நாமக்கல் பயணக்குறிப்புகள் - 2

மு.கு:
எல்லோரும் எதுக்கும் ஒரு சுத்து போன பகுதியை பார்த்துட்டு வந்துருங்க..நிறைய படங்கள் அப்பப்போ சேர்த்துகிட்டே வந்தேன்..

வெளியில் "நீரின்றி அமையாது உலகு" என்று குடிமக்கள் கொண்டாடிக்கொண்டிருக்க,நான் போர்வையை இழுத்துப்போர்த்துக்கொண்டு தூங்குவது போல் பாவனை செய்ய ஆரம்பித்தேன்.சில நிமிடங்களில் உண்மையான தூக்கம் என்னை தொற்றிக்கோன்டது.

அடுத்த நாள் காலை எல்லோரும் சீக்கிரம் எழுந்து ராக்பெல்லெர் வ்யூ எனும் இடத்திற்கு முதலில் சென்றோம்.அங்கு எங்களுக்கு கிடைத்த அழகிய காட்சியை விவரிக்க வார்த்தையில்லை.ஒரு புறமோ அடுக்கடுக்கான மலைத்தொடரின் ஓரத்தில் இளங்காலை சூரியன் சிரித்துக்கொண்டிருக்க,மறு புறம் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல ஒரு உயரமான மலைச்சாரல் வடிவேலு ரேஞ்சுக்கு நக்கலாக புன்னகைத்துக்கொண்டிருந்தது.முன்னாலே பார்த்தால்,உயர்ந்த மலையில் இருந்து கீழிருக்கும் ஊர்கள் தியானிக்கும் புத்த பிக்குகளைப்போல் அமைதியாக கண்ணை மூடிக்கொண்டிருந்தன.
என் கையில் எனது கேமரா இல்லையே என்று நான் தலையில் அடித்துக்கொண்ட பலநூறு சந்தர்ப்பங்களில் இந்த அழகிய கொல்லி மலைக்காலையும் சேர்ந்துக்கொண்டது.


படம்:ஜீவ்ஸ் கேமரா(நான் எடுத்ததா,அவரு எடுத்ததான்னு தெரியல..;))
என் ஏமாற்றத்தை புரிந்துக்கொண்ட ஜீவ்ஸ் அண்ணாச்சி தன்னுடைய கேமராவை எனக்கு கொடுத்து என்னை படம் எடுக்கச்சொன்னார்.இதே போல இந்த பயணம் முழுவதும் பல இடங்களில் தன் கேமராவை முழுமையாக எனக்களித்து என் மனம் கோணாமல் பார்த்துக்கொண்ட ஜீவ்ஸ் அண்ணாச்சிக்கு எப்படி நன்றி சொல்ல.இது புது கேமரா என்பதால் எனக்கு சரியாக படம் எடுக்கத்தெரியவில்லை(இல்லனா மட்டும்........) அதனால் படங்கள் அவ்வளவாக திருப்திகரமாக அமையவில்லை(அப்பாடா...ஒழுங்கா படம் எடுக்காததுக்கு சாக்கு கெடச்சாச்சு :P).இயற்கை அழகை ரசித்தபடி அங்கிருந்து கிளம்பி 2000 வருடங்கள் பழமையான தாழி உள்ள இடம் என்று சொல்லப்படுகிற இடத்திற்கு பயணப்பட்டோம்.கடைசியில் தேடிப்பிடித்து பார்த்தால் அங்கு பெரிதாக ஒன்றும் இல்லை,ஆனால் போகும் வழியில் நாங்கள் எடுத்துக்கொண்ட தேனீர் இடைவேளையும்,இடத்தை தேடிப்பிடிக்க நாங்கள் அலைந்து திரிந்ததும்,அப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இனிமையான பொழுதுகள்.எந்த ஒரு பயணத்திலும்,நாம் போய் சேரும் இடத்தை விட ,நாம் போகும் வழியும்,அது தரும் நினைவுகளும் தான் பயணத்தின் இனிமையை நிர்ணயிக்கிண்றன என்கிற எனது நம்பிக்கை வலுப்பேற்றது.எல்லாவற்றோடு முக்கியமாக நம் கூட வரும் ஆட்கள்...
படம்:இம்சை

இதன் பிறகு அறைக்கு திரும்பிவிட்டு,நாமக்கலுக்கு பயணப்பட்டோம்.நானும் சிபியும் பஸ்ஸில் வந்துவிட மற்றவர்கள் காரில்திரும்பினர்.ஜீவ்ஸையும் இம்சையையும் நாமக்கலில் விட்டு விட்டு நந்து ஈரோட்டிற்கு பயணப்பட்டார்.சிறிது நேரத்தில் இம்சையும் பெங்களூருக்கு பயணமானார்.
சற்றே இளைப்பாரிவிட்டு நாங்கள் அனைவரும் மணப்பெண்ணை குசலம் விசாரிக்க இம்சை அரசியின் வீட்டிற்கு சென்றோம்.அங்கு இருந்த குழந்தைகள் சிலருடன் விலையாடுவதிலேயே எனக்கு நேரம் சென்று விட்டது.அதிலும் ஒரு சுட்டிப்பையனுக்கு புகைப்பட ஆர்வம் ஊட்டி,அவன் நிக்கான் கேமராவில் இருந்து மொபைல் கேமரா வரை உருண்டு புரண்டு படம் எடுக்கும் அளவுக்கு பைத்தியமாக்கி விட்டேன்...
படம்:ஜீவ்ஸ் கேமரா(நான் ஆர்வமேற்றி விட்ட அந்தச்சுட்டிப்பையன் எடுத்தது...)
அங்கு மணிக்கணக்கில் அரட்டை அடித்துவிட்டு அப்படியே நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலுக்கும் ,பக்கத்தில் உள்ள நரசிம்மர் கோயிலுக்கும் சென்றோம்.கோயிலுக்கு செல்வதற்கு முன் ஜி3 அக்காவும் எங்களுடன் சேர்ந்துக்கொண்டார்.
படம்:ஜீவ்ஸ் கேமரா(நான் எடுத்ததா,அவரு எடுத்ததான்னு தெரியல..;))
மோகன் தாஸ் அடுத்த நாள் அலுவலகம் செல்ல வேண்டுமெந்தால் அந்த இரவே பெங்களூர் கிளம்பி விட்டார். திரும்ப வந்தவுடன் நான் களைப்பாக இருக்கிறது என்று அறைக்கு உறங்கச்சென்று விட்டேன்.

நடு ராத்திரி நாமக்கல் சிபியின் பிறந்த நாளை சர்க்கரை பகிர்ந்து கொண்டாடிய கதையை அடுத்த நாள் காலை தெரிந்துக்கொண்டேன்.அந்த சமயத்தில் பதிவர் ராமும் நாமக்கல் வந்து சேர்ந்தார்.
மூன்றாவது நாளான திங்கட்கிழமை காலை நான்,ஜீவ்ஸ்,ஜி3 மற்றும் வழிகாட்டியான சிபி அண்ணாச்சியின் பக்கத்து வீட்டு சிறுமியும் குன்றின் மீதிருந்த கோட்டையை பிடிக்க கிளம்பினோம்.வேர்க்க விறுவிறுக்க மேலே ஏறி பார்த்தால் ஏதோ மராமத்து பணிகள் செய்வதற்காக பூட்டியிருந்தார்கள்.ஆனால் மேலிருந்து நாமக்கல் நகரத்தில் காட்சியை கேமராவில் சேமித்துக்கொண்டு இறங்கினோம்.பழமை வாய்ந்த நரசிம்மர் கோயிலுக்கு திருமப சென்று அங்குள்ள வேலைப்பாடுகள் மற்றும் சிற்பங்களை படம் பிடித்தோம், அத்தோடு சிபியின் வீட்டிற்கு திரும்ப வந்து ,அவர்கள் வீட்டில் செய்துவைத்திருந்த அறுசுவை பொங்கல் சாம்பார் மீது கொலைவெறியோடு தாக்குதல் நடத்தினோம்.இரண்டு நாட்கள் வெயிலில் காய வைத்ததால் கேமரா திரும்பவும் செயல்பட துவங்கியது. கிட் லென்ஸில் இன்னும் தண்ணீர் இருந்ததால் (இன்னும் காய்ந்துக்கொண்டு இருக்கிறது)அதை உபயோகிக்கமுடியாத நிலை,தவிர அதற்கு லென்ஸ் மூடி வேறு ஒன்றை தேடிப்பிடிக்க வேண்டும்.கேமராவில் எல் சி டி திரை சற்றே சொறி பிடித்தார்போல் காணப்பட்டது.மற்றபடி கேமரா உபயோகிக்ககூடியதே.

மதியத்திற்கு மேல் மூன்று ஆட்டோக்களில் ரிசெப்ஷன் நடைபெறும் அரங்கிற்கு சென்று இறங்கினோம்.
அங்கே நந்து மற்றும் அவரது குடும்பம்,மங்களூர் சிவா,கவிதாயினி காயத்ரி,சஞ்சய் ஆகியோர் வந்திருந்தனர்.JK தனது சித்தியுடன் திருமணத்துடன் வந்திருந்தார்.நாலு பதிவர்கள் சேர்ந்தாலே அந்த இடம் எந்த அளவிற்கு ரணகளமாகும் என்று சொல்ல வேண்டியதில்லை.அதிலும் இத்தனை பேர் சேர்ந்துக்கொண்டால்???
நடு நடுவில் மாப்பிள்ளை பெண்ணை படம் பிடித்து ,படம் பிடிக்க வந்த தொழில்முறை புகைப்படக்கலைஞர்களை நாங்கள் வெறுப்பேற்றிக்கொண்டிருந்தோம்.கடைசியில் பரிசுப்பொருட்களை கொடுத்து ,மணமக்களை வாழ்த்தி சாப்பாடு கூடத்திற்கு படையெடுத்தோம்.
சாப்பாடு செம சூப்பர்!!! அதுவும் ரசம் ரொம்ப ரொம்ப சூப்பர்.
சாப்பாடு முடித்து வாழைப்பழம்,ஐஸ் க்ரீம் என்று நன்றாக கட்டு கட்டிவிட்டு வெளியில் நாற்காலிகளால் ஒரு பதிவர் வட்டம் அமைத்தோம்.அரட்டை கும்மாளம் சிரிப்பொலி என அமர்க்களப்பட்ட கூட்டம் நேரம் ஆன உடன் கலைந்தது.சிபியின் வீட்டில் இருந்து நான்,இராம்,ஜீவ்ஸ் குடுமபத்தினர் மற்றும் ஜி3 சேலத்திற்கு வந்து சேர்ந்தோம்.அங்கிருந்து இராம்,ஜீவ்ஸ் குடுமபத்தினர் பெங்களூர் சென்றனர்.நானும் ஜி3-யும் 10:15-க்கு ஒரு பேருந்து பிடித்து சென்னை வந்து சேர்ந்தோம்.
நாங்கள் தங்கியிருந்த மூன்று நாட்களும் எங்கள் மேல பாசத்தை கொட்டி,விருந்தோம்பலுக்கு இலக்கணமாக திகழ்ந்த நாமக்கல் சிபி மற்றும் அவரின் குடும்பத்தினரையும் இங்கு நினைவு கூர்ந்தே ஆக வேண்டும்.நாமக்கலில் எங்கள் கூட வந்து எங்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த பக்கத்து வீட்டு சிறுமி கிருத்திகாவிற்கும் மனமார்ந்த நன்றிகள்


இப்படியாக இனிமையான நினைவுகளை மூட்டை மூட்டையாக கட்டிக்கொடுத்த இந்தப்பயணம் இனிதே நிறைவடைந்தது.

பி.கு:என்னிடம் படங்கள் இல்லாததால் மற்றவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட படங்களை இந்தப்பதிவில் போட்டிருக்கிறேன்.மேலும் பொருத்தமான படங்கள் கிடைத்தால் இந்தப்பதிவு அதற்கேற்றார்போல் இற்றைப்படுத்தப்படும்.. :)

22 comments:

ஆயில்யன் said...

//இரண்டு நாட்கள் வெயிலில் காய வைத்ததால் கேமரா திரும்பவும் செயல்பட துவங்கியது. //

:))))))))))

ஆயில்யன் said...

//இனிமையான பொழுதுகள்.எந்த ஒரு பயணத்திலும்,நாம் போய் சேரும் இடத்தை விட ,நாம் போகும் வழியும்,அது தரும் நினைவுகளும் தான் பயணத்தின் இனிமையை நிர்ணயிக்கிண்றன என்கிற எனது நம்பிக்கை வலுப்பேற்றது///

உண்மை :))

இலவசக்கொத்தனார் said...

//நாமக்கள் பயண்க்குறிப்புகள் - 2//

எல்லாரும் நிறையா பேசுனீங்க போல! அதுக்காக 'நா'மக்கள் அப்படின்னு சொல்லறது எல்லாம் ரொம்ப டூ மச்சு!!

ChicagoCub said...

அன்புள்ள சீவீஆர்ர்ர் ,

உன் நாமக்கல் பயணக்குறிப்புகள் படித்தேன்.......உனக்கு உரைநடை நன்றாக வருது ....தொடர்ந்து எழுது ..........அதிலும் மெல்லிய நகைச்சுவை உணர்ச்சி அருமை...அதே போல எழுத்துக்கள் போலியாக இல்லை .....அது ரொம்ப முக்யம் .....எனக்கு சுஜாதாவின் ஆரம்ப கால எழுத்துக்கள் நியாபகம் வருது...........வீட்லே எல்லாரும் சவ்கியம் தானே ??......

கோபிநாத் said...

அழகான பயணங்கள்....;)

வல்லிசிம்ஹன் said...

கால் குண்மாகி விட்டதா சிவிஆர்?
காமிரா இயக்க முடியாதது பெரிய சோகம்தான். இருந்தாலும் நண்பர்களோடு பொழுது கழிந்தது பற்றிக் கேட்க அருமையாக இருக்கிறது.

ஜே கே | J K said...

அண்ணாச்சி நான் ஒருத்தன் அங்கன இருந்தேன் நியாபாகம் இருக்குங்களா????...

நாமக்கல் சிபி said...

நல்ல பயணக் கட்டுரை!

ரொம்ப இனிமையான மறக்க முடியாத நாட்கள்!

SurveySan said...

//மோகன் தாஸ் அடுத்த நாள் அலுவலகம் செல்ல வேண்டுமெந்தால் அந்த இரவே பெங்களூர் கிளம்பி விட்டார். திரும்ப வந்தவுடன் நான் களைப்பாக இருக்கிறது என்று அறைக்கு உறங்கச்சென்று விட்டேன்.

மோகன் தாஸ் அடுத்த நாள் அலுவலகம் செல்ல வேண்டுமென்பதால் அந்த இரவே பெங்களூர் கிளம்பி விட்டார்.
///

duplicate sentences.

ஒரு சூப்பர் எடத்துக்கு போயி கைல காமெரா இல்லீன்னா வர டென்ஷன் இருக்கே. தாங்கமுடியாது :)

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இங்க Big Surனு ஒரு எடம் இருக்கு. பசிபிக் கடலை ஒட்டி அமைந்த ரோட்ல பல மைல் போணும். அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகான எடம்.
கேமராவ கார்ல வெச்ச மாதிரி நியாபகத்துல கெளம்பிட்டோம். அங்க போனப்பரம் தேடினா காணும். ஸ்ஸ்ஸ்ஸ். பி.பி ஏறிடிச்சு.
ந்ண்பனின் காமெரால கொசுறு படங்கள்தான் அன்னிக்கு முழுக்க எடுக்க முடிஞ்சது :(

கப்பி | Kappi said...

இனிமையான குறிப்புகள்!!

சிறுவர்களின் படம் படு சூப்பர்!!

என்சாய் மாடி :))

Anonymous said...

//சிறுவர்களின் படம் படு சூப்பர்!!
//

அப்போ நான் என்ன நல்லா இல்லையா?

கப்பி? என்னை வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே?

ILA (a) இளா said...

:)

இலவசக்கொத்தனார் said...

நாமக்கல் சரியாயிடுச்சு. ஆனா பயணக்குறிப்புகள் அப்படியே இருக்கே...

பிரேம்ஜி said...

அருமையான புகைப்படங்கள். பயணக்கட்டுரை ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது.

துளசி கோபால் said...

சுட்டி எடுத்த குட்டீஸ் படம் சூப்பர்.

அது என்ன.... நான் எடுத்ததா? இல்லை ஜீவ்ஸ் எடுத்ததான்னு தெரியலைன்னு.....
எதுக்கு வீண் சந்தேகம். நல்லா இருந்தா ஜீவ்ஸ்ன்னு இதுக்குள்ளே தெரிஞ்சுருக்கணுமே:-))))


ச்சும்மா.....:-))))

டேக் கேர்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இளங்காலல சூரியன் வடிவேல் புத்த பிக்குன்னு வர்ணனைகள் படம் எடுக்கமுடியாததற்கு சேர்த்து வச்சி போட்டிருப்பது போல இருக்கே.. நல்லா சுவாரசியமான குறிப்பு தான்..

ஜீவ்ஸ் க்கு ரொம்ப நல்ல மனசு ...

SathyaPriyan said...

//
மணமக்களை வாழ்த்தி சாப்பாடு கூடத்திற்கு படையெடுத்தோம்.
சாப்பாடு செம சூப்பர்!!! அதுவும் ரசம் ரொம்ப ரொம்ப சூப்பர்.
சாப்பாடு முடித்து வாழைப்பழம்,ஐஸ் க்ரீம் என்று நன்றாக கட்டு கட்டிவிட்டு
//
இது சூப்பர்.

//
கடைசியில் பரிசுப்பொருட்களை கொடுத்து
//
இது தாங்க இடிக்குது. வேற யாராவது வாங்கி இருக்கும் gift ல உங்க பேர எழுதி குடுத்தா போதாதா? :-)

நாங்கல்லாம் அது தான் பண்ணுவோம்.

CVR said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்!
@ஜேகே!!
ரொம்ப ரொம்ப ரொம்ப மன்னிக்கனும்!!
ஏதோ அவசரத்துல மறந்துட்டேன்...

இப்போ சேத்தாச்சு!! :D

G.Ragavan said...

கொல்லிமலை இயற்கை எழில் சூழ்ந்த இடம். மு.வரதராசனார் இயற்றிய ரவிசந்திரிகா என்ற கதையைப் படிக்கையில் கொல்லிமலைக்குப் போய் விட மாட்டோமா என்ற ஆவல் ஓங்கும். தமிழில் எனக்குப் பிடித்த நாவல்களில் ரவிசந்திரிகாவும் ஒன்று. படிக்கத் திகட்டாத கதை அது.

படங்கள் நல்லா வந்திருக்கு. காமிரா கவிஞருக்குப் படமெடுக்கத் தெரியாதா...ஜீவ்ஸ் அண்ணாச்சிக் கேமராவுல ஏதாச்சும் கோளாறு :D (அண்ணாச்சி கோவிச்சிக்கறப்படாது)

திருமணம் நல்லபடி நடந்தது குறித்து மெத்த மகிழ்ச்சி. மணமக்கள் நீடு வாழ முருகனை வணங்குகிறேன்.

G.Ragavan said...

கொல்லிமலை இயற்கை எழில் சூழ்ந்த இடம். மு.வரதராசனார் இயற்றிய ரவிசந்திரிகா என்ற கதையைப் படிக்கையில் கொல்லிமலைக்குப் போய் விட மாட்டோமா என்ற ஆவல் ஓங்கும். தமிழில் எனக்குப் பிடித்த நாவல்களில் ரவிசந்திரிகாவும் ஒன்று. படிக்கத் திகட்டாத கதை அது.

படங்கள் நல்லா வந்திருக்கு. காமிரா கவிஞருக்குப் படமெடுக்கத் தெரியாதா...ஜீவ்ஸ் அண்ணாச்சிக் கேமராவுல ஏதாச்சும் கோளாறு :D (அண்ணாச்சி கோவிச்சிக்கறப்படாது)

திருமணம் நல்லபடி நடந்தது குறித்து மெத்த மகிழ்ச்சி. மணமக்கள் நீடு வாழ முருகனை வணங்குகிறேன்.

Aruna said...

nallaa ezuthuRingka!!!
anbudan aruna

ஆ! இதழ்கள் said...

recently only Vannangal (photos) are there in your blog no Ennangal...(words)

qn... sometimes dont you feel that you spend too much time with camera than enjoy being there on any location? and how to you balance both...

Related Posts Widget for Blogs by LinkWithin