இதயத்தின் ஒலிகள் புரிந்துவிடில் மனிதற்கு மொழியே தேவை இல்லை

சில சமயங்களில் எதுமே் கேட்க விருப்பமில்லை.ஒலிகளை குறைத்துக்கொள்ள ஆர்வம் மேலிடுகிறது.
தூரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பெரும் ஊர்தியின் ஓசை,தற்போது விசைப்பலகையில் வார்த்தைளை தட்டிக்கொண்டிருக்கும் சத்தம்,மௌனமாக இருப்பது போல் பாசாங்கு செய்துக்கொண்டு மெலிதாக பிண்ணனியில் ஒலித்துக்கொண்டிருக்கும் ஹீட்டரின் சத்தம்.இவை தவிர வேறு ஒலிகள் கேட்கவில்லை.அவ்வப்போது உடல் அசைவினால் ஏற்படும் மெல்லிய சத்தங்கள் மட்டுமே இந்த வழக்கமான சத்தங்களில் இருந்து வேறு படுகிறது.
இவை தவிர முழுவதும் மனதின் சத்தங்கள் தான்.பார்த்த படித்த பேசிய விஷயங்களின் எண்ணங்கள் கனீரென்று மனதில் இருந்து ஒலிக்க ஆரம்பிக்கின்றன.
"இதயத்தின் ஒலிகள் புரிந்துவிடில் மனிதற்கு மொழியே தேவை இல்லை" என்ற பாடல்வரிகள் தான் ஞாபகம் வருகின்றன.

இதை கேட்க முடியாமல் தானே மொழிகள் வார்த்தைகள் என்ற சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டோம்.எண்ணங்களை முழுவதுமாக வெளிப்படுத்தும் வார்த்தைகள் எங்கேயாவது கண்டிருக்கிறோமா?? அப்படியே இருந்தாலும் அதை முழுமையாக உபயோகித்து நாம் நினைத்ததை அப்படியே வெளிப்படுத்தும் தேர்ச்சி யாருக்கேனும் இருக்குகிறதா???? வெறும் வார்த்தைகளில் அடைக்க எண்ணி எத்தனை எண்ணங்களை மடித்து கத்தரித்து முடமாக்கி இருக்கிறோம்.அப்படி செய்தும் அதை தெளிவாக வெளிப்படுத்த முடிக்கிறதா? நான் சொல்லும் வார்த்தை எனக்கான அர்த்தத்தோடு!! ஆனால் அவை ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தம்,ஒவ்வொரு புரிதல்கள்,அவரவரின் பிரச்சினைகள்,சந்தேகங்கள்,கோபங்கள்,அனுபவங்களை பொருத்து மாறுபட்டுக்கொண்டு.குழப்பங்கள்,சாடல்கள்,மறுதலிப்புகள்,சண்டைகள்!! மேலும் வார்த்தைகள்,மேலும் மேலும் வார்த்தைகள்,மேலும் குழப்பங்கள்,மேலும் வார்த்தைகள்!!சொல்லாடலின் விளையாட்டுகளில் கேலிப்பொருளாகிவிடும் கருத்துப்பறிமாற்றங்கள். வார்த்தைகளின் பலவீனத்தால் தோற்கடிக்கப்படும் எண்ணங்கள்.

வார்த்தைகள் இல்லையென்றால் உலகில் குழப்பங்கள் இல்லை.கண்களை பார்த்து மனதில் இருப்பதை அறிய முடிந்தால் உலகில் 85% செயல்பாடுகளுக்கு தேவையே இருக்காது என்று தோன்றுகிறது.குழப்பங்களும் குழப்பங்களை களைவதற்குமான தேடல்களும் தான் பலரின் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு சென்றுக்கொண்டிருக்கிறது.குழப்பங்கள் தீர வார்த்தைகளும்,வார்த்தைகளால் குழப்பங்களும்,அதை தீர்ப்பதற்கான தேடல்களும். வெளிப்பாடுகளின் அர்த்தம் புரியாமல் பறந்து விரிந்து செல்லும் தேடல்கள்களோடு.புரிதல் என்பதையே புரிந்துக்கொள்ளாமல், வார்த்தைகளால் இதயத்தின் ஓசையை கேட்கவிடாமல் இரைச்சல் எழுப்பிக்கொண்டிருக்கிறோம். சற்றே அமைதி காத்து உங்களை சுற்றி உள்ள ஒலிகளை கவனித்தது உண்டா??
மின்னஞ்சல்,அரட்டை,பேச்சு,பாட்டு,இசை ஏதுமில்லாமல் உங்களை சுற்றி என்னென்ன ஒலிகள் உள்ளன என்று பட்டியல் போட்டிருக்கிறீர்களா???அவ்வாறு செய்யும் போது ஒரு இரண்டு வயது குழந்தையை போல உங்கள் மனது உங்களிடம் பேசுவதை கேட்டிருக்கிறீர்களா?? வார்த்தைகளின் அலங்காரங்கள் இல்லாமல்,அதன் குழப்பங்கள் இல்லாமல் உங்கள் மனது உங்களிடம் பேசும்.அவரவர் மனதோடு பேச யாருக்கும் வார்த்தைகள் தேவையில்லை. நமது மனதை புரிந்துக்கொள்ளாமல்,அதன் கதறல்களை கேட்காமல் மற்றவர்களின் வெளிப்பாடுகளை பதிவுகளை வார்த்தைகளால் புரிந்துக்கொள்ள முயல்வதில் அர்த்தமே இல்லை.

வார்த்தை இல்லாத புரிதல் பழக பழக,உங்களையே நீங்கள் புரிந்துக்கொள்ளலாம்.உங்கள் பயங்கள்,சந்தேகங்கள்,பாசாங்குகள்,ஆசைகள் ஆகியவற்றை முழுமையாக உணர்ந்துக்கொள்ளலாம்.போகப்போக பிறரிடம் அவருக்குத்தெரியாமலே அவரின் மனதோடு பேச துவங்கிவிடலாம்.உங்கள் மனதோடு பேசி நண்பராகி விட்டதால்,பிறரின் மனதுடன் பேசுவது சுலபமாகிவிடும்.வார்த்தைகள் மூலம் புரிந்தும் புரியாமலும் ஒருவர் வெளிப்படுத்தும் போது,சிரித்துக்கொண்டே அவரின் மனதோடு அவருக்கே தெரியாமல் நீங்கள் பேசத்துவங்கலாம்.வார்த்தைகளற்ற சம்பாஷனைகளை நாம் பழக பழக குழப்பங்களும் குறையும்.
கருத்து பறிமாற்றமற்று வெறும் பேச்சில் மட்டுமே குழுமியிருக்கும் நம் வாழ்வில் புதுமையான புரிதல்களும் பூபூக்கலாம்.
உங்கள் மனதோடு வார்த்தைகளற்று உரையாட தயாரா??



பி.கு:என்ன எழுதவேண்டும் என்றெல்லாம் யோசிக்காமல் மனதில் தோன்றியதை எல்லாம் அப்படியே எழுதியதின் விளைவுதான் இந்தப்பதிவு!
இதற்கு அர்த்தம் புரிந்து,உங்களின் யோசனைக்கு தீனியாக இருந்தால் சந்தோஷம்!!
இல்லனா பையன் ஏதோ ஒளரிட்டு போறான்னு ஃப்ரீயா விடுங்க!! :-)

Related Posts Widget for Blogs by LinkWithin