அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 2

சென்னையின் மென்மையான வானில் படர்ந்திருந்த பிஞ்சுப்பஞ்சு மேகங்களை இறக்கமில்லாமல் கிழித்துக்கொண்டு விமானம் எண் 0468 மும்பையை நோக்கி விரைந்துக்கொண்டு இருந்தது. விமானம் விபத்துக்குள்ளானால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை விமான சிப்பந்தி ஒருவர் செய்து காட்டினார் பின் அவ்வப்போது குளிர்பானம் மற்றும் தின்பண்டங்கள் வேண்டுமா என்று பணிப்பெண்கள் கேட்டு கொண்டிருந்தார்கள், இது தவிர பயணம் பெரும்பாலும் அமைதியாகவே கழிந்தது. பிரயாணக்காலம் முழுதும் மும்பை சென்ற வுடன் அங்கு என்ன செய்வேனோ என்று கவலை மட்டும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருந்தது. மும்பையில் ஏமாற்றி பணம் பறிக்கும் கூட்டங்கள் பல உண்டு என்று அரசல் புரசலாக அவ்வப்போது கேள்விப்பட்ட சமாசாரங்கள் வேறு வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருந்தன. மும்பையை சேர்ந்த ஒரு ஆங்கில நாளிதழில் லதா மங்கேஷ்கரும் அவர் வீட்டு பக்கம் கட்ட திட்டமிடப்பட்ட மேம்பாலச்சாலை பற்றியும் சிறிது நேரம் படித்து கொண்டிருந்தேன்,ஆனால் சுவாரஸ்யமாக எதுவும் இல்லை. சுவாரஸ்யமாக இருந்தாலும் படிக்கும் மன நிலையில் நான் அப்பொழுது இல்லை! ஜன்னல் வழியாக அவ்வப்போது பக்கத்திலிருக்கும் நபரின் அசைவுக்கு ஏற்ப சிறிதும் பெரிதுமாக வேடிக்கை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்துக்கொண்டு இருந்தது!
இப்படியாக ஒரு ஒன்றரை மணி நேரம் ஐந்து நிமிடங்களாய் கழிந்தது!!அப்பொழுது காற்றை விரட்டி விட்டு மெல்லப்பூக்கும் ஒரு பூவைப்போல இருட்டை விரட்டி விட்டு தன் ஒளிமயமான விளக்குகளால் கீழே படர்ந்து கொண்டிருந்தது மும்பை மாநகரம்.
விமானம் மேலே எறுதல் ஒரு உற்சாக வேட்கை என்றால் , கீழே இறங்குதல் அதைபோன்றே இருந்தாலும் சிறிது வித்தியாசமான ஒரு விருந்து. கீழே இறங்கையிலே கூட,இறங்கியவுடன் எங்கு செல்வேன், யாரை பார்ப்பேன் ,என்ன செய்வேன் என்று அலை பாய்ந்த என் மனதை கட்டிப்போட முடியவில்லை.
ஒரு வழியாக கீழே இறங்கியவுடன், ஜெட் விமான நிறுவனத்தின் பேருந்து ஒன்று என்னை ஏத்திக்கொண்டு விமான நிலையத்தில் விட்டு சென்றது!
சரி! விமான நிலையத்தில் இறங்கியாகிவிட்டது!! இப்பொழுது என்ன செய்யலாம்???
ஒன்றுமே புரியவில்லை!!!
கோட்டு சூட்டு எல்லாம் போட்டுக்கொண்டு பேக்கு மாதிரி திரு திரு வென முழித்தால் கேவலமாக இருக்கும் என்பதால் ஏதொ எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல விடு விடு என்று வாசல் பக்கம் நடக்க ஆரம்பித்தேன்!!
“ஹோட்டல் வேணுமா சார்?”,”எங்க சார் தங்க போரீங்க சார்?”,”டாக்சி கூப்பிடட்டுமா சார்!!!” என்று எங்கிருந்தோ முளைத்த யார் யாரோ குசலம் விசாரிக்க ஆரம்பித்தார்கள்!!
ஆனால் மும்பையிலேயே பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்து ஆண்ட மிராசுதாரை மாதிரி நான் பாட்டுக்கு யாரையும் கவனிக்காமல் நேரே சென்றுகொண்டு இருந்தேன்!!


அரங்கை விட்டு வெளியே சென்ற பிறகுதான் யாரையாவது எதையாவது கேட்க வேண்டும் என்று தோன்றியது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நேராக ஜெட் விமான நிறுவனத்தின் சேவை முகப்பிற்கு சென்று தத்து பித்தென்று ஏதோ ஆங்கிலத்தில் உளறினேன்!!! வாழ்க்கையில் ஆங்கிலத்தையே கேட்காதது போன்ற ஒரு பார்வையை உதிர்த்து விட்டு தன்னுடன் வேலை செய்யும் ஒரு சிப்பந்தியை அழைத்தான் அங்கு இருந்த ஒரு பணியாளி.
என் போர்டிங் பாஸ் மற்றும் டிக்கெட் வகையறாக்களை பார்த்து விட்டு, “இதற்க்கு ஏன் இவ்வளவு அமர்க்களம் செய்கிறாய்?” என்று பார்வையாலயே கேட்டுவிட்டு,உள்ளே இருக்கும் நார்த்வெஸ்ட் முகப்பிற்கு செல்லுமாறு அந்த சிப்பந்தி அறிவுருத்தினான்.
போர்டிங் பாஸை காட்டி விமான நிலைய அரங்கிற்குள் திரும்பவும் சென்றேன்..
உள்ளே சென்றதும் நார்த்வெஸ்ட் முகப்பு எங்கே இருக்கிறது என்று இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
“தாங்கள் தான் சென்னையில் இருந்து வந்த சக்ரவர்த்தியா??” என்ற குரல் கேட்டு திரும்பினேன்.
திரும்பி பார்த்தால் நார்த்வெஸ்ட் பேட்ஜ் அணிந்த குட்டையான சிறிது குண்டான ஒரு ஆசாமி தன் கையில் இருந்த பட்டியலை பார்த்துக்கொண்டே வினவிக்கொண்டு இருந்தான்.
சக்ரவர்த்தி வரதன் ராமானுஜம் என்ற என்னுடைய முழு பெயர் பல இடங்களில் பல விதமாய் அழைக்கப்பட்டு பழகியிருந்ததால் என்னை தான் இவன் தேடிக்கொண்டிருக்கிறான் என்று உணர்ந்து கொண்டு “யெஸ்!” என்று மறுமொழி அளித்தேன்.
என்னுடைய பயணப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு அந்த அறையின் வடமேற்கு மூலைக்கு செல்லுமாறு அவன் கூறினான். சரி என்று அவன் சொன்ன படியே செய்தேன்.
அங்கு இருந்த ஒரு விமான நிலைய சிப்பந்தி என் பாஸ்போர்ட் மற்றும் என் நிறுவனத்திடமிருந்து நான் பெற்ற சில ஆவணங்களை சரி பார்த்தான். பின்பு “உங்கள் பெட்டியை நீங்களே அடுக்கினீர்களா??”, “விமான நிலையத்தில் இருக்கும்போது யாரிடமேனும் எதாவது பை அல்லது பொருட்கள் வாங்கினீர்களா?” என்று பேருக்கு சில கேள்விகளை கேட்டு வைத்தான்.
பின் என்னிடம் “embarkment-disembarkment” எனப்படும் ஒரு படிவத்தை கொடுத்துவிட்டு மும்பை சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஏறுவதற்கு முன் இதை நிரப்பிவிட்டு தர வேண்டும் என்று கூறினான். அது என்ன படிவம் ,அதை எப்படி நிரப்ப வேண்டும் என்று மேலும் கீழேயும் பார்த்து கொண்டே அந்த அரங்கை விட்டு வெளியேறினேன்.
மும்பையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களுக்கு இடையே ஒரு நான்கைந்து கிலோமீட்டர் தூரம் இருக்கும் என நினைக்கிறேன். இரண்டு விமான நிலையங்களுக்கும் இடையே செல்வதற்கு இலவச பேருந்து வசதியும் உண்டு.
அந்த பேருந்துக்கு காத்துக்கொண்டு இருந்த போது இந்தியாவின் ந்யூயார்க் என்று சொல்லும் அளவுக்கு தொழில்வளமும் வேகமும் கொண்ட மும்பை நகரத்தை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது! சரி பார்த்துக்கலாம்,நம்ம இந்தியா தானே என்று மனதை தேற்றிக்கொண்டேன் . ஒரு இருபது நிமிடம் காத்திருந்த பின் வந்த பேருந்து என்னை ஏற்றிக்கொண்டு சர்வதேச விமான நிலையத்தில் விட்டு சென்றது.
அங்கு நார்த்வெஸ்ட் சேவை முகப்பை தேடிக்கண்டுப்பிடித்தேன். அங்கு இருந்த கண்ணாடி போட்ட இளம் பெண் என் போர்டிங் பாஸ் மற்றும் பாஸ்போர்ட் அகியவற்றை வாங்கி கொண்டு எனை சிறிது நேரம் உற்று உற்று பார்த்துக்கொண்டிருந்தாள். பாஸ்போர்ட்டில் உள்ளது என் முகம்தானா என்பதை சரிபார்க்கத்தான் அப்படி பார்த்து கொண்டிருந்தாள் என்பதை நீங்கள் ஒன்றும் சொல்லாமலேயே எனக்கு தெரியும்!!
பிறகு என் “embarkment-disembarkment” படிவத்தை நிரப்பிக்கொண்டு ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு சிப்பந்தியின் முன் போய் நின்றேன்!!
சிறிது நேரம் இங்கும் அங்கும் ஏதோ முத்திரை குத்தி விட்டு அவன் என்னை பார்த்து கேட்டான்.
“நீங்கள் எந்த நிறுவனத்தில் பணி புரிகிறீர்கள்??”
“XXX”

பின் திரும்பவும் ஏதோ தீவிரமாக யோசித்து விட்டு
“உன் நிறுவனத்தின் பங்குகள் இன்னும் எவ்வளவு தான் உயர போகிறது??” என்று சொல்லிக்கொண்டே “embarkment-disembarkment” படிவத்தின் ஒரு பகுதியை கிழித்துக்கொடுத்தான்! அவன் தமாசாக பேச முயற்சி செய்து கொண்டிருக்கிறான் என்பதே எனக்கு சிறிது நேரம் கழித்துதான் உறைத்தது!!! மகராசன்!!! ஜோக் சொல்லும்போது கொஞ்சம் சிரித்துக்கொண்டு சொல்ல மாட்டானா??
“போடாங்க!! நீங்களும் உங்க ஜோக்கும்” என சொல்ல நினைத்து கடைசியில் “ஹி ஹி” என்று அல்பத்தனமாக ஒரு புன்னகை உதிர்த்துவிட்டு வந்தேன்.
அவன் கிழித்துக்கொடுத்த ஒரு பகுதியை ,இந்தியா திரும்ப வரும்பொழுது கொடுக்க வேண்டுமாம்.அதை என் பையில் பத்திரப்படுத்துக்கொண்டேன்.

இது நடந்து முடிந்த போது மணி இரவு 8:30. ஆனால் என் விமானம் புறப்படும் சமயமோ நள்ளிரவு விடிகாலை 12:50 மணி.
அது வரை என்ன செய்வது???
வீட்டிற்கு தொலைபேசியில் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கே போடப்பட்டிருந்த விசாலமான இருக்கைகளில் சாய்ந்து கொண்டேன்.
நான் வெளிநாடு செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வழியனுப்பு விழாவில் எனக்கு ஒரு புத்தகம் பரிசளிக்கப்பட்டிருந்தது. தலையில் பொட்டு முடி கூட முடி இல்லாத GE நிறுவனத்தின் அதிபரின் சுயசரிதையாம்!! நல்ல காலமாக இவர் நடத்திய நிறுவனம் அவர் தலையை போல இல்லாமல் நல்ல புஷ்டியாக வளர்ந்து விட்டதாம்!!
நம் முடியை போல இல்லாமல் அதுவாவது இவ்வளவு நன்றாக வளர்ந்து விட்டதே என்று உணர்ச்சி மேலிட்டு இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார் போலும்!!
அதை கொஞ்ச நேரம் இப்படி அப்படியுமாய் புரட்டிக்கொண்டு இருந்தேன், ஒரு பனிரெண்டு மணி வாக்கில் திரும்பவும் ஒரு பாதுகாப்பு சோதனைக்குப்பின் நிறைய இருக்கைகள் போடப்பட்டிருந்த ஒரு அறைக்குள் சென்றேன்.

என் தாய்நாட்டிலிருந்து நீங்கி செல்லக்கூடிய தருணம் வரப்போகிறது எனும் பரபரப்பான எண்ண ஓட்டத்துடன் காத்திருக்கையில், நாடு திரும்ப பல நாட்கள் ஏக்கத்தோடு காத்திருக்கும் காலம் வரும் என்பதை நான் உணராமல் இல்லை!!

-ஆன் ஆர்பரிலிருந்து தொடரும்....

அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - முன்னுரை
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 1
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 3

அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 1

வாழ்க்கை பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை தந்து கொண்டே போய்க்கொண்டிருக்கிறது.

சிரிக்க வைக்கும், அழ வைக்கும், இரண்டில் எது என்று முழிக்க வைக்கும் நிகழ்வுகள்,
குறிப்பிடத்தக்கவை சில ,சாதாரணமானவை சில , இவை இரண்டின் நடுவில் மாட்டிக்கிடக்கும் பல,
மறக்கமுடியாத நிகழ்வுகள், மறக்க விழையும் நினைவுகள்,

புள்ளிக்கோலத்தில் வரும் புள்ளிகளை போல சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நிகழும் சில நிகழ்வுகள்!! அப்பப்பா எத்தனை விதம்!!

என் பெற்றோர்களுடன் விமான நிலையம் சென்று கொண்டிருந்தபோது இதை போன்ற ஒரு முக்கியமான நிகழ்வுதான் நடந்து கொண்டிருப்பதாக ஒரு உணர்வு.கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டாலும் ஒரு முதல் வெளிநாட்டு பயணத்துக்கு உண்டான பரபரப்பும் உற்சாகமும் என்னை தொற்றிக்கொள்ளாமல் இல்லை. என் பெற்றோர்கள் சந்தோஷத்தில் பூரித்துக்கொண்டிருப்பதை பார்த்து கொண்டே என் மனதில் சில கவலைகள அரித்துக்கொண்டிருந்தது. என் வாழ்க்கையில் நான் பெங்களூர், திருப்பதி தவிர தமிழ்நாட்டை விட்டு வெளியே போனது இல்லை. முதன் முதலில் வெளிநாடு செல்லபோகிறேன் அதுவும் முதன்முதலில் விமானத்தில் செல்லபோகிறேன் என்பதால் மனதில் ஒரு லேசான கிலி இல்லாமல் இல்லை.
விமான நிலையத்தில் என்னென்ன செய்ய வேண்டும்,விமானங்கள் மாற்றும் போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பல சந்தேகங்கள்.என் நிறுவனத்தில் இதற்கெனவே ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தாலும், எப்போதும் போல அந்த கூட்டத்தில் தூங்கியே கழித்துவிட்டேன்! அப்படியே கவனித்திருந்தால் கூட மனதில் பயம் முழுவதுமாக போயிருக்காது என்பது என்னவோ உண்மைதான்!

பயணத்துக்கு கோட்டு சூட் எல்லாம் போட்டுக்கொண்டு தடபுடலாய் தயார் ஆகி இருந்தேன்! கடவுள் புண்ணியத்தில் விமான நிலையத்தில் வேலை செய்யும் என் சித்தி இருந்ததால் கொஞ்சம் தைரியமாக இருந்தது.தன் குடும்பத்தில் வெளிநாடு செல்லும் தன் அக்கா மகனாகிய எனக்காக அவர்கள் எங்கள் கூடவே இருந்து வழி காட்டினார்கள்.

என் பயணம் மூன்று கட்டங்களாய் பிரிக்கப்பட்டிருந்தது. முதலில் சென்னையில் இருந்து மும்பை வரை ஜெட் விமான நிறுவன விமானத்தில் பயணம், பிறகு மும்பை முதல் ஆம்ஸ்டர்டாம்(Amsterdam) வரையில் நார்த்வெஸ்ட் விமான நிறுவன விமானத்தில்,அதன் பிறகு ஆம்ஸ்டர்டாமில் இருந்து டிட்ராய்ட்(Detroit) வரையில் திரும்பவும் நார்த்வெஸ்ட் விமான நிறுவன விமானத்தில் பயணம்.
சிறிது நேரம் திரு திரு என்று முழித்திவிட்டு ஜெட் விமான நிறுவன சேவை முகப்பிற்க்கு சென்றேன். அங்கே இருந்த பணிப்பெண்ணின் ஆலோசனையின் பேரில் உள்ளிருப்பு பயணப்பெட்டிகளை Xray சோதனை செய்யும் இடத்திற்க்கு எடுத்து சென்றேன். பயணப்பெட்டிகளின்X ray சோதனைக்கு பிறகு சேவை முகப்பிற்க்கு திரும்ப சென்றேன். அங்கு என் எல்லா பயணப்பெட்டிகளையும் எடை பார்த்து அதன் மேல் ஒட்டான்கள்(sticker tags) கோர்த்து விட்டார்கள். பின்பு பயணநேரத்தில் டிக்கெட் போன்று வைத்திருக்கக்கூடிய போர்டிங் பாஸ் (boarding pass) வழங்கப்பட்டது.

பின்பு நான் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டேன். பிறகு என் விமானம் வரும்வரை, பல இருக்கைகள் கொண்ட ஒரு கூடத்தில் உட்கார சொன்னார்கள்.
பெற்றோர்களை ஒரு முறை திரும்பிப்பார்த்து கடைசியாக கை அசைத்து அந்த கூடத்துக்கு வரும் போது தொண்டையை அடைத்த துக்கத்தை எங்குமே தோண்டிப்புதைக்க முடியவில்லை

சில நிமிடங்கள் காத்துக்கிடந்த பிறகு அங்கிருந்த பல நுழைவாயில்களில் நான் செல்லும் விமானத்திற்கு செல்ல வேண்டிய வாயிலை ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள். விமானத்திற்க்கு அழைத்துச்செல்ல நுழைவாயிளில் ஒரு சிறிய பேருந்து நின்றிருந்தது. அது என்னை ஏற்றிக்கொண்டு விமானத்தின் அருகில் இருக்கும் ஒரு நடமாடும் ஏணி போன்ற ஒரு வண்டி பக்கத்தில் போய் விட்டது. விமானத்தில் ஏறி நடைபகுதி பக்கம் இருந்த என் இடத்தில் போய் உட்கார்ந்தேன். சிறிது நேரம் ஜன்னல் வழியாக மாநகர போக்குவரத்துக்கழக பேருந்துகளையும் , புறநகர் ரயில் பாதைகளையும் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தேன்!! எனக்கு ரயில் பயணம் என்பது மிகவும் பிடித்தமான செயல் அதுவும் தாம்பரம் கடற்கரை மார்க்கத்தில் செல்லும் ரயிலில் விரும்பி பிரயாணம் செய்வேன்! அடுத்து எப்பொழுது இந்த ரயிலில் செல்வேனோ என்று எண்ணிக்கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த இரண்டு தடி பயல்கள் ஜன்னலோர இடத்தில் உட்கார்ந்து ஜன்னலை முழுவதுமாக மறைத்து விட்டார்கள்!!

சிறிது நேரத்திற்கு பின் விமானம் ஓடுதளத்திருந்து மேலே எழும்ப புறப்பட்டது!! விமானம் மேலெழும்புதல் என்பது என்னால் வர்ணிக்க முடியாத ஒரு மகிழ்ச்சியை தரக்கூடிய ஒரு நிகழ்வு!!! தரையிலேயே அடிமைபட்டுகொண்டிருந்த ஒரு பறவை பூமிக்கு டாடா காட்டிவிட்டு விண்ணில் சீறிபறக்கும் இன்பம், சங்கிலியால் கட்டிப்பிணைக்கப்பட்டிருந்த ஒரு வீரன் அதை உடைத்தெரிந்து காடு மலைகளை தாவிசெல்லும் உற்சாகம்!! பிறவியில் கண்ணிழந்து இருட்டையே பார்த்திருந்த ஒரு மனிதன் கண்பார்வை பெற்று ஆயிரம் வண்ணங்களை கண்டு வியக்கும் ஆனந்தம்.
இவை போல பல நூறு உணர்வுகளை ஒரு சேர தந்தது விமானம் மேலே ஏறிய நிகழ்வு. எனை அறியாமல் என் கண் வழியாகவும்,புன்னகை வழியாகவும் சந்தோஷம் ததும்பியது!

மாலை வெயிலில் அழகாக குளித்துக்கொண்டிருந்த சென்னையின் எழிலழகை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்த போது பக்கத்தில் இருந்தவர் ஒரு நாளிதழை பெரிதாக விரித்து என்னால் வேடிக்கை பார்க்க முடியாமல் செய்து விட்டார்.
நான் கண்களை மூடி என் இருக்கையில் சாய்ந்துக்கொண்டேன்!!
என் வாழ்க்கை பயணத்தில் ஒரு மறக்க முடியாத பயணத்தை நான் தொடங்கி விட்டேன் என்பது எனக்கு விளங்கி விட்டிருந்தது.

-ஆன் ஆர்பரிலிருந்து தொடரும்....

அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - முன்னுரை
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 2

அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - முன்னுரை

தமிழ் வலைபதிவு உலகத்தை கண்டு மலைச்சுப்போய் இருக்கேங்க. எத்தனை பதிவர்கள்,எத்தனை வலைபூக்கள்,எவ்வளவு சுவையான பதிவுகள்!! அப்பப்பா, நினைச்சாலே தல சுத்துது!!
எனக்கு சின்ன வயசுல இருந்து தமிழ் ரொம்ப புடிக்கும். மூனாவது வரைக்கும்தான் தமிழ் படிச்சேன்ங்கறதுனால தமிழ்ல எழுத அவ்வளவா பழக்கம் இல்ல.
நம்ம தமிழ்ல எழுத்துப்பிழை அதிகமா இருக்கே அத சரி பண்ணணும்னுதான் வலைபதிவ ஆரம்பிச்சேன். அத சிறப்பா செய்யனும்னு பொதுவா மத்த பதிவுகள பார்க்க ஆரம்பிச்சேன். பார்க்க பார்க்க ஒரே சந்தோசமா போச்சு!!
அப்போதான் தமிழ்பதிவுகள் , தமிழ்மணம் , தேன்கூடு போன்ற வலைதளங்கள் பற்றி தெரிய வந்தது!!

அதுக்குள்ள புகுந்து ஒவ்வொரு பதிவையும் பாத்தா,ஒவ்வொருத்தங்க எவ்வளவு அழகான எழுதறாங்கன்னு தெரிஞ்சுது!! :)
நெஞ்சை நெகிழ வைக்கும் கதை/கவிதைகளும் பாத்தேன், வெறுப்பை உமிழ்ந்து வருத்தத்தை தரும் பதிவுகளையும் பார்த்தேன்.நகைச்சுவை ததும்பும் துனுக்குகளையும் பார்த்தேன்,தினம் நடக்கும் நிகழ்வுகள எளிமையா அழகா எழுதப்பட்ட பல படைப்புக்களை பார்த்தேன்.

இத பாத்த வுடனே நாமளும் எதாவது சுவையா எழுதி தள்ளனும்னு ஆசை தொத்திக்கிச்சு!! :)
ஆசை இருந்தா மட்டும் போதுமா,திறைமையும் நேரமும் இருக்கனும்ல!! நான் போன வருசம் எல்லாம் ஆங்கிலத்துல சில கதைகள்,கவிதைகள்னு சொல்லிட்டு கொஞ்சம் எழுதிட்டு இருந்தேன். அது நின்று போய் பல நாட்கள் ஆச்சு.அதுவும் தவிர கவிதைனு சொல்லிட்டு அப்பப்போ எதையோ தமிழ்ல கிறுக்கிட்டு இருந்தேன்!! :)

அது எல்லாத்துடைய திரட்டல்தான் என்னுடைய இந்த வலைதளம்.
ஆனா உருப்படியா எதுவும் எழுதுனது இல்ல!! அதுவும் தமிழ்ல எனக்கு தட்டச்சு தெரியாதுங்கறதுனால தத்தி தத்தி எதாவது தட்டினாதான் உண்டு!!! ஒரு பதிவை போடறதுக்கே பல மணி நேரம் ஆகுது!! :(

இருந்தாலும் 'எண்ணித்துணிக கருமம்,துணிந்தபின் எண்ணுவதென்பது இழுக்கு" அப்படிங்கற தமிழர் மொழிக்கு ஏத்தா போல நானும் களத்துல இறங்கிட்டேன்!! :)
தொடக்கமா நான் இங்க வந்த புதுசில எழுதின "Ann Arbor post" அப்படிங்கற பயணக்குறிப்பை தமிழாக்கம் பண்ணலாம்னு திட்டம்!!உங்களுக்கு எல்லாம் பிடிக்கறா மாதிரி இருக்கனும்னு கடவுள வேண்டிக்கிட்டு ஆரம்பிக்கறேன்!! :)

எல்லாம் வல்ல இறைவன் துணை இருக்கட்டும்!! :)

பின்குறிப்பு: ஆன் ஆர்பர் (Ann Arbor) என்பது நான் தற்போது வசிக்கும் ஊரின் பெயர்!! :)

அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 1

எங்கேயோ கேட்ட குரல்


வாழ்க்கையில பல சமயங்களில் ,நடக்கும் சில நிகழ்வுகள் முன்பு எப்பயாவது நடந்தது போல இருக்கும்,ஆனால் எப்போன்னு தெரியாது!!
ஆங்கிலத்தில் இதற்கு "டேஜா வூ"(Deja Vu) என்ற ஒரு ப்ரென்சு மொழி சொல்லை பயன் படுத்துகிறார்கள்!!

இப்போ அதுக்கு என்னங்கற??னு கேக்கறீங்களா??
அது ஒன்னும் இல்லீங்க,இன்னைக்கு "டேஜா வூ" அப்படின்னு ஒரு படம் பாத்தேன். அது பத்தி ஒரு பதிவு போடலாம்னு ஒரு சின்ன ஆசை!!
அதான்!!!

அமெரிக்காவில் ந்யூ ஒர்லியன்ஸ் (New Orleans) நகரத்தில் , படை வீரர்களை ஏற்றிச்செல்லும் ஒரு பயணப்படகில் ஒரு குண்டு வெடித்து அதனால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிர் இழக்கிறார்கள். இதை புலனாய்வு செய்யும் FBI நிறுவனம் டக் கார்லீன்(Doug Carlin- Denzel Washington) எனப்படும் ATF (Alcohol Tobacco Firearms) அதிகாரியின் துணை கொண்டு துப்பறிய முனைகிறது.வெளி உலகத்துக்கே தெரியாத ஒரு சக்தி வாய்ந்த தொழில்நுட்பக்கருவியின் உதவியோடு இந்த சதியின் பிண்ணனியில் இருப்பது யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் டக் கார்லீன் வெற்றி பெறுவாரா என்பதே கதை.

டென்ஸல் வாஷிங்டன் பற்றி உங்கள் யாருக்கும் சொல்ல வேண்டியது இல்லை என நினைக்கிறேன்.ஹாலிவுட் பட உலகில் திரை இருப்பு (screen presence) ஏகோபித்தமாய் கொட்டிக்கிடக்கும் வெற்றிப்பட நடிகர்களில் இவரும் ஒருவர்!! கதையின் ஒவ்வொரு பிம்பத்திலும் அவருக்கே உரித்தான நடிப்பு மற்றும் உடல் அசைவுகளால் படத்தை தொய்வில்லாமல் நகர்த்திச்செல்ல உதவுகிறார். கதாநாயகி பாலா பாட்டன்-க்கு (Paula Patton , பாலாவின் பாட்டன் அல்ல!!) படம் முழுக்க பெருசா வேலை இல்லை.
படம் அவங்க கதாபாத்திரத்தையே ஒட்டி நகர்ந்தாலும் கூட படம் முழுக்க உடம்புல எல்லாம் ரத்தகாயம் ரண்காயத்தோட பாவமா ஓடரதே அவங்க வேலையா இருக்கு!!

படத்துல வர வேறு சில கதாபாத்திரங்களுக்க்கும் பெருசா ஒன்னும் வேலை இல்ல!!
பெருசா வேலை இல்லாட்டாலும் அவங்க அவங்க தன்னோட பாத்திரத்த கச்சிதமா பண்ணியிருக்காங்க!
படத்தோட கேமரா வேலை வெகு அற்புதமா அமைஞ்சிருக்கு!! பாலத்துல டென்ஸல் வாஷிங்டன பான் பண்ணி ஃபோகஸ் பண்ணும்போதும் சரி,காரில் துரத்தும் காட்சி மாதிரி விறுவிறுப்பான சீனுக்கும் சரி, காமெராவ நல்லாவே உபயோகப்படுத்தியிருக்காங்க. அதுவும் படப்பிடிப்புக்கு ஏத்தா மாதிரி பின்னணி இசையும் நல்ல வேகமா அமைஞ்சிருக்கு. படத்தொகுப்பும் நல்லா இறுக்கமா பண்ணியிருக்கறதுனால படம் எப்பவுமே மெதுவா போகல!!!
கதை ,திரைக்கதை பத்தி பேச ஆரம்பிச்சா அதுக்குன்னே ஒரு பதிவு போட்டுரலாம்!!
காலப்பயணம் மாதிரி விவகாரமான சமாச்சாரம் இருந்தாலே திரைக்கதை தெளிவா குழப்பமில்லாமல் இருக்கணும்,ஆனா இந்த படத்துல அவங்களே நம்மல குழப்பிட்டு,தானும் தெளிவா குழம்பி இருக்காங்க!!


மொதல்ல அவங்க விளக்கம் தரும்போதே யாருக்கும் புரியவேகூடாதுன்னு கங்கனம் கட்டிக்கிட்டு ஏதோ டஸ்ஸு புஸ்ஸுனு உளர்ராங்க!!(அவங்க என்ன சொல்ல வராங்கன்னு எனக்கு யாரவது புரிய வெச்சா,புரிய வெச்சவங்களுக்கு . நீங்க ஒரு "மண்டை"-னு ஒரு பட்டம் வழங்கி ஒரு helmet பரிசாக வழங்கப்படும்).அப்புறமா நிகழ்காலமும் பழங்காலமும் கலக்காம தனி தனியா இயங்கும்னு அவங்களே சொல்லிட்டு அதுக்கு மாறா திரைக்கதையை ஓட்டிகிட்டு போறாங்க!!

"Back to the future" படம் எல்லாம் பாத்திருந்தீங்கன்னா இந்த விஷயத்த எவ்வளவு நேர்த்தியா சொல்லலாம்னு உங்களுக்கே தெரியும்.

இந்த விஷயத்த மட்டும் கண்டுக்காம விட்டுட்டா,திரைகதையும் / இயக்கமும் நல்லா வேகமாதான் போகும்!!

கதைல ரொம்ப பெருசா ஒன்னும் திருப்பம் இல்லாட்டாலும் எதாவது நடந்துகிட்டே இருக்கறதுனால படம் அலுக்காம போகுது!!

மொத்தத்துல இது பார்க்க வேண்டிய படம்னும் சொல்ல மாட்டேன், பார்க்கவே முடியாத படம்னும் சொல்ல மாட்டேன் . அறிவுபூர்வமா ரொம்ப ஆராய்ச்சி பண்ணாம பார்த்தா கொடுத்த காசுக்கு நிம்மதியா பாத்து ரசிச்சுட்டு வரலாம்!! :)

சறுக்கிய செருக்கு (எதுகை மோனைக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல!! :P)

நடக்க தெரியாமல் கடைசியாக தரையில் விழுந்தது எப்பொழுது என்று ஞாபகம் இருக்கிறதா??
கால் தடுக்கி விழுந்த அனுபவத்தை சொல்ல வில்லை ஐயா,நடக்கவே தெரியாமல் விழுந்த அனுபவித்ததை சொல்கிறேன்!!
குழந்தை பிராயத்தில் எப்பவாவது இருக்கும் என்று சொல்கிறீர்களா??
நேற்று வரை நானும் அதைத்தான் சொல்லி இருப்பேன்.ஆனால் இன்று முதல் என் பதில் டிசெம்பெர் 10 2006 என்றுதான் இருக்கும்!!
ஏன் என்கிறீர்களா??
இன்றுதானே பனி சறுக்கல் செய்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு இரண்டு மணி நேரம் பற்பல கோணங்கலில் விழுந்து கொண்டு இருந்தேன்!! :)

பாழாய் போன ஆசை யாரை விட்டது!!அமைதியாய் ஆர்க்குடுடன்(orkut) அடங்கி போகும் என் வாரஇறுதி இந்த தடவை எனக்கு வித்தியாசமாக கழிந்தது. இங்கு மிசிகன் பல்கலைகழகத்தில் உள்ள ஒரு பனிசறுக்கு மைதானத்துக்கு இன்று என் நண்பர்களுடன் சென்றேன்.
வெறும் ஏழு டாலர்கள் தான் கட்டணம் என்று வேறு கூறி என்னை உசுப்பேத்தி விட்டனர் நண்பர்கள். இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி விட்டே தான் என் வாழ்க்கை ரணகளம் ஆகிக்கொண்டு இருக்கிறது என்பது உலகறிந்த விஷயம் ஆயிற்றே.

இப்படியாக வீட்டில் தூங்கிகொண்டிருக்க வேண்டிய நான் நகரின் மைய்யப்பகுதி ஆன Downtown-ர்க்கு இழுத்து வரப்பட்டேன்!! :)


கட்டணம் செலுத்தியதும் என் கால் அளவுக்கு ஏற்றார்போல் இரண்டு கால்சறுக்கு காலணிகள் கொடுத்தார்கள். அதை அணிந்து கொண்டு எழுந்து நின்றால், பாதங்கள் ஒரு பக்கமாய் நிக்கவில்லை. அறுபத்து எட்டு கிலோகிராம் கொண்ட ஒரு ஐந்து அடி ஏழு அங்குலம் உயரம் உள்ள் இளைஞன் 2 மில்லிமீட்டர் அகலத்தில் எப்படி சமநிலையை தக்க வைக்க முடியும்?? கால்கள் இங்கும் அங்கும் ஒருக்களித்துக்கொண்டு இருந்தன!!!
எப்படியோ கதகளியும் பரதநாட்டியமும் ஆடிக்கொண்டே பனிச்சறுக்கு அரங்குக்கு பயணப்பட்டேன். அங்கு சிறியவர்களும் பெரியவர்களுமாய் ஒரு ஐம்பது பேர் சறுக்கிக்கொண்டு இருந்தார்கள். அவர்களின் லாவகத்தை ரசித்துக்கொண்டே அரங்கிற்க்குள் காலை வைத்தேன். காலை வைத்ததுதான் தாமதம் , இரண்டு கால்களும் இங்கிலாந்துக்கு ஒன்று ஈக்க்வடாருக்கு ஒன்று என்று வெவ்வேறு திசையில் சறுக்கிகொண்டு சென்றது!!
சிறிது நேரத்தில் பழகிக்கொண்டு விடும் என்று பார்த்தால் நிமிடத்துக்கு நிமிடம் மோசமாகிக்கொண்டுதான் போனது!!!
போதாத குறைக்கு இரண்டு வயது குழந்தை முதல் அனைவரும் ஜெட் வேகத்தில் எனைசுற்றி சீறிப்பாய்ந்து கொண்டு இருந்தனர்!!! அதுவும் குட்ட பாவாடை போட்ட ஒரு எட்டு வயது குட்டி தேவதை ஒன்று "அட!! உனக்கு பனிச்சறுக்கு கூட பண்ண தெரியாதா" என்பது போல் ஏளனமாக பார்த்துச்சென்றது!!.


இந்த நேரத்தில் என் நண்பர் ஈஸ்வர் அவர்களின் உதவியை நான் மறக்க கூடாது!!
மனுஷன்,அவரும் எப்படி எப்படியோ ஊக்குவிப்பும் ஆலோசனையும் கொடுத்து பார்த்தாரு!!
நமக்குதான் நிக்க கூட முடியலையே எங்க இருந்து சறுக்கரது!! :(


திடீர்னு ஜோடியா கைகோர்த்துகிட்டு போரவற்களை காட்டி,"நீ மட்டும் ஒழுங்கா சறுக்கினினா உன் காதலிக்கு இது மாதிரி சறுக்க சொல்லி கொடுக்கலாம்" என்று கூட சொல்லிப்பார்த்தார்!
"அதுக்கு முதலில் ஒரு காதலி வேண்டுமே,அதற்க்கு எதாவது வழி காட்டுங்க!!",என்று நான் சொன்னதும்! "ஏதேது!!விட்டா என் தொழிலையே மாத்திடுவயே"என்று சொல்லிவிட்டு அகன்றுவிட்டார்!! :)
போகிற போக்கைப்பார்த்தால் ஏதாவது காதலியை பிடித்து,அவள் எனக்கு கற்றுக்கொடுத்தால்தான் உண்டு போல இருக்கிறது என்று நொந்துக்கொண்டு,பக்கச்சுவற்றை பய்யப்பய்ய பிடித்துக்கொண்டு அங்குலம் அங்குலமாக நகர ஆரம்பித்தேன். இதுல ஒருத்தன் பின் பக்கமா சறுக்கிகிட்டு வேறு படம் போட்டுகிட்டு இருந்தான்.நடுவில இரண்டு முன்று பேர் நின்று துக்கம் விசாரிச்சுட்டு கண்டமேனிக்கு உபதேசம் கொடுத்துட்டு போயிட்டு இருந்தாங்க!!
இப்படியாக நான் தட்டு தடுமாறிகிட்டு இருக்கும் போது திடீர்னு ஏதோ சங்கு ஊதற சத்தம் கேட்டுது!


சுட்டும் முட்டும் திரும்பி பாத்தா ஒரு ஈ காக்கைய காணோம்!! என்னடா ஆச்சுன்னு திரு திருன்னு முழிசிட்டு நிந்துட்டு இருந்த போது!! திடீர்னு பின்னாடி கதவ திறந்துகிட்டு பெருசா ஒரு வண்டி உள்ள வந்தது!! நானும் ஈஸ்வர் உதவியோடு விழுந்து எழுந்துகிட்டு அரங்கை விட்டு வெளியே வந்தேன்.

நான் பண்ற சர்க்கஸ பாத்து வெளில காத்துகிட்டு நின்ன சின்னது பெருசு எல்லாத்துக்கும் ஒரே சிரிப்புதான்!! :)

தப்பிச்சோம் பொழச்சோம்னு ஒரு வழியா அரங்கத்தை விட்டு வெளில வந்துட்டு ஒரு ஓரமா போய் உட்கார்ந்தேன்!!

கொஞ்ச நேரம் கழித்து அந்த அரங்கை சுத்தம் செய்ய வந்த வண்டி தன் வேலையை முடித்துக்கொண்டு போச்சு!!

நம்ம நெலம இப்படி ஆகிப்போச்சேனு நான் நொந்துக்கிட்டு இருக்கிற சமயம் திடீர்னு கல கலனு பொண்ணுங்க சத்தம்!!என்னடா செய்தினு நிமிர்ந்து பாத்தா ஒரு பத்து இருபது பொன்னுங்கஎன்னதுன்னு பாத்தா "Figure skating" எனப்படும் ஒலிம்பிக் விளையாட்டுக்காக பயிற்ச்சிக்கு பண்றாங்களாம்!
ஒவ்வொருத்திக்கும் உடம்பு சும்மா வில்லா வளையுது!!
நாம நிக்கவே ததிகினத்தோம் போட்டுகிட்டு இருக்கும்போது இவளுக கை காலு எல்லாம் தய்யா தக்கானு ஆட்டிகிட்டு ஆயிரம் மைல் வேகத்துல பறக்கராலுக!!
அதுவும் சில பேரு ஒத்த காலுல நின்னுகிட்டு பம்பரமா சுத்த வேர ஆரம்பிச்சிட்டாங்க!!


நான் இவங்களோட இந்த சாகசத்த பார்த்து திறந்த வாய் மூடல!!இத பாத்துட்டு,நான் பொன்னுங்கள பார்த்துட்டு ஜொள்ளு விடறதா நெனைச்சிகிட்டு நண்பர்கள் எல்லாம் என்னை கிளப்பிகொண்டு வந்து விட்டார்கள்!!
எது என்னவோ,என் வாழ்க்கையில் ,நடைபழகிய நாளில் இருந்து நிக்க கூட முடியாம நான் அவதிப்பட்ட இரண்டு மணி நேரம் இதுதான்!! :)

ஒரு கருத்துக்கணிப்பு

ஒரு தமிழ் வலைபதிப்புக்கு உங்களை திரும்ப திரும்ப வர வழைக்கும் அம்சம் எது???
சினிமா செய்திகள் / விமர்சனங்கள்
கதைகள் / கவிதைகள்
பாட்டு / கவிதை / இலக்கியம் விமர்சனங்கள்
தமிழ்நாடு/இந்தியா செய்திகள் / விமர்சனங்கள்
வாழ்கையில் தினந்தோரும் நடக்கும் சுவாரஸ்யமான நடப்புகள் பற்றிய பதிவு
Free polls from Pollhost.com

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப்போகாது


எனை மிகவும் கவர்ந்த சமீபத்திய திரை பாடல் ஒன்று. புதுப்பேட்டை படத்தில் யுவன் சங்கர் ராஜா வின் இசையில் நா.முத்துகுமார் - இன் வரிகள்.
எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் தயங்காமல் இந்த வரிகளுக்கு தேசிய விருது வழங்கி விடுவேன்!! :)

----------------------------------------------------------
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
ஓஓஓஓஓஓ, கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஓஓஓஓஓஓ, ஒரு வாசல் தேடியே விளையாட்டு
ஓஓஓஓஓஓ, கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஓஓஓஓஓஓ, கண் மூடிக்கொண்டால்ஓஓஓஓஓஓ …

போர்களத்தில் பிறந்துவிட்டோம், வந்தவை போனவை வருத்தமில்லை
காட்டினிலே வாழ்கின்றோம், முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை
இருட்டினிலே நீ நடக்கயிலே, உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே, உனக்கு துணை என்று விளங்கிவிடும்
தீயோடு போகும் வரையில், தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து,கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்
ஓஓஓஓஓஓ, அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஓஓஓஓஓஓ, இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஓஓஓஓஓஓ, மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
ஓஓஓஓஓஓ, அந்த கடவுளை கண்டால்ஓஓஓஓஓஓ …

அது எனக்கு இது உனக்கு, இதயங்கள் போடும் தனிக்கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு, உடல்களும் போடும் புதிர்க்கணக்கு
உனக்குமில்லை இது எனக்குமில்லை, படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார், அட கெட்டவன் யார், கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே,பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
ஓஓஓஓஓஓ, பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்,
ஓஓஓஓஓஓ, பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்,
ஓஓஓஓஓஓ, கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்,
ஓஓஓஓஓஓ, மறு பிறவி வேண்டுமாஓஓஓஓஓஓ …


பாடலை ஓட விட்டு வரிகளை எழுதிக்கொள்ளலாம் என்று நினைத்தேன் ஆனால் Google-இன் கருணையால் கீழ்கண்ட இணைப்பில் இந்த பாடல் கிடைத்தது.
http://pranni.wordpress.com/2006/07/11/puthupettai/
ஒரு முறை பாடலை ஓட விட்டு சரி பார்த்ததோடு சரி!! :)

எளிமையான இசை,மெல்லிய கிதார் பின்னனி,இடையில் அற்புதமான வயலின் மெருகேற்றல், யுவன் சங்கரின் தெளிவான உச்சரிப்பு,அனைத்தும் இந்த பாடலின் வரிகளுக்கு அழகு சேர்ப்பவை.
நேரம் கிடைக்கும்போது கேட்டுதான் பாருங்களேன்!! :)


OruNaaliltamilmaal...

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்


இன்று காலை பனி படர்ந்த சாலைகளை பார்த்த வுடன் மனதில் அளவிட முடியா மகிழ்ச்சி. அலுவலகம் கிளம்ப நேரம் ஆகிவிட்ட போதிலும் புகைபடக்கருவியை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பி விட்டேன்.
அப்பொழுது கண்ட காட்சி தான் இது. உடனே எனக்கு பாரதியின் கவிதை தான் நினைவுக்கு வந்தது!! :)
---------------------------------------------------
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
- மகாகவி சுப்ரமணிய பாரதி

ஒரு மாலை இள வெயில் நேரம்

இங்கு Dearborn என்கின்ற ஊரில் Greenfield village என்று ஒரு இடம் உள்ளது. அங்கு 19-ஆம் நூற்றாண்டில் உள்ளது போல் கட்டிடங்களுடன் ஒரு முழு ஊரே வடிவமைத்து உள்ளனர்.அங்கு எடுக்கப்பட்ட ஒரு புகைபடம் இது.

தொடக்கம் பாரதியுடன்

நான் தமிழில் ஒன்று ஆரம்பிக்கும் பொழுது அதில் பாரதி இல்லாமல் இருக்க முடியுமா??என் "Orkut" தோற்றத்தில் (profile) கூட இந்த கவிதையை பார்க்கலாம்!!மனுஷன் என்னமா எழுதியிருக்கான்!!!!


நீங்களும் படித்து மகிழுங்கள்

----------------------------------------


தேடிச் சோறு நிதந்தின்று -பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி -மனம்

வாடி துன்பமிக உழன்று - பிறர்

வாடப் பல செயல்கள் செய்து - நரை

கூடி கிழப்பருவம் எய்தி - கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல

வேடிக்கை மனிதரை போலே - நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ?!

- மகாகவி சுப்ரமணிய பாரதி

இனிதே தொடங்கியது

எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும் என்று உங்க எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் நான் மூன்றாவது வகுப்பு வரைக்கும்தான் தமிழ் படித்தேன் என்பதால் நான் எழுதும் தமிழில் எழுத்து பிழை ரொம்ப அதிகமா இருக்கும்!! :(

நான் எழுதிய சில கவிதைகளை படித்து விட்டு நிறைய நண்பர்கள் எழுத்து பிழைகளை குறைத்தால் ரொம்ப நல்லா இருக்கும் என்று சொன்னார்கள். அதன் விளைவு தான் இந்த வலை பதிவு.அது கூட இன்னொரு விஷயம் என்ன என்றால், நான் பொதுவாவே எழுத ஆரம்பிச்சா வள வளனு எழுதுவேன். இந்த வலை பதிவு வழியா சுருக்கமா எழுதவும் கற்று கொள்ளலாம் என்று திட்டம்.

எல்லாம் வல்ல இறைவன் துணை இருக்கட்டும். :)

Related Posts Widget for Blogs by LinkWithin