கொண்டு இருந்தார்கள்.இந்த மாணவர்கள் கல்லூரியில் B.A,B.Ed,M.Phil என படிப்பவர்கள்.கணிதம்,அறிவியல் போன்றவை இவர்கள் புரிந்துக்கொள்வது கடினம் என்பதால் பெரும்பாலனவர்கள் மொழி,இலக்கியம்,வரலாறு போன்ற பாடங்களை படிப்பவர்கள்.கண் பார்வை உள்ள மாணவர்களுடன் சேர்ந்து சாதாரண கல்லூரியில்,எல்லோருக்கும் உள்ள பாடத்திட்டதை தான் இவர்களும் படிக்கிறார்கள்.
இதே பள்ளியில் சுமார் 17 வருடங்களாக இந்த நிகழ்ச்சி நடந்துக்கொண்டு வருகிறது.மாணவர்களுக்கும் அவர்களுக்கு படித்துக்காட்டுபவர்களுக்கும் இதை நடத்தும் அமைப்பினர் தண்ணீர்,காபி,டீ கொடுத்து இளைப்பாற்றுகின்றனர்.

இது போன்ற நிகழ்ச்சியை பார்க்கும் போதே ஒரு வித்தியாசமான மனநிலைக்கு மனம் சென்று விடுகிறது!! இவர்கள் எப்படி படிக்கிறார்கள் என்றே என்னால் கற்பனை செய்துப்பார்க்கமுடியவில்லை.நான் முன்பே சொன்னது போல் வகுப்பில் ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும்போதே முடிந்தவர புரிந்துக்கொள்ள வேண்டும்.அதன் பின் இது போன்ற படித்தல் அமர்வில் கேட்டுக்கொண்டால் தான் உண்டு!!சில மாணவர்கள் இந்த படிப்பர்கள் வாசிக்க,அதை ப்ரெயில் எழுத்துக்களில் பதித்துக்கொண்டு ,பின்னர் படிக்க உபயோகித்துக்கொள்வார்கள்.
சிலர் B.Ed எல்லாம் படிப்பதால் அவர்களின் பாடத்திட்டத்தின் படி சார்ட் எல்லாம் செய்ய வேண்டும்.அதையும் இது போன்று அமர்வுகளுக்கு வருபவர்களே செய்துக்கொடுப்பார்கள்.மற்றவர்கள் படிக்கும் அதே பாடத்திட்டம்தான் இவர்களுக்கும்,எந்த மாறுதலும் கிடையாது.
இதைத்தவிர தேர்வு நேரங்களில் இவர்கள் சொல்லுவதை எழுத ஆள் பிடிக்க வேண்டும்.அதற்கு தகவல் தொழில்நுட்ப தொழிலில் இருக்கும் இளைஞர்கள் நிறைய பங்களிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.எழுத முடியாவிட்டாலும் தேவையை பற்றிய மின்னஞ்சல்களை தன் நண்பர் வட்டத்துக்கு அனுப்பி வைத்து இவர்களுக்கு எழுத்தர்களை திரட்ட உதவுகிறார்கள்.
எனது நண்பர் வெகு நாட்களுக்குப்பின் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதால் அவரின் பழைய நண்பர்களையும்,அவர் படித்தர்/எழுத்தராக இருந்து உதவிய சில மாணவர்களையும் சந்தித்துக்கொண்டிருந்தார்.நானும் அவரின் பின் சென்றுக்கொண்டிருந்தேன்.இந்த நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கும் சங்கத்தின் அமைப்பாளர் ஒருவரின் அனுமதி பெற்று நான் படம் பிடிக்க ஆரம்பித்தேன்!! ஆனால் பள்ளிக்கூடத்தின் நிர்வாகிகள் சிலர் பள்ளிக்கூடத்தினுள் படம் எடுக்கக்கூடாது என்று சொல்லிவிட்டதால்,இரண்டு படங்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை(அந்த இரண்டு படங்க்களைத்தான் இந்தப்பதிவில் போட்டிருக்கிறேன்).17 வருடங்களாக இடம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்,நீங்கள் படம் எடுக்கப்போய் இனிமேல் வேண்டாம் என்று சொல்லிவிடப்போகிறார்கள் என்று ஒருவர் கிலியை கிளப்ப,கேமராவை பைக்குள் போட்டுக்கொண்டேன்.
தான் திரும்பவும் வெளிநாடு சென்றுவிடப்போவதால்,என் நண்பர்,என்னுடைய தொலைப்பேசி எண்ணை தன் நண்பர்களிடம் கொடுத்துவிட்டார்.இனிமேல் எழுத்தர்கள் திரட்ட என்னையும் தொடர்புக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.எனது நண்பர் வட்டத்திலும் இந்த தகவலை அளித்து இந்த முயற்சியில் உதவலாம் என்று நினைக்கிறேன்.

வீட்டிற்குத்திரும்பி வந்தவுடன் கப்பி நிலவரிடமிருந்து எழுத்தர்கள் திரட்டலுக்கான ஒரு தளத்தின் சுட்டி ஒன்றும் கிடைத்தது.
தேர்வுகள் பெரும்பாலும் வாரநாட்களில் நடக்கும் என்பதால் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் எழுத்தராக நினைத்தால் சௌகரியமாக இருக்கும் என்று தோன்றியது!!
இன்னும் இந்த முயற்சிகளை பற்றி விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கு இந்தத்தகவலை முடிந்தவரை சேர்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிறைந்தது.

பி.கு:என்னை இந்த அமர்வுக்கு அழைத்துச்சென்ற நண்பரின் வலைபதிவில் இருந்து இரண்டு இடுகைகளை இங்கே பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றேன்.

வாழ்கை அவ்வளவு சுலபம் இல்லை, ஆனா போராடணும்!

என் முகத்தை எனக்குக் காட்டியவர்கள்

தினசரிப்பயணமும் மற்றும் சில செய்திகளும்

வந்து 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது!! வெற்றிகரமாக இரண்டாவது வாரமாக அலுவலகத்திற்கும் சென்று வந்துக்கொண்டிருக்கிறேன்.ஆன் ஆர்பரில் 15 நிமிடங்கள் காரில் பயணம் செய்தால் அலுவலகம் வந்து விடும்,இங்கு 1:30- 2:00 மணி நேரம் பயணம் செய்து அலுவலகம் செல்வது புது அனுபவமாக இருக்கிறது! அதுவும் பைக்கில்,ரயிலில்,பின்பு ஆப்பீஸ் ஷட்டில் என்று பலவிதமான ஊர்திகளில் தாவித்தாவி செல்வது புதிதாக இருக்கிறது!என்னை விட தொலைவில் இருந்து வருபவர்களைக்கண்டு பரிதாபப்படாமல் இருக்கு முடியவில்லை.


சென்னையில் திரும்ப வண்டி ஓட்டுவது பழக நான் நினைத்ததை விட சொற்ப நேரமே தான் பிடித்தது.ஆனாலும் அவ்வப்போது முக்கிய ரோட்டினுள் வேகத்தைக்குறைக்காமல் திடீரென நுழையும் அறிவுஜீவிகளாலும்,ரோட்டை கடக்கும்போது ரோட்டில் யாராவது வருகிறார்களா என்று பார்க்காமலேயே கடந்து செல்லும் பாதசாரிகளாலும் அவ்வப்போது உயிர் போய் வருகிறது.
கூடவே ரோட்டில் உள்ள நெரிசலும்,அதிலும் மக்கள் செல்லும் வேகமும் அவசரமும் வாழ்க்கையை ஜேம்ஸ் பாண்ட் படம் போல் விறுவிறுப்புடன் எடுத்துச்செல்ல உதவுகிறது.இதில் நான் வழக்கமாக இரயில் நிலையம் அருகில் வண்டியை நிறுத்தும் இடத்திலும் வண்டிகளின் நெருக்கம் மலைக்க வைக்கிறது.மாலையில் திரும்பி வந்த வுடன் எனது வண்டியை எடுப்பதற்கு சற்றே மெனக்கெட வேண்டியுள்ளது! இதில் முந்தாநாள் எனது தலைக்கவசத்தின் முன் உள்ள கண்ணாடியை வேறு உடைத்து வைத்து விட்டார்கள். கண்ணாடி இல்லாத தலைக்கவசத்தை போட்டுக்கொண்டு,அரவிந்த்சாமி போல் இருந்த நான் அடுப்புல வெந்த சாமி ரேஞ்சுக்கு வளம் வருவது அந்தோ பரிதாபம்.

இரயிலில் 2 - 3 மூன்று நாட்களாக பாடல்கள் கேட்டுக்கொண்டு வர ஆரம்பித்துவிட்டேன்!! இரயிலின் இறைச்சலினூடே அதிக ஒலியைவைத்துக்கொண்டு கேட்பது அவ்வளவாக பிடிக்கவில்லை ஆனால்,இசையை வேண்டம் என்று என்னால் என்றைக்குமே சொல்ல முடிந்ததில்லை.
அதுவும் இன்றைக்கு வரும்போது கேளடி கண்மனி படப்பாடல்களை வெகு நாட்களுக்கு பிறகு இரசித்துக்கேட்டுகொண்டு வந்தேன்!
அந்தப்படத்தில் வரும் "கற்பூர பொம்மை ஒன்று எனும் பாடலை பற்றி ஏற்கெனவே இசையரசி பதிவில் சிலாகித்திருக்கிறேன்.அடுத்து "மண்ணில் இந்தக்காதல் இன்றி" பாடலில் அழகாக அடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளின் அணிவகுப்பை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை.

"முத்துமனி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோர் பிறவி
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா............."அட்ரா அட்ரா!!!

இதை எழுதியிருப்பது பாவலர் வரதராஜன் என்று கப்பி நிலவர் மூலம் அறிந்துக்கொண்டேன். அதிகமாக கேள்விப்படாத கவிஞர்!!ஆனால் அசத்தியிருக்கிறார்.

அண்ணாச்சி!! காலைக்காட்டுங்க!!


அப்புறம் அடுத்து "நீ பாதி நான் பாதி கண்ணே" பாட்டு,என்னமா ரொமாண்டிகா எழுதியிருக்காங்க.."இடது விழியில் தூசி விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே
இருட்டில் கூட, இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
சொர்கம் எதற்கு
என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா
இந்த மனம் தான்
என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம்தான் அன்பே வா
சுமையானது ஒரு சுகமானது சுவை நீ தான்..."

இப்படி எந்தன் மனம் கவர் பாடகர் யேசுதாஸ் உமா ரமணனுடன் உருகிப்பாட,நானும் கூடவே உருகிவிட்டேன்....
இப்படியே ரயில் பயணம் நேரம் போவதே தெரியவில்லை....


தாம்பரம் முடிச்சூர் சாலையில், வல்லக்கோட்டை போகும் வழியில் நடுவில் ஒரு திருப்பம் எடுத்து சிறிது தூரம் சென்றால் எறையூர் என்று ஒரு ஊர் வரும் . அங்கிருக்கும் சமூக சேவை ஸ்தாபனம்தான் "The New Life charitable trust".இங்கு ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வாழ்வதற்கு காப்பகம் நடத்தி வருகிறார்கள்.தவிர உள்ளூரில் உள்ள மக்களின் மேம்பாட்டுக்காகவும் உதவிகள் புரிந்துக்கொண்டு வருகிறார்கள்.இங்கு நான் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு முறை சென்று பார்த்திருக்கிறேன்.அவர்கள் செயல்படும் விதம் மற்றும் மேலாண்மை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அதற்குப்பின் அவ்வப்போது என் நண்பர் மூலமாக பொருளுதவி செய்வது தவிர அவர்களுடன் எனக்கு தொடர்பில்லை.இன்னிலையில் சமீபத்தில் அவர்களின் சமையலறை கூறை வேயும் பணிக்காக காசு தேவைப்படுகிறது என்று செய்தி கிடைத்தது.அதற்காக அவர்களின் இடத்திற்கு சென்று படங்கள் சில பிடித்து பதிவு ஒன்று போட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன்.அதற்கு கூட வருவதற்கு யாரேனும் கிடைப்பார்களா என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.கடைசியில் யாரும் கிடைக்காமல் ,எனது உடன் பிறந்த வெட்கம்/தயக்கம் காரணமாக போன வாரம் போக முடியவில்லை.
அவர்களின் த்ற்போதைய தேவைக்கு பொருளுதவி அளிக்க விரும்புவோர் காசோலை,கேட்புக்காசோலை அல்லது மணி ஆர்டர் மூலமாக உதவலாம். இல்லையென்றால் அவர்களின் வங்கி கணக்கிற்கு இணையம் மூலமாகவும் பணம் அனுப்பலாம். வெளிநாட்டில் இருப்பவர்கள் பணம் அனுப்புவதற்கும் அவர்களின் இணைய தளத்தில் வழிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
மேலும் விபரங்கள் அறிய அவர்களின் இணைய தளத்தையோ அல்லது அவர்களின் அலுவலக தொலைபேசியையோ தொடர்பு கொள்ளலாம்.கண்பார்வையற்றோருக்கு தேர்வெழுத எழுத்தராக செல்வதற்கான கோரிக்கைகளை ஒன்றிரண்டு வருடங்களாகவே பார்த்துவந்திருக்கிறேன். ஆனால் எனக்கோ தற்போது எனது பெயரை எழுதினாலேயே கை வலிக்க ஆரம்பித்து விடுகிறது.அதுவும் விசைப்பலகையிலேயே மொழிபழகி இப்பொழுதெல்லாம் எழுதுவதென்றாலே மலைப்பாக இருக்கிறது! தவிர கையெழுத்தும் கேவலமாகிப்போய்விட்டது!! ஆங்கிலமே இப்படியென்றால் தமிழ் பற்றி கேட்கவே வேண்டாம்!!! இதை வைத்துக்கொண்டு ஒருவருக்கு பரிட்சை எழுதப்போகும் அளவிற்கும் மனதில் தில் இல்லை!!
சமீபத்தில் இணையத்தில் கிடைத்த ஒரு நண்பர் இந்த வாரக்கடைசியில் ஒரு கண்பார்வையற்றோருக்கான பள்ளிக்குச்செல்ல என்னை அழைத்திருக்கிறார். அவர் அவர்களுக்கு வெகு காலமாகவே படிப்பதற்கு சார்ட் செய்து கொடுப்பது,படித்துக்காட்டுவது,தேர்வில் கேள்விகளை படித்துக்காட்டி அவர்களின் விடைகளை விடைத்தாளில் எழுதுவது உள்ளிட்ட பல உதவிகளை செய்துக்கொண்டு வருபவர்!! அவரோடு இந்தப்பள்ளிக்குச்சென்று அவரின் செயல்பாடுகளைப்பார்த்து முடிந்தால் சில படங்கள் பிடித்துக்கொண்டு வந்து ,அதை பற்றி என் பதிவில் எழுதலாம் என்று எண்ணம்!!
எப்படி போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!!
இன்னும் சிறியதும் பெரியதுமாக சிதறல்கள்,தற்போதைய வாழ்வில்!! முழுவதும் சொல்ல பதிவுகள் போதாது,அதனால் இத்தோடு விடை பெறுகிறேன்!!
அப்புறமா பாக்கலாம்!!
வரட்டா?? ;)

ஏப்ரல் மாத நாட்காட்டிகள்


முதல் படம் நான் இருந்த அபார்ட்மெண்ட்டில் ஒரு மாலைப்பொழுதில் படம் எடுக்க சுற்றிக்கொண்டிருந்த போது கண்ணில் பட்டது! ட்ரைபாட் போட்டு குறைந்த ஷட்டர் வேகத்தில் அழகான ஒளியமைப்போடு பின்னால் இருக்கும் மேகங்கங்களின் கருமையும் சூழ்மையும் நான் நினைத்த படி பெற முடிந்தது.
படத்தின் மூலம் ஃப்ளிக்கரில் இதோ.நான் 105MM வாங்கியதில் இருந்து சிறியதாக ஏதாவது பொருளை படம் பிடிக்க வேண்டும் என்று அலைந்து கொண்டிருந்தேன்.ஒரு மாலை ஏதேச்சையாக மேஜை விளக்கின் ஒளியில் அழகாக ஜொலித்துக்கொண்டிருந்த இந்த 1 பைசா நாணயம் (1 செண்ட்) என் கண்ணில் பட்டது!!
விட்டு வைக்க முடியுமா?? :-)
இந்தப்படம் ஃப்ளிக்கரில் இதோ! :-)

பி.கு:படத்தில் மேல் க்ளிக்கி பெரிதாக்கிக்கொள்ளலாம்.
இந்த முறை நாட்காட்டிகள் பதிவிடுவதில் தாமதமானதற்கு மன்னிக்கவும்! :-)

போன மச்சான் திரும்ப வந்தான்

வாழ்க்கையின் சில நேரங்களில், ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு தடம் பெயர்ந்து செல்வது போன்ற உணர்வு நம் அனைவருக்கும் ஏற்படுவது வாடிக்கையே.நமது பள்ளிக்கூட படிப்பை முடிக்கும்போது,கல்லூரி வாழ்க்கையை முடிக்கும் போது என்று நம் அனைவருக்குமே இந்த உணர்வுகள் வந்து சென்றுக்கொண்டுதான் இருக்கும்.
இரண்டு வருடங்களுக்கு முதன் முதலாக வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்ட போது இந்த உணர்வுதான் மேலோங்கி நின்றது.அந்த தருணத்தை உங்களுடன் விலாவாரியாக பகிர்ந்துக்கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
தற்போது என் பணி முடிந்து சென்னைக்கு திரும்பப்போகிறேன் என்றபோது அதே போன்ற ஒரு உணர்வு தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லை.

வருங்காலத்தில் எப்போவாவது என் வாழ்க்கையை நான் திரும்பிப்பார்க்க நேர்ந்தால் இந்த இரண்டு வருடங்கள் தனியாக ஒரு சுவாரஸ்யமான காலக்கட்டமாக திகழும் என்பதில் ஐயமில்லை.நான் தமிழில் பதிவெழுத ஆரம்பித்தது,சமையல் கற்றுக்கொண்டது,முகம் தெரியாத பலநூறு நண்பர்களை கூட்டிக்கொண்டது,தனிமை,வெறுமை,இனிமை,புதுமை,அமைதி என பல வார்த்தைகளுக்கு அர்த்தங்களை விஸ்தரித்துக்கொண்டது என்று பல விஷயங்களை என் வாழ்க்கையில் அறிமுகப்படுத்திய காலம்,இந்த இரண்டு வருடங்கள்.

இவ்வளவு இருந்தும் திரும்பிபோகப்போகிறோம் என்ற பரபரப்பு எதுவும் கடைசி வரை ஏற்படாதது தான் வியப்பு.இங்கு வரும்போது எனக்கு இருந்த பரபரப்பு,விடுமுறை முடிந்து அடுத்த வகுப்பில் ஒரு புது பள்ளிக்கூடம் சேரும் சிறுவனுக்கு இருக்கும் படபடப்பை விட எந்த அளவும் குறைந்தது அல்ல.புது மனிதர்கள்,புது தட்பவெட்பம்,புது வழக்கங்கள் என புதிதான ஒரு வாழ்க்கையை வாழப்போகிறோம் என்ற எதிர்ப்பார்ப்பே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.ஆனால் இப்பொழுது அப்படி எந்த விதமான உற்சாகமும் இல்லை.அடுத்த வேளைக்கு என்ன சாப்பாடு என்று கவலை கொள்ள வேண்டாம்,அதான் அம்மா இருக்காங்களே ,என்ற நிம்மதி மட்டுமே மனதில் மேலோங்கி இருக்கிறது.
"சோறு போட தாயிருக்கா,பட்டினியை பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோவிலுக்கு போனதில்ல"
என்ற திரைப்பாடல் வரிகள் தான் மனதில் தோன்றி மறைகின்றன.
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.

இப்படி மகிழ்ச்சி சோகம் எதுவுமில்லாமல் ஒரிவிதமான அமைதியான மனநிலையுடனே எனது பயணத்தை தொடங்கினேன். கிளம்புபோது எடுத்துக்கொண்டிருக்கும் மூட்டையினால்(luggage) பிரச்சினை வருமோ என்று மட்டுமே சிறிய கலக்கம் இருந்தது. சொல்லி வைத்தார்போல் எனது carry on baggage பெரியதாக உள்ளது என்று ஒரு சிறிய பிரச்சினை தோன்றி மறைந்தது. .நான் செக் இன் செய்ய வரிசையில் நின்றுக்கொண்டிருக்கும் போதே,எனக்கு முன்னால் இருந்த பிரயாணிகள் அனைவருக்கும் இந்த பை பெரியதாக இருக்கிறது,இதை செக் இன் செய்துவிடுங்கள் என்று எல்லா carry on luggage -க்கும் விமான நிறுவன ஊழியர்கள் தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டனர்.இதை பார்த்த வுடன் எனக்கு பயமாகி விட்டது.ஏனென்றால் எனது carry on luggage-இல் என்னுடைய எஸ் எல் ஆர் கேமரா(லென்ஸ்களுடன்) மற்றும் கேம்கார்டர் ஒன்றும் இருந்தது.இதை நான் செக் இன் செய்யப்போக,சிங்கம்லே ஏஸ் அண்ணாச்சிக்கு ஆகியது போல் எனக்கும் ஆகிவிடுமோ என்று கிலி தொற்றிக்கொண்டது.

உடனே வரிசையில் இருந்துக்கொண்டே நான் கூட கொண்டு வந்திருந்த laptop backpack-இல் கேமரா பையை திணித்து,carry on luggage-இல் கேமரா மற்றும் லென்ஸ்களை தனியாக பொருத்தி சற்றே damage control செய்ய முனைந்துவிட்டேன்.கடைசியாக என்னுடைய முறை வரும்போது லேப்டாப் பேக் சற்றே வீங்கிக்கொண்டு நிற்க,carry on luggae பெரியதாக ஒன்றும் அளவு குறையாமல்,ஒரு விதமான ரெண்டாம்கெட்டான் நிலையில் இருந்தது.
வழக்கமாக எடுத்துச்செல்லும் carry on பைதான் இது என்றாலும் நான் சென்ற Lufthansa விமான நிறுவனத்தில் மிகவும் கறாராக இந்த சிறியப்பெட்டியை செக் இன் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.
எனக்கோ என் கேமராவை விட்டுப்பிரிய மனதில்லை.உடனே அங்கே பக்கத்தில் இருந்த ஒரு அளவுகோலில் என் பையை பொருந்தி,"பார்த்தீர்களா! உங்கள் அளவுகோலிற்கு உட்பட்டுதான் இந்தப்பை இருக்கிறது" என்று பூசி மெழுகி ஒரு வழியாக செக் இன் செய்யாமல் தப்பித்தேன்.அவர்களும் அறைமனதோடு ஒத்துக்கொண்டார்கள்!!கடைசி வரை சற்றே பிதுங்கிக்கொண்டிருந்த எனது laptop backpack-ஐ அவர்கள் கண்டுக்கொள்ளாதது ஆச்சரியமே!

அதை முடித்து செக்யூரிடி செக் செய்யுமிடத்திற்கு வந்தால்,என்னை பார்த்துவிட்டு உனக்கு சிறப்பான செக்கிங் செய்ய வேண்டும் என்று தள்ளிக்கொண்டு போய்விட்டார்கள்! அடப்பாவிகளா என்னை பார்த்தால் தீவிரவாதி போலவா இருக்கிறது?? நான் என்னமோ பால் வடியும் முகம் என்றெல்லாம் என்னை பற்றி பதிவெழுதிக்கொண்டிருக்கிறேன்,என்று நினைத்துக்கொண்டேன். பிறகு என் பைகளை எல்லாம் சோதனை செய்துவிட்டு,"ஐயா! உங்கள் பையில் சந்தேகத்திற்கிடமாக ஒன்றும் இல்லை,நீங்கள் செல்லலாம்! சிரமத்திற்கு மன்னிக்கவும்" என்று போகவிட்டார்கள்!!
"அதான் நான் அப்போவே சொன்னேனே!! இப்படி வெளையாடுறதே உங்களுக்கு எல்லாம் வழக்கமா போச்சு!! ஒரே விஷமம்" என்று விளையாட்டாய் கடிந்துகொள்ள நினைத்து,ஆனால் சொல்லாமல் விட்டேன்.வீடு வந்து சேர வேண்டும் அல்லவா!!

டிட்ராய்ட்டில் இருந்து சற்றே தாமதமாக கிளம்பிய விமானம் எந்த வித பெரிய களேபரமும் இன்றி இனிதாக ஃபிராங்ஃபர்ட் வந்து இறங்கியது.
இந்த பயணத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்,விமானப்பணிப்'பெண்'ணாக (?!) இருந்த ஒரு ஜெர்மன் "பாட்டி"யை பற்றி சொல்லியாக வேண்டும்.பயணம் நெடுக்க என்னை நன்றாக கவனித்துக்கொண்டார்!! அதாவது வேளாவேளைக்கு சரியாக சாப்பாடு தந்தார் !!
நீங்கள் வேறெதுவும் நினைத்துக்கொள்ள வேண்டாம்!! எனக்கு சைவ உணவு தான் கட்டாயமாக தேவை என்று கூறியிருந்ததால் ஒவ்வொரு முறையும் பிரத்தியேகமாக சிறப்பு சைவ உணவு கொடுத்தார்! (சைவ உணவு கேட்கும் எல்லோருக்கும் அப்படித்தான் தருவார்கள் என்பது வேறு விஷயம்.)
கடைசியில் இறங்கும்போது,"நீங்கள் சென்னை செல்கிறீர்களா?? எனக்கு இந்தியாவில் மிகவும் பிடித்தமான நகரம் சென்னை தான்,கடந்த பிப்ரவரி கூட பாண்டிச்சேரியில் விடுமுறைக்காக வந்திருந்தேன்"என்றெல்லாம் சொல்லி என் இதயத்தில் இடம் பிடித்துவிட்டார்.அப்படியே அவரிடம் மொக்கை போட்டு விட்டு விமானத்தில் இருந்து இறங்கினேன்.அவரின் பெயரை கேட்க மறந்துவிட்டேன்!! (ரொம்ப முக்கியம்....)

ஃபிராங்ஃப்ர்ட்டில் இருந்து சென்னைக்கான விமானம் சுமார் 11 மணிக்கு மேல் என்று பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது,அதே சற்றே முன்பாக 10:15-க்கு கிளம்பும் என்று டிட்ராய்ட்டில் கொடுத்த boarding pass-இல் போட்டிருந்தார்கள்.இப்படியிருக்க நாங்கள்(நான் மற்றும் எனது நண்பர்) ஃப்ராங்ஃபர்ட் விமான நிலையத்தில் இறங்கியபோது மணி 6:30-7:00 தான் இருக்கும். இறங்கிவிட்டு நேராக எங்கள் போர்டிங் பாஸில் குறிப்பிட்டிருந்த கேட் B42-க்கு சென்று விட்டோம்!! அங்கே சென்றால் எங்கள் விமானம் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை.சரி நேரம் தான் இருக்கிறதே என்று என் நண்பர் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்,நான் இந்த பதிவை எழுத ஆரம்பித்தேன்!! நடுவில் காபி குடிக்கலாம் என்று கிளம்பி ஒரு இடத்தில் காபி வாங்க அது விஷக்கசப்பாய் வாயிலேயே வைக்க முடியவில்லை!! எவ்வளவு சர்க்கரை போட்டாலும் சரிப்படவில்லை.பாதி குடித்து,மீதியை தூர எறிந்ததுதான் மிச்சம்.

இதற்கு மேல் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை என்பதால் விமானம் பற்றி தகவல் அறிய வெளியே கிளம்பினேன்.அப்பொழுது எங்கள் விமானம் கேட் B28-க்கு மாற்றிவிட்டதாக அறிவித்தனர்."என்னங்கடா இது,ரயில்வே ப்ளாட்பார்ம் மாத்தறா மாதிரி கேட்டு மாத்தறாங்க"என்று விமர்சனம் செய்துக்கொண்டு கேட் B28-க்கு வந்து சேர்ந்தோம்.

அதன் பிறகு பயணத்தில் பெரியதாக ஒன்றும் நிகழவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.ஃப்ராங்ஃபர்ட்டில் மீதி நேரத்தில் ஒரு சுட்டிப்பெண்ணின் வால்தனத்தை ரசித்துக்கொண்டே போக்கி விட்டேன்!! "ரொம்ப வால்தனம் பண்ணா அந்த மாமா உன்னை அடிப்பாரு" என்று அந்த குழந்தையின் அம்மா என்னை சுட்டிக்காட்டி டேமேஜ் செய்தார்! விமானத்தில் சிறிது தூங்கி,சற்றே படம் பாத்து,பாட்டு கேட்டு என்று இருப்பு கொள்ளாமல் பயண நேரத்தை ஓட்டிவிட்டேன்.
இறங்கி இம்மிக்ரேஷன் கஸ்டம்ஸ் என்று முடிந்து வெளியே வர 1:30 ஆகிவிட்டது!!!
அடுத்த நாளே நம்ம ஜிரா அண்ணாச்சியை சந்தித்து மகிழ்ந்தாகிவிட்டது!! ஒரு விதமான தொடக்கம்/முடிவு நிலையில் இருப்பது போன்ற ஒரு மனநிலை படர்கிறது! பழைய ப்ராஜெக்ட் முடிந்து ,புது பிராஜெக்ட்,புது மேலாளர்,புது வேலை நண்பர்கள்..... இப்படி பலவும் மாறப்போவதால் என் மனதில் இப்படி தோன்றுகிறது என்று எண்ணுகிறேன்.
மாறுதல்களோடு புரிதல்களும் ஏண்ணங்களும் எழுத்துக்களும் ஆக்கங்களும் ,இவற்றோடு வாழ்க்கையும்....... LIfe goes on.

இதை ஒரு சுவையான பதிவாக எழுத முயற்சிக்காமல்,என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வின் பதிவாக,நண்பர்களுக்கு பகிர்வதற்காக மனதில் தோன்றியதை அப்படியே எழுதிவிட்டேன்.மொக்கையாக இருந்தால் மன்னிக்கவும்!!

Related Posts Widget for Blogs by LinkWithin